Saturday, June 25, 2011

பிள்ளையார் கோவில் கடைசி வீடு



ஒரு காமெடி சீன பார்த்து ஏமாந்து படத்துக்கு போய் அழுதுட்டு வந்தது அனேகமா நானாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன், விமர்சனம் எல்லாம் எழுத முடியலைங்கோ, மனசுல தோணுனத கொஞ்சம் புலம்பலாமேன்னுதான் இங்க கொட்டறேன், முழு விமர்சனமெல்லாம் நம்ம பதிவுலக சீனியர்கள் யாராச்சும் எழுதுவாங்க, எழுதுவாங்களா??? 


வேலை வெட்டிக்கு போகாம குடிச்சிட்டு வீட்டுக்கு அடங்காம திரியற ஹீரோ, பையன் என்ன பண்ணுனாலும் பாசம் காட்டுற அம்மா, அடிக்கடி அண்ணனோட சண்டை போடுற தங்கச்சி, சொந்தங்களுக்குள்ள குடும்ப பகை, ஹீரோயின பார்த்தவுடனே ஹீரோவுக்கு வர காதல், கொஞ்சம் மொக்க காமெடி, ரெண்டு பைட்டு, அடபோங்கப்பா, இதே கதையதான் நீங்களும் எவ்வளவு நாளைக்கு எடுப்பீங்க, நாங்களும் எவ்வளவு நாளுதான் வலிக்காத மாதிரியே நடிக்கறது


மேல சொன்ன அதே கதைதான் பிள்ளையார் கோவில் கடைசி வீதி படக்கதையும், வழக்கமான காதல் கதைதான் ஆனா படத்துல ஒரு சின்ன டிவிஸ்ட் வச்சிருக்காங்க, அதுதான் இந்த படத்த கொஞ்சம் வித்தியாசபடுத்தி காட்டுது, நல்லா வரவேண்டிய கதைதான், ஆனா காட்சிபடுத்திய சீன்கள் எல்லாம் 1985 லயே வந்த சீன்களா இருக்குறதால நம்மாள உட்காரமுடியல

அது என்ன டிவிஸ்டு, அப்படி என்ன படம் எடுத்துருக்காங்கன்னு பார்க்க ஆவலா இருக்குறவங்க எல்லாம் எல்.ஐ.சியில அஞ்சு லட்ச ரூபாக்கு பாலிசி எடுத்து வீட்டுல குடுத்துட்டு படத்துக்கு போங்க, சத்தியமா முடியலைங்க

இடைவேளை வரைக்கும் கூட சமாளிச்சிரலாம், ஆனா அதுக்குமேல என்னால அழுகாம இருக்க முடியல, சும்மா செண்டிமெண்ட கழுவி கழுவி ஊத்தியிருக்காங்க, என்னா செண்டிமெண்டுடா சாமி, படத்துக்கு வந்தவனெல்லாம் நொந்து போய் கத்த ஆரம்பிசிட்டாங்க, பாதி வசனம் ஆடியன்ஸ்தான் பேசினாங்க, பேசுனாங்கலா இல்ல இல்ல அழுதாங்க, நானும் கதறி அழுதுட்டேன்க, கொஞ்சம் படத்த பார்த்ததுனாலயும், கொஞ்சம் என் நிலைமைய நினைச்சதாலயும்


படத்துல உருப்படியா பார்க்ககூடிய மாதிரி இருந்த ஒரே விசயம், கதாநாயகிதாங்க, மூஞ்சி சுமாரா இருந்தாலும் அனுஷ்கா ஹைட்டுல சூப்பரா இருந்தாங்க, ஆனா என்ன பிரயோஜனம் படம் முழுக்க ஒரே கிரையிங்தான்

வீட்டுல அடிவாங்கி நொந்து போய் இருக்கற புருசன்காரங்க எல்லாம் தாராளமா பொண்டாட்டிய கூட்டிட்டு போய் படத்த காட்டுங்க, அப்படியாவது அவங்க அழுகறதை பார்த்து ஜென்ம சாபல்யமடையலாம், என்னால இதுக்கு மேல எழுத கூட முடியல, என்ன விட்டுடுங்க, ஒரே அழுகை அழுகையா வருது..!

பிள்ளையார் கோவில் கடைசி வீதி – வீடா வீதியான்னு சரியா தெரியல, அழுவாச்சி காவியம், அந்த பிள்ளையார்தான் அருளணும்..!

