Thursday, July 26, 2012

கமர்சியல் பக்கங்கள் - 26/07/2012



பேஸ்புக், டிவிட்டர், சமூகவலைதளங்கள் எல்லாத்துலயும் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்னு ஸ்டேட்டஸ் போட்டு கிழிகிழின்னு கிழிக்கறாங்களே எதுக்கு? இந்த ஸ்டேட்டஸ் எல்லாம் பார்த்து திருந்திருவாங்கன்னா? அய்யய்யோ நம்மள இவ்வளவு பேரு திட்டி இருக்காங்களே நாம இனிமே இதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு மாத்திக்குவாங்கன்னா? இல்லை நாம போடுற ஸ்டேட்டஸ் பார்த்து தப்பு பண்றவங்க திருந்திருவாங்கன்னுதான் எல்லாரும் நம்புறமா என்ன?

ஒன்னும் கிடையாது, நமக்கு தேவை டைம் பாஸ், அவங்களுக்கு அவங்க பண்றதுல பாஸ்(BOSS), நாளைக்கே எல்லாரும் திருந்தி நல்லவங்களா ஆகிட்டாங்கன்னு வச்சுக்கங்க, நீங்க எல்லாம் ஸ்டேட்டஸ் போட என்ன பண்ணுவீங்க?  அதனால அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்னு ஒவ்வொருத்தனையா தேடி தேடி திட்டி ஸ்டேட்டஸ் போடுறதுக்கு பதிலா உருப்படியான விசயங்களா, பேங்க் சலான் பில்லப் பண்றதுல இருந்து இந்திய ஜனாதிபதியா ஆகற மேட்டர்வரைக்கும் மக்கள் தெரிஞ்சுக்க வேண்டிய, தெரியாத விசயங்களை ஸ்டேட்டசா போட்டு நாலு பேருக்கு தெரிஞ்சுக்க வச்சா கொஞ்சமாவது உருப்படியா இருக்கும், நானும் டிரை பண்றேன் J முடியல.

வெளம்பர தொல்லை

டிவில புதுசா ஒரு பேர் அண்ட் லவ்லி விளம்பரம் பார்த்தேன், மூஞ்சில டேமேஜ் வந்த பொண்ணு ஸ்கின் டாக்டர்கிட்ட போய் என்ன பிரச்சனைன்னு கேட்குது, அந்த டாக்டரம்மாவும் இததெல்லாம் இருக்குதுன்னு சொல்லிட்டே வர அந்த பொண்ணும் பேர் அண்ட் லவ்லி பின்னாடி எழுதி இருக்கறதயும் சரிபார்க்குது, கடைசியா டாக்டர் டிரீட்மெண்டுக்காக பிரிஸ்கிரிப்சன் எழுதட்டுமான்னு கேட்க, அந்த பொண்ணு அதெல்லாம் வேணாம் அதுக்கெல்லாம் தீர்வு இந்த பேர் அண்ட் லவ்லியிலயே இருக்குது, நான் சும்மா செக் பண்ண வந்தேன்னு சொல்லிட்டு போகுது, கட் பண்ணா வலதுபக்கம் ஒரு ஷாட், இடது பக்கம் ஒரு ஷாட், நேரா நிக்க வச்சு ஒரு ஷாட், அடடே ஆச்சரியக்குறி அந்த பொண்ணு மூஞ்சில இருக்கற கரும்புள்ளி செம்புள்ளியெல்லாம் காணாம போயிருது, எதிர வர அந்த டாக்டர பாத்து உங்களுக்கும் வேணும்னான்னு கேட்குது.


அடேய் நாதாரிகளா அதென்னடா செவத்த புள்ளைய மாடலா போட்டு பேர்னஸ் கிரீம் விளம்பரம் எடுக்கறீங்க? உண்மையிலயே உங்க பேர்னஸ் கிரீம் போட்டு செவப்பா மாறுமுன்னா எங்க ஊரு அருக்காணி யாராவது வெச்சு செவப்பா மாத்தி காட்டுங்க பாப்போம்? சும்மா ஆறு வாரத்துல சிவப்பழகுன்னு பிலிம் காட்டுரது, எங்க பக்கத்து ஊட்டு அக்கா பதினாரு வருசமா பேர் அண்ட் லவ்லியதான் யூஸ் பண்ணுது, இன்னும் செவக்கலையே, வீட்டுக்கு டிஸ்டம்பர் ரெண்டு கோட்டிங் எக்ஸ்ட்ராவா அடிக்கிறமாதிரி முதல்ல ஒருதடவை பூசி அதுக்கு மேல பவுடர பூசி மறுபடியும் ஒருக்கா பேர் அண்ட் லவ்லி போட்டு அதுக்குமேல இன்னொருக்கா பவுடர பூசி ஈவில் டெட் படத்துல வர பேய்கணக்காதானடா நெறய பொண்ணுங்க சுத்திகிட்டு இருக்காங்க, மூஞ்சிக்கு கீழ முழங்கைய பாத்தாதான் தெரியும் நெய்வேலில வெட்டி எடுத்த நிலக்கரி கணக்கா ஒரிஜினல் கலர் இருக்கறது.

