Friday, July 1, 2011

திருப்பூர் - ஆட்சியாளர் திரு மதிவாணன் ஐஏஎஸ்


திருப்பூரை பற்றிய அறிமுகம் தேவையில்லை, பின்னலாடை நகரம், வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்றழைப்பார்கள், அந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் நகரங்களில் இதுவும் ஒன்று, மிக குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்த நகரம் அதனால்தான் என்னமோ சரியான திட்டமிடுதல் இல்லாத உள்கட்டமைப்பு வசதிகள், சரியாக அமையாத சாலைகள், கட்டடங்கள், சாக்கடை வசதிகள், குடிநீர் வசதிகளை கொண்டுள்ளதாக உள்ளது

ஒரு மாநகராட்சிக்குரிய அந்தஸ்து முன்பே இருந்த போதிலும் கடந்த ஆட்சியின் போதுதான் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, திருப்பூர் மாவட்டத்தை உருவாக்க நியமிக்க பட்ட அலுவலரான திரு. சமயமூர்த்தி அவர்களே முதல் மாவட்ட கலெக்டர் ஆகவும் சிறப்பாக பணியாற்றினார்,

ஒரு மாவட்டத்தை புதிதாக உருவாக்குவதற்கான சிரமங்களையும், ஆரம்பகட்ட பணிகளை சிறப்பாகவும், செம்மையாகவும் செய்து முடித்த திரு. சமயமூர்த்தி அவர்கள், தன் பணியை செவ்வனே செய்த திருப்தியுடன் பணி மாறுதலை ஏற்றுக் கொண்டு விடைபெற்றுவிட்டார்


மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு மூன்றாண்டுகள் முடிவடைய போகும் நிலையில் புதிதாக மாவட்ட ஆட்சியராக திரு. மதிவாணன் அவர்கள் கடந்த மாதம் மே மூன்றாம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார், பொறுப்பேற்ற மறுநாளில் இருந்தே பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார், இது சம்பந்தமாக செய்திதாள்களில் வந்த செய்திகளின் தொகுப்பு












கலெக்டரின் கவனத்திற்கு வெளிப்படையாக தெரியக்கூடிய சில குறைகளை சுட்டி காட்ட விரும்புகிறேன், இது ஒட்டு மொத்த திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குறைகள் இல்லை, அனைத்தையும் எழுத வேண்டுமானால் ஒரு பதிவு போதாது, ஆனால் இது திருப்பூரின் இதயபகுதியில் உள்ள குறைகளாகும், இதயம் சரியாக இருந்தால்தான் ரத்த ஓட்டம் சரியாக இருக்கும், அது போலவே பெரும்பாலான வெளிநாட்டவர்களும், வெளியூர்காரர்களும் வந்து போகும் இடங்கள் நன்றாக பராமரிக்கபட வேண்டியது அவசியமாகும்

முதலில் திருப்பூரின் எந்த பகுதியிலும் பாதசாரிகள் நடந்து போவதற்கு ஒரு நடைபாதை கூட இல்லை, எனவே அனைத்து பகுதிகளிலும் நடைபாதை அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலையும், விபத்தினையும் பெருமளவில் குறைக்க முடியும்


மாநராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்காக நிறுவப்பட்ட நினைவுதூண் மணிக்கூண்டு, பலநாட்களாக 9.10 லேயே நிற்கிறது, இத்தனைக்கும் மாநகராட்சி அலுவலகம் எதிரிலேயே, ஆரம்பமே சரியில்லை என்றால் முடிவு எப்படி சரியாக இருக்கும், முதலில் பூமி உருண்டை சுற்றாவிட்டாலும் பரவாயில்லை மணிக்கூண்டு செயல்பட நடவடிக்கை எடுங்கள்

பழைய பேருந்து நிலையத்தின் கடைக்காரர்கள் கடைக்கு வெளிப்பகுதியிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள், இதனால் பயணிகள் நடப்பதற்கும், நிற்பதற்கும் சிரமமாக உள்ளது

பழைய பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பிடங்களை நடத்துபவர்கள் அரசாங்கம் நிர்ணயித்து உள்ள கட்டணத்தை விட அதிகமாகவே வசூலிக்கிறார்கள், சிறுநீர் கழிப்பதற்கே இரண்டு ரூபாய் கேட்கிறார்கள், இதனாலேயே பெரும்பாலானோர் ஒதுக்குபுறம் உள்ள சுவர்களை நாறடிக்கிறார்கள்