Thursday, June 23, 2011

அவன் இவன் படம்



சார் ஒரு கட்டிங் கிடைக்குமா?
இதுக்கு முன்னாடி உன்னை நான் பார்த்திருக்கனா?
இல்லை
அப்புறம்?
அது ஒன்னும் இல்லைங்க, ஒரு நல்ல காரியம் செய்யுறதுக்கு முன்னாடி ஒரு கட்டிங் போட்டா நல்லதே நடக்கும்னு என் பிரண்டு சொல்லி இருக்கான்ங்க, அதான்
அப்படியா? சரி அப்படி என்ன நல்ல காரியம் பண்ண போறே?
என் ஆளுகிட்ட என் லவ்வ சொல்ல போறேன்

என்னடா இது அவன் இவன் படத்த பத்தி எழுதறதுக்கு பதிலா என்னென்னமோ எழுதி வெச்சிருக்கானேன்னு பார்க்குறீங்களா? அது ஒன்னுமில்லைங்க, அவன் இவன் காமெடி படம்னு சொன்னாங்க, ஆனா அப்படி ஒன்னும் பெரிசா காமெடி இல்லைங்க, இருக்குற கொஞ்ச நஞ்சம் மொக்கை காமெடிக்கும் பெரிசா ஒன்னும் சிரிக்க முடியலைங்க,

ஆனா படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஜித்தன் ரமேஷ் நடிச்ச பிள்ளையார் கோவில் கடைசி தெரு படத்தோட டிரைலர் போட்டாங்க, ரொம்ப நல்லா இருந்துச்சு, அந்த படத்துலதான் மேல இருக்குற டயலாக் வருது, அதான் கொஞ்சமாவது காமெடியா இருக்கட்டுமேன்னு போட்டேன், சரி இனி அவன் இவன்


படத்தோட கதையும், படத்தோட கண்டிசனும் எல்லாருக்குமே தெரியும், என்னதான் பாலா படம்னாலும் படம் நிறைய பேருக்கு பிடிக்கலை, எப்பவுமே பாலாகிட்ட வித்தியாசத்தை எதிர்பார்க்கிற ரசிகர்கள், இந்த வித்தியாசத்தை சத்தியமா எதிர்பார்க்கவும் இல்லை, ரசிக்கவும் இல்லையோன்னு தோணுது, ஒரு இயக்குனர இந்த மாதிரிதான் படம் எடுக்கனும்னு யாரும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது, ஆனாலும் அதையும் மீறி ஒரு சின்ன ஏமாற்றம் ஏற்படுவது அவரின் பிம்பத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்புகளினால்தான்னு நினைக்கிறேன்

இது போல படம் எடுக்க நிறைய இயக்குனர்கள் இருக்காங்க சார், ஆனா இதுவரைக்கும் நீங்க எடுத்த படம் மாதிரி எடுக்க குறைந்த ஆட்களே இருக்காங்க, அதனாலத்தான் மீண்டும் ஒரு நல்ல அழுத்தமான படத்தை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் பாலா சார், அதற்காக இந்த படம் நல்லாவே இல்லை என்று சொல்ல முடியாது, நிச்சயமாக ஒருமுறை பார்க்க கூடிய படம்தான், சில வசனங்கள் மட்டும் என்னதான் இயல்பான வார்த்தைகள் என்றாலும் தியேட்டர் எனும் பொது வெளியில் கேட்க பிடிக்கவில்லை

படத்திற்காக ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருக்கும் விஷால் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர், சாதாரண கண்ணை ஒன்னரை கண்ணாக வைத்துக் கொண்டு நடிப்பதில் உள்ள சிரமம் எல்லாருக்குமே நன்றாக புரியும், எந்த அரசியல் தலையீடும் இல்லாவிட்டால் கண்டிப்பாக விருதுகள் நிச்சயம், ஆர்யா இப்படியே மொக்கை காமெடி பண்ணிட்டு இருந்தார்னா சீக்கிரமே ’’அறிந்தும் அறியாமலும்’’ ஆகிர வேண்டியதுதான்


அப்புறம் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் ஆர்.கே வில்லனாக கடைசி நேரத்தில் சிறிது காட்சிகளிலே வந்தாலும், அந்த சாதாரண பார்வையிலேயே ஒட்டு மொத்த படத்திற்கான வில்லன் எனும் தோரணையை அசால்ட்டாக கொண்டு வந்ததுள்ளார், சிறந்த நடிப்பு


அப்புறம் ஜமீந்தாராக வரும் ஆர்.எம். குமார், படம் முழுவதுமே இவரையே சுற்றி வருகிறது, மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார், எனினும் கடைசியில் நிர்வாணமாக அடிவாங்கி இறப்பது சற்றும் பொருந்தவில்லை, படம் முழுக்க கண்ணியமானவராக காட்டி கடைசியில் ஒரு பிரச்சனைக்காக நிர்வாணப்படுத்தி நடிக்க வைக்க வேண்டுமா? என தோன்றுகிறது, நெட்ல படிச்சதுலேயே வித்தியாசமான ஒரு விமர்சனம் உலவன் நெட் இணையதளத்தில் பார்த்தேன், அதில் பிரபாகரன் அவர்கள் ஈழப்போரில் இறந்ததை காட்சிப்படுத்தியது போல் உள்ளது என கூறியிருக்கிறார்கள், சுட்டி கீழே