பொருள் தரமானதா, உண்மையானதா இருக்க வேண்டிய அவசியமே இல்லை போல, கோடிக்கணக்குல கொட்டிகொடுத்து விளம்பரம் பண்ணி பிராண்ட் நேம் மக்கள் மனசுல பதிய வச்சிடராங்க, சோப்புன்னா லக்ஸ், பேஸ்டுனா கோல்கேட், கிரீம்னா பேர் அண்ட் லவ்லின்னு, உண்மையா நல்ல பொருள உற்பத்தி பண்ணக்கூடியவன் இவனுங்க அக்கபோருக்கு நடுவுல நிக்க கூட முடியாம போயிடரது வருத்தப்படகூடிய விசயம்.

படித்ததில் பிடித்தது

உலகத்தில் எத்தனையோ மொழிகள் தோன்றி இருக்கிறது, காலப்போக்கில் காணமலும் போய் இருக்கின்றது, ஆனால் பல்வேறு விதமான தாக்குதலுக்கு உட்பட்டாலும் தக்கிமுக்கி இன்றைக்கு வரை தமிழ்மொழி தாக்குபிடித்து கொண்டு இருக்கிறது, கொஞ்சமாவது தமிழைப்பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் என்றால் அதுக்கு காரணம் நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் சேகரித்து வைத்த ஓலைச்சுவடிகளால்தான், இன்னும் பலநூற்றாண்டுகள் கடந்தும் தமிழை காக்க வேண்டும், உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு நூலகங்கள் தேவை, இணையத்திலும் பதிய வேண்டியது மிக அவசியம், அதுவே தலைமுறை கடந்து தமிழை கொண்டு செல்லும்.

இந்த வேலையை புதுக்கோட்டையில் இருக்கும் ஞானாலயா ஆய்வுநூலகம் என்னும் குழு செய்துகொண்டு இருக்கிறார்கள், தாய்மொழி என்பது தலைமுறையை தாண்டி செல்லும் பந்தம், அதற்கு நீங்கள் எதாவது, எவ்வழியாவது உதவ வேண்டும் என நினைத்தால் மேலதிக விபரங்களுக்கு திரு. ஜோதிஜி அவர்கள் எழுதிய கீழ்க்கண்ட பதிவினை படியுங்கள், உதவுங்கள்..!



நட்பு

நான் பதிவெழுத வந்த புதுதில் சாய்கோகுலகிருஷ்ணா என்கிற நண்பர் அறிமுகமானார், அவருடைய வலைப்பூவில் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை மட்டுமே பெரும்பாலும் எழுதுவார், அவ்வப்பொழுது விழுப்புணர்வு சம்பந்தமான பதிவுகளையும் எழுதுவார், நாட்டின்மேல் பற்றுகொண்ட உருப்படியாக மட்டுமே எழுதனும்னு நினைக்கற பிளாக்கரில் அவரும் ஒருவர், ஒருநாள் அவருடைய பிளாக்கயும் யாரோ ஹேக் பண்ணிவிடார்கள், அப்புறம் வேறொரு தளம் ஆரம்பித்து வந்துகொண்டு இருந்தார், அப்புறம் அதையும் காணோம், நண்பர் பெங்களூர்காரர், அப்பொழுது அவரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், சமீபகாலமாக அவரை கூகிளில் தேடி வருகிறேன், கண்டுபிடிக்க முடியவில்லை, உங்களுக்கு தெரிந்திருந்தாலோ அல்லது அவரின் வலைப்பூ முகவரி தெரிந்தாலோ தெரிவிக்கவும், இப்பதிவினை படிக்க நேர்ந்தால் என் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் கோகுலகிருஷ்ணா.


எதிர்பார்க்கும் மொக்கைபடம்


மொக்கை படம் என்றாலே சம்திங் ஸ்பெசல்தான், டிரைலரை பார்த்தாலே தெரிகிறது படம் செம மொக்கை என்று, வெங்கடேஷ் இயக்கி இருக்கும் படம், வினய் போலீசாம், சந்தானத்தை நம்பி இறங்கி இருக்கிறார்கள், வினய் வேறு டேம்999 படத்தில் நடித்து எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார், ஆகஸ்ட் 2 ரிலீஸ், ஆவலோடு எதிர்பார்க்கிறேன் மிரட்டலை.

கிச்சு கிச்சு



கல்யாணம் ஆன நிறைய பேரு பொண்டாட்டிக மேல காண்டாத்தான் இருப்பாங்க போல, நம்மனால முடியல, அடுத்தவன் ஆவது அடிக்கட்டுமேன்னு, வெடிச்சிரிப்புக்கு நான் கியாரண்டி. :)

?இரவுவானம்



Tuesday, July 17, 2012

பில்லா - 2 இருக்குது நல்லா !



