Saturday, May 26, 2012

இஷ்டம் - கஷ்டமல்லகாலம் காலமாக தமிழ்சினிமாவின் ஆபரேசன் தியேட்டர்களில் வெட்டி கூறு போடப்படும் அதே கதைதான், ஆனால் திரைக்கதை என்னும் டிரீட்மெண்டில் உயிர்பிழைக்கிறது இந்த இஷ்டம்.

காதலித்து திருமணம் செய்யும் ஜோடிகள் திருமணத்திற்கு பின் ஏற்படும் சிறு சண்டையால் பிரிந்து சென்று கிளைமேக்சில் ஒன்று கூடுவதே இஷ்டம் பட கதை.

இக்கால இளைஞர்கள் காதலிப்பது, கல்யாணம் செய்வது, விவாகரத்து செய்வது, காதலிக்கும் போதே படுக்கைக்கு போக நினைப்பது என எல்லாவற்றிலுமே அவசரம் காட்டுகிரார்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை கருத்தாக சொல்லாமல் போகிற போக்கில் கலகலப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

இரண்டு கையெழுத்து ரிஜிஸ்தர் ஆபீசில் போட்டால் திருமணம், அதே இரண்டு கையெழுத்தை விவாகரத்து பத்திரத்தில் போட்டால் டைவர்ஸ், என காதலையும் கல்யாணத்தையும் சீரியசாக எடுத்து கொள்வதில்லை இந்தகால தலைமுறை,

இந்தகால தலைமுறை பிரிவதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் அந்தகால தலைமுறைகள் பிரியாமல் இருப்பதற்கு திருமணத்தை சீரியசாக எடுத்துக் கொள்வதே காரணம் என சொல்லுகிறார் இயக்குனர்.


ஆரம்பத்தில் விமலின் வட்டமுகமும், மீசை இல்லாத மேனரிசமும் ஐடி இளைஞனாக ஒட்டாமல் தனித்து நின்றாலும், காதல், திருமண வாழ்க்கை என போக போக கதையோடு ஒன்றவைத்து விடுகிறார், நிஷா அகர்வால், காஜல் அகர்வாலின் தங்கை ஹீரோயினாக அறிமுகம்.

அக்கா அளவிற்கு பாந்தமான முகமும், ஈர்ப்பான நடிப்பும் இல்லாவிட்டாலும், காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் கவர்சியால் கிறங்கடித்து அக்கவிற்கு தானும் சளைத்தவரில்லை என நிரூபிக்கிறார், எனினும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை தனது முதல்படமாக தேர்வு செய்து நடித்ததில் வெற்றி வெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

படத்திற்கு முக்கிய பலமே சந்தானம்தான், கதையோடு ஒட்டிய காமெடியால் கலகலக்க வைக்கிறார் சந்தானம், இடைவேளைக்கு பிறகான பிளாஸ்பேக் காட்சியமைப்பு சந்தானம் இல்லாமல் சல்லியடிப்பதில் இருந்தே சந்தானத்தின் முக்கியத்துவம் தெரிகிறது, எவ்வளவு சீரியசான காட்சிகளையும் நகைச்சுவையாக மாற்றும் சந்தானத்தின் காமெடியால் படம் போவதே தெரியவில்லை.

பாடல்கள் ஆஹா என்று இல்லாவிட்டாலும் ஓகே ரகம், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, இத்யாதி சமாச்சாரங்கள் இப்படத்திற்கு படத்தோடு ஒன்றவைக்கும் அளவிற்கு போதுமான அளவில் உள்ளது, விமலின் அம்மா மற்றும் அப்பாவாக நடித்தவர்கள் பொருத்தமான தேர்வு.


இக்காலத்தில் ஹாஸ்டலில் வசிக்கும் பெண்களின் நடவடிக்கைக்கு, ஹீரோயினிடம் ஹாஸ்டல் நண்பி கூறும் “சென்னைக்கு வந்துட்ட சீக்கிரம் பாய்பிரண்ட் வச்சிக்க இல்லாட்டி போரடிக்கும்” என்று கூறுவதில் இருந்து இறுதியில் “ லவ் பண்ணும் போது பசங்க பொண்ணுக கூட பார்க்கு, பீச், ஹோட்டல்னு எல்லா இடத்துக்கும் வருவாங்க, ஆனா அபார்ஷன் பண்ண நாம தனியாத்தான் போகனும்” என்று சொல்வதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இறுதியாக ஊடலும், கூடலும், வார்த்தை போர்களும் காதல் மற்றும் கல்யாண வாழ்வின் ஒரு அங்கம்தான், அதையே காரணம் காட்டி விவாகரத்து வரை போகக்கூடாது என்று எல்லோருக்கும் புரியும்படியும், உணரும்படியும், எளிதாக சொல்லி இருப்பதால் இஷ்டப்பட வைக்கிறது இந்த இஷ்டம்.

தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.
------------------------------------------------@@@@@@------------------------------------------
கடைசியா கிறுக்குனது

   

Thursday, May 24, 2012

சரக்குன்னா சந்தோசம்தான் ! சாவுன்னா சந்தேகம்தான் !!இந்த கதை கொஞ்சநாளுக்கு முன்னால் நடந்த சம்பவம், ஒரு விழிப்புணர்வுக்காக இங்கே பதிகிறேன்.

அந்தம்மாவுக்கு 42 வயசு ஆகுது, ஏற்கனவே மூணு பொண்ணுகளை பெற்றிருந்தாலும் காலம் போன வயசுல ஆம்புளை பையனுக்கு ஆசைப்பட்ட அந்தம்மாவோட வீட்டுகாரரால மறுபடியும் கர்ப்பமா இருந்தாங்க

இங்க முக்கியமா சொல்ல வேண்டியது அந்தம்மாவோட பிளட் குரூப் ஓ நெகட்டிவ், பாசிட்டிவ் பிளட் குரூப் வேணும்னாலே பாசிடிவ்வான பதில் கிடைக்காத நம்ம ஊருல நெகட்டிவ் பிளட் குரூப் அதுவும் ரொம்ப ரேரான பிளட் குரூப்புக்கு எங்க போறது?

அவங்க மூணாவது பொண்ணு சிசேரியன்ல பொறக்கும் போதே ரொம்ப கஷ்டப்பட்டுதான் இரத்தம் கிடைச்சுதாம், இப்ப நாலாவது அதுவும் 42 வயசுலங்கறதால ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும், ஒ நெகட்டிவ் பிளட் குரூப் இருக்கற யாரையாவது பிடிச்சு வைச்சுகங்க, அவசரத்துக்கு ஒன்னும் பண்ண முடியாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காரு.

அவங்க வீட்டுகாரரும் அலையோ அலைன்னு அலைஞ்சு, தெரிஞ்சவங்கள எல்லாம் கேட்டு அப்படி இப்படின்னு ஒரு வேலையில்லாத வெட்டிபயல ஆனா ஓ நெகட்டிவ் குரூப் ஆள பிடிச்சிட்டாரு

அந்தம்மாவுக்கும் எட்டு மாசம் ஆயிருச்சு, எப்ப வேணா பிரசவ வலி எடுக்கலாம்னு டாக்டர் சொன்னதால அந்த ஓ குரூப் ஆள கூடவே தங்க வச்சு நல்லா கவனிச்சுகிட்டாரு அந்த மூணு பொண்ணுங்களை பெத்த மகராசன்.

டெலிவரி ஆகப்போற நாளுக்கு இரண்டு வாரத்துக்கு முன்னாடியே அட்மிட் பண்ணிடுங்கன்னு டாக்டர் சொல்ல அதே மாதிரியே பண்ணிட்டாங்க, இருக்கறதே இரண்டு வாரம் அந்த பிளட் டோனர விட முடியுமான்னு அந்தாளையும் ஹாஸ்பிடல்லயே தங்க வச்சிட்டாங்க.

வெளில வேலைக்கு போனாலே நோண்டி நொங்கெடுத்து அஞ்சு பத்து போட்டு கொடுக்கறாங்க, இங்க சும்மா இரத்தம் கொடுத்தாலே மூணு வேளை மாப்பிள மாதிரி கவனிச்சுகராங்களேன்னு அவனும் சந்தோசமா தங்கிட்டான்.

தினமும் அந்தம்மா வீட்டுகாரரும், பிளட் டோனரும் காலைல இருந்து நைட்டு வரைக்கும் பிரசவ வலி வருதான்னு பார்ப்பாங்க, வரலைன்னு அவங்களே கண்டுபுடிச்சிட்டு நைட்டு சரக்கு அடிச்சுட்டு கவுந்துருவாங்க, இப்படியே ஒருவாரம் போயிருச்சு.