மொத்தத்தில் பாலா அவர்கள் ஒரு படத்துக்கு இரண்டு வருசமோ, மூணு வருசமோ ஆனாலும் பரவாயில்லை, மெதுவாவே எடுக்கட்டும், சீக்கிரம் படம் எடுத்து கொடுங்கன்னு அவர யாரும் டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா சரிதான், ஒரு இயக்குனரோட சுதந்திரத்தில தலையிட்டு அவர சீக்கிரம் படம் எடுக்க சொல்லி அவரோட கற்பனைத்திறனை சிதைக்காம இருக்கறதுதான் நல்லது, கல்பாத்தி அகோரம் சாருக்கு கேசு வேற ஒன்னு ரெடியா இருக்குது

இந்த படத்தை தமிழ்நாடு தியேட்டர்ல பார்த்தேன், ஒரளவு நல்ல கூட்டம்தான், பக்கத்துல உட்கார்ந்து இருந்தவரு கதாநாயகி குட்டிகரணம் அடிச்சதுக்கு கூட கைதட்டி சிரிச்சிட்டு இருந்தாரு, ஒருவேளை நமக்குதான் நகைச்சுவை உணர்ச்சி குறைஞ்சிடுச்சோன்னு எனக்கே டவுட்டா இருக்குது, நான் டவுட்டா பார்த்ததை பார்த்த அவர், பாலா படம் சார், நான் பார்க்கனும் எதிர்பார்த்த படம்னார்

என்னடா எல்லாரும் எதிர்பார்த்துட்டு வந்துருக்காங்க, நாம மட்டும் எதிர்பாக்காம வந்துட்டோமோன்னு பீலிங் வந்துருச்சு, அதனால இனிமே நானும் எதிர்பாக்கிறதா முடிவு பண்ணிட்டேன், நான் அடுத்ததா எதிர்பாக்கிற படம் நம்ம பசுநேசன் ராமராஜன் அவர்கள் நடிச்ச மேதை படத்ததான் 

சரி இந்த படத்துக்கு எதுக்குடா U/A சர்பிகேட் கொடுத்திருக்காங்கான்னு என் பிரண்டு கேட்டான், எனக்கு தெரியலைடான்னு சொன்னேன், கொஞ்ச நேரம் யோசிச்சவன் சொன்னான், டேய் பொம்பளைங்க நிர்வாணமா நடிச்சாத்தான் A சர்டிபிகேட் கொடுப்பாங்க, இங்க ஆம்பிளைதான நிர்வாணமா நடிச்சிருக்காரு அதான் U/A சர்டிபிகேட் கொடுத்திருக்காங்கன்னு, எனக்கு இப்பவரைக்கும் என்ன சொல்றதுன்னே தெரியலைங்க..!
  

Saturday, June 18, 2011

கமர்சியல் பக்கங்கள் - 18/06/2011



கங்கை நதிநீர் மாசுபடுவதை தடுக்க கோரியும், கும்பமேளா நடைபெறும் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கல்குவாரிகளை அகற்ற கோரியும் 115 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சாமியார் நிகமானந்தா இறந்து போனார், மருத்துவமனையில் அவருக்கு விஷ ஊசி போட்டு கொன்னுட்டதாகவும் நியூஸ் வருது, அது உண்மையோ என்னவோ இன்னமும் அவரோட உடலை உறவினர்கள்கிட்ட கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க

கங்கை நதியோ எந்த நதியோ நம்ம நாட்டுக்கு நீராதாரம் ரொம்ப முக்கியம், இருக்குற நதிகளை எல்லாம் இப்படியே கண்டுக்காம விட்டுட்டோம்னா எதிர்காலத்துல நீருக்காகவும் வெளிநாட்டுல கையேந்தி நிக்க வேண்டிய நிலைமை வந்துரும், ஏற்கனவே ஓடுற நதிகள்ல சாக்கடை தண்ணியவும், கெமிக்கல் தண்ணியவும் கலந்து விட்டுட்டு இருக்காங்க, நம்ம ஆளுங்க விளக்கெண்ணையை தடவிகிட்டு சோப்பு ஷாம்ப போட்டுட்டு எருமை மாட்டு கூட போட்டி போட்டு குளிச்சி நாறடிச்சிட்டு இருக்காங்க

ஒரு நல்ல விசயத்துக்காக உண்ணாவிரதம் இருக்குற இவர மாதிரியான ஆட்கள கவருமெண்டுதான் கண்டுக்கலைன்னாலும், மீடியாவாவது கண்டுக்கலாம்ல, மக்கள் நாட்டுல நடக்கற விசயங்களை தெரிஞ்சுக்கறதே மீடியாவ வச்சுத்தான், சின்ன சின்ன விசயத்தையெல்லாம் பூதாகரமாக்குற வட இந்தியா மீடியாக்காரங்க எல்லாம் இப்ப எங்க போனாங்க? 