மார்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களிடம் அந்த நடிகர்களின் ரசிகர்களை தவிர்த்த வெகுஜனமக்கள் எதிர்பார்ப்பது மசாலா நிறைந்த கமர்சியல் படங்களையே, சந்தானம், வடிவேலு நடிக்கும் படங்களுக்கு நகைச்சுவை காட்சியையே பிரதானமாக எதிர்பார்த்து போவார்கள், அது போல ஒரு டான் எப்படி உருவானான் என்பதை பற்றிய படம் என்ற அடிப்படை புரிதலில் பார்த்தாலே இப்படத்தை எளிதில் ரசிக்க முடியும்.

ஒரு சாதாரணன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை படிப்படியாக பயன்படுத்தி எவ்வாறு இண்டர்நேஷனல் டானாக மாறுகிறான் என்பதே கதை, அதற்காக அவன் தேர்ந்தெடுக்கும் வழி, போகும் பாதை, நடத்தும் கொலைகள் என எவ்வித கமர்சியல் சமரசங்களுக்கும் உட்படுத்தாமல் ”ஏ” சர்டிபிகேட் என்றாலும் பரவாயில்லை என்று துணிந்து படம் எடுத்து வெளியிட்ட இயக்குனரும், தயாரிப்பாளரும் பாராட்டபட வேண்டியவர்கள்.

பில்லா இவன்தான், இவன் இப்படிப்பட்டவன்தான் என்று ஆரம்பம் முதல் இறுதியில் ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டராக மாறுவது வரை சிறிதளவு கூட பாதை மாறாமல் கடைசிவரை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் சக்ரி.


மற்றபடி கதை ஆங்கில பட காப்பி, வெளிநாட்டு படங்களில் இருந்து சீனை சுட்டுவிட்டார், வீடியோகேமில் இருந்து சுட்டுவிட்டார் என்று கூறுவதாக இருந்தால் தமிழ்சினிமாவின் ஆதிகாலம் முதல் அலச வேண்டி இருக்கும், ரீமேக், டப்பிங் என்பது போல காப்பியடிப்பது தமிழ்சினிமாவின் காப்பிரைட் வாங்காத சட்டமாக மாறி வெகுகாலம் ஆகிறது, அதையும் மீறி கேள்விகேட்டால் இன்ஸ்பிரேசன் என்ற ஒற்றைவார்த்தையில் பூசிமெழுகி பூசணிப்பூவை சொருகிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.

எல்லாவற்றையும் தாண்டி படம் முழுக்க வியாபித்து இருப்பது பில்லா பில்லா பில்லா மட்டும்தான், அஜீத் என்ற நடிகராக ஒரு பிரேமில் கூட வெளிப்படாமல் முழுக்க முழுக்க டேவிட் பில்லாவாகவே வாழ்ந்து காட்டியுள்ளார் அஜீத், இப்படத்திற்கு பாடல்கள் மட்டுமல்ல கதாநாயகி கூட தேவையில்லை, இயக்குனர் துணிந்து பார்வதி கேரக்டரை தவிர்த்திருக்கலாம், படத்தின் ஒளிப்பதிவு, இசை, இயக்கம், வசனம் என எதையும் தனிப்பட்ட முறையில்  கூறத்தேவையில்லை, எல்லாம் அளந்து வைத்தது போல நச்சென்று இருக்கிறது.

எல்லாம் இருந்தும் வெகுஜன ரசிக மனப்பான்மையான, குத்து பாட்டு, காமெடி, செண்டிமெண்ட், ஆலமரத்தடி பஞ்சாயத்து போன்ற எதுவுமே இல்லாமல் படம் எடுக்கும் போது லாஜிக் என்னும் மேஜிக் வஸ்துவை குறைந்தபட்சம் சைட்டிஷ் அளவுக்காக உபயோகித்திருந்தால் கூட இன்னும் அதிகம் பேரை கவர்ந்திருக்கலாம்.


ஏ செண்டர், பி செண்டர், சி செண்டர் என ரசிகர்களை செண்டர் பிரித்து ரசனையுள்ளவன், ரசனை குறைந்தவன் என பிரிப்பதை விட்டுவிட்டு படத்தினை அதன் தன்மைக்கேற்ற வகையில் ரசிக்க கூடிய மனப்பான்மையை உருவாக்க வேண்டிய அவசியம் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் உண்டு, குறைந்த பட்சம் பட புரோமோசன் வேலைகளிலோ அல்லது பேட்டிகளிலோ இதனை உருவாக்கி இருந்தாலே இப்படத்தினை பற்றிய பெரும்பான்மையான எதிர் விமர்சனங்களை தவிர்த்திருக்க முடியும்.

இறுதியாக கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி பலபேருடைய உழைப்பினை கொட்டி உருவாக்கும் படத்தினை மொக்கை என்ற ஒருவார்த்தையில் ஒதுக்குவது தவறுதான், அதே சமயத்தில் காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகனின் பணத்திலும் அதே அளவு உழைப்பு இருக்கிறது, இருவரின் உழைப்பும் ஒருசேர திருப்திபடுத்தப்படுவதே ஒரு நல்ல சினிமாவாக இருக்க முடியும்.