அதே மாதிரி ஒருநாள் நைட்டு ஒன்பது மணி வரைக்கும் பார்த்துட்டு சரக்கு அடிச்சுட்டு மல்லாந்துட்டாங்க, அன்னிக்கு பார்த்து நைட்டு பதினோரு மணிக்கு அந்தம்மாவுக்கு வலி வந்துடுச்சு, அவங்களும் எழுப்பி எழுப்பி பார்த்தா புருசன்காரனும் எந்திருக்கல, டோனரும் எந்திரிக்கல, காலம் போன காலத்துல பிரசவத்துக்கு கூட போனா மானக்கேடுன்னு சொந்தகார பய ஒருத்தனும் வரல

அந்தம்மா கத்துன கத்துல பக்கத்து ரூமு ஆளுங்கெல்லாம் வந்து டாக்டர கூப்புட்டு அட்மிட்டும் பண்ணிட்டாங்க, செக் பண்ணி பார்த்தா குழந்தையோட பொசிசன் திரும்பி இருக்கு, அர்ஜெண்டா ஆப்பரேசன் பண்ணனும்கறாங்க, பிளட்டும் கம்மியா இருக்கு, இரத்தமும் வேணும், ஆப்பரேசன் பண்ண கையெழுத்தும் வேணும், வெளில அடிக்கற மழைக்கு இரண்டு பேரும் புல் டைட்டுல சரக்கு அடிச்சிருக்காங்க.

எப்படியோ கஷ்டப்பட்டு இரண்டு பேரையும் எழுப்பி ஆப்பரேசனுக்கு ரெடி பண்ண பார்த்தா பிளட் டோனர் குடிச்சிருக்கறதால இரத்தம் எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க, நைட்டு பணிரெண்டு மணி, வெளில பேய் மழை, ஹாஸ்பிடல்லயும் இரத்தம் ஸ்டாக் இல்லை, பக்கத்துல எந்த ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணாலும் அந்த குரூப் இல்லைங்கறாங்க.

நேரம் ஆக ஆக நிலைமை சீரியசா ஆகிட்டிருக்கு, அவங்க புருஷன எல்லாரும் செம திட்டு திட்டுறாங்க, பிளட் டோனர் மட்டையானவரு, மட்டையானதுதான், கடைசியா டாக்டர் சொல்லிட்டாரு.

ஒன்னா இங்கிருந்து மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருங்க, அங்க அந்த குரூப் இரத்தம் இருக்க சான்ஸ் இருக்கு, ஆனா மெடிக்கல் காலேஜ் கொண்டு போக ஒன்னரை மணி நேரம் ஆகும், அதுக்குள்ள என்ன வேணாலும் ஆக சான்ஸ் இருக்கு, அதே சமயம் இங்கயே ஆபரேசன் பண்ண நான் தயார்தான், ஆனா உயிருக்கு பொறுப்பேற்க முடியாதுன்னு சொல்லிட்டாரு.

அந்த ஆளு கதறுன கதறல் இருக்கே, என்ன சொல்ல? ஆம்பிளை பையனுக்கு ஆசைப்பட்டு இருக்குற பொண்டாட்டியும் போயிருவா போல இருக்கேன்னு கதறுராரே தவிர ஒரு முடிவும் எடுக்காம அரைமணி நேரமா அழுதுட்டே இருக்காரு, டாக்டர் முதக்கொண்டு எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க கிளம்புங்கன்னு சொல்லுராங்க, அந்தாளு அப்பவும் ஒருமுடிவும் எடுக்கல

பார்த்திட்டு இருக்கறவங்களே வெறுத்து போயிட்டாங்க, அப்புறமா ஒரு ஆம்புலன்ஸ் கொண்டு வந்து அந்தாளு சம்மதத்தை கூட கேட்காம ரெண்டு பேரையும் ஏத்தி அனுப்பி வச்சாங்க, அந்தம்மா வலியில கத்துன கத்தும், அந்தாளு குடிச்ச குடி இப்படி குடியை கெடுக்கும்னு தெரியலியேன்னு அழுதிட்டே போனதும், ஆம்புலன்ஸ் ஹாஸ்பிடல் காம்பவுண்ட் செவுரு தாண்டுற வரைக்கும் கேட்டுச்சு.

