Monday, April 25, 2011

கமர்சியல் பக்கங்கள் - 25/04/2011
சாய் பாபா இறந்துட்டாருங்கறத பத்தி எத்தனை விதவிதமான நியூஸ், 96 வயசு வரைக்கும் இருப்பேன்னு சொன்னாரு, அல்பாயிசுலயே செத்து போயிட்டாரு, தன்னையே கடவுள்னு சொன்னாரு, இப்ப கடவுளே செத்து போயிருச்சா, வாயில இருந்து லிங்கம் எடுத்தாரு, கைய சுத்தி செயின் எடுத்தாரு, விபூதி எடுத்தாரு, மேஜிக் பண்ணி ஊர ஏமாத்துனாருன்னு எத்தனையோ நியூஸ்

இருந்தாலும் அவரோட சமூகபணிகளால எத்தனை பேர் பயனடைஞ்சு இருக்காங்க, உணவி, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம்னு தனி ஒரு அரசாங்கமே நடத்தி இருக்காரு, அவரால எத்தனையோ மக்கள் பயன் பெற்று இருக்காங்கங்கறதும் உண்மைதான், ஏன் சென்னைக்கு கூட 200 கோடி ரூபா செலவுல தண்ணீர் வர வாய்க்கால சீரமைச்சு கொடுத்து இருக்காரு, இதுக்கு முன்னாடி வர அவருமேல பெரிசா எந்த அனுமானமும் எனக்கு இல்லை,

ஆனா அன்பே சிவம் படத்துல கமல் மாதவன்கிட்ட ஒரு டயலாக் சொல்லுவாரு, எப்போ இன்னொருத்தனுக்காக நீ கண்ணீர் விட்டயோ அப்பவே நீ கடவுளாகிட்டன்னு, நானும் அப்படித்தான் நினைக்கிறேன், ஆரம்பத்துல அவர் போலியாவே இருந்திருந்தாலும் அவர் செஞ்ச நற்பணிகள் மூலமா அவர் கடவுள் ஸ்தானத்தை அடஞ்சதா நாமும் நினைச்சுக்கலாம்

எத்தனை ஆயிரம் பேருக்கு அவர் கடவுளாகவே இருந்திருக்கார், குறைந்தபட்சம் ஒரு மனிதனா சாய்பாபாவோட ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன், அவரோட டிரஸ்டுக்கு மட்டும் 45000 கோடிக்கு மேல சொத்து இருக்காம், அவரோட வாரிசுன்னு யாரும் இல்லாத்தால ஒரு நல்ல மனுசன் அந்த டிரஸ்டுக்கு தலைமை பொறுப்பேற்று அந்த சமூக பணிகள தொடர்ந்து செய்யனும், இல்லாம லூஸ்ல விட்டுட்டு அறநிலையதுறை கைக்கு போயிருச்சுன்னா ஒரு வருசத்துலயே அத்தனை சொத்தையும் ஏப்பம் விட்டு சாய்பாபா டிரஸ்டுக்கு கதம் கதம் போட்டுட்டுவாங்க அரசியல்வாதிகள்


காமன்வெல்த் போட்டியில ஊழல் பண்ணுன அரசியல்வியாதி சுரேஷ் கல்மாடிய இன்னைக்குதான் கைது பண்ணி இருக்காங்களாம் சிபிஐ, போன வருசம் பண்ண ஊழலுக்கு இந்த வருசம் கைது பண்றானுங்க, இதுதாங்களா சார் உங்க டொக்கு, இதே ரேஞ்சுல விசாரணை, ரெய்டு எல்லாம் பண்ணுங்க விளங்கிரும், எனக்கு என்னமோ இவனுங்க அடிச்ச பணத்தை ஒளிச்சு வைக்கறதுக்காகத்தான் சிபிஐகாரங்க டைம் கொடுத்து கைது பண்றானுங்க போல, ஒருவேளை அண்ணா ஹசாரேவுக்கு பயப்படுறாங்களா?

ஒரு இன்சிடெண்ட்

போன வாரம் ஒரு நியூஸ் படிச்சேன், ஒருத்தனுக்கு போன்ல ராங்கால் வந்திருக்கு, வந்த கால பேசிட்டு விடாம, கால் பண்ண பொண்ணயே  சின்சியரா லவ் பண்ணியிருக்கான், அதுவும் எப்படி இதயம் முரளி மாதிரி பாக்காமலேயே,  அந்த பொண்ணும் நான் உலக அழகி ரேஞ்சுல இருப்பேன்னு பீலா விட்டுச்சோ, இல்லை குரலை கேட்டு குயில் மாதிரி இருக்கும்னு இவன் நினைச்சானோ தெரியல, சரி எத்தனை நாள்தான் பாக்காமலேயே லவ் பண்றதுன்னு நேர்ல பாக்கலாம்னு பேசி முடிவு பண்ணிட்டு போய் பார்த்தவன் அப்படியே ஷாக்காகி இருக்கான், பொண்ணு அட்டுபிகர் போல

இவனுக்கு இப்படின்னா பொண்ணுக்கு இவன் அஜிக்குமாரா தெரிஞ்சு இருக்கான், மனசு வெறுத்து போனவன டெய்லியும் போன போட்டு கொஞ்சி பேசிருக்கு பொண்ணு, பயபுள்ள வெறுத்து போய், டிரைன்ல குதிச்சு செத்து போயிட்டான், அடப்பாவிகளா ராங்கால் வந்தா பேசிட்டு கட் பண்ணுங்க, அதவிட்டுட்டு தமிழ் சினிமா பார்த்துட்டு பார்க்காமவே காதல், பேசாமலே காதல், நாக்க வெட்டுற காதல், மூக்க வெட்டுற காதல்னு என்னடா கருமாந்தரம் புடிச்ச மாதிரி லவ் பண்ணுறீங்க

சரி அப்படியே லவ் பண்ணாலும், அழகான பொண்ணுதான் வேணுமா? கருப்பான பொண்ண கட்டுனவன் எல்லாம் இளிச்சவாயனா? சரி அப்படியே அழகான பொண்ண கட்டுனாலும் வேற எவனும் பார்க்க்கூடாதுன்னு வீட்டுல செக்யூரிட்டியா போடமுடியும்? அப்படியே செக்யூரிட்டி போட்டாலும் செக்யூரிட்டியா வந்தவன் உசார் பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம் இருக்கு, இங்க அவனவனுக்கு பொண்ணு கிடைக்கறதே பெரிய விசயமா இருக்கு, இதுல அழகான பொண்ணு தான் வேணுமாம், காலங்காத்தால கடுப்புகள கிளப்பிகிட்டு