பில்லா – 2 வினை பொருத்தவரையில் எனக்கு அந்த திருப்தி இருக்கிறது.

பில்லா – அச(ஜீ)த்தல்

டிஸ்கி :- ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், எதிர் தரப்பு ரசிகர்களின் விமர்சன தெளிப்புகளை பார்க்கையில் ”துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு” என்ற திருக்குறள் நினைவுக்கு வருவதை ஏனோ தவிர்க்க இயலவில்லை J இதற்கு முடிவே இல்லையா

?இரவுவானம்



Thursday, July 12, 2012

தி அமேசிங் திருப்பூர் ஸ்பைடர்மேன் !!!


டிஸ்கி :- இதுவொரு மொக்கை பதிவு பிடிக்காதவர்கள் தயவுசெய்து இங்கேயே தவிர்க்கவும்.


தி அமேசிங் ஸ்பைடர்மேன்னு ஒரு படம், அசத்தும் ஸ்பைடர்மேன்ங்கற டைட்டில்ல மழைபெய்ற பிரிண்டுல பாடாவதி தமிழ் டப்பிங்ல சமீபத்துல ஒருநாள் பார்த்தேன், படம் பார்த்துட்டு ரெண்டு நாளா தீவிர யோசனையில இருந்தேன், அமெரிக்காவுக்கு ஒரு ஸ்பைடர்மேன் இருக்கான், இந்தியாவுக்கு யாரு இருக்கா? தமிழ்நாட்டுக்கு கூட ஆல்ரெடி யெல்லோ ஸ்கார்ப் மேன், க்ரீன் சாரி வுமன்னு ரெண்டு பேர் முகமூடி போடாம சுத்திகிட்டு இருக்காங்க, நம்ம திருப்பூருக்குன்னு யாரு இருக்கா?

அதிபயங்கர சிந்தனையின் முடிவுலதான் அந்த அருமையான(!) யோசனை உதித்தது, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், எண்ணித்துணிக கருமம்னு காளமேகபுலவரா? இல்ல இல்ல அந்த தத பததத உங்களுக்கு தெரியாத புலவர்கள் இல்லை அவங்களே சொல்லியிருக்காங்களே, சரி கருமம் எண்ணியாச்சு துணிஞ்சர வேண்டியதுதான்னு நானே ஸ்பைடர்மேனா மாற முடிவு பண்ணிட்டேன், அட இதுக்குள்ள டென்சனானா எப்படி? அமைதி அமைதி.

சரி ஸ்பைடர்மேனோட முக்கிய அடையாளமே டிரஸ்தான், அதுக்கெங்க போறது? சூப்பர்மேன் டிரஸ்னா ஈசியா பண்ணிடலாம், சரி நம்மூர்ல இல்லாத பனியன்சா, எதாவது ஒரு ரவுண்ட் நெக் டீ சர்ட்டும், ஒரு பனியன் பேண்டும் இப்போதைக்கு வாங்கி போட்டுக்கலாம், பின்னாடி பாப்புலர் ஆனா ஒரிஜினல் டிரஸ் ரெண்டா வாங்கி அழுக்கானா துவைச்சு போட்டுக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு, முகமூடியெல்லாம் தியேட்டர்லயே ப்ரீயா கொடுக்கறாங்க.



பழைய ஸ்பைடர்மேன் படம் மாதிரி இல்லீங்க மேட்டஸ்ட் ஸ்பைடர்மேன் படம், சிலந்தி வலையெல்லாம் அவனே சொந்தமா பண்ணி யூஸ் பண்ணுறாரு படத்துல, நம்ம எங்கிட்டு போய் அந்த மாதிரி வலையெல்லாம் பின்னுறது, எங்க வீட்டுல இருக்கறதே கொசுவலை மட்டும்தான், இப்போதைக்கு அதையே நாலா எட்டா கட் பண்ணி டெம்ரவரியா யூஸ் பண்ணிக்கலாம், பின்னாடி கொஞ்சம் அமவுண்ட் சேர்ந்தா நாஞ்சில் மனோகிட்டயோ, விஜயன் சார்கிட்டயோ சொல்லி அவங்க ஏரியாலவுல எதாவது மீன்வலை செக்கண்ட்ஸ்ல கிடைச்சா வாங்கி யூஸ் பண்ணிக்கலாம்.