இப்படித்தாங்க இப்பல்லாம் நடக்குது, முன்ன தனியார் மதுபான கடைகள் இருக்கும் போது கூட இந்தளவு குடிக்கு மக்கள் அடிமையாகி போகல, இப்ப அரசாங்கமே எடுத்து நடத்தும் போதுதான் அதிக அளவு மக்கள் குடிக்க ஆரம்பிச்சிருக்காங்க.


சுவாசிக்கறது, சாப்பிடுறது மாதிரி குடிக்கறதும் ஒரு அத்தியாவசிய கடமையா மாறிட்டு வருது, வயசுல மூத்தவங்க மட்டும் குடிக்கற நிலைமை போயி, இப்ப ஸ்கூல் படிக்கற பசங்க கூட குடிக்கறாங்க, கட்டிங் அடிக்கலைன்னா நைட்டு சாப்பிடவே முடியாதுங்கற நிலைமைக்கு பசங்க ஆளாகிட்டாங்க.

முன்னால ஒருத்தரை பார்த்தா எப்படிடா இருக்கேன்னு கேட்பாங்க? இப்பல்லாம் பசங்க யாரைவாவது நைட்டுல பார்த்தா கட்டிங் போட்டுட்டியான்னு கேட்கறாங்க, சந்தோசம், கோபம், வெறுப்பு எல்லாத்துக்குமே சரக்குதான், அவங்க சாவுக்குமே சரக்குதான் காரணம்கறதும், இப்படி பலகுடும்பங்க அழியறதுக்கும் சரக்குதான் காரணம்கறதும், அத விக்கிறது அரசாங்கம்கறதும் எவ்வளவு கேவலமான விசயம்?

இதப்பத்தி யோசிச்சிட்டு இருக்கும் போதே அவங்கள விட போன ஆம்புலன்ஸ் வேன் திரும்பி வந்துட்டு இருந்தது, என்னாச்சுன்னு கேட்காலாம்னு போனா அந்த டிரைவே சொன்னாரு, ரொம்ப சீரியசா ஆனதால போற வழில இருந்த தனியார் ஆஸ்பத்திரியிலயே சேர்த்துட்டாங்களாம், அங்க அந்த நெகட்டிவ் பிளட் குரூப் இரத்தமும் ஸ்டாக் இருந்ததால ஆப்பரேசனும் பண்ணிட்டாங்களாம், ஒன்னும் பிரச்ச்னை இல்லைன்னு சொன்னார்.

அப்பத்தான் எனக்கும் மத்தவங்களுக்கும் நிம்மதியே வந்தது.

அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்,

மறுபடியும் பொண்ணுதான் பொறந்திருக்காம்.  


Wednesday, May 16, 2012

கமர்சியல் பக்கங்கள் - 16/05/2012


அம்பலவாணர் சுவாமிகள் என்ன பண்ணார்?
என்ன பண்ணலைன்னு கேளுங்க?


சங்கத்தமிழ் வளர்த்த ஆதீனங்களில் மதுரை ஆதீனமும் ஒன்னாம், இப்பல்லாம் ஒல்டு ஆதீனமும், லேட்டஸ்ட் ஆதீனமும் டிவி பேட்டிகள்ள கூட இங்கிலீஸ்லதான் பேட்டி குடுக்கறாங்க, (ஓவர்)

நம்ம நித்தியானந்தர் ஆதீனமா ஆனது ஒருபக்கம் இருக்கட்டும், ஆனா இந்தகாலத்துல ஆன்மீகத்த வளர்த்தறதுக்காக லேட்டஸ்டா அப்டேட் பண்ணப்பட்ட டைனமிக் சாப்ட்வேர்தான் நித்யானந்தான்னு இப்ப இருக்கற ஆதீனம் சொன்னாரு பாருங்க அதத்தான் பொறுத்துக்க முடியல, (ஓவரோ ஓவர்)

போகப்போக பார்க்கத்தானே போறோம் நித்யானந்தா அப்டேட் பண்ணப்பட்ட டைனமிக் சாப்ட்வேரா இல்லை அட்டாக் பண்ணுற வைரஸான்னு.

