Tuesday, May 31, 2011

சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்



வாரத்தின் முதல் நாள் கோவிலுக்கு சென்று கடவுளை வேண்டிக் கொண்டு பணிக்கு செல்லுவது வழக்கம், அது போலவே நேற்று காலையில் கோவிலுக்கு சென்றேன், அங்கு ஒரு பெரியவர் தீவிரமாக வழிபாடு செய்து கொண்டிருந்தார், நான் செல்வதற்கு முன்பிருந்தே அங்கு நின்று வழிபட்டு கொண்டிருந்தார்

நானும் கடவுளை வேண்டிக் கொண்டு கோவிலை சுத்தி வந்து கொண்டிருந்தேன், அவரது மகன் எக்சாமில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என வேண்டி கொண்டிருந்தார், அடுத்தடுத்த சுற்றுகளில் சுற்றி வரும் போது இன்னும் இரண்டு பேர்களின் பெயரை சொல்லி வேண்டி கொண்டிருந்தார், சரி அவரின் அடுத்த இரண்டு மகன்கள் போலும் என எண்ணிக் கொண்டு, என்னுடைய வழிபாடு முடிந்ததும், நான் என் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்

அப்பொழுது அந்த பெரியவர் ஓடி வந்து நிறுத்தினார், தம்பி பஸ் ஸ்டாண்டு வழியா போவீங்களா? போனீங்கன்னா என்னை அங்க இறக்கி விடுறீங்களான்னு லிப்ட் கேட்டார், சரி ஏறிக்குங்கன்னு சொல்லி அவரை ஏற்றிக் கொண்டேன், போகும் வழியெங்கு உள்ள கோவில்களை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டே முன்பு சொன்னது போலவே அவரது மகன் இன்னும் இரண்டு பேர்களின் பெயரை முணுமுணுத்து வேண்டிக் கொண்டே வந்தார்

எனக்கு ஆர்வம் தாளாமல், என்ன விசயம் சார், ரொம்ப தீவிரமா வேண்டிக்கிட்டு இருந்தீங்கன்னு கேட்டேன், அதுக்கு அவர், ஒன்னுமில்லீங்க தம்பி என்னோட பையன் கம்ப்யூட்டர் இஞ்ஜினியரிங் படிக்கறான், கடைசி வருசம், நல்ல மார்க் எடுக்கனும்னு வேண்டிக்கிட்டேன்னு சொன்னார், அப்படிங்களா சார், உங்களுக்கு மொத்தம் மூணு பசங்களான்னு கேட்டேன், இல்லீங்க தம்பி ஒரு பையன்தான் அவன் தான் படிக்கறான்னு சொன்னார்


அப்படிங்களா, இல்லை மூணு பேர் பேரை சொல்லி வேண்டிகிட்டு இருந்தீங்களே, அதனால கேட்டேன்னு சொன்னேன், அதுங்களா அவங்க ராம்ராஜ் கம்பெனி ஓனரும் அவரோட பி.ஏவும்னு சொன்னாரு, அவங்கதான் என் பையன படிக்க வைக்குறாங்கன்னு சொன்னார்,
அதிக மார்க் எடுத்துட்டு வசதி இல்லாம இருக்குற ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவங்களுக்கு அவங்க விருப்பபட்ட படிப்ப படிக்க உதவி செஞ்சுட்டு இருக்குறார்னு சொன்னாரு, எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது, இத்தனை நாள் திருப்பூர்ல இருக்கேன் எனக்கே தெரியாம போச்சேன்னு இருந்தது

ஓ, அப்படிங்களா, கொஞ்சம் டீடெயிலா சொல்ல முடியுங்களா? எனக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா சொல்ல வசதியா இருக்கும்னு கேட்டேன், அவரு சொன்ன டீடெயில் இதோ


திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு உள்ள சென்னை சில்க்ஸ் போற வழிக்கு பின்னாடி சத்குரு டிரஸ்டுன்னு ஒன்னு வச்சு நடத்திகிட்டு இருக்காரு, திருப்பூர் ராம்ராஜ் நிறுவனத்தின் திரு. கதிர்வேல் அவர்கள், அவர் கூட திருப்பூரின் பெரிய நிறுவனங்களை சேர்ந்த முதலாளிகளும் துணையாக இருக்காங்க

நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி படிக்க முடியாம இருக்குற ஏழை மாணவர்கள் அவங்களை அணுகிணால் அவங்க படிச்சு முடிக்கற வரைக்கும், அவங்களோட காலேஜ் பீஸ், மெஸ் பீஸ், ஹாஸ்டல் பீஸ் எல்லாத்தையும் கட்டி அவங்கள படிக்க வைக்குறாங்க

இதுக்காக அவங்க உள்ளூர் காரங்க வெளியூர்காரங்கன்னு பாகுபாடு பார்க்குறது கிடையாது, வெளியூரிலிருந்து வந்தும் உதவி பெற்று போகிறார்கள், எனக்கு தெரிஞ்சு அம்பது பசங்களுக்கு மேல படிக்க வச்சுகிட்டு இருக்காரு