ஓகே டிரஸ், முகமூடி, வலையெல்லாம் ரெடி, அடுத்து தலைகீழா பறக்கறதுக்கு பிராக்டிஸ் பண்ணனுமே? சின்னவயசுல ஜிம்பார்ல தலைகீழா தொங்கி கீழ விழுந்து அடிபட்டதுமில்லாம, வீட்டுலயும் தனியா அடிவாங்குனது ஞாபகத்துக்கு வந்தது, சரி இப்போதைக்கு ரிஸ்க் எடுக்க வேணாம் ஸ்கிப்பிங் கயித்தயே வச்சு சமாளிச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

எல்லாம் ஓகே இப்பத்தான் முக்கியமான ஆப்பரேசன், சிலந்தி ஒன்னு நம்மள கடிக்கனுமே, அப்பத்தான பார்லேஜீ சக்திமான் கணக்கா ரஃப்பாக முடியும்? இன்னைக்குன்னு பார்த்து சிலந்தி ஒன்னும் கண்ணுல சிக்க மாட்டேங்குது, அப்படி இப்படின்னு தேடிப்புடிச்சு பக்கத்து வீட்டு கிச்சன்ல இருந்து ஒன்ன புடிச்சிட்டு வந்தாச்சு.

கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கனுமே, ஒருகையில சிலந்தி பூச்சி, மறுகை சிலந்தி வாய்கிட்ட வச்சாச்சு, ஓகே ரெடி யுவர் டைம் ஸ்டார்ட் நவ், ஹோம் ஸ்வீட் ஹோம் கேம் ஷோ கணக்கா டென், நைன், எய்ட், செவன், சிக்ஸ்னு  டைமர் மனசுக்குள்ள ஓடுது, சிலந்தி கடிச்சதும் மினிமம் அண்டர்டேக்கர் மேக்சிமம் அர்னால்டாவது ஆகிருவோம்னு மனச திடப்படுத்திட்டு சிலந்தி முன்னாடி கைய நீட்டிட்டு இருந்தேன்.

போர், த்ரீ, டூ, ஒன்னு நெருங்கியதும் கடைசி கனநேரத்தில் ஒரு சிந்தனை ஏற்பட்டுவிட்டது, மனச மாத்திகிட்டேன், சிலந்தியவும் உங்க வூட்டுக்கு போடான்னு தொறத்தி விட்டுட்டேன், அது என்னன்னா?

அமெரிக்காவுல ஸ்பைடர்மேன் இருக்கான்னா அதுக்கு ஒரு காரணம் இருக்குது, அங்கயெல்லாம் உயர உயரமான கட்டிடங்களா இருக்குது, சோ ஸ்பைடர்மேனால ஈசியா கட்டிடத்துக்கு கட்டிடம் ஈசியா நூல் விட்டு பறக்க முடியும், எங்க ஊருல அதிகபட்சமாவே கரண்டு கம்பம் மட்டும்தான் ஹைட்டா இருக்குது, அதுல நூல் விட்டு பறந்தா அரபாடி லாரில அடிபட்டு சாகரது நிச்சயம், இல்லைன்னாலும் கீழ இருக்கற படம் மாதிரியாவது சிக்கி சாக வேண்டியதுதான்.


சோ இப்போதைக்கு ஸ்பைடர்மேன் கனவுத்திட்டத்தை டிராப் பண்ணிட்டேன், ஆனா எப்போ எங்க ஊருலயும் பாரீன் மாதிரி கட்டிடங்கள் வருதோ அப்போ மறுபடியும் டிரை பண்ணுவேன்.


ஓகே பாஸ் படிச்சிட்டீங்களா? நம்ம அடுத்த ஆப்பரேசன்?


Tuesday, July 10, 2012

கையில் பல கோடி ! ஏமாற ஆர் யூ ரெடி ?


சமீபத்துல அண்ணன் ஒருத்தரு போன் பண்ணி சாயங்காலம் வீட்டுக்கு வா, ரொம்ப முக்கியமான விசயம், கண்டிப்பா வந்துடுன்னு போன் பண்ணுனார், சரின்னு நானும் கிளம்பி அவர் வீட்டுக்கு போனேன், என்னை பாத்ததும் டக்குன்னு சிறை நிரப்பும் போராட்டத்திற்கு போய் ஜெயிலுக்கு போகாம எஸ்கேப் ஆன உடன்பிறப்பு கணக்கா வா அந்தபக்கம் போயிடுவோம்னு ரகசியமா கூட்டிட்டு போனாரு, ஓ பயங்கர ரகசியம் போலருக்கேன்னு நானும் சைலண்டா போனேன்.

தனியா ஒரு இடத்துக்கு போய் நின்னவரு, டேய் உன்கிட்ட ஒரு விசயம் சொல்றேன், யாருகிட்டயும் சொல்லக்கூடாது, நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு சொன்னாரு, சரின்னா என்ன விசயம்னு சொல்லுங்க, யாருகிட்டயும் சொல்லமாட்டேன்னு சொன்னேன், இரண்டு மூணுதடவை சத்தியம் மேட்டர ரீபிட் பண்ணி கன்பர்மேசன் பண்ணிகிட்டு விசயத்தை சொன்னாரு மனுசன், ச்சீன்னு போயிடுச்சு.