படிச்சதில் பிடிச்சது

எதேச்சையா பழைய வாரமலர் புக்கு படிக்க நேர்ந்தது, ஏற்கனவே ஒருதடவை படிச்சு சிரிச்சிருக்கேன், நேத்து மறுபடியும் படிக்கும் போது இன்னமும் புடிச்சு போனது, இந்த காலத்து அரசியல்வியாதி குழந்தைகள கூட எப்படி பாதிச்சு இருக்குன்னு கீழே இருக்குற லிங்க கிளிக் பண்ணி படிச்சு பாருங்க, எழுதியவர் ஆடல்வல்லார், சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாக போறதுக்கு நான் கியாரண்டி, அதுக்காக மருந்துக்கு காசு என்கிட்ட கேட்டுடாதீங்க


ஒரு கதை


ஒரு மெடிசன் கம்பெனிக்கு மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் வேலை ஒரே ஒரு போஸ்டுக்கு இண்டர்வியூ நடந்துச்சு, அந்த வேலைக்கு நிறைய பேரு கலந்துகிட்டாங்க, எல்லாரும் ஆரம்பகட்ட இண்டர்வியூ, அந்த இண்டர்வியூ, இந்த இண்டர்வியூன்னு எல்லாத்துலயும் பாசாகி, கடைசில எம்பிஏ படிச்சவரு, அட்மினிஸ்ட்ரேசன் படிச்சவரு, பார்மசி படிச்சவரு, அப்புறம் சம்பந்தமே இல்லாம பிசிக்ஸ் படிச்சவருன்னு நாலு பேரு மட்டும் பைனல் இண்டர்வியூக்கு செலக்ட் ஆனாங்க,  

பைனல் இண்டர்வியூ குரூப் டிஸ்கசன்னு சொன்னாங்க, கம்பெனியோட எம்டி முன்னாடி குரூப் டிஸ்கசன் ஆரம்பமாச்சு, ஆளுக்கு ரெண்டு நிமிசம் டைம், எந்த டாபிக்க பத்தி வேணா பேசலாம, அவங்களுக்குள்ளயே ஒருத்தர் டைம்கீப்பரா செயல்படனும்னு சொல்லியாச்சு, யாரு பேசுனதுல எம்டி இம்ப்ரஸ் ஆகறாரோ அவங்களுக்குதான் வேலைன்னு சொன்னாங்க

குரூப் டிஸ்கசன் ஆரம்பமாச்சு, டைம் கீப்பரா நான் இருக்கேன்னு பிசிக்ஸ் படிச்சவரு சொல்ல அவரயே டைம் கீப்பரா ஆக்கிட்டாங்க, முதல்ல எம்பிஏ படிச்சவரு பேச ஆரம்பிச்சாரு, எக்கனாமிக்ஸ் அது இதுன்னு பயங்கரமா பேசுனாரு, இரண்டு நிமிசம் ஆச்சு, அப்புறம் அட்மினிஸ்ட்ரேசன் படிச்சவரு, அவரும் அவரு படிச்ச டிபார்ட்மெண்ட பத்தி பயங்கரமா பேசுனாரு, இரண்டு நிமிசம் ஆச்சு, அவருக்கு அப்புறம் பார்மசி படிச்சவரு, வேலையே பார்மசி சம்பந்தமானது, அதுனால அவரும், அவரோட துறைய பத்தி பயங்கரமா பேசி முடிச்சாரு, கண்டிப்பா வேலை அவருக்குதான் கிடைக்கும்னு  எல்லாரு நினைச்சாங்க

கடைசியா பேச வந்தாரு பிசிக்ஸ் படிச்சவரு, அவரு பேசுன டாபிக் கராத்தே, எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம், அவரு பாட்டுக்கு கராத்தேல இருக்குற டெக்னிக், அது இதுன்னு பேசிட்டே போனாரு, இரண்டு நிமிசம் ஆக போகும் போது ஒரு சஸ்பென்சோட நிறுத்துனாரு, அவரு பேச வேண்டிய டைம் முடிஞ்சு போச்சு, ஆனா அந்த சஸ்பென்ச தெரிஞ்சுக்கனும்னு எம்டியே மேலும் ஒரு நிமிசம் பேச சொல்லி டைம் கொடுத்தாரு

கடைசியா அவர மட்டும் தனியா கூப்பிட்டு கேட்டாரு எம்டி, நீங்க ஏன் கராத்தே பத்தி பேசுனீங்க, நீங்கதான் எந்த டாபிக்க பத்தி வேணாலும் பேச சொன்னீங்க, சரி நீங்க பேசுன டாபிக்க ஏன் உங்களால ரெண்டு நிமிசத்துல பேசி முடிக்க முடியல, சார் நீங்க சொன்ன மாதிரி நான் ரெண்டு நிமிசம்தான் பேசுனேன், நீங்கதான் மறுபடியும் ஒருநிமிசம் டைம் கொடுத்து பேச சொன்னீங்க, ஏன்னா நான் இரண்டு நிமிசம் முடியும் போது சஸ்பென்ஸ் வச்சு உங்கள இம்ப்ரெஸ் பண்ணினேன்னு சொன்னாரு, எம்டி உண்மையிலேயே இம்ப்ரெஸ் ஆகிட்டாரு

சரி எங்க கம்பெனில எந்த மருந்தெல்லாம் விக்கிறாங்கன்னு உங்களுக்கு தெரியுமான்னு கேட்டாரு எம்டி, அவரும் தெரியுமேன்னு இந்த பிராடக்ட், அந்த பிராடக்ட்னு இருபது இருபத்தைஞ்சு பேரு சொன்னாரு, எம்டியே ஆச்சரியமாகிட்டாரு, அவருக்கே நம்ம கம்பெனில இத்தனை பிராடக்ட் இருக்கான்னு தெரியாது, எப்படிங்க இவ்வளவும் தெரிஞ்சுகிட்டீங்கன்னு கேட்டதுக்கு அவரு சொன்னாரும், வரும் போது கீழ மெடிக்கல் ஷாப்புல கேட்டேன்னு

இந்த கதைய நேத்து டிவில பார்த்தேன், ஒருவிசயம் தெரியலைன்னாலும் நம்மோட பாசிட்டிவ் மைண்டால எப்படி சிச்சுவேசன ஹேண்டில் பண்ணறதுன்னும், குரூப் டிஸ்கசன் மாதிரியான இண்டர்வியூல எப்படி இம்ப்ரஸ் பண்ணுறதுன்னும் தெரிஞ்சுக்கலாம்னுதான் இதை உங்களோட  ஷேர் பண்ணிக்கறேன்

ஏரோபிளேன்

நிறைய பேரு பிளைட்டுல போயிருப்பீங்க, நானெல்லாம் பிளைட்ட நேருக்கு நேரா பார்த்தது கூட கிடையாது, ஆனா பிளைட்டுல போயிருக்கறவங்க கூட பைலட்டோட காக்பிட் ரூமுக்குள்ள போயிருக்க சான்ஸ் இல்லை, ஒருவேளை தீவிரவாதியா இருந்திருந்தா சான்ஸ் கிடைச்சிருக்கலாம், சரி உங்களுக்கு பைலட் ரூம் எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா? கவலையேபட வேண்டாம், 360 டிகிரி கோணத்துல 3டி எபக்ட்ல நேருக்கு நேரா பார்க்குற உணர்வை தருது கீழே இருக்குற லிங்க், போய் பாருங்க

ஏர்பஸ் A380 காக்பிட்


இன்னைக்கு மேட்டர் அவ்வளவுதான்

அன்புடன்

இரவுவானம்

Saturday, April 23, 2011

கோ - SPEEDஅயன் படத்துக்கு அப்புறம் கே.வி. ஆனந்த் மேல அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம் கோ, முதல்ல சிம்பு நடிக்கறதா இருந்து அப்புறம் ஜீவா கமிட்டான படம், இந்த படத்துக்கு சிம்புவ ஏன் செலக்ட் பண்ணி இருந்தாங்கன்னு தெரியல, இது அக்மார்க் ஜீவாவுக்கு மட்டும் செட்டாக கூடிய படம்தான்

தேர்தல்ல ஆட்சியை கைப்பற்ற துடிக்குது ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும், இந்த ரெண்டு கட்சிக்கு மத்தியில மக்களுக்கு நல்லது செய்யனும் நினைக்கறாங்க அஜ்மல் தலைமையில இயங்குகிற சிறகுகள் அமைப்பு, இந்த சிறகுகள் அமைப்பு நினைச்சத சாதிச்சதா? அதற்கு பத்திரிகைகாரங்களா இருக்குற ஜீவாவும், கார்த்திகாவும் என்ன ஹெல்ப் பண்ணுனாங்க? தேர்தல்ல யார் ஜெயிச்சா? முடிவு என்னங்கறத தியேட்டர்ல போய் பாருங்க


படத்தோட ஆரம்பத்துல பேங்க கொள்ளையடிக்கிற கொள்ளைகாரங்கள பைக்ல வீலிங் பண்ணிட்டே போட்டோ எடுக்குறதுல ஆரம்பிக்குது ஜீவாவோட அதகளம், அதற்கப்புறம் படம் முடியற வரைக்கும் எத பார்த்தாலும் கை துறுதுறுன்னு போட்டோ எடுக்க துடிக்கும் பத்திரிகைகாரானா ஜீவா செமயா பண்ணி இருக்காரு, குறிப்பா கோட்டா சீனிவாசராவோட குடிசை பகுதி தேர்தல் பிரசாரத்த ரவுண்டு கட்டி போட்டோ எடுக்கற சீன் செம காமெடி, போட்டோ கிராபரா போட்டோ எடுக்கும் போதும், பத்திரிகைகாரனா போட்டு வாங்கும் போதும், காதல் சீன்ல நெருக்கம் காட்டும் போதும், ஜீவா செம நடிப்பு


கார்த்திகா பத்திரிகை நிருபரா வராங்க, சின்ன பொண்ணா இருக்குற அவங்க அந்த பத்திரிகையிலேயே பெரிய ஆளுன்னு சொல்றது நம்பற மாதிரி இல்லை, பெரிய அழகுன்னு சொல்லமுடியாட்டாலும் ரசிக்கற மாதிரி அழகா இருக்காங்க, மீனா, அமலா பாலுக்கு அப்புறம் கண்ணழகி பட்டம் கிடைக்க சான்ஸ் இருக்கு, நடிப்பு பெரிசா ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லை, புதுமுகம்தானே போக போக சரியாகிடும்னு நம்பலாம்,

படத்தோட வேகத்துக்கு ஈடா பரபரன்னு திரியறது பியாதான், ஒரு மெட்ரோபாலிட்டன் சிட்டி பொண்ணா எத பத்தியும் கவலைபடாம பேசரதும், குறும்புதனம் பண்றதும் ரசிக்க வைக்குது, அதிலும் அவர் ஜெண்ட்ஸ் பாத்ரூமுக்குள்ள ஓடி போற சீன், ஜீவாகிட்ட என்னோட ரேட் என்னன்னு கேட்குற சீன், கார்த்திகாவோட இடுப்புல சேலைய பார்த்துட்டு கமெண்ட் அடிக்கற சீன், பிளாட்டுல அந்த குண்டு பையன்னு நினைச்சு @$%#$%^#  சீன் (சென்சார்) நிறைய இடங்கள்ள பியாதான் ஹீரோயினோன்னு நினைக்க வைக்குது


அஞ்சாதே படத்துக்கு அப்புறம் அஜ்மலுக்கு சொல்லிக்கற மாதிரி படம், அவரோட அண்டர்பிளே கேரக்டர் தெரிய வரும்போது அதிர்ச்சியடைய வைக்குது, ஆனா பல படம் பார்த்த சினிமா ரசிகர்களால ஈசியா கண்டுபுடிச்சிட முடியும், உணர்ச்சி பொங்க பேசறதுலயும், ஒரு அமைப்புக்கு தலைவனா வெளிக்காட்டறதுலயும் அஜ்மல் செமயா பண்ணி இருக்காரு, அஜ்மல் படத்தோட ஹீரோன்னே சொல்லலாம், அந்தளவு படம் அஜ்மல சுத்தியே நகருது

பிரகாஷ்ராஜீம், கோட்டா சீனிவாசராவும் கெஸ்ட் ரோல் மாதிரிதான் வந்து போறாங்க, இருந்தாலும் ரெண்டு பேர் சம்பந்தபட்ட காட்சிகளும் செமயா இருக்கு, கோட்டா 13 வயசு பொண்ண கல்யாணம் பண்ண நினைக்கற சீனும், பிரகாஷ்ராஜ் காருக்குள்ள பேட்டி கொடுக்கற சீனும் செம விறுவிறுப்பு, இருந்தாலும் சின்ன பசங்க அமைப்புனால தமிழ்நாட்டோட முதலைமைச்சரா இருக்குற பிரகாஷ்ராஜ் தோத்து போறதெல்லாம், இப்ப தமிழ்நாட்டுல இருந்துட்டு நம்மாள நம்ப முடியல


படத்தோட திரைக்கதையும் வசனத்தையும் கே.வி.ஆனந்துகூட சேர்ந்து சுபாவும் பண்ணி இருக்காங்க, படம் முழுக்க சுபா கதை மாதிரியே விறுவிறுப்பா பரபரன்னு ஓடுது, வசனங்கள்ளாம் ஷார்ப், தேர்தல் பிரச்சாரத்துல நடிகை சோனா மச்சான்ஸ்னு பேசறதும், அவங்க பேசிட்டு போனதும் மொத்த கூட்டமும் போயிடறதும், அதற்கு அப்புறம் கோட்டா பேச போகும்போது யாருமே காணாம போகும் போது, அல்லக்கை இதுக்குதான் தலைவரே அவங்கள கடைசியா பேச சொல்லி இருக்கனும்னு சொல்லறதும் வெடிச்சிரிப்பு,


ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்ல இரண்டு பாட்டுதான் ஹிட்டாகும் போல இருக்கு, என்னமோ ஏதோ பாட்டு மட்டும் சூப்பர், மத்த பாட்டுக்கான லொகேசன் எல்லாம் அருமை, அயன் படத்துல ஜெகன் செத்ததுக்கு அப்புறம் அடுத்த சீனுலயே நெஞ்சே நெஞ்சே பாட்டு வர மாதிரி இங்கயும் பியா செத்த்துக்கு அப்புறம் அடுத்த சீனுலயே வெண்பனியே பாட்டு வருது, சோக சீன் வந்தா அடுத்த சீன்லயே பாட்டு சீன் வைக்கனும்கறது டைரக்டரோட செண்டிமெண்ட் போல இருக்கு

நிறைய உள்குத்து இருக்குற இந்த படத்த உதயநிதி வாங்குனது ஆச்சரியம்தான், அதே மாதிரி படம் ஆரம்பிக்கும் போது ரெட் ஜெயிண்ட்டுன்னு போட்டபோது ஒரு உடன்பிறப்பு தலைவான்னு கத்துனது அதைவிட ஆச்சரியம், ஒருவேளை சன்டிவிக்காரங்க மாதிரி இவங்களும் ஆளு வச்சு வீடியோ எடுக்கறாங்களோ என்னமோ, எலக்சனுக்கு முன்னாடி வரவேண்டிய படம், ரிசல்டுக்கு முன்னாடி வந்திருக்கு

இண்டர்வெல்ல மகாவீரன், ரெளத்திரம் டிரைலர் போட்டாங்க, ரெண்டு டிரைலருமே சூப்பரா இருக்கு, படம் வந்தா கண்டிப்பா பாக்கணும்,

மொத்தத்துல கோ – தாராளமா நீங்க ’’GO’’வலாம்,  சம்மர்ல ஜாலியா பார்க்கக்கூடிய எண்டர்டெயிண்மெண்ட் சினிமா.


Friday, April 22, 2011

ஆசை ஆசையாய்..!இந்த பதிவில் படிக்க சுவாரஸ்மாக எதுவும் இல்லை, இது முழுக்க முழுக்க என்னுடைய சுயபுலம்பல்கள் மட்டுமே, சற்றே பெரிய பதிவும் கூட, ஒரு மொக்கைபதிவு என்றும் சொல்லலாம், அதனால் பொழுதுபோக்கவும், ஜாலிக்காகவும் வலைப்பதிவு படிப்பவர்களுக்கு போரடிக்கக்கூடும், மற்றபடி பொறுமைசாலிகள் தொடரலாம், நன்றிஆசையே துன்பத்திற்கு காரணம்னு புத்தர் சொன்னாரு, ஆனா ஆசைப்படாம வாழ முடியுமா? இல்ல எந்த ஆசையுமே இல்லாம மனுசன்தான் இருக்க முடியுமா? எல்லா வகையான ஆசையும் மண், பெண், பொன் இந்த மூணு கேட்டகிரில அடங்கிருது, இந்த மூணுக்கும் ஆசைப்படறதும் அதை அடைய நினைக்கறதும்தான் மனுச வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு,

அதே சமயம் ஆசையால துன்பம் மட்டும்தான் வருமா இன்பமே வராதா? நிறைய பேரு ஆசைப்பட்டதாலதான் வாழ்க்கையில முன்னேறி இருக்காங்க, ஒரு விசயத்து மேல ஆசைப்படாம அதை அடைய முடியுமா சொல்லுங்க,

எனக்கும் நிறைய ஆசைகள் இருந்தது இன்னும் இருக்கு, சின்னதா பெரிசா ஏன் தகுதிக்கு மீறின ஆசைகளும் இருந்தது, இருக்கு, சின்ன பையனா இருக்கும் போது நான் முதன்முதலா அதிகமா ஆசைப்பட்ட விசயம் என்ன தெரியுமா? தேன் மிட்டாய், சிவப்பா உருண்டையா சின்னதா சாப்பிடும் போதே உச்சி மண்டை வரைக்கும் இனிப்பு தித்திக்கும், தேன் மிட்டாய்னா உண்மையிலேயே உள்ள தேன் தான் இருக்கும்னு பலநாள் நினைச்சு இருக்கேன், ஊர்ல யாராவது இறந்து போனா பொணத்து மேல காசு வீசிட்டு போவாங்க, அந்த காச கூட எடுத்து மிட்டாய் வாங்கி சாப்பிட்டு இருக்கேன், சில நாட்கள்ள மிட்டாய் வாங்கி சாப்பிட காசு இருக்காத போது இன்னைக்கு எவனும் சாகலையான்னு மனசுல ஏங்கி இருக்கேன்

தேன் மிட்டாய்க்கு அடுத்தபடியா ஆசை வந்தது ஜவ்வுமிட்டாய் மேல, வியாழகிழமை ஆனா போதும் ஒரு மூங்கில் உச்சில பொம்மை ஒன்னு மாட்டிட்டு ஜவ்வுமிட்டாய்காரர் வருவாரு, அந்த பொம்மை இரண்டு கைய்யும் தட்டி சவுண்டு கொடுக்கும், ஊர்ல இருக்குற சில்வண்டு பசங்க எல்லாம் அவர ரவுண்டு கட்டிக்குவாங்க, அவரும் சளைக்காம ஜவ்வு மிட்டாய்லயே வாட்சு, மோதிரம், பொம்மைன்னு கையிலயே மாட்டி விடுவாரு, இதெல்லாம் மாட்டினது போதாதுன்னு கொஞ்சம் மூக்குலயும் ஒட்டி விடுவாரு, இப்பல்லாம் ஜவ்வு மிட்டாய் விக்கிறவங்க யாரையும் பார்க்க முடியறதில்ல

ஒருநாள் எங்க அம்மாவோட உடல்நிலை சரியில்லாதவங்க ஒருத்தரை பார்க்க போயிருந்தேன், அங்க சாப்பிட காபி கொடுத்தாங்க குடிச்சு பார்த்தா காபி இல்லை, ஆனா டேஸ்ட் ரொம்ப வித்தியாசமா இருந்த்து, அதுக்கு பேரு என்னன்னு கேட்டேன் ஹார்லிக்ஸ்னு சொன்னாங்க, அன்னையில இருந்து புடிச்சதுதான் ஹார்லிக்ஸ் பைத்தியம், அன்னையில இருந்து எங்க அம்மாவ விடாம நச்சரிச்சேன் ஹார்லிக்ஸ் வாங்கி கொடு ஹார்லிக்ஸ் வாங்கி கொடுன்னு, அது ரொம்ப விலை அதிகம்டான்னு எங்க அம்மா கணேஷ் காபித்தூள் வாங்கி கொடுத்தாங்க, இது என்னடா கணேஷ் காபிதூள் பேரே கேள்விபடாத மாதிரி இருக்கேன்னு நினைக்காதீங்க, அது எங்க ஊருல ப்ரூ காபி ரேஞ்ச்

அப்ப எங்க வீட்ல வாரத்துக்கு ஒருநாள்தான் பாலே வாங்குவாங்க, அதுவும் ஞாயித்துகிழமை மட்டும்தான், ஞாயித்துகிழமையானா எங்க அம்மா கணேஷ் காபி போட ஆரம்பிச்சாங்க, ஆனா எனக்கோ மனசுல ஹார்லிக்ஸ் குடிக்கனும் ஆசை, என்ன பண்றது வீட்டுல அந்த அளவு வசதி இல்லை, ஆனாலும் நான் விடாம அடம் புடிச்சதுல மூணு மாசம் கழிச்சு எங்கம்மா அரைக்கிலோ ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வந்தாங்க

எனக்குன்னா ஒரே சந்தோசம், ஞாயித்துகிழமை மட்டும் ஆறு டம்ளர் ஹார்லிக்ஸ் குடிச்சேன், பையன் ஆசையா கேட்குறானேன்னு எங்கம்மாவும் போட்டு போட்டு கொடுத்தாங்க, அடுத்த ஒருவாரத்துக்கு எத தின்னாலும் ஹார்லிக்ஸ் கூடத்தான், இட்லிக்கும் தோசைக்கும், ஏன் சாப்பாட்டுக்கு கூட சட்னிக்கு பதிலா ஹார்லிக்ஸதான் சேர்த்து சாப்பிட்டேன், விளைவு அடுத்த ஞாயித்துகிழமை மீண்டும் கணேஷ் காபி, ம்ம்ம் அதெல்லாம் முடியாது எனக்கு ஹார்லிக்ஸ்தான் வேணும்னு அடம் புடிச்சேன், பொறுத்து பொறுத்து பார்த்து எங்கம்மா ஈர்க்குமாறு குச்சில நாலு எடுத்து பிரிச்சு மேஞ்சதுல ஹார்லிக்ஸ் மட்டுமில்லாம கணேஷ் காபியும் சேர்த்தே மறந்துட்டேன்

பின்னாடி ஒருநாள் எங்க சொந்தகாரங்க கல்யாணத்துக்கு கோயம்புத்தூர் போயிருந்தேன், அங்க கொஞ்சம் சிகப்பா ஆரஞ்சு கலர்ல ஒரு தண்ணிய குடுத்தாங்க குடிக்கறதுகு, ஜில்லுன்னு இனிப்பா செம டேஸ்ட், விடுவமா நாங்க, வழக்கம் போல பேரு என்ன்ன்னு கேட்க, ஐ லவ் யூ ரஸ்னானாங்க, இது என்னடா ஐ லவ் யூ ரஸ்னான்னு கேட்டா டிவிய பாருன்னு சொல்லிட்டாங்க

அப்புறம் டிவில வர விளம்பரம் பார்த்தா ஒரு சின்ன பொண்ணு ஐ லவ் யூ ரஸ்னா, ஐ லவ் யூ ரஸ்னானு சொல்லிகிட்டு இருந்த்து, அப்புறம் மறுபடியும் எங்கம்மாகிட்ட போய் ஐ லவ் யூ ரஸ்னா வாங்கி தாம்மான்னு சொல்ல கூட இருந்த பொம்பளைங்க எல்லாம் கொல்லுன்னு சிரிச்சாங்க, எங்கம்மா அப்புறம் வாங்கி தரேன் போடான்னு சொன்னாங்க, நான் கேட்காம அடம் புடிக்க அங்கயே நாலு மாத்து, தற்காலிகமா ரஸ்னாவ மறந்தேன்

பின்னாடி ரஸ்னாவ அஞ்சுரூபா பாக்கெட்டு, இரண்டு ரூபா பாக்கெட்டா போட்டாங்க, அப்ப டெய்லியும் ரஸ்னா வாங்க வேண்டியது, தண்ணில கலக்க வேண்டியது, லிட்டரு கணக்கா குடிக்க வேண்டியது, ஒருமாசத்துக்கு வர வேண்டிய சக்கரை ஒருவாரத்துல தீர்ந்தா சும்மா இருப்பாங்களா எங்க அம்மா, ஒருநாள் கண்டுபுடிச்சு செம மாத்து மாத்துனதுல ஐ லவ் யூ ரஸ்னா அய்யோ ரஸ்னாவாங்கற மாதிரி ஆகிப்போச்சு

இப்படி சின்ன வயசுல சாப்பிடற பொருள் மேல மட்டும் இருந்த ஆசை பெரிசானதும் அப்படியே மாறிப்போச்சு, முன்னயெல்லாம் ஏதோ ஒன்னுமேல மட்டும் இருந்த ஆசை, இப்ப எத பார்த்தாலும் ஆசையா மாறிப்போச்சு, நீ படிச்சி முடிச்சு டாக்டராக போறியா? ஆமா, வக்கீலாக போறியா? ஆமா, என்ஞினியர் ஆக போறியா? ஆமா, வாத்தியார் ஆக போறியா? ஆமா, எதுவா இருந்தாலும் ஆமா, நானும்தான் ஆகப்போறேன்

இப்படி நான் முதல்லயே சொன்ன மாதிரி மண், பெண், பொன்னுங்கறதுல, மண் அதாவது பொருள் சம்பந்தமான என்னோட ஆசைகள் மேல சொன்ன மாதிரி குறுகிய வட்டத்துக்குள்ளயே முடிஞ்சு போச்சு,

அடுத்து பெண்

வளந்து வரும் போது எல்லார் மாதிரியே எனக்கும் பொண்ணுங்க கூட பேசனும், பழகனும்னு ஆசை வந்தது, ஆனா கொடுமைய பார்த்தீங்க்ன்னா, அப்ப பொண்ணுங்க பசங்க யார் கூடவும் பேச மாட்டாங்க, மீறி பேசுனா லவ்வுன்னு கதைகட்டி விட்டுடுவாங்க, அதுக்கு பயந்தே எல்லா பொண்ணுங்களும் குனிஞ்ச தலை நிமிராம போயிடும், அப்படியே பேச சான்ஸ் கிடைச்சாகூட எப்படி பேசறதுன்னும் தெரியாது, என்ன பேசறதுன்னும் தெரியாது,


அப்ப ஒருநாள் மினிபஸ்சுல போயிட்டு இருந்தப்ப பார்த்தேன், மினி பஸ் டிரைவரும், கண்டக்டரும் ஈசியா பொண்ணுங்க கூட கடலை போட்டு, பேசிட்டு இருந்தாங்க, அப்ப ஒரு முடிவு எடுத்தேன் நாமளும் மினிபஸ் கண்டக்டர் ஆகிர வேண்டியதுதான்னு, ஏன்னா டிரைவர் ஓட்டும் போது பேசிட்டு வரமுடியாது பாருங்க

என்னோட இந்த நினைப்பு ரொம்ப நாள் நீடிக்கல, ஒருநாள் ஒரு கூட்டமே இந்த மினிபஸ்ஸ வழிமறிச்சாங்க, அந்த கண்டக்டர புடிச்சு அந்த பொண்ணோட சொந்தகாரங்க எல்லாம் ரவுண்டு கட்டி மிதிமிதின்னு மிதிச்சாங்க, அத பார்த்த்துக்கு அப்புறம் அந்த கண்டக்டர் ஆகணும்கற ஆசையே விட்டு போச்சு,

அப்புறமா முடிவெடுத்ததுதான் ஒன்சைடு லவ்வு, பார்க்குற பொண்ணயெல்லாம் லவ் பண்றது, அவங்க நம்மள லவ் பண்ணலயா? திரும்பி பாக்கலயா? நோ பிராப்ளம், நாம நம்ம கடமைய சரியா செஞ்சோம்கற திருப்தி மட்டுமே போதும், இப்படியே ஒரு பதினைஞ்சு பொண்ணுக பக்கம் லவ் பண்ணினேன், அப்புறம் ஒரு பொண்ண பார்த்து பல்பு வாங்குனதெல்லாம் முன்னாடியே கதையில சொல்லி இருக்கேன்

இது மட்டும் இல்லை, இன்னும் இன்னும் நிறைய ஆசைபட்டது இருக்கு, அத்தனையும் ஒரு பதிவுல சொல்ல முடியாது, உதாரணமா சினிமா பார்த்து புடிச்சு போனதுக்கு அப்புறமா, டெய்லியும் சினிமா பார்க்க சினிமா ஆப்பரேட்டரா ஆகணும்னு ஆசை வந்திருக்கு, எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போனபோது டாக்டர் ஆகணும்னு ஆசை வந்த்து, என்னோட மக்கு பிரண்டு ஒருத்தன் காசு கொடுத்து என்ஜினியர் சீட் வாங்குன போது, நானும் என்ஜினியர் ஆகணும்னு ஆசைபட்டேன், போலீசாகனும்னு ஆசைபட்டேன், பிளைட் ஓட்டனும்னு ஆசைபட்டேன், ராணுவத்துல சேரணும்னு ஆசைபட்டேன், கலெக்டர் ஆகணும்னு ஆசைபட்டேன், சினிமால ஹீரோ ஆகனும்னு ஆசைபட்டேன், அவ்வளவு ஏன் தமிழ்நாட்டோட முதலமைச்சரா ஆகனும்னு கூட ஆசைபட்டு இருக்கேன்

இப்படி கணக்கில்லாத ஆசைகள், அத்தனையும் சொல்ல கண்டிப்பா ஒரு பதிவு போதாது, அத்தனை அத்தனை ஆசைகள், நிறைவேறிய ஆசைகள், நிறைவேறாத ஆசைகள், தகுதிக்கு மீறின ஆசைகள், தகுதிக்கு உட்பட்ட ஆசைகள்னு எதையும் பிரிச்சு பார்க்க முடியாது, ஆசைபடறதுக்கு எதுக்கு தகுதியெல்லாம்? ஜஸ்ட் ஆசைபடறோம் அவ்வளவுதான், ஆசைப்படாம அடைய முடியுமா?

இதுல நான் ஆசைபட்டதுல பெரும்பாலான ஆசைகள் நிறைவேறியதே இல்லை, அது நிறைவேறாதுன்னு எனக்கும் தெரியும்,

இப்ப இருக்குற ஆசையெல்லாம் ரொம்ப குறுகி போச்சு சொல்லப்போனா ஒன்னே ஒன்னுதான், பணம் சம்பாதிக்கணும் அது மட்டும்தான், அதற்கு அப்புறம் இடம் வாங்கனும், வீடு கட்டனும், ஒரு ஸ்டேஜிக்கு வரணும், பணக்காரனா ஆனா எங்கம்மா பேருல ஒரு கேன்சர் டிரஸ்ட் ஆரம்பிக்கனும் அவ்வளவுதான், இத நோக்கிதான் என்னோட மிச்ச மீதி வாழ்க்கை எல்லாம்,

என்னோட மீதி வாழ்க்கையில நானும் என் குடும்பமும் அடைய நினைச்ச இடத்தை அடைவேணா இல்ல, என் பெற்றோர்கள் என் மீது நம்பிக்கை வைத்தது மாதிரி என்னால முடியாதத என்னோட குழந்தைகள் செய்யும்னு நானும் அதேநம்பிக்கையை என் சந்ததிகள்கிட்ட விட்டுட்டு போவேனான்னு தெரியாது,

குழந்தையா இருக்கும்வரை நம்மோட ஆசைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் ஒரு குறுகிய வட்டத்துல நாம, நம்ம பெற்றோர்னு முடிஞ்சிருது, அந்த ஆசைகளை ஒரு டிவைன்னான ஆசைன்னு சொல்லலாம், கஷ்ட நஷ்டம் எதுவும் தெரியறதில்ல, ஆனா நாமே பெரியவனாக ஆகி நம்மோட ஆசைகளோட சமுதாயத்துல நேருக்கு நேர் மோதும் போதுதான் நிதர்சன வாழ்க்கை இடிக்கிறது

நம்பிக்கை இல்லாம வாழ்க்கையில எதையும் சாதிக்க முடியாது, எந்த ஆசையயும் நிறைவேத்தவும் முடியாது, அடுத்த நிமிசம் என்ன நடக்கும்கற ஆச்சரியத்த உள்ளடக்கி இருக்குற வாழ்க்கையில இன்னமும் நானும் ஆசைபடுறேன், நம்பிக்கையோடு..!
  

Wednesday, April 20, 2011

பிளாக்கர்ஸ் - கவுண்டமணி செந்தில்
(கவுண்டமணியும் செந்திலும் பிளாக்கரா இருக்காங்க, கவுண்டமணி ரொம்ப நாளா பிளாக் எழுதாம இருக்காரு, ரொம்ப நாள் ஆச்சேன்னு பிளாக் பக்கம் போய் பார்க்கலாம்னு இரண்டு பேரும் நெட் செண்டருக்கு போறாங்க)

கவுண்டமணி : அப்பப்பா என்ன வெயில் என்ன வெயில் ஒரே குஷ்ட்டமப்பா, ச்சீ கஷ்ட்டமப்பா, அலோ கடைக்காரரே ஒரு சிஸ்டம் கொடுங்க, பிளாக் படிக்கனும்

செந்தில் : உள்ள ஏசி இருக்குதுங்கலா (கடைக்காரரை பார்த்து)

கவுண்டர் : அடி செருப்பால, நீ கொடுக்கற 20 ரூபாய்க்கு ஏசி வேணுமா? மூடிட்டு வா நாயே, உள்ள போ நாயே
(கம்ப்யூட்டர் முன்னால் இருவரும் அமர்ந்து கம்ப்யூட்டரை ஆன் செய்கிறார்கள்)

கவுண்டர் : டேய் ஒண்டிபுலி ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன், ஒரு நல்ல பதிவா பார்த்து ஓப்பன் பன்ணுடா, படிக்கலாம்

செந்தில் : அண்ணே என் பிளாக் ஒப்பன் பண்ணுங்கன்னே, நல்ல பதிவா போட்டிருக்கேன்

கவுண்டர் : ஏண்டா நான் நல்லா இருக்கறது உனக்கு புடிக்கலையா,ஏண்டா ஆரம்பத்துலேயே சங்கு ஊதற
(கவுண்டர் ஓப்பன் பண்ணியதும், மெயிலிலும், சாட்டிங்கிலும் நண்பர்கள் வந்து தங்களுடைய பதிவை படிக்குமாரு, ரிக்வெஸ்டும், நியூஸ் லெட்டரும் அனுப்புகிறார்கள்)

கவுண்டர் ; பார்த்தியாடா அண்ணனோட மதிப்பை, எத்தனை பேரு பதிவு எழுதி வச்சுட்டு அண்ணனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க பாரு, இப்பயாச்சும் என் மதிப்பு உனக்கு புரிஞ்சுதா, இவங்க பதிவ எல்லாம் கூட படிச்சிரலாம்டா சோசியல் மேட்டரு பண்ணிரலாம், ஆனா கேப்டன பத்தி ஒருத்தன் பதிவ எழுதி வச்சிருக்காண்டா, அத அவனாலயே படிக்க முடியலயாம், என்ன படிக்க சொல்றான், நான் என்ன சாகப்போறேன்னு அவன்கிட்ட சொன்னனா? மவனே அவன்மட்டும் என் கையில கிடைச்சான்...

செந்தில் ; அதவிடுங்கண்ணே, என்னோட பதிவ படிச்சு பாருங்கன்னே, ரொம்ப நல்லா இருக்கும்.

கவுண்டர் : டே நாயே, நான் மறுபடியும் சொல்றேன், ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன், நல்ல பதிவா படிக்கலாம்னு, என்னை கொலகாரனாக்கிராதே


செந்தில் ; அட என்னங்கன்னே, நீங்க நம்பவே மாட்டீங்கறீங்க, நான் நல்ல பதிவாதான் போட்டு இருக்கேன், அதுவும் என்னோட சொந்த அனுபவ பதிவு

கவுண்டர் : சொந்த அனுபவத்த பதிவா போட்டிருக்கியா? அது என்னடா நாயே அனுபவம்?

செந்தில : அதுவான்னே, காலையில எங்கப்பா வடகம் காயப்போட்டுட்டு இருக்கும் போது ரெண்டு வெள்ளைக்காக்கா வந்து வடகத்த தூக்கிட்டு செய்யின்ன்னு பறந்து போயிருச்சுன்னே, அததான் பதிவா போட்டு இருக்கேன்.

கவுண்டர் ; எப்படி பறந்து போச்சு?

செந்தில :  சொய்யின்னு...

கவுண்டர் : இப்ப நீயும் அப்படித்தான் பறக்க போற பாரு...

(கவுண்டமணி செந்திலை எட்டி உதைக்கிறார், செந்தில கேபினுக்கு வெளியே போய் விழுகிறார், பக்கத்து கேபினில் உள்ளவர்கள் எட்டி பார்க்கிறார்கள்)

கவுண்டர் ; அப்படியே ஓடி போயிருடா, இந்த பக்கம் மறுபடியும் வந்த கொத்த வச்சு குறுக்காலயே வெட்டி போட்டுடுவேன்

செந்தில் : ஏண்னே உதைச்சீங்க, பக்கத்து கேபின்ல இருந்து ரெண்டு பொண்ணுங்க எட்டி பார்க்குறாங்க, எனக்கு மெசேஜ் பிராப்ளமா இருக்குதுல்ல

கவுண்டர் : என்ன பிராப்ளமா இருக்குது?

செந்தில் : மெசேஜ் பிராப்ளம், அதானே இந்த பசங்க எல்லாம் பொண்ணுங்க முன்னாடி அவமானப்பட்டா சொல்லுவாங்களே, இது கூட தெரியலயா? அய்யோ அய்யோ

கவுண்டர் ; டே நாயே அது இமேஜ் பிராப்ளம்டா, அய்யோ ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோட எல்லாம் கூட்டு சேர வைக்கற..

செந்தில் : சரி சரி அதவிடுங்க, என்னோட பதிவ படிங்க (செந்தில் பதிவை ஓப்பன் பண்ணுகிறார்)

கவுண்டர் : இவன் விடமாட்டாண்டா, என்ன சாகடிக்காம விடமாட்டான் போலருக்கு, சரி படிச்சு தொலைக்கிறேன், ஒப்பன் பண்ணி தொலை.

கவுண்டர் படிக்க ஆரம்பிக்கிறார்
இய்ய்ய்ய்
ஆஆஆ
பாதி பதிவை படித்ததுமே
முடியலயே...
கர்ர்ர்ர்ர்

செந்திலை பார்த்து முறைக்கிறார், செந்தில் முழிக்கிறார்..

கவுண்டர் : படிச்சு முடிச்சிட்டண்டா நாயே

செந்தில் : எப்படின்னே இருந்தது?

கவுண்டர் : ம்ம்ம், ரொம்ப கேவலமா இருந்த்து, இதெல்லாம் ஒரு பதிவாடா? டொட்டடோ, டொட்ட்டோ, டொட்ட்டொட்ட்டோங்கற மாதிரி இது ஒரு பதிவு? கர்ர்ர்ர்ர்ர்ர், த்தூதூதூ..

(காறி துப்புகிறார், எச்சில் செந்திலின் மேல் படுகிறது)

செந்தில : (முகத்தை துடைத்தபடி) உங்களுக்கு பொறாமைன்னே, நான் பிரபல பதிவர் ஆயிருவேண்ணு

கவுண்டர் : ஆமா இவரு பெரிய காந்தியடிகள், சத்திய சோதனை புஸ்தகம் எழுதிட்டாரு, நாங்க பொறாமைபடறதுக்கு, போ நாயே

செந்தில் : சரி சரி படிச்சது படிச்சிட்டீங்க, கமெண்டு போட்டுட்டு போங்க

கவுண்டர் : கமெண்டா? எதுக்குடா நாயே?

செந்தில் : ஒரு பதிவ படிச்சா அத பாராட்டி நல்லா இருக்குதுன்னு கமெண்டு போடனும்னே.

கவுண்டர் : நான் எப்படா உன் பதிவு நல்லா இருக்குதுன்னு சொன்னேன்?

செந்தில் : நல்லா இருந்தாலும், நல்லா இல்லாட்டியும் நல்லா இருக்குது, அருமை, சூப்பர், வாழ்த்துக்கள் இப்படின்னு போடனும்னே

கவுண்டர் : முடியாதுடா, நல்லா இருக்குதுன்னு நான் போட மாட்டேன்டா.

செந்தில : அதெல்லாம் முடியாது,  நீங்க போட்டே ஆகணும் (கெஞ்சுகிறார்)

கவுண்டர் : சரி, சின்ன பையன் ஆசைப்பட்டுட்ட போய் தொழ, இந்தா நல்லா இருக்குதுன்னு கமெண்ட் போட்டாச்சு

செந்தில் : ஹி ஹி ரொம்ப தேங்க்ஸ்சுங்கன்னே..

கவுண்டர் : ரொம்ப பக்கத்துல மூஞ்சிய காட்டாதடா, பயமா இருக்கு, சரி அப்புறமென்ன, அடுத்த பதிவ ஓப்பன் பண்ணு..

செந்தில் : என்னன்னே அதுக்குள்ள கிளம்பிட்டீங்க?

கவுண்டர் : அப்புறம் என்னடா பண்ண சொல்றே? உன் பிளாக்குலயே இருந்து கிடாவெட்டி பூஜை போட்டு சாமி கும்புட சொல்றியா?

செந்தில் ; இல்லனே, இன்னும் நீங்க ஓட்டு போடவே இல்லையே?

கவுண்டர் : ஓட்டா எதுக்குடா?

செந்தில் : அண்ணே பதிவ படிச்சிட்டு கமெண்ட் போட்டா மட்டும் போதாது, ஓட்டும் போடனும்.

கவுண்டர் ; டேய் அண்ணனுக்கு அதுக்கெல்லாம் நேரமில்லைடா, டெல்லி புரோகிராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன், சீக்கிரம் அடுத்த பதிவ ஒப்பன் பண்ணு.

செந்தில் ; அதெல்லாம் முடியாதுன்னே, நான் உங்க பதிவு எல்லாத்துக்கும் கமெண்டு ஓட்டு எல்லாம் போட்டிருக்கேன், அதனால நீங்களும் என்னோட பதிவுக்கு போட்டே ஆகணும்

கவுண்டர் : டேய் என்ன கொலகாரனாக்கிராத, எனக்கு நேரமும் இல்ல, உன் பதிவும் புடிக்கல, மரியாதையா விட்டுடு

செந்தில் ; அதெல்லாம