நல்லா படிக்கற யாருக்காவது உதவி வேண்டுமென்றால், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மங்கலம் போகும் பேருந்தில் ஏறி பழக்குடோன் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ராம்ராஜ் ஹெட் ஆபிஸ் எங்கன்னு கேட்டா எல்லாரும் வழி சொல்லுவாங்க, ஈசியா கண்டுபுடிச்சிடலாம், அங்க போய் திரு.கதிர்வேல் அவர்களின் பி.ஏ திரு ஜீவானந்தம் அவரை பார்த்து விசயத்த சொல்லி உதவி கேட்டா ரெண்டு நாள்ல கண்டிப்பாக உதவி பண்ணுவாரு

மறக்காம மார்க் சீட்டு கொண்டு போறது முக்கியம், ஏழை மாணவர்களா இருக்குறதும் ரொம்ப முக்கியம், என்னோட பையனுக்கு ரெண்டே நாள்ல டிடி எடுத்து கொடுத்து ஹெல்ப் பண்ணுனாங்க, இதுவரைக்கும் ரெண்டு லட்சம் ரூபா அளவுக்கு ஹெல்ப் பண்ணி இருக்காங்க, நான் கம்பெனில வேலை பார்த்தெல்லாம் இன்ஜினியரிங் படிக்க வைக்க முடியுங்களா, என்னோட பையனுக்கு அவருதான் காசு கட்டி படிக்க வைக்குறாருன்னு சொன்னாரு, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா கண்டிப்பா சொல்லுங்கன்னு சொன்னாரு


சரிங்க கண்டிப்பா சொல்லுறேன், அப்படியே அவரோட போன் நம்பர் சொன்னீங்கன்னா கொஞ்சம் ஈசியா இருக்கும்னு சொன்னேன், இல்ல தம்பி அவரோட அனுமதி இல்லாம போன் நம்பர் கொடுக்கறது அவ்வளவு உசிதமா இருக்காது, அதுவுமில்லாம நேர்ல போய் கேட்குற மாதிரி போன்ல பேசுறது இருக்காது, நமக்கு உதவி வேணும்னா நாமதான் நேர்ல போய் கேட்கனும், இங்க பக்கத்துலதான இருக்கு, நேர்லயே போய் பார்க்க சொல்லுங்க தம்பின்னு சொல்லிட்டாரு

எனக்கு தெரிஞ்சவங்க யாரும் இப்ப படிக்கறவங்க இல்லை, அதனால அவரு சொன்னதை பிளாக்குல பகிர்ந்துக்கனும்னு தோணுச்சு, யாராவது வசதி இல்லாதவங்க கல்வி உதவி தேவைப்படுறவங்க இருந்தா திருப்பூர் ராம்ராஜ் நிறுவனத்த அணுகலாம், எனக்கு இந்த விசயம் புதுசா இருக்குறதால இதோட நம்பகத்தன்மை எந்தளவுக்குன்னு தெரியல, திருப்பூர்ல இருக்குற விசயம் தெரிஞ்ச நண்பர்கள் சொல்லலாம், அவங்களோட போன் நம்பர் கிடைக்க டிரை பண்றேன், கிடைச்சா கண்டிப்பா பிளாக்குல போடறேன், 

நெட்ல தேடினப்ப அவங்க வெப்சைட் முகவரி கிடைச்சது, அதுல போன் நம்பரும் இருக்கு, அது அவங்க வியாபாரம் சம்பந்தமான இணையதளம், அதுல உள்ள போன் நம்பர்ல கூப்பிட்டா சரியா இருக்குமான்னு தெரியல, முடிந்தவரை நேர்ல போய் டிரை பண்ணுனாதான் சரியா இருக்கும்னு தோணுது


ஏழை மாணவர்களின் கல்விக் கண் திறக்க இந்த மாதிரி சத்தமில்லாம உதவி பண்ணிட்டு இருக்கறவங்களயும் என்கிரேஜ் பண்ணுறது ரொம்ப முக்கியம், அதனால ஏழைக் குழந்தைகளோட கல்விக்கு உதவி பண்ணிட்டு இருக்குற ராம்ராஜ் நிறுவத்தின் முதலாளி அவர்களுக்கும், திரு. கதிர்வேல், திரு. ஜீவானந்தம், மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

நண்பர்களே இது போல உங்கள் ஊரிலயும் உதவி செய்யுற பெரியவங்க யாராச்சும் இருப்பாங்க, அவங்கள நீங்களும் அறிமுகம் செஞ்சீங்கன்னா உதவி தேவைப்படுறவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும், நன்றி   

அன்புடன்
இரவுவானம் 

Saturday, May 28, 2011

மாவீரன் - விமர்சனம்


400 வருடங்களுக்கு முன்பு பிரிந்து போன காதலர்கள், 400 வருடங்களுக்கு பிறகு மறுபிறவி எடுக்கிறார்கள், இந்த பிறவியிலும் அவர்கள் சேர்வதுக்கு முன்பிறவி வில்லனே தடையாக இருக்கிறான், அந்த தடை நீங்கியதா? காதல் கைகூடியதா என்பதை நான்கைந்து சண்டைகள், மொக்கை பாடல்கள், மற்றும் அளவில்லாத கிராபிக்ஸ் காட்சியுடன் சொல்லி முடிக்கிறார்கள்