வேற ஒன்னும் இல்லீங்க, இவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருக்கு இவரோட நம்பருக்கு ஏழுகோடி ரூபா பரிசு விழுந்திருக்கறதா, அதுக்கு வீட்டு அட்ரஸ், போன் நம்பர், எல்லாம் மெயில் பண்ண சொல்லி எஸ்.எம்.எஸ் பண்ணி இருக்காங்க, அதைத்தான் உண்மைன்னு நம்பி என்ன மெயில் பண்ண சொல்லி கேட்கறதுக்காக கூப்பிட்டு இருந்தாரு, நானும் அண்ணா இது எல்லாம் சும்மா, டுபாகூரு மேட்டரு, இதையெல்லாம் பெருசா நினைக்காம விட்டுடுங்கன்னு சொன்னா ஆளு கேட்கவே இல்லை, டேய் நோக்கியா கம்பெனில இருந்து மெசேஜ் அனுப்பி இருக்காங்கடா? ஒருவேளை நிசமா இருந்தா ஏழு கோடிடா மெயில் அனுப்புடான்னு ஒரே தொல்லை.


நானும் எவ்வளவோ சொல்லி பாத்தேன் அண்ணன் கேட்கற மாதிரி இல்லை, சரி அனுப்பித்தான் தொலைவோம் என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு எஸ்.எம்.எஸ் வாங்கி பாத்தா MDNOKIA@GMAIL.COM அப்படிங்கற மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்லி இருந்தது, அடப்பாவி நோக்கியா கம்பெனி எம்,டிக்கு சொந்தமா ஒரு டொமைன் வாங்கக்கூடவா காசிருக்காது, ஜிமெயில் ஐடிய வச்சிருக்கானே? 1100 மாடல்லயே 2ஜி அளவுக்கு சம்பாதிச்சிருப்பானேன்னு இதையும் சொன்னேன், எங்கண்ணந்தான் அடைந்தால் ஏழுகோடி இல்லையேல் தெருக்கோடின்னு உறுதியா நின்னதால வேற வழி இல்லாம இதுக்குன்னே ஒரு மெயில் ஐடிய ஓப்பன் பண்ணி பேரு, அட்ரஸ், போன் நம்பருன்னு எல்லாத்தையும் அனுப்பி வச்சேன்.

எவண்டா சிக்குவான்னு போர்வைய போத்திட்டு காத்திகிட்டு இருக்கானுகளே கம்முனாட்டி பசங்க மெயில் அனுப்புன ஒருமணி நேரத்துல ரிப்ளை வந்திருச்சு, அது என்னன்னா, இந்தமாதிரி ஏழுகோடியே நாற்பது லட்சம் ரூபா பரிசுத்தொகை உங்களுக்கு விழுந்திருக்கு, அதுக்கு வாழ்த்துக்கள், அப்புறம் இந்த பணம் உங்க கைக்கு கிடைக்கற வரைக்கும் யாருகிட்டயும் சொல்லக்கூடாது, ஏன்னா சட்டசிக்கல் வந்துரும், டேக்ஸ் கட்ட சொல்லுவாங்க, பணத்த நாளைக்கு விமானத்துல அனுப்பி வைக்கிறோம், எங்க ஆபீசரு ஜேக்கப் ஆண்டர்சன் கூடவே வருவாரு, உங்களோட கிப்ட் பாக்ச கஸ்டம்சுல இருந்து ஈசியா வாங்கித்தருவாரு, அப்படி இப்படின்னு, கடைசியா மேட்டருக்கு வந்தானுக அதாவது உங்களோட ஐடி, ப்ரூப் ஒன்னும், கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் சார்ஜ் 15500 ரூபாயும் கொண்டு வாங்கன்னு.

[ அந்த மெயில்ல வந்திருந்தது கீழ இருக்கற டாக்குமெண்ட்ஸ்தான்]


நானும் உடனடியா ரிப்ளை எதுவும் பண்ணாம ஒரு ரெண்டுநாள் சும்மா விட்டுட்டேன், அடுத்தடுத்த நாள் மெயில் அனுப்பிட்டே இருந்தானுக, நாளைக்கு ப்ளைட் லேண்டிங் லேண்டிங்னு நான் ரிப்ளையே அனுப்பல, அண்ணன் வீட்டு பக்கமும் போகல, சரின்னு மூணாவது நாள் இதையெல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு அண்ணன் வீட்டுக்கு போனா அவனுங்க அடுத்தநாளே போன் பண்ணி பேசியிருக்கானுக, 15500 ரூபாய் அமவுண்டை நாங்க சொல்ர அக்கவுண்ட் நம்பர்ல போடுங்கன்னு

நம்ம அண்ணன் ஏற்கனவே வயித்துக்கு கஞ்சி வாய்க்கு பீடின்னு வாழுற ஆளு, என்கிட்ட முன்னூரு ரூபாதான் இருக்குது, சனிக்கிழமை சம்பளம் வாங்குனா ஆயிரம் கிடைக்கும் மொத்தமா 1300 இப்ப வச்சுக்கங்க, அப்புறம் ஏழுகோடி கிடைச்சதும் மீதிய கொடுத்துடறேன்னு சொல்லி இருக்காரு, அவனுங்க அதெல்லாம் முடியாது மொத்தமா 15500 வேணும் இல்லைன்னா பணம் கிடைக்காதுன்னு சொல்லிட்டானுக