மீடியான்னாலே பரபரப்பான செய்திகள மட்டும்தான் போடனும்னு விதி எதாச்சும் இருக்கா? இனிமே பாருங்க குற்றம் நடந்தது என்ன? நிகமானந்தா செத்தது எப்படின்னு போட்டு காசு சம்பாதிப்பானுங்க, கொடுமைங்க


எப்படியோ சமச்சீர் கல்வி பிரச்சனையால ஸ்கூல் தொறக்கறது, பாடம் நடத்துறது எல்லாமே ஜீன் ஜீலைன்னு தள்ளி போய்ட்டே இருக்குது, பசங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம்தான், ஜாலியா ஒரு நோட்டு புக்கோட விளையாண்டுகிட்டு இருக்கானுக, ரொம்ப ஆடாதீங்கடா பசங்களா பிரச்சனை முடிஞ்சதும் மொத்தமா சனி ஞாயிறு ஸ்பெசல் கிளாஸ் வச்சு கொன்னெடுக்க போறாங்க, அப்புறம் மூக்காலதான் அழுகணும், அப்புறம் அம்மாவ திட்டக்கூடாது, அட நான் அவங்க சொந்த அம்மாவ சொன்னேங்க, சனி ஞாயிறு எல்லாம் அவங்க சந்தோசமா இருப்பாங்கல்ல, இருந்தாலும் நான் படிக்கும் போதெல்லாம் இந்த மாதிரி எந்த பிரச்சனையுமே வரலைன்னு கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்குதுங்க L



நம்ம ஊருல எல்லா பேங்குகாரனும், டெபிட் கார்டயும், கிரடிட் கார்டயும் எல்லாருக்கும் சல்லிசா கொடுத்தாலும், ஒரு பேங்குகாரனாவது அத எப்படி உபயோகிக்கனும்னு சொல்லி கொடுத்துருக்கானுகலா? இல்லவே இல்லை, எத்தனை ஏடிஎம் வச்சாலும் எப்ப பார்த்தாலும் ஏடிஎம் வாசல்ல ஒரு பெரிய கியூவே நிக்கும், ஏன்னா உள்ள போன ஆளுக்கு எத அமுக்கறது, எத டச் பண்ணுறதுன்னு ஒன்னுமே தெரியாது, ஒரு கால் மணி நேரம் அவரே எதையாச்சும் அமுக்கி பார்த்துட்டு ஒன்னும் வேலைக்காகலைன்னு அப்புறம் வெளில நிக்குறவங்க யாரையாச்சும் கூப்பிடுவாரு, அப்புறம் உள்ள போனவரும் போய் இரண்டு பேரும் ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்தி ஒருவழியா பணம் எடுத்துட்டு வெளில வரதுக்குள்ள வெளில நிக்குறவங்களுக்கு தாவு தீர்ந்துரும்

இதயெல்லாம் பார்த்துட்டுதான் என்னவோ ரஷ்யாவுல பேசும் ஏடிஎம்ம அறிமுகபடுத்த போறாங்களாம், எதையும் அமுக்கி கஷ்டப்பட வேண்டாம், அது கூட பேசியே ஈசியா பணத்தை எடுத்துட்டு வந்துரலாம், அதே மாதிரியே இங்கயும் நம்ம ஊர்ல பண்ணுனா ரொம்ப நல்லா இருக்கும், அப்படியே ஊருக்கு தகுந்த மாதிரி லாங்குவேஜ்ல பேசுனா இன்னமும் நல்லா இருக்கும், உதாரணமா,

சென்னை ஏடிஎம்
டேய் கய்தே, கசுமாலம், என்னடா அப்பாலர்ந்து உள்ள சொருகினே இருக்க, முதல்ல உன் அக்கவுண்டாண்ட பணத்தை போடு, அப்பாலிக்கா கார்ட உள்ள வுடு, சும்மா சும்மா சொருகினு இருந்தே உன் நெஞ்சுல இருக்குற மஞ்சா சோத்தை எடுத்துருவேன், அக்காங்

நெல்லை ஏடிஎம்
யேல செத்த மூதி, யே நானும் காலைல இருந்து பாக்கேன், சும்மா சும்மா உள்ள வுட்டுகிட்டு இருக்கே, யே மக்கா முதல்ல உன் அக்கவுண்ட்ல பணத்தை போடுலே, அப்புறம் இங்க வந்து பணத்தை எடு, யேல காது கேட்கா, போல வெளில


வழக்கம் போல ஆரம்பிச்சிட்டாங்கையா ரஜினிய பத்தின நியூச, அவரு அம்மாவுக்கு வாழ்த்து சொன்னத வச்சு மறுபடியும் ஒரு ஆட்டம் போட்டுட்டாங்க, ஏன் அவரு அம்மாவுக்கு வாழ்த்து சொன்னத பத்தித்தான் தெரிஞ்சதா? அப்புறம் கலைஞர் கூட பேசுன பத்தி தெரியலையாக்கும்? ஏன் எல்லாருமேதான மாற்றம் மாற்றம்னு சொல்லீட்டு இருந்தாங்க, அப்ப இருந்த ஜெ ஆட்சி அப்படி, இப்ப நடந்த ஆட்சி மாற்றம் இப்படி, ஏன் உண்மைய சொல்லக்கூடாதா?