தெலுங்கு மகதீரா தமிழில் மாவீரன் ஆகி இருக்கிறான், தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகிய படம், தமிழில் கண்டிப்பாக ஹிட்டாகாது, காரணம் ஏற்கனவே நிறைய பேர்கள் பார்த்திருப்பார்கள் என்பது மட்டுமில்லை, டப்பிங் பட உணர்வு ஏற்படுவதோடு, தமிழில் பாடல்கள் படுகேவலமாக இருக்கிறது, லாஜிக் இல்லா மேஜிக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது, கிராபிக்ஸ் காட்சிகள் படு செயற்கை, அடுத்த சீன் என்ன என நாமே மனதில் படம் ஓட்டி பார்த்து கொள்ளலாம், அது சரியாக இருக்கும் அளவுக்கு திரைக்கதை இருக்கிறது

ஆனால் இதையெல்லாம் மீறி படத்தை ஈர்க்க செய்வது ராம்சரணும், காஜல் அகர்வாலும்தான், ஒரு அறிமுக கதாநாயகனுக்கு கிடைக்க வேண்டிய நடிப்பு, பாடல், நடனம், சண்டைகாட்சிகள் என அனைத்தும் கிடைத்திருக்கிறது ராம்சரணுக்கு, அனைத்திலும் அசத்தி இருக்கிறார், அதிலும் குதிரை ஓட்டும் காட்சிகளில் நன்றாக செய்திருக்கிறார், கிளைமேக்ஸில் 100 பேர்களை அனாயசமாக வெட்டி சாய்க்கிறார்

டாக்டர் விஜய்க்கு கூட இந்தளவு பில்டப் யோசித்து இருப்பார்களா என சந்தேகப்படும் அளவுக்கு ராம்சரணுக்கு பில்டப் கொடுத்திருக்கிறார்கள், நின்றால், நடந்தால், குதிரையில் வந்தால், டான்ஸ் ஆடினால் என ஏகப்பட்ட ஜெர்க்குகள், பில்டப்புகள், இதற்கே கிராபிக்ஸ் செலவு அதிகமாகி இருக்கும், சரி சிரஞ்சீவியின் மகனின் முதல் படம் என்பதால் இருக்கும்

இதுவரை காஜலில் மேல் பெரிதாக அபிப்ராயம் இருந்ததில்லை, ஆனால் இந்த படத்தில் அளவிட முடியாத அளவுக்கு நடிப்பையும் கவர்ச்சியையும் வாரி வழங்கி இருக்கிறார், அவரின் இளமை துள்ளளே படத்தின் மிகப்பெரிய பலம், ராம் சரணுக்காக இல்லையென்றாலும் காஜலின் கவர்ச்சிக்காகவே படம் ஓடி இருக்கும்

காதலுக்காக உருகுவதிலும், காதலனுக்காக ஏங்குவதிலும், காதல் நிறைவேறாமல் உயிரை விடும் காட்சிகளிலும், நம்மையும் காதலிக்க வைத்து உருக வைக்கிறார் காஜல் அகர்வால், அந்த காட்சிகளில் ராம்சரணின் நடிப்பும் அருமை

படத்தின் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது 400 வருடங்களுக்கு முந்தைய காட்சிகளில் படத்தின் பிரம்மாண்டம் தெரிகிறது, அரண்மணைகள், செட்டுகள் அனைத்தும் பிரம்மாதமாக படம் பிடித்து இருக்கிறார்கள், குறிப்பாக பிளாஸ்பேக் காட்சிகள் அனைத்தும் அருமை

ஒரு சீனில் மட்டுமே வந்தாலும் பிரம்மானந்தத்தின் காமெடி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது, ஒன்றுமே நடக்காதது போல மூஞ்சியை வைத்து கொண்டு காமெடி செய்வது அவருக்கு மட்டுமே சாத்தியம், பாடல்கள் எல்லாம் தமிழில் கேட்கும்படி இல்லை, பிண்ணனி இசை நன்றாக உள்ளது

இன்னும் எத்தனை காலத்துக்கு வரலாறையும், புவியியலையும் ஒன்றாக சேர்த்து அவியலாக்கி படம் எடுப்பதை தெலுங்கு தேசத்தவர்கள் விடுவார்கள் என தெரியவில்லை, ஒரு மாதத்திற்கு முன்புதான் இது போல ஓம் சக்தி என்ற படம் பார்த்தேன்


மொத்தத்தில் மாவீரன் – ஆந்திரா மாவீரன் மட்டும்தான், தமிழ்நாட்டுக்கு அல்ல, கண்டிப்பாக படம் பார்க்கலாம், போரே அடிக்காமல் செல்கிறது என சொல்ல முடியாது, நல்லவேளை இங்கே யாரும் ரீமேக் பண்ணாமல் விட்டார்களே, அதுவரை சந்தோசம், நமது கதாநாயகர்கள் யாரையும் அந்த வேடத்தில் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியவில்லை.