பழைய பஸ் ஸ்டாண்டில் பிச்சைகாரர்கள் தொல்லை மிக அதிகமாக உள்ளது, மினிபஸ் நிற்கும் இடங்களுக்கு பின்னால் உள்ள இடம் பட்டா இல்லாத வீடாக அவர்களுக்கு மாறியுள்ளது

பழைய பேருந்து நிலையத்தின் உட்புறம் நடக்கும் வேலைகள் மிக மந்தமாக நடக்கிறது ஆறுமாதமாக குழியை தோண்டி இப்பொழுதுதான் காங்கிரீட் போட்டு வைத்துள்ளார்கள், அவர்கள் செய்யும் பணியில் வேகம் பார்த்தால் அடுத்த ஆட்சியே வந்துவிடும் போல் உள்ளது, பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


அதே போல் ரோட்டினை அகலப்படுத்த சுரங்க நடைபாதையை இடித்ததோடு சரி, இன்னும் ரோட்டினை அகலபடுத்தவில்லை, இடித்த பொருட்களையும் எடுக்கவில்லை, சும்மாவே நெரிசல் மிகுந்திருக்கும் பகுதி இன்னும் அதிகமாக சிரமத்திற்கு உள்ளாகிறது

குமார் லாட்ஜூக்கு  அருகே உள்ள டாஸ்மாக் கடையினை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மிகவும் சிறிதாக உள்ள ஒருவழிச்சாலையில் குடிமகன்கள் பிளாட் ஆகி வழியை மறித்து கிடப்பது இன்னும் பெரிய தொல்லையாக உள்ளது, அதுவும் பள்ளி மாணவிகள் போய் வந்து கொண்டிருக்கும் பகுதியில் ஆடை விலகி அலங்கோலமாக கிடக்கிறார்கள்

பொதுவாகவே திருப்பூரில் போக்குவரத்து விதிகளை யாரும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது, அதை சரி செய்ய முதலில் அனைத்து சிக்னல்களையும் இயங்கச் செய்ய வேண்டும், நினைத்தால் சிக்னல் போடுகிறார்கள், இல்லையென்றால் விட்டுவிடுகிறார்கள், பிறகு யார் சிக்னலை மதிப்பார்கள்? தினமும் செயல்படுத்திதான் மக்களை பழக்க வேண்டும்

குமரன் ரோட்டில் இருந்து வரும் போது பார்க் ரோடு சிக்னலில் நிறுத்த கோடு இல்லை, இதனால் வாகனங்களில் வருபவர்கள் தாறுமாறாக நிறுத்துகிறார்கள், அங்கு நிறுத்த கோடு இடவேண்டும்


வளம் அமைப்பால் கட்டப்பட்ட நொய்யல் பாலத்தில் மின்மயானம் அருகே போக்குவரத்து காவலர் ஒருவர் பணிபுரிய ஏற்பாடு செய்ய வேண்டும், அடிக்கடி அங்கு விபத்து நடந்து இறப்பவர்கள் அருகே உள்ள மின்மயானத்தில் எரிக்கப்படுகிறார்கள்

வளம் அமைப்பால் செலவு செய்து தூர்வாரப்பட்ட நொய்யலில் மீண்டும் கழிவு நீர்தான் ஓடிக் கொண்டிருக்கிறது, இத்தனை செலவு செய்து என்ன பயன்? கழிவு நீர் நொய்யலில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

புஸ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் கோவை செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் எந்தவிதமான டிவைடர்களும் இல்லை, அதனால் அவ்வளவு பெரிய ரோட்டில் யார் எப்படி வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை உள்ளது, இதனால் வாகனங்கள் தாறுமாறாக பயங்கர வேகத்தில் செல்லுகின்றன, கூடியவிரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரிய அசம்பாவிதம் நடப்பது நிச்சயம், அங்கே கேபிஎன் பேருந்து அலுவலகம் வேறு உள்ளதால் கேபிஎன் பேருந்துகளும் நிறுத்தப்படுகின்றன, அவர்கள் சும்மாவே வேகமாக செல்பவர்கள்

அது போல ரோடுகளில் வைத்திருக்கும் டிவைடர்கள் மிக சிறியதாக உள்ளது, இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சத்தால் கண் கூசுகிறது, எனவே டிரைடரை பெரிதாகவோ இல்லை இரும்பினால் ஆன டிவைடரையோ வைத்தால் மட்டுமே விபத்தினை தவிர்க்க முடியும்