என்னமோ ரஜினி மட்டும்தான் பாசத்தலைவர் பாராட்டு விழாவுல கலந்துக்கிட்ட மாதிரியும், வேற எந்த நடிகருமே கலந்துக்காத மாதிரியும் அல்லவா பேசுறாங்க, முடிஞ்சா முன்னாடி கலைஞர் ஆட்சியில நிகழ்சிகள்ள பங்கேற்ற நடிகர்கள்ள யாரெல்லாம் இப்ப அம்மாவுக்கு வாழ்த்து சொன்னாங்கலோ எல்லாரையும் விமர்சியுங்க, அதுதான் நடுநிலைத்தனம், அத விட்டுட்டு ரஜினிய மட்டும் விமர்சனம் பண்ணுனா அது ரஜினி மேல உள்ள காழ்ப்புணர்ச்சியே தவிர வேற எதுவும் இல்லை

என்னமோ அந்தர்பல்டி அடிச்சாராம், ஏன் கமல் கூடத்தான் கெளதமியோடவும் புள்ள குட்டியோடவும் ஜெ வீட்டுக்கே போய் பாராட்டு தெரிவிச்சிட்டு வந்தாரு, அவரெல்லாம் கலைஞர் கூட பேசுனதே இல்லையா? இல்லை ரஜினி அளவுக்கு கமல் வொர்த் இல்லைன்னு உங்களுக்கு தோணுதா? அப்படி  தோணுனா தாராளமா ரஜினிய பத்தி விமர்சனம் பண்ணுங்க, இன்னமும் விஜய், அவங்க அப்பா, தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்னு எல்லாரும் இருக்காங்க, அவங்களையும் விமர்சனம் பண்ணி நடுநிலைவாதின்னு நிரூபியுங்க

படிச்சதில் பிடிச்சது

சமீபத்துல நான் படிச்ச பதிவுகள்ளயே ரொம்ப பிடிச்சது நண்பர் முத்துசிவா கலைஞர வச்சு எழுதிய எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பதிவுதான், படிச்சு சிரிச்சு சிரிச்சு போதும் போதும்னு ஆகிருச்சு, நான் கலைஞர் சிம்பு மாதிரி டிரஸ் போட்டு ஆடுன மாதிரி வேற நினைச்சு பார்த்தேன்


திருவிளையாடல் படத்துல தனுஷ் வளர்மதி வயசுக்கு வந்துட்டான்னு பேனர் வச்சு பங்சன் நடத்தி கொண்டாடுவாரு, இப்பவெல்லாம் பசங்க யாரும் அப்படி பேனர் வைக்க வேண்டியது இல்லை, பொண்ண பெத்த அப்பன்காரங்களே அப்படி வச்சிடுறாங்க, திருப்பூர்ல பயர் சர்வீஸ் ஆபீஸ் பக்கம் ஒரு சின்ன மண்டபம் இருக்கு, அங்க மாசத்துல ஒரு பத்து சீராவது நடக்கும்,  அது மெயின் ரோட்டுல இருக்கறதுதானால அந்த வழியா போறவங்க எல்லாரும் கண்டிப்பா பார்த்துட்டுதான் போயாகணும்,

அப்படித்தான் ஒரு சின்ன பொண்ணு போட்டோ போட்டு பிளக்ஸ் போர்டு செஞ்சு வெளிய வச்சிருந்தாங்க அத பார்த்துட்டு ரெண்டு பேர் ஆபாசமா கமெண்ட் அடிச்சிட்டு இருந்தாங்க, அந்த காலத்துலதான் பொண்ணு பெரிய மனுசியாகிட்டான்னு சொந்தகாரங்களுக்கு தெரியனும்னு விழா கொண்டாடுனாங்க, சரி அதே மாதிரி இப்பவும் விழா கொண்டாடுறது தப்பில்லை, ஆனா இந்த மாதிரி பிளக்ஸ் போர்டு கலாச்சாரம் வேணுமா?

ரோட்டுல போறவங்க யாராச்சும் ஆபாசமா கமெண்ட் அடிக்கறதை கேட்டா பெத்தவங்க மனசு சங்கடப்படாதா? அப்படியே பிளக்ஸ் போர்டு வச்சுத்தான் ஆகணும்னா போட்டோ போடாம வெறும் பேர் மட்டும் போடுறதோட நிறுத்திக்கணும்


இந்த வீடியோவில் பெண்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ளனும்னு சொல்லி தராங்க, நல்லா பார்த்து டிரைனிங் எடுத்துக்கோங்க, டிரைனிங் மெட்டீரியல் வேணும்னா உங்க தம்பியவோ அண்ணனையோ யூஸ் பண்ணிக்கோங்க, அவங்க திருப்பி அடிச்சாங்கன்னா நான் பொறுப்பில்லை, மத்தபடி ஆண்கள் மன்னிச்சூ...