Friday, May 20, 2011

கமர்சியல் பக்கங்கள் - 20/05/2011



அப்பாடா எதிர்பார்த்த மாதிரியே ஒருவழியா கனிமொழியையும் கைது பண்ணிட்டாங்க, காங்கிரஸ் முன்னாடி இருந்தே திமுகவ காப்பாத்தனும்னு நினைச்சு டிரை பண்ண மாதிரி தெரியல, அவங்க முன்ன இருந்தே ஸ்பெக்ட்ரத்த திமுக மேல ஒரு ஆயுதமாதான் பிரயோகப்படுத்தி வந்திருக்காங்க, இது கலைஞருக்கும் தெரியும், ஆனா இப்ப கேட்டாலும் காங்கிரசோட கூட்டணி உறவு பலமாத்தான் இருக்கும்னு சொல்லுவாரு, வேற வழி? உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும், அது போல தப்பு செஞ்சவனும் தண்டனை அடைஞ்சே தீரணும், தான் செஞ்ச தப்ப உணர்ந்தாத்தான் அத திருத்திகிட்டு சரியாக முடியும், கலைஞர் குடும்பம் அத உணர்ந்ததாகவே தெரியல, பட்டுத்தான் திருந்தனும் போல இருக்கு, மொத்தத்துல ஊழலால ஆட்சியும் போச்சு, பெத்த புள்ளயும் போச்சு, காங்கிரசை நம்பினோர் கை விடப்படுவார், 

சீக்கிரமே தப்பு பண்ணினவங்க எல்லாத்தையும் பொடனில நாலு அடி விட்டு கட்சிய விட்டு தொறத்திட்டு, கட்சிய ஸ்டாலின் கைல கொடுத்து டெவலப் பண்ண வழி பாருங்க பாஸ், புள்ள கைதானா மட்டும் டெல்லி போனா பத்தாது, மக்கள் பிரச்ச்னைகளுக்கும் போகனும் 


அம்மா ஆட்சிக்கு வந்த நாலாவது நாளே திருப்பூர் சாயப்பிரச்சனையை கையில எடுத்திருக்காங்க, அதுக்கே அவங்களுக்கு ஸ்பெசல் தேங்க்ஸ், சீக்கிரமே நல்ல முடிவு கிடைக்கனும், எங்கிருந்து எல்லாமோ பஞ்சம் பிழைக்க இங்கதான் வருவாங்க, இப்ப இங்க இருக்குறவங்களே வெளில பஞ்சம் பிழைக்க போக வேண்டிய நிலைமைக்கு ஆளாயிருச்சு, இந்த ஆறேழு மாசாமா நான் பார்த்த திருப்பூர், திருப்பூரா அது, சுனாமில பாதிச்ச மாதிரி, எப்பவும் பரபரப்பா இருக்குற ஊர், இப்ப ரொம்ப அமைதியா இருக்கு, இது மறுபடியும் பழைய நிலைமைக்கு மாறனும், மாறும்.

திருப்பூர்ல இருக்குற முண்ணனி பனியன் நிறுவனங்கள் எல்லாத்தையும் ஒரு கும்பல் விலைக்கு கேட்டுச்சுன்னும், அதற்கு அவங்க ஒத்துக்க மறுத்துட்டதால சாயபிரச்சனையை தீர்க்க முந்தைய அரசாங்கம் முன்வரலைன்னும் ஒரு வதந்தி இங்க உலாவுது, உண்மையான்னு தெரியல


தலைவருக்கு உடல்நலம் சரியில்லாம போனது வருத்தமான விசயம்தான், ஆனா அதையே காரணமா வெச்சு சில பேரு அப்படி இப்படின்னு பல வதந்திகள கிளப்பி விட்டுட்டு இருக்காங்க, சில பேருக்கு சிலரை புடிக்காட்டி, அவங்க நின்னா குத்தம், நடந்தா குத்தம்ன்னு குத்தம் சொல்லிட்டே இருப்பாங்க, அதுக்காக இப்பவும் ரஜினிய பிடிக்கலைங்கற ஒருகாரணத்துக்காக, ஒரு மனுசன் உடல்நிலை சரியில்லாம இருக்குற இந்த நேரத்துலயுமா இப்படி பண்ணுவானுங்க? ஒரு சில ரஜினி ரசிகர்கள் தலைவர் மேல உள்ள அபிமானத்துல கோவிலுக்கு வேண்டிக்கறதும், பூசை செய்யறதும் அவங்க அவங்க சொந்த அபிமானத்துல பண்றது, என்னமோ ரஜினியே ஆஸ்பிடல்ல இருந்து அதை செய், இதை செய்யுன்னு ஆர்டர் போட்ட மாதிரி என்னமா பில்டப்பு கொடுக்கறாங்க, ஒரு அளவுக்கு மேல யாரோட சுதந்திரத்திலயும் தலையிட முடியாது அத புரிஞ்சுக்குறவங்க புரிஞ்சுக்கலாம், மத்தவங்கள பத்தி நோ கமெண்ட்ஸ்

சாய்பாபா மாதிரி ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கறதாலதான் இவ்வளவு குழப்பமே வருது, அதனால சீக்கிரமே தலைவர கண்ணுல காட்டிடுங்க சாமிகளா, தலைவர் சீக்கிரமே குணமடைய ஒரு ரஜினி ரசிகனாக என்னுடைய பிரார்த்தனைகள்


பிறந்தநாள் என்றால் என்ன?

நீ அழுவதை
பார்த்து
உன் அம்மா
சிரித்த
ஒரே ஒருநாள்..!