இப்படியே அடுத்தநாளும் போன் பண்ணி இருக்கானுக, நம்மண்ணன்னும் லேசுபட்ட ஆளா 15500 க்கு பதினைஞ்சு லட்சமா நீங்களே எடுத்துட்டு மீதிப்பணத்தை எனக்கு கொடுங்கன்னு கேட்டுருக்கார், அவன் கடுப்பாயி நாளைக்குள்ள பணம் கட்டல உனக்கு கிப்ட் கிட்டலன்னு கறாரா சொல்லி இருக்கான், அடுத்தநாள் நம்மாளு சரி உனக்கும் வேணாம் எனக்கு வேணாம் ஏழுகோடியில இரண்டு கோடிய நீயே வச்சுக்க, எனக்கு பேலன்ஸ் அஞ்சு மட்டும் போதும், டீலா? நோ டீலா?ன்னு கேட்க அவன் விவேக்கு ஒருபடத்துல சொல்லுவாரே அந்த ஒத்தவார்த்தை அத சொல்லிட்டு போன கட் பண்ணிட்டானாம்.

அன்னைக்கு சாயங்காலம் அவரு வீட்டுக்கு போயிருந்தேன், குவாட்டர ஊத்திட்டு பொலம்பிட்டு இருந்தாரு, அய்யோ போச்சே ஏழு கோடி போச்சே, இனி சூர்யாகிட்டத்தான் போயிதான் ஹாட் சீட்டுல உட்காரணுமா அவன் கேணத்தனமா கேள்வியெல்லாம் கேட்பானே, ஈசியா வந்தது மிஸ்ஸாயிடுச்சேன்னு, அட ஏண்ணா நீங்கவேற அவனுகளே பிராடு பசங்க, நாந்தான் அப்பவே சொன்னன்ல பணம் கேட்பானுகன்னு, நீங்கதான் கேட்கலன்னு சொல்லி சமாதானப்படுத்திட்டு வீட்டுக்கு வந்தேன்.

சாப்பிட்டுட்டு படுத்து தூங்கலாம்னு படுக்கும் போது என்னோட செல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது, உங்களுக்கு ஏழுகோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு, உங்க அட்ரஸ், போன் நம்பர் இந்த மெயில் ஐடிக்கு அனுப்புங்க

MDHONDA@GMAIL.COM அடப்பாவிகளா மறுபடியும் மொதல்ல இருந்தா? அவ்வ்வ்வ்!!!!   

டிஸ்கி : நிறைய பேருக்கு இந்தமாதிரி எஸ்.எம்.எஸ் வந்திருக்கும், இந்த எஸ்.எம்.எஸ்களுக்கு ரிப்ளை பண்ணுனா என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது, தெரிஞ்சுகட்டுமேன்னுதான் இந்த பதிவு.



Saturday, July 7, 2012

கமர்சியல் பக்கங்கள் - 07/07/2012


சிறை நிரப்பும் போராட்டம்

இந்த வாரம் முழுக்க தி.மு.கவின் சிறை நிரப்பும் போராட்டம்தான் ஹைலைட், நாளிதழ்கள், சமூக வலைதளங்கள்னு எங்கு பார்த்தாலும் கேலியும், கிண்டலும், சாதனை அறிக்கையுமாக ஒரே களோபரமாக இருந்தது, வாராவாரம் ஒவ்வொரு கட்சிக்காரங்களும் இப்படி எதாவது பண்ணிட்டு இருந்தா ஜனங்களுக்கும் ஜாலியா பொழுதுபோகும்

நான் பார்த்தவரைக்கும் ஐயாவ கிழிச்சு தொங்கபோடுற அளவுக்கு யாரும் அம்மாவ பத்தி எழுத மாட்டேங்குறாங்க, ஆட்டோ கூட வராது ஸ்டெயிட்டா புல்டவுசரு விட்டு ஏத்திருவாங்களோன்னு பயமான்னு தெரியல!



முதல்வரா வரவங்க மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை சாதனைன்னு பிரகடனப்படுத்தறத முதல்ல தடுத்து நிறுத்தனும், அய்யாவுக்கு ”அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவதுன்னா” அம்மாவுக்கு ”நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைகளாம்”, முதல்ல இப்படி கேட்சிங்க் லைன் எழுதி கொடுக்கற அந்த பதினோரு பேரு கொண்ட குழு யாருன்னு கண்டுபுடிச்சு ஸ்ருதிஹாசன் ஸ்டைல்ல வாயிலயே போடனும், ஐ.ஏ.எஸ் அதிகாரிங்க யாரும் வேலை செய்யறதில்லை போல