அன்புடன்
இரவுவானம்

Wednesday, June 15, 2011

டாஸ்மாக் கடையும் அம்பது ரூபாயும் - மொக்கை பதிவு


எனது நெருங்கிய நண்பன் ஒருவன் தீவிரமான TMK காரன், TMK என்றால் திராவிட முன்னேற்ற கழகம் அல்ல, டாஸ்மாக் முன்னேற்ற கழகத்திற்கு சொந்தக்காரன், டெய்லியும் சரக்கு அடிக்காவிட்டால் தூக்கம் வராது அவனுக்கு, அவனுடைய வண்டியை சமீபத்தில் விற்றுவிட்டதால் என்னுடைய வண்டியில்தான் தினமும் டாஸ்மாக் கடைக்கு போய் வருவான்

அனைவரிடம் இரண்டு ரூபாய் அதிகம் வாங்கும் கடைக்காரர், இவனிடம் மட்டும் சரியான விலையை மட்டுமே வாங்குவார், சில சமயம் அஞ்சு பத்து கம்மியா இருந்தாலும் சரக்கு கொடுத்து விடுவார், டாஸ்மார்க் கடையிலேயே அக்கவுண்ட் வைத்த பெருமை என்னுடைய நண்பனுக்கே சாரும்

இதனால் சரியாக கட்டிங்குக்கு மட்டும் காசு வைத்து காத்திருக்கும் அன்பர்கள் இவனை கண்டால் சூழ்ந்து கொண்டு பாஸ் சரக்கு வாங்கிக்கொடுங்க என்று அன்பு தொல்லை கொடுப்பார்கள், இன்னும் சிலபேர் 30 ரூபாய் மட்டும் வைத்துகொண்டு சார் கட்டிங் கட்டிங் என்று கூவிக் கொண்டிருப்பார்கள், அவர்களுக்கும் இவனே துணை, அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் நண்பனின் பெருமையை, எப்படியும் தினமும் 70 ரூபாய் தேத்தி விடுவான், அதற்கு மேல் அஞ்சு பைசா வைத்து நான் பார்த்ததில்லை

தினமும் மாலை 7 மணி ஆனால் போதும் எங்கிருந்தாலும் போன் வந்துவிடும், எப்படா வருவ? எப்படா வருவ? என்று, அவனின் தொந்தரவு தாங்காமலே எவ்வளவு வேலை இருந்தாலும் சீக்கிரம் கிளம்பி போய்விடும் நிலைக்கு ஆளாகிவிட்டேன், வழக்கம் போலவே போனவாரம் ஒருநாள் போன் செய்தான், மிகுந்த பரபரப்போடு பேசினான்

டேய் சீக்கிரம் கிளம்பி வாடா, அம்மா ஆட்சியில அம்மாவுக்கு புடிச்ச பச்சை கலர்ல பீர் வந்திருக்காம், இன்னைக்கு அடிச்சு பார்த்தே ஆகணும், சீக்கிரம் கிளம்பி வாடா என்று கூப்பிட்டான், நானும் வழக்கம் போலவே கிளம்பி சென்று அவனை கூட்டிக் கொண்டு வழக்கமான கடையில் புகுந்தோம்

இவனை பார்த்ததுமே கடைக்காரர் குவாட்டர் பாட்டில் ஒன்றை எடுத்து வைத்தார், அண்ணே இது வேணாம்னே, ஏதோ பச்சை கலர்ல பீர் வந்துருக்காமுல்ல அதை கொடுங்க என்றான், கடைக்காரர் தம்பி அது 110 ரூபாப்பா என்றார்

அவன் சற்றும் யோசிக்காமல் என்னுடைய பாக்கெட்டில் இருந்த அம்பது ரூபாயை எடுத்து கொண்டான், டேய் காச கொடுத்துருடா, வேற காசில்ல, நாளைக்கு பெட்ரோல் அடிக்கவே அதான் இருக்கு, கடைசி அம்பது ரூபாடா கொடுத்துருடான்னு கெஞ்சினேன், கதறினேன், பயபுள்ள கேட்கவே இல்ல, உனக்கு காலையில கொடுக்கறேண்டான்னு சொன்னான், பல காலைகள் கடந்துவிட்டன, இன்னைக்கு வரைக்கும் கொடுக்கவே இல்லை, இதனால் அடுத்தநாள் காலையில் பஸ்சுக்கு நான் அல்லு பொறுக்கியது தனிக்கதை


இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அங்குதான் கதையின் நீதியே உள்ளது, அன்று நான் அணிந்திருந்தது புதிதாக ஒருவருடத்திற்கு முன்பு வாங்கிய புத்தம்புது(?) ரெடிமேட் சட்டை, ரெடிமேட் சட்டையில் வெளியில் நாற்பது பாக்கெட்டுகள் கூட வைத்திருப்பார்கள், ஆனால் உள்ளே உள்பாக்கெட் ஒன்று கூட வைத்திருக்க மாட்டார்கள்