நகைச்சுவை

அம்மா : திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா?
பையன் : தெரியாது
அம்மா : படிப்புல ஒழுங்கா கவனம் செலுத்து
பையன் : பூஜா ஆண்ட்டி யாருன்னு உனக்கு தெரியுமா?
அம்மா : தெரியாது
பையன் : உன் புருசன் மேல நீ ஒழுங்கா கவனம் செலுத்து

( SMS ல் வந்தவை )


திடீர்னு ஒரு மெசேஜ் எனக்கு வந்தது, கூட வேலை பார்க்கும் நண்பர் அனுப்பி இருந்தார், திறந்து பார்த்தால், தேவி உன் நம்பர் கேட்குறா கொடுக்கவா?ன்னு அனுப்பி இருந்தார், யாருடா இந்த தேவி? நமக்கு யாரையும் இப்படி தெரியாதேன்னு யோசிச்சேன், சரி அவருக்கே போன் பண்ணி கேட்கலாம்னா என்கேஜ்டாவே இருந்தது, நானும் ரொம்ப நேரம் டிரை பண்ணி பார்த்தேன், லைன் கிடைக்கவே இல்லை, சுத்தியும் பார்த்தா கூட வேலை பார்க்குற எல்லா நண்பர்களுமே பரபரப்பா இருந்தாங்க, என்னடான்னு கேட்டா, எனக்கு அனுப்புன அதே மெசேஜை எல்லாருக்கும் அனுப்பி இருக்காரு, அன்னைக்கு அவரு லீவு வேற

சரி யாரு அந்த தேவி, அவரு வரட்டும் கேட்கலாம்னு எல்லாரும் காத்திருந்தோம், அடுத்த நாள் அவரு வந்தவுடனே எல்லாரும் அவர புடிச்சு ஏன் இப்படி மெசேஜ் அனுப்புனீங்க, யாரு அந்த தேவின்னு கேட்டோம், அதுக்கு அவரு என்ன சொன்னாருன்னு தெரியுங்களா?

எல்லாரும் யோசிச்சுகிட்டு இருங்க, பதில கடைசியா கீழ கமெண்டுல சொல்றேன் :-)



இது நாடோடிகள் படத்துல வர குத்துபாட்டு, என்னமோ தெரியல இந்த குத்துபாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும், எப்ப டிவியில போட்டாலும் சலிக்காம பார்க்க தோணுது, அதிலயும் கடைசியா சசிகுமார் போடற ஸ்டெப் இருக்கே,  ரஜினி படம் ஓப்பனிங்ல ரஜினிய காமிக்கும் போது ஏற்படற இனம் புரியாத ஒரு சிலிர்ப்பு இருக்கே, அதே மாதிரி சேம் பீலிங், செம குத்துபாட்டு, நீங்களும் கேட்டு பாருங்க, புடிச்சாலும் புடிக்கும்.

அன்புடன்

இரவுவானம்

Saturday, May 14, 2011

ஜெ - ஹோ..!




இந்த தேர்தலை பொறுத்தவரையில் எந்த ஆதரவு அலையோ எதிர்ப்பு அலையோ வீசவில்லை என்றாலும் மக்களிடையே திமுகவின் மீதான அதிருப்தி பரவலாக இருந்துள்ளது என்பது தெளிவாகிறது, கடைசி வரை நலத்திட்டங்கள் பரவலாக செய்துள்ளதால் கரை சேர்ந்து விடலாம் என நம்பி இருந்தவர்களுக்கு அதைவிட விலைவாசி, மின்வெட்டு, குடும்ப அரசியல், சினிமா தொழில் ஆதிக்கம், ஸ்பெக்ட்ரம், ஊழல் போன்ற பிரச்சனைகளும் மக்களிடையே பரவலாக சென்றடைந்து விட்டது உளவு துறையை கையில் வைத்திருந்தும் தெரியாமல் இருந்தது ஆச்சரியம்தான்

இதோ பெரும்பாலானவர்களின் ஆசைப்படியே அதிமுக வெற்றி பெற்று விட்டது, கொடநாட்டில் ஓய்வு எடுத்து கொண்டு ஆடிக்கொரு முறை அம்மாவாசைக்கு ஒருமுறை பெயரளவில் போராட்டம் நடத்திய அதிமுக வெற்றி பெற்றது ஜெவின் மீது உள்ள நம்பிக்கையால் அல்ல, கலைஞரின் குடும்ப ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியாலே, இதை தன்னுடைய சொந்தபலம் மட்டும்தான் என தவறாக எண்ணி முந்தைய கால கட்டங்களில் செய்த அதே தவறுகளை ஜெ செய்வாரா இல்லை தமிழக மக்களுக்கு மாறுபட்ட ஆட்சியினை கொடுப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வயது வித்தியாசம் இல்லாமல் காலில் விழுவதும், அம்மாவை கண்டவுடன் கன்னத்தில் போட்டு கொள்வதும், ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே ஜெவின் காரை கண்டால் இங்கேயே விழுந்து கிடப்பதும், போன்ற முந்தைய அமைச்சர்களை போல அல்லாமல் இந்த முறையாவது தூங்கி எழும்போது  அமைச்சராக இருப்போமா என சந்தேகத்துடன் விழிக்காத திறமையான அமைச்சர்களை தேர்வு செய்து ஆட்சி செய்தால் நலமாக இருக்கும் என எண்ணுகிறேன்