SAVE A TREE

USE LESS PAPER – SAVE A TREE அப்படின்னு ஜெராக்ஸ் மிசின்ல கூட போட்டு இருக்காங்க, அந்தளவுக்கு பேப்பர் தேவைக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுகிட்டு இருக்கு, பெண்கள் யூஸ் பண்ணுற சானிடரி நாப்கின்ல மரங்களோட தண்டைத்தான் அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தி நாப்கின் தயாரிக்கறாங்க அதைத்தான் நீண்ட நேரம் உழைக்கும் நாப்கின்னு விளம்பரபடுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்கறாங்க கார்பரேட் கம்பனிகள்ன்னு  நம்ம தமிழர் ஒருத்தர் கண்டுபுடிச்சு சொல்லி இருக்காரு

தேவைக்கு அதிகமா பேப்பர யூஸ் பண்ணுறது தப்புன்னுதான் ஏடிஎம்ல பணம் எடுக்க போனாக்கூட ரிசிப்ட் எடுக்க மாட்டேன், முதல்லயே ஆப்சன்ல ரிசிப்டுக்கு NO குடுத்துருவேன். ஆனா நேத்திக்கு ஒருத்தர் பணம் எடுத்தாரு பாருங்க 500 ரூபாயா ஒரு பத்து தடவை ரெண்டு மூணு கார்டு போட்டு எடுத்துகிட்டே இருந்தாரு, ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போது ரிசீப்ட் எடுத்து பேலன்ஸ் செக் பண்ணிட்டு இருந்தாரு, அவரு வெளிய வரும்போது ஏன் சார் இப்படி ஒவ்வொரு தடவையும் ரிசீப்ட் எடுக்கறீங்க? அதான் பணம் எடுக்கும் போதே ரிசீப்ட் வருதுல்ல, மறுபடியும் ஏன் எடுக்கனும்னு கேட்டா?

ம்ம்ம் மெஷின் சரியா வேலை செய்யுதான்னு செக் பண்ணுனேன்னு சொல்லிட்டு போறார், இவங்களையெல்லாம் வெச்சுகிட்டு TREE ஐய இல்ல HAIR அ கூட SAVE பண்ண முடியாது.

பிடித்ததால் படித்தது

கழுகு இணையதளத்தில் பேஸ்புக் மற்றும் பிளாக்கில் நடக்கும் அத்துமீறல்கள பத்தி அலசி ஆராய்ச்சி பண்ணி ஒரு விழிப்புணர்வு கட்டுரை போட்டு இருந்தாங்க, பேஸ்புக்ல பொண்ணுங்க பின்னாடி சுத்துறதுல இருந்து இப்ப அரசியல்கட்சிகாரங்க ஆக்கிரப்பு செஞ்ச வரைக்கும் சுருக்கமா பேஸ்புக் எப்படி இம்சை அரசன் புலிகேசி பாணில மைதானமா ஆச்சுன்னு விளக்கமா எழுதி இருக்காங்க, முடிஞ்சா படிச்சு பாருங்க


அவங்ககிட்ட அனுமதி கேட்காமதான் போட்டு இருக்கேன், தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க.

எதிர்பார்க்கும் மொக்கை படம்


இதப்பத்தி சொல்லவே வேணாம், போஸ்டர்லயே விளக்கி இருக்காங்க பாருங்க, அதுசரி எல்லாரோட லைஃப்லயும் ஒரு ஒன்சைடு லவ்வு வரட்டும் உங்க லைஃப்லதான் ஏற்கனவே ஏழெட்டு இருக்கே? எப்படி படம் பண்ண போறீங்க பாஸ்?

நினைவேந்தல் நிகழ்ச்சி


மே 17 இயக்கத்தின் தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வருகிற மே 20 ஆம் தேதி ஞாயிறு மாலை 5 மணிக்கு மெரினா கண்ணகி சிலை அருகில் நடைபெறுகிறது, கலந்து கொள்ள முடிந்தவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும், பதிவுலக நண்பர்கள் உங்களது வலைப்பூக்களின் வாயிலாக விளம்பரப்படுத்தி பெருவாரியான மக்களை சென்றடைய உதவுங்கள்.