முன்பெல்லாம் துணி எடுத்து தைக்கக் கொடுப்போம், அப்படி கொடுக்கும் போது கடைக்காரர் உள்பாக்கெட் ஒன்று வைத்துக் கொடுப்பார், அதில் பணமோ முக்கியமான பேப்பர் போன்றவை எதையாவது வைத்துக் கொள்ளலாம், அதனால் பணம் திருடு போவதற்கோ, இல்லை கீழே விழுவதற்கோ சான்ஸ் இல்லாமல் இருந்தது

ஆனால் இப்பொழுது உள்ள ரெடிமேட் சட்டைகளில் ஸ்டைல் என்று ஒரு நாற்பது பாக்கெட், எம்ப்ராய்டரி டிசைன்கள், ஜிப்புகள், பட்டன்கள் என்று பிச்சைகாரன் தட்டு போல சட்டை முழுவதும் நிரப்புகிறார்களே ஒழிய அவசியம் தேவையான உள்பாக்கெட் ஒன்றுகூட வைக்கமாட்டேன்கிறார்கள், இதனால்தான் என்னுடைய ஐம்பது ரூபாய் அநியாயமாக பறிபோனது

இந்த பாடாவதி டிசைன்கள் எல்லாம் போட்டு ஆயிரம், ஆயிரத்து ஐந்தூறு என்று சட்டைக்கு காசு வாங்குகிறவர்கள், ஒரு இத்துணூண்டு துணியில் ஒரு உள்பாக்கெட் வைத்து கொடுக்கக்கூடாதா, அதற்குகூட வேண்டுமானால் காசு வாங்கி கொள்ளட்டுமே, மீறிப்போனால் கூட ஒரு ஐம்பது ரூபாய் வருமா? அது கூட வெட்டி வீசும் வீணான துணிகளில் தைத்துக் கொடுக்கலாம்

இது போன்ற நண்பர்களை வைத்திருக்கும் என்னை போன்ற அப்பாவிகள் நலனுக்காகவாவது ரெடிமேட் சட்டைகள் தயாரிப்பவர்கள் பெரிய மனது வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், இதற்காக பெரிய அளவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தலாமா என யோசித்து வருகிறேன், இதற்கான உங்களது ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது


இது ஒரு மொக்கை பதிவு என அலட்சியப்படுத்த வேண்டாம், இது ஒரு சமூக விழிப்புணர்வு பதிவும் கூட என்பதை கவனமுடன் பதிவு செய்ய விரும்புகிறேன், உங்கள் ஆலோசனைகளை கமெண்டில் கொட்டுங்கள், நன்றி.

Saturday, June 11, 2011

ஆரண்ய காண்டம் - ஒன்லி பார் ஜெண்ட்ஸ்




படம் ஆரம்பிக்கும் போதே ஆரண்ய காண்டத்திலிருந்து இரண்டு வரிகள் போடறாங்க
எது தர்மம்
உனக்கு எது தேவையோ அதுதான் தர்மம்

மனுசனோட வாழ்க்கையே அவனுக்கு தேவையானதை தேடி அலையறதுதான், அதுக்காக அவன் நல்லது கெட்டது, சரி தவறுன்னு எதையும் பார்க்குறதில்லை, சாதாரண மனிதர்களுக்கே இப்படின்னா கேங்ஸ்டர்ஸா இருக்குறவங்கங்களுக்கு

ரெண்டு கேங்ஸ்டர்சுக்கு இடையில ஏற்படுற பிரச்சனைகளும், அத தீர்க்க அவங்க முயற்ச்சிக்கிறதும், கடைசில என்ன நடக்குதுங்கறதுதான் ஆரண்யகாண்டத்தோட கதை, இதற்கு இடையில இரண்டு கிளைக்கதைகளும் இருக்கு, பரபரப்பான திரைக்கதையில படம் ரொம்ப சுவாரஸ்மாக இருக்குது

ஜாக்கி செராப், கஜேந்திரன்னு இரண்டு கேங்ஸ்டர்ஸ், இதுல கஜேந்திரன்கிட்ட வேலை பார்க்குற குருவி ஒருத்தர் அவங்களுக்கு தெரியாம பொருளை கைமாத்த பார்க்குறார், அதை ஜாக்கி செராப்கிட்ட வேலை பார்க்குற சம்பத் தானே தனிப்பட்ட முறையில கைமாத்திக்கலாம்னு டிரை பண்ணுறார், இதுனால ஜாக்கி சம்பத்த போட்டு தள்ள பார்க்கிறார், கஜேந்திரன் கோஷ்டிகிட்டயும் சம்பத்தான் பொருள தூக்கிட்டார்னு சொல்றார்,

அதனால கஜேந்திரன் கோஷ்டியும் சம்பத்த போட்டு தள்ள பார்க்குது, ஆனா உண்மையில பொருள் வேற ஒருத்தர்கிட்ட மாட்டிக்குது, இடையில சம்பத்தோட பொண்டாட்டியையும் தூக்கிடறாங்க, இந்த ரெண்டு பேர்கிட்டயும் மாட்டிகிட்ட சம்பத் எப்படி தப்பிக்கிறார்ங்கறத தியேட்டர்ல போய் பாருங்க