அவினாசி ரோட்டில் உள்ள கந்தசாமி தாய் சேய் நல விடுதி மற்றும் ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள மாநகராட்சி தாய் சேய் நலவிடுதியில் பணி புரியும் பெண் டாக்டர்கள் சிகிச்சைக்கு வரும் ஏழை பெண்களை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க சொல்லியும் சிசேரியன் செய்ய சொல்லியும் வற்புறுத்துகிறார்கள் என செய்தி வந்தது, இங்கே உள்ள டாக்டர்களை அங்கேயும் அங்கே உள்ள டாக்டர்களை இங்கேயும் மாற்றுவதால் பிரச்சனை தீர்ந்துவிடாது, எனவே அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருப்பூரில் வசிக்கும் மக்களுக்கு எந்த பொழுது போக்கு வசதியும் இல்லை, சினிமா தியேட்டர்களை தவிர, சிடி, டிவிடி வருகையினால் பல இடங்களில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்ற நிலையில் திருப்பூரில் மட்டுமே புதிது புதிதாக சினிமா தியேட்டர்கள் கட்டப்பட்டு வருகின்றன, அதனால்தானோ என்னமோ சினிமா தியேட்டர்காரர்கள் அவர்களுடைய இஷ்டத்திற்கு டிக்கட்டுகளுக்கு விலை வைத்து விற்கிறார்கள், டிக்கட்டுகளில் எந்த விலையும் அச்சிடபட்டு இருப்பதில்லை, வாகனங்கள் நிறுத்துவதற்கும் அதிக கட்டணங்கள் வசூலிக்கிறார்கள், திண்பண்டங்களின் விலையும் மிக அதிகமாக உள்ளது, குறிப்பாக சீனிவாசா தியேட்டர்காரர்கள் முகமூடி அணியா கொள்ளைகாரர்களாகவே செயல்படுகிறார்கள்

எனவே மக்கள் பொழுது போக்க வசதியாக பூங்காங்களையோ அல்லது மாற்று ஏற்பாடுகளையோ செய்ய வேண்டும், இல்லையெனில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவங்களின் கண்காட்சியை நடத்த டவுன்ஹாலினை இலவசமாக செய்து தர வேண்டும், மக்கள் அதிகமாக காய்ந்து போய் உள்ளார்கள் என்பதை பொருட்காட்சி என்ற பெயரில் எந்த கூட்டம் போட்டாலும் கூடி வரும் கூட்டத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்

அடுத்து முக்கியமாக நாட்டிற்காக உழைத்த தியாகி திருப்பூர் குமரன் அடிபட்டு இறந்த இடத்தை சுற்றிலும் சிறு சுவர் மட்டும் எழுப்பி ஒரு கல்தூணோடு விட்டு விட்டார்கள், யாரும் அதை ஒரு பொருட்டாகவே மதித்தது போல் இல்லை, அனைவரும் அந்த நினைவு தூணை சுற்றிலும் இடித்தவாறே வண்டியினை நிறுத்தி செல்கிறார்கள், சிலர் எச்சில் துப்பும் இடமாகவும், பிச்சை எடுக்கும் இடமாகவும் மாற்றி வைத்திருக்கிறார்கள், இது அந்த தியாகியின் தியாகத்தை மதிக்கும் செயலாக தெரியவில்லை, மிதிக்கும் செயலாகவே தெரிகிறது, எனவே குறைந்தபட்சம் அந்த நினைவு தூணை சுற்றி நோ பார்க்கிங் பகுதியாக அறிவிக்க வேண்டும்

பொதுவாக அதிகாரிகள் ஆய்வுக்கு வருவார்கள், ஆய்வு செய்தபின் நடவடிக்கை எடுக்க சொல்லிவிட்டு வேறு பணியினை பார்க்க போய் விடுவார்கள், ஆனால் நீங்கள் நடவடிக்கை எடுக்க சொல்வதோடு மட்டுமல்லாமல் அதனை செய்திருக்கிறார்களா என திரும்பவவும் வந்து பார்த்து செய்யாவிட்டால் சஸ்பெண்டு செய்வதாக சொல்கிறார்கள், எனவே உங்களின் மேல் அதிக நம்பிக்கை இருக்கிறது