இலவச டிவி, இலவச கேஸ் அடுப்பு, காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், வீடு வழங்கும் திட்டம், சாலை வசதிகள், மேம்பாலங்கள், பூங்காக்கள், மெட்டோ ரயில், தொழில் வளர்ச்சி திட்டங்கள் என எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி இருந்தாலும் தோல்வி அடைந்து இருப்பது திமுக தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் சோர்வை தந்தாலும், குடும்ப ஆதிக்கம், ஊழல் போன்றவற்றிலிருந்து மீண்டு வந்தால் அடுத்த முறை ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பிருக்கிறது

இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் மக்களுக்கு என்னதான் நல்லது செய்தாலும் திட்டங்கள் தீட்டினாலும் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நிலை ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களுக்கு அலட்சிய போக்கினையே தோற்றுவிக்கும், நல்லமுறையாக ஆட்சி செய்தால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலை தோன்றினால் மட்டுமே யாரிடமும் நல்ல ஆட்சியினை எதிர்பார்க்க முடியும்

இப்பொழுதுள்ள நிலையில் திமுக அதிமுகவிற்கு மாற்றாக வேறு ஏதும் கட்சி இல்லாத்தால், வேறு வழி இல்லாமல் இவர்களில் ஒருவறையே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை மக்களுக்கு, சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் அமரும் நிலைக்கு வந்துள்ளதை பார்த்து என்ன வாழ்க்கைடா இது என்று விசனப்படும் நிலைக்கு கலைஞர் தள்ளபட்டுள்ளார், வயதான காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டிய தருணத்தில் பெரும் மன உளைச்சல், ம்ம்ம் இப்பொழுது வருந்தி என்ன பயன்

போன தேர்தலில் இலவசங்களை கொடுப்பதை கிண்டலடித்த அதிமுக இந்த முறை அவர்களுக்கும் மேலாக இலவசங்களை கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது, இலவசங்கள் ஓட்டாக மாறாது என்ற நிலை இப்பொழுது அதிமுகவிற்கு புரிந்திருக்கும், எனவே இலவசங்களை குறைத்துவிட்டு வளர்ச்சி பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றினால் நலமாக இருக்கும்

ஜெ ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும், பணப்புழக்கம் அதிகரிக்கும், விலைவாசி குறையும் சட்டம் ஒழுங்கு சீர்படும் என பல ஹோஸ்யங்கள் நிலவுகிறது, கடந்த பத்தாண்டுகளாக எங்கள் தொகுதியில் அதிமுக எம் எல் ஏ இருந்தும் ஒருமுறை கூட அவரை கண்ணில் பார்க்கும் அதிசயம் நிகழ்ந்தது இல்லை, இம்முறையாவது ஏதாவாது செய்வார்களா பார்ப்போம், கொங்கு மண்டலத்தில் பெரிதாக சொல்லி கொள்ளும்படி எதையும் செய்யாவிட்டாலும் அதிமுக மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவது ஆச்சரியத்தையே கொடுக்கிறது


இன்னொரு விசயம் நேர்மையாக தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள் தெரிவிக்கும் அதே வேளையில், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடக்கிறது, இடைப்பட்ட காலங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், அடையாள அட்டைகள் கொடுத்தல், பெயர் மாறிபோன, புகைப்படம் மாறிப்போன அடையாள அட்டைகளை சரி செய்து இருக்கலாம் அல்லவா, வழக்கம் போலவே இம்முறையும் குழப்படிகள்தான் நடந்துள்ளது, இன்னும் நிறைய பேர் அடையாள அட்டைகள் வைத்திருந்தும் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது, இந்த லட்சணத்தில் தேர்தல் நடத்தினால் முழுமையான மக்கள் தீர்ப்பாக எப்படி எடுத்து கொள்வது

அடுத்த தேர்தல் வருவதற்கு முன்னராவது இந்த குளறுபடிகளை சரிசெய்தால் நலம், இன்னும் நிறைய பேர் வாக்காளர் அட்டை கிடைக்காததற்கும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காததற்கும் திமுகதான் காரணம் என புலம்பி கொண்டிருந்த்தை கேட்டேன், இதற்கெல்லாம் முழு பொறுப்பு தேர்தல் ஆணையம்தான் என எப்பொழுது உணர போகிறார்களோ,

தேர்தல் ஆணையத்தின் இத்தனை கெடுபிடிகளுக்கும் திமுக அரசு ஒத்துழைப்பு கொடுத்த்து நிரம்பமே ஆச்சரியம்தான், ஒருவேளை தோல்வி நிச்சயம் என முன்னரே தெரிந்திருந்தால் இன்னமும் திருமங்கலம் பார்முலாவில் முழு வீச்சில் இறங்கி இருப்பார்கள், திமுகவிற்கு சளைத்தவர்கள் இல்லை என அதிமுகவும் எங்கள் தொகுதியில் காட்டினார்கள், வெறும் 8 பேர் மட்டுமே கொண்ட என்னுடைய நண்பர்களுக்கு 46 புல் பாட்டில்களும், பணமும் ஞாயிரு அன்றே கொடுத்தார்கள், ஹி ஹி நண்பர்களும் விசுவாசமாகவே நடந்து கொண்டார்கள்