மேலும் விபரங்களுக்குவீடியோ

ரோபோ சங்கரின் மானாட மயிலாட, சிரிக்காதவங்க நரசிம்மராவா கூட இருக்கவே முடியாது
Monday, May 14, 2012

மே 17 இயக்கத்தின் தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்
எவ்வளவு வேதனையில் துடித்திருப்பான் இவன் ..
இவன் செய்த வினை என்ன ..?
இந்த உயிருக்கு விலை என்ன ..?
இரத்தமும் வலியினால் மூத்திரமும் சிந்திய சிறார் ..
கிடைத்த புகைப்படங்கள் ஆயிரம் இருக்கையில் 
கிடைக்க செய்யாமல் சிங்களவன் மறைத்த புகைப்படங்கள் எத்தனையோ ...!!!! ஐயோ கண்கள் கூட மூடவில்லை ..இவன் உயிர் திறக்கும் பொது இவனது இளம் உடல் எத்தகைய வலியை பெற்றிருப்பன் என்று அவதானித்தால் ...
நெஞ்சம் பதைக்கிறது....
நன்றி : பேஸ்புக்

தமிழ் ஈழப்படுகொலை நடந்து முடிந்து மூன்றாண்டுகள் முடியப்போகிறது, இதுவரை செய்த போர் குற்றங்களுக்காக இராஜபக்சே அரசும் தண்டிக்கப்படவில்லை, தமிழர்களுக்கும் மறுவாழ்வும் உரிமைகளும் கிடைக்கவில்லை, ஒப்புக்கு சப்பாக உலக நாடுகளும் ஒரு தீர்மானத்தை வலியுறுத்திவிட்டு ஒதுங்கிவிட்டன.

இந்நிலையில் இறந்து போனவர்களின் ஆத்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்ட இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய உறவுகளுக்கு  ஆதரவளிக்கவும், உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என ஆதரவளிக்கவும், தோள் கொடுக்கவும், பத்தோடு பதினொன்றாக நடந்து முடிந்த படுகொலைகளும் மறக்கடிக்கப்படாமல் இருக்கவும் மே 20 ஆம்தேதி மெரினாவில் உணர்வோடு ஒன்றுகூடுவோம்.


இந்த செயலில் பங்கு பெற, ஆதரிக்க ஈழ ஆதரவாளராகவோ, ஈழ எதிர்பாளராகவோதான் இருக்க வேண்டிய அவசியமில்லை, குறைந்தபட்ச மனிதாபிமானம் இருந்தால் போதும், மெழுகுவர்த்தி ஏந்துவதால் என்ன பயன் என சாவையும் அரசியலாக்கும் சிலரின் மத்தியில்தான் நாமும் இருக்கிறோம்,

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு, ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் சாகடிக்கப்பட்டு கொண்டிருந்த வேளையில் நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று கொதித்துக் கொண்டிருந்தவர்கள் எண்ணற்ற பேர்கள் தமிழகத்தில் உண்டு, குறைந்தபட்சம் நம்மால் முடிந்த எதிர்வினையாக இதையாவது செய்ய வேண்டாமா?

எனவே உங்களால் முடிந்தமட்டும் இந்த நிகழ்வினை, இச்செய்தியினை பரவலாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

முழு விவரங்களுக்கு இது சம்பந்தமான தேவியர் இல்லம் ஜோதிஜி  அவர்களின் பதிவினை பார்க்கவும். 

மேலும் விவரங்களுக்கு


    

Saturday, May 12, 2012

கலகலப்பு @ மசாலே கபே


மசாலா கபே சுந்தர்.சிக்கு 25 ஆவது படமாம், நாளைய இயக்குனர் சீசனில் ஜட்ஜாக உட்கார்ந்து நாலு பேருக்கு நாற்பது ஐடியா கொடுப்பவர் சொந்த படத்துக்கும் உருப்படியா நல்ல கான்செப்ட் யோசிச்சிருக்கலாம், எத்தன், கண்டேன் காதலைன்னு எற்கனவே வந்த இரண்டு மசாலா படங்களை ஒன்னா அரைச்சு ஹோட்டல் நடத்திருக்காரு இயக்குனர்.

தாத்தா பூட்டன் காலத்துல இருந்து கும்பகோணத்துல மசாலா கபே ஹோட்டலை நடத்திட்டு இருக்கறது விமல் குடும்பம், இந்தகாலத்துலயும் அந்த ஹோட்டல ஓகோன்னு நடத்தனும்கறது விமலோட எண்ணம், ஆனா டன்ஞன் ஹோட்டல பார்த்தாலே யாரும் சாப்பிட வரமாட்டேங்குறாங்க,

கடன உடன வாங்கி டெவலப் பண்ண பார்த்தா மொக்கை காரணத்துல எல்லா ஐடியாவுமே வெளங்காம போகுது, கடன் கொடுத்தவங்க சும்மா இருப்பாங்களா? ஓட ஓட தொறத்துறாங்க இடைவேளை வரைக்கும், இத எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நீங்க யோசிச்சீங்கன்னா நீங்க எத்தன் படம் பார்த்துட்டீங்கன்னு அர்த்தம், இடைவேளை வரைக்கும் இந்த படம் பார்க்குறதுக்கு செல்லமே சீரியல பத்து எபிசோட் தயங்காம பார்த்துடலாம்.