படத்துல கதாநாயகன்னு சொன்னா ஜாக்கியத்தான் சொல்லனும், படத்தோட முதல் சீனே வயசான காலத்துல சின்ன பொண்ண வப்பாட்டியா வச்சுக்கறதும், ஒன்னும் பண்ண முடியலைன்னு அந்த பொண்ண போட்டு அடிக்கறதும், ஈன்னு பல்ல காட்டுற மேனரிசம், வயசான பெரிசுகள் பண்ணுற அட்டகாசம்னு பின்னி பெடல் எடுக்குறார், கடைசியில் நிர்வாண தரிசனம் தந்து அதிர்ச்சியூட்டுகிறார்

அப்புறம் சம்பத் இவருதான் மெயின் கதாநாயகன், ரெண்டு கோஷ்டிகிட்டயும் சிக்கிகிட்டு முழிக்கறதும், தப்பிக்க பிளான் பண்ணறதும்னு படம் முழுக்க ஓடிகிட்டே இருக்கார், இன்னும் கஜேந்திரன், அவரோட தம்பியா வரவர், குருவியா வரவர்னு எல்லாரும் இயல்பான நடிப்புல அசத்தியிருக்காங்க

முக்கியமா அந்த சின்ன பையனும், பெரியவரும் செம, இயலாமை, ஏமாற்றம், அறியாமை, வட்டார மொழியில புலம்பறது எல்லாமே ரொம்ப இயல்பு, எல்லாமே நம்ம அன்றாடம் பார்க்குற பேசுற நிகழ்சிகளா இயல்பா எடுத்திருக்காங்க, அந்த பையன் பேசுற எல்லா டயலாக்குமே சூப்பர், அதுவும் சம்பத்கிட்ட போன்ல பேசும் போது ஒரு டயலாக் பேசுவான் பாருங்க, தியேட்டர்ல செம ரெஸ்பான்ஸ்

சப்பையா ரவி கிருஷ்ணா, அந்த மாதிரி கேரக்டர்னா ரவி கிருஷ்னான்னு முடிவே பண்ணிட்டாங்க போல, ஆனா அவருக்கு தகுந்த கேரக்டர்தான், கதாநாயகி சுப்புவா யாசின் நடிச்சிருக்காங்க, ஜாக்கிகிட்ட மாட்டிகிட்டு முழிக்கறதும், ரவி கிருஷ்ணா மேல காதல் வயப்படறதும்னு படம் முழுக்க வராங்க,

கிளைமேக்ஸ் யாருமே எதிர்பார்க்க முடியாத டர்னிங் பாயிண்ட், படத்தோட வசனங்கள் எல்லாம் ஷார்ப் ஆனா படம் முழுக்க கெட்ட வார்த்தைகள அசால்ட்டா பேசிட்டு போறாங்க, படத்துல நிறைய சென்சார் கட்டுன்னு சொன்னாங்க, அப்படி இருந்துமே இப்படின்னா முழு படத்தோட நிலையை நினைச்சு பார்க்க முடியலை

படத்துல பாட்டே இல்லை, யுவன் சங்கர் ராஜா மியூசிக், பிண்ணனி இசை ரொம்ப நல்லாயிருக்கு, படம் முழுக்க ஏறக்குறைய சைலண்டாதான் போகுது, தேவைப்படுற இடங்களில் மட்டும் மியூசிக் போட்டு இருக்காரு, மத்த இடங்கள்ள எல்லாம் பழைய பாட்டுகளை பிண்ணனில ஒலிக்கற மாதிரி போட்டு சரி பண்ணி இருக்காங்க, ஒளிப்பதிவு பிரமாதம், ஏறக்குறைய எல்லாமே இருட்டுலதான் எடுத்திருக்காங்க, அவங்க கூட சேர்ந்து நாமளும் இருக்குற மாதிரி பீலிங் வருது


படம் ஆரம்பத்துல ஸ்லோ மாதிரி தெரிஞ்சாலும் போக போக வேகம் பிடிக்குது, இடைவேளைக்கு அப்புறம் பரபரன்னு ஓடுது, படம் சத்தியமா குடும்பத்தோட பார்க்க கூடாத படம், குறிப்பா பெண்கள் யாரும் தியேட்டர் பக்கமே தலைவெச்சு படுக்க வேணாம், படம் முழுக்க கெட்ட வார்த்தை, வெட்டு, குத்து, கொலை, வன்முறைதான், அதுவும் இல்லாம ஆண்டிகள கரக்ட் பண்ணுறது எப்படி, பொண்ணுகள கரக்ட் பண்ணுறது எப்படி, மேட்டர் பண்ணுறது எப்படின்னு விலாவரியா விளக்கி இருக்காங்க

உலகபடம், வன்முறை படங்கள், இயல்பான படங்கள் புடிக்கறவங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும், கண்டிப்பா ஒருவாரம் கூட தியேட்டர்ல ஓடாது.

மொத்தத்துல ஆரண்ய காண்டம் – ஆண்களுக்கு மட்டும்