அதுசரி முந்தைய தேர்தலில் அதிமுக தோற்றதற்கு மிண்ணனு வாக்குபதிவு முறை சரியில்லை எனவும், வாக்கு சீட்டு முறையே வேண்டும் எனவும் கூறியவர்கள், இப்போதைய தீர்ப்பினை மட்டும் முழுமனதுடன் ஏற்று கொள்கிறார்களா என தெரியவில்லை

இன்னும் எத்தனை காலத்திற்குதான் இவருக்கு மாற்று அவர், அவருக்கு மாற்று இவர் என ஓட்டு போட போகிறோமோ தெரியவில்லை, சினிமா துறையை தவிர்த்து ஒரு நல்ல ஆள் தமிழகத்திற்கு கிடைக்க மாட்டாரா? எம்ஜியார், கருணாநிதி, ஜெயல்லிதா, இப்பொழுது விஜயகாந்த எதிர்கட்சி தலைவர் ஆகிவிட்டார், இனி அடுத்தது யார் விஜயா என தெரியவில்லை, இதையெல்லாம் பார்க்கும் போது டிவிட்டரில் படித்த டிவிட் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது, விக்கலுக்கு ஏண்டா விசத்தை குடிச்சீங்கன்னு

இப்படியே சென்று கொண்டிருந்தால் 2016, 2021 என்று போகும் போது அவைக்குறிப்பு முழுவதும் பஞ்ச் டயலாக்குகளால் நிரம்ப போகும் அபாயமும் இருக்கிறது..!
     

Saturday, May 7, 2011

ஒரே பேஜாரா போச்சுப்பா..!



வருசா வருசம் மே மாசம் ஆனா போதும், என்ன அக்னி வெயில் கொளுத்துமான்னு கேட்குறீங்களா? அதை விடுங்க பாஸ் அதகூட சமாளிச்சிரலாம், ஆனா ஸ்கூல் லீவுன்னு ஒன்னு விடுவாங்களே, அத நினைச்சாதான் பயமா இருக்குது, என்னடா லீவுன்னா சந்தோசபடுறத விட்டுட்டு சோக சீன் போடறான்னேன்னு பார்க்கறீங்களா? அட நாமளும் சின்ன பையனா இருந்தவரைக்கும் ஸ்கூல் லீவுன்னா சந்தோசமாத்தான்  இருந்துச்சு, ஆனா இப்ப அப்படி இல்லைங்க

அது ஏன்னா ஸ்கூல் லீவு விட்டா போதும், எப்படா லீவு விடுவாங்கன்னு காத்திருந்த மாதிரி அடங்காபிடாரி பசங்க, பொண்ண பெத்த குடும்பங்க எல்லாம் கிளம்புவாங்க சொந்தகாரங்க வீட்டுக்கு, உங்களுக்கு ஒரு சொந்தகாரங்கள பழிவாங்கனும்னு நினைச்சா, மந்திரம், பில்லி சூனியம்னு எதுவும் வைக்க வேண்டாம்,

சில்வண்டு பசங்கள கொண்டு போய் ஸ்கூல் லீவுல சொந்தகாரங்க வீட்டுல விட்டுட்டு வந்தா போதும், அப்புறம் ஜென்மத்துக்கும் நம்மகிட்ட வச்சுக்க மாட்டாங்க, அதுக்கும் மீறி ஒரு வார்த்தை பேசுனாங்கன்னா, மாமா காலாண்டு பரீச்சை லீவுக்கு வரட்டான்னு பையன விட்டு கேட்க சொல்லுங்க, பேயறைஞ்ச மாதிரி ஆகிருவாங்க


எல்லா வீட்டுல இருக்குற எல்லா பசங்களும் டார்ச்சர் பண்ண மாட்டானுங்க, ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மாதிரி டார்ச்சர் பண்ணுவான், விளையாட்டுல இண்ட்ரஸ்ட் இருக்குறா பையனா இருந்தா கிரிக்கெட் பேட், பால், கேரம், செஸ்னு வாங்கி கொடுக்கணும், இன்னொரு குரூப்பு, சினிமா பைத்தியம் பிடிச்சவனுங்களா இருப்பானுங்க, டெய்லியும் சினிமாவுக்கு கூட்டிட்டு போக சொல்லுவாங்க, புதுப்பட சிடி வேணும்பானுங்க, கேம் சிடி வேணும்பானுங்க, பிட்டு பட சிடி கூட வாங்க போகாத சொந்தகாரங்க எங்க போய் வாங்குவாங்க சொல்லுங்க

இன்னும் சிலது சரியான தீனி பண்டமா இருக்கும், காலையில காபி, கோன் ஐஸ்கீரிம், பிஸ்கெட், சிப்ஸ், ரொட்டி, அப்புறம் காலையில டிபன், மத்தியான கேப்புல ஜீஸ், மத்தியானம் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, அப்புறம் 1 கிலோ ஐஸ்கிரீம், சாயங்காலம் கிரீம் பிஸ்கெட்டு, நைட்டு சப்பாத்தி, தொட்டுக்க சிக்கன்னு, கடைசியா பைனல் டச்சுக்கு குவாட்டர் மட்டும் கேட்க மாட்டாங்க, கூடவே அப்பன்காரன் வந்திருந்தான்னா அதுவும்