முன்பே சொன்னது போல இது ஒட்டுமொத்த திருப்பூரின் குறைகளும் அல்ல, அவற்றின் சிறு துளி, இருந்தாலும் இது முக்கிய பகுதிகளில் உள்ள முக்கிய குறைகளாக இருப்பதால் உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன், புதிதாக பொறுப்பேற்றவுடனே எல்லா அதிகாரிகளும் செய்யும் வழக்கமான செயலாக உங்கள் ஆய்வு இல்லாமல் எப்பொழுதும் தொடர வேண்டும்

மக்கள் நம்புவது ஓட்டுக்காக கையேந்தும் எந்த அரசியல்வாதிகளையும் அல்ல மாறாக நல்லதை செய்யும் உங்களை போன்ற அதிகாரிகளைதான், நீங்களும் மற்ற அதிகாரிகளை போல் ஆரம்ப ஜோரில் அசத்திவிட்டு ஏசி ரூமில் சங்கமாகிவிட மாட்டீர்கள் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது கலெக்டர் சார்

நீங்கள் ஒரு கிராமத்தில் ஆய்வுக்கு சென்ற போது அங்கு செயல்படாத மோட்டாரை ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டீர்கள், அதற்கு அங்கே உள்ள அதிகாரிகள் பவர் கட் என்று சொன்னார்கள், அதற்கு நீங்கள் முன்னே இருந்த பவர் வேறு இப்பொழுது உள்ள பவர் வேறு அதனால் இனிமேல் பவர் கட் ஆகாது என நகைச்சுவையாக சொன்னீர்களாம், அதையேதான் நாங்களும் நம்புகிறோம் கலெக்டர் சார், முன்பே இருந்த பவர் வேறு இப்பொழுது உள்ள பவர் வேறு, உங்களின் பவரில் திருப்பூர் பிரகாசமாக ஜொலிக்கும் என நம்புகிறோம் கலெக்டர் சார், நன்றி.  
  

6 comments:

  1. நல்ல பதிவு சுரேஷ்! இந்தப் பதிவை எப்படி அவர் கவனத்திற்கு கொண்டு போவீர்கள்?

    ReplyDelete
  2. இது போல் ஏன் நீங்க எழுதுவதில்லை. மற்றவர்களின் திருப்தி என்பதை விட வாழும் ஊருக்கு என்ற ஒன்று உள்ளதல்லவா?

    ரமேஷ் சொன்னது போல் அவரின் மின் அஞ்சலுக்கு இதை அனுப்பி விடுங்க.

    ReplyDelete
  3. திர்ப்பூரில் IAS, IPS அதிகாரிகள் மாற்றத்தால் ஒரு வருடமாக எனக்கு இழுத்தடிக்கப் பட்டு வந்த பாஸ் போர்ட் இப்போது கிடைத்துள்ளது. இதற்க்கு காரணமானவர்களுக்கு நன்றி! அழிந்து வரும் தொழில் நகரை தயவு செய்யது காப்பாற்றுங்கள்!

    ReplyDelete
  4. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு!

    ReplyDelete
  6. நல்ல முயற்சி! நல்ல பகிர்வு!

    அருமையான தொகுப்பு!

    தொடரட்டும்!

    பதிவுலகில் இது போல சமூக அக்கறை கொண்ட பதிவுகள் வந்து, அனைவரையும் விழிப்புணர்வடையச் செய்யும்.

    அது வெறும் ஹிட்ஸ்‍க்காக‌ மற்ற சினிமா, கவர்ச்சிப் படங்கள் வெளியிடும் பதிவர்களைக் கூட நாளடைவில் தாங்கள் வசிக்கும் தெரு, பகுதி, வட்டம் சார்ந்த தேவைகள்,சமூக சீர்கேடுகள், அவலங்கள் குறித்த‌ சமூக அக்கறை கொண்ட பதிவுகள் எழுதத் தூண்டும்!


    //இது ஒட்டுமொத்த திருப்பூரின் குறைகளும் அல்ல, அவற்றின் சிறு துளி, இருந்தாலும் இது முக்கிய பகுதிகளில் உள்ள முக்கிய குறைகளாக இருப்பதால் ..,

    எங்களுக்கு நம்பிக்கை உள்ளது கலெக்டர் சார்..,

    உங்களின் பவரில் திருப்பூர் பிரகாசமாக ஜொலிக்கும் என நம்புகிறோம் கலெக்டர் சார், நன்றி.//

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!