கனவு கண்ட கதை

சின்ன வயசுல எனக்கு அடிக்கடி ஒரு கனவு வரும், நல்லா தூங்கிட்டு இருப்பேன், திடீர்னு நடுராத்திரி ஒரு மணிக்கு முழிச்சு பார்த்தா நடு சுடுகாட்டுல நான் கட்டிலோட படுத்து கிடப்பேன், பயத்தோட சுத்தி பார்த்தா செத்து கிடக்கற பொணங்க எல்லாம் குழியில இருந்து மேல எந்திரிச்சு வந்து என்னோட கட்டில சுத்தி நின்னுக்கும், பயந்து போய் அலறி எந்திரிச்சு ஓடுவேன், பின்னாடியே பொணங்க தொறத்திட்டு வரும், 


விடாம ஓடுவேன் சுடுகாட்டோட வாசலுக்கு பக்கத்துல நெருங்கும்போது அந்த பேய்ங்க என்ன புடிச்சிடும், அந்த உச்சகட்ட மரண அவஸ்தைல வீல்னு கத்தி எந்திரிச்சுருவேன், கத்துன கத்துல வீட்டுல இருக்கரவங்க எல்லாம் எந்திரிச்சிருவாங்க, இந்த கனவு விடாம வந்துட்டு இருந்தது, அப்புறம் வாலிபவயசுல வேற கனவெல்லாம் வந்துட்டு போச்சு, கடந்த பத்து வருச காலமா ஒரு கனவு கூட வரது இல்ல, படுத்ததும் தூங்கிடுவேன், ஆனா இப்ப ஒரு மூணுவாரமா மறுபடியும் கனவு வருது, அது என்ன கனவுன்னு சொல்லமாட்டேன், ஆனா ஏன் வருதுன்னுதான் தெரியல?

நன்றி நவிழ்தல்


இந்தவார கோவை பதிப்பு விகடன் வலையோசையில் என்னுடைய இரவுவானம் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, என்னுடைய தளத்தினையும் தேர்ந்தெடுத்த விகடன் நிருபர் திரு. சக்திக்கும், விகடன் நிறுவனத்திற்கும், தேர்ந்தெடுக்க காரணமாக இருந்த வீடு சுரேஸ்குமார் மாம்சுக்கும், மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஈ

ஹீரோக்கள்கிட்ட கால்கடுக்க நின்னு கால்சீட் வாங்கி கோடிகோடியா பணத்த சம்பளமா கொட்டி கொடுத்து படம் எடுத்து ரீலிஸ் பண்ணி தாவு தீர்ந்து பணமும் தீர்ந்து போறதுக்கு இந்தமாதிரி நாலு அனிமேசன் படம் பண்ணி காசு பாத்திரலாம்னு கண்டிப்பா நாலு புரொடியூசர்களாவது நினைப்பாங்க படம் பார்த்தாங்கன்னா

ஒரு ஈ தன்னுடைய காதலிய அடையறதுக்காக தன்னை கொலை பண்ணினவனை ஈயா உருவம் எடுத்து வந்து எப்படி பழிவாங்குதுங்கரதுதான் கதை, கிராபிக்சே தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் பண்ணி இருக்காங்க, கொஞ்சமே கொஞ்சம் போரடிச்சாலும் விறுவிறுப்பா இருக்கு, குழந்தைக பசங்களோடு குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம், சம்மர்ல மட்டும் வந்திருந்தா சும்மா பிச்சிருக்கும்

ஒரு உதவி

பேஸ்புக்கில் பார்த்தது, உதவி கிடைத்துவிட்டதான்னு தெரியல, எதுக்கும் இங்க பகிர்ந்துக்கறேன்


நண்பர்களே !

மேலே நீங்கள் காண்பவை கற்பகவள்ளி என்ற மாணவி மேல்நிலைப்பள்ளியில் எடுத்த மதிப்பெண். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ( 2012 ஆண்டு ) படித்த இந்த மாணவிக்கு அம்மா மட்டுமே உள்ளார். மாணவியின் அம்மா கூலி தொழிலாளி ஆகையால் மாணவியை மேல்படிப்பு படிக்கவைக்க முடியவில்லை, மாணவிக்கோ இன்ஜினியரிங் படிக்க ஆசை, படிக்கும் இந்த மாணவிக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவன் 
உங்களில் ஒருவன் 
9944134437


எதிர்பாக்கும் மொக்கை படம்


படத்தோட பேரு சேலத்து பொண்ணாம், சார்தான் ஹீரோ, இருக்கறதுலேயே டீசண்டான ஸ்டில்லு கீழ இருக்கறது மட்டும்தான், மீதி ஸ்டில்ல பார்க்கனும்னா கூகிளுங்க..!



டிரைலர்

படத்தோட பேரு 18 வயசு, நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியோட மகன் ஹீரோவா நடிக்கறாரு, அதே ரேணிகுண்டா டீம், வழக்கமான காதல் கதைதான் போல, ஆனா ஹீரோ குரங்கு, நரி, பறவை மாதிரி தினுசு தினுசா நகாசு வெல பண்ணுவாரு போல படத்துல, பொதுவா டிரைலர் நல்லா இருந்தா படம் நல்லா இருக்காது பார்ப்போம்