இடைவேளை பக்கமா மிர்ச்சி சிவா வராரு, விமலோட தம்பியாம், திருட்டு கேசுல பெயில்ல வர்ரவரு கும்பகோணம் ஸ்டேசன்ல தினமும் கையெழுத்து போடறதுக்காக ஹோட்டல்லயே தங்கறாரு, அங்க வேலை செய்யுற ஓவியாவ மொக்கை போட்டே கரக்ட் பண்ணுராரு, சும்மா சொல்லக்கூடாது சிவாவ, தான் ஒரு மொக்கை மோகன்கறத அடிக்கடி நிரூபிக்கிறாரு.


இடைவேளைக்கு அப்புறம்தான் சந்தானம் வராரு, அவருதான் படத்தையே தூக்கி நிருத்துறாரு கூடவே அஞ்சலியும் ஓவியாவும் சேர்ந்துதான், அஞ்சலிக்கும் முறைப்பையன் சந்தானத்துக்கும் கல்யாணம், இடையில விமல் வந்து சந்தானத்துக்கு பல்ப்பு கொடுத்து  லவட்டிட்டி போறது எல்லாமே ஏற்கனவே கண்டேன் காதலை படத்துலயே பார்த்திருப்பீங்க, ஹீரோவும் லொக்கேசனும்தான் வேற வேற.

நியாப்படி பார்த்தா விமலும் சிவாவும் வாங்குன சம்பளத்துல பாதிய அஞ்சலிக்கும் ஓவியாவுக்கும்தான் தரணும், அவங்க மட்டும் இல்லைன்னா மசாலாவே இல்லை வெறும் கபேதான், இந்த படத்துக்கு அப்புறம் அஞ்சலிக்கு கணிசமான ரசிகர்கள் கூடி இருப்பாங்கன்றது நிச்சயம் கூடவே ஓவியாவுக்கும்தான், ஏன்னா தமிழ் ரசிகர்களோட நெஞ்சமும் ரொம்ப பெரிசு ;-)

படத்துல மியூசிக், ஒளிப்பதிவு இதெல்லாம் இருக்கான்னே தெரியல, ரெண்டு மூணு பாட்டுக்கு முடிஞ்ச மட்டும் அஞ்சலியும் ஓவியாவும் காட்டு காட்டுன்னு காட்டுறாங்க, அதுலயும் ஓவியா ஆவூன்னா குனிஞ்சு கிளிவேஜ் காட்டுறாங்க, சிபி அண்ணன் பாஷைல சொன்னா மொத்தம் 24 இடத்துல கிளிவேஜ் காட்டுராங்க, ரொம்ப நாள் கழிச்சு இராகவன் சார் நடிச்சிருக்காரு, கடைசியா இரும்பு கோட்டை முரட்டு சிங்கத்துல பார்த்த ஞாபகம்.

படத்துல வர நாலு காமெடியவும் டீசர்லயே போட்டுட்டீங்கன்னா படம் பார்க்க வரவங்களுக்கு சிரிப்பு எங்க வரும்? வெறுப்புதான் வரும், கண்டெண்ட் கம்மியா இருக்கும் போது ஓவரான விளம்பரமே ஆப்பு வச்சிரும்கறதுதான் நிஜம், மசாலே கபேயும் விதிவிலக்கல்ல, கேபிள் அண்ணன் வசன உதவின்னு சொன்னாங்க, அவரயே முழுசா எழுத விட்டுருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும்னு நினைக்கிறேன்.

கிளைமேக்ஸ் மட்டுமே வெடிச்சிரிப்பு, மற்றபடி வாய்விட்டு சிரிக்க வைக்கவில்லையென்றாலும் புன்னகை பூக்க வைக்கிறது இந்த மசாலா கபே, ஒருதபா பாக்கலாம்.

டிரைலர்