இன்னும் சிலது இருக்கு, அம்மாவ கேட்டா துறுதுறுன்னு இருப்பான் என் பையன்னு சொல்லுவாங்க, உண்மையிலேயே குட்டிசாத்தான் வேலைன்னா அத அந்த சில்வண்டுதான் செய்யும், வீட்டுல இருக்குற ஒரு பொருளை விடாது, சமையல் கட்டுல இருந்து பாத்ரூம் வரைக்கும் இருக்குற அத்தனை பொருளையும் உடச்சிட்டுதான் மறுவேலை பார்க்கும், கடைசியா இங்க எதுவும் மிச்சம் இல்லைன்னா பக்கத்து வீட்டுலயும் போய் வேலய காட்டி வச்சிடுவான் பையன், நாமதாம் பக்கத்து வீட்டுக்காரங்க்கிட்ட நாலாவது உலகப்போர் நடத்தி பையன மீட்டுட்டு வரணும்
எலக்ட்ரானிக் பொருள் கையில கிடைச்சா அதோ கதிதான், டிவி டேப் ரெக்கார்டர், சிடின்னு எல்லாத்தையும் நோண்டி நொங்கெடுத்துடுவான் பையன், டிவிய நோண்டக்கூடாதுன்னு சைல்டு லாக் பண்ணி வச்சா, பட்டனையே உடச்சி எறிஞ்சிடுவான், நாம எந்த சேனலையும் பார்க்க முடியாது, பையன் போடற சேனல்தான், அது கார்ட்டூனா இருந்தாலும் கடைசி வரை பார்த்து மனச தேத்திக்க வேண்டியதுதான், அவன் பண்ர அத்தனை அழிச்சாட்டியத்தையும் பார்த்து அவங்க அம்மா பெருமைபடறத பார்த்தா வர கோபத்துக்கு ரெண்டு பேரையும் தலைகீழா கட்டி வச்சு அடிக்கணும்னு தோணும், ஆனாலும் என்ன பண்றது

ஸ்கூல் லீவெல்லாம் முடிஞ்சு கிளம்பி போகும் போது, பையன் ஸ்கூலுக்கு போறதுக்காக, ஸ்கூல் பேக், யூனிபார்ம், ஷூ, சாக்ஸ், புஸ்தகம், வாட்டர் பாட்டில், ஜாமிண்ட்ரி பாக்ஸ், முடிஞ்சா ஸ்கூல் பீஸ், அவங்க அப்பா அம்மாவுக்கு புடவை, வேஷ்டி, பேண்ட், சர்ட் எல்லாத்தையும் கொடுத்து அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிரும், இத்தனைக்கும் அவங்கா வீட்டுக்கு நாம போனப்ப பச்சத்தண்ணியத்தான் கொடுத்துருப்பாங்க, ஆனா என்னமோ பாயாசமே கொடுத்த மாதிரி பேசுவாங்க பாருங்க

மாசா மாசாம் விக்கிற வெலைவாசியில பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தறவங்க திடீர்னு சொந்தகாரங்க வருகையால மூணு வட்டிக்கு கடன் வாங்கி செலவு பண்ண வேண்டிய நிலைமைக்கு ஆளாகிடுறாங்க, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாவுக்கு வாங்கவே எட்டணா பத்தாத குடும்பம், திடீர்னு வர சொந்தகாரங்களுக்கு டூத் பிரஸ்சுல இருந்து சிக்கன் பிரியானி, யூனிபார்ம் வரைக்கும் வாங்கிதர என்ன பண்ணுவாங்க சொல்லுங்க? அதனால ஒரு வீட்டுக்கு விருந்தாளியா போறவங்க முடிஞ்ச வரைக்கும் அவங்க நிலைமைய தெரிஞ்சுகிட்டு போறது நல்லதுன்னு நினைக்கிறேன்


இத்தனையும் கடனோ உடனோ வாங்கி செலவு பண்ணி இருப்போம், அந்த சொந்தகாரங்களும் அடுத்த சொந்தகாரங்க வீட்டுக்கு போயிருப்பாங்க, அங்கபோய் அந்த பையன் என்ன சொல்லுவான் தெரியுமா? அந்த வீடு ரொம்ப மோசம், அந்த மாமா எனக்கு ஒன்னுமே வாங்கி தரலை, நீ வாங்கி கொடு மாமான்னு.

இதயெல்லாம் கேள்விபட்டுட்டு நொந்து வெந்து நூடுல்ஸ்ஸாகி வீட்டுக்கு வந்தா, உடஞ்சு போன பேனு, அலை அலையா ஒடுற டிவி, உடஞ்சு போன கண்ணாடி சாமான், கிழிஞ்சு போன துணி மணி, நார்நாரா கிழிஞ்சு போன புஸ்தகம், வழிஞ்சு கொட்டி கிடக்கிற டூத் பேஸ்டு இதெல்லாம் பார்க்கும் போது என்ன தோணும்?

இதெல்லாம் சரி பண்ண யாருகிட்ட கடன் வாங்கலாம் வட்டிக்குன்னா? இல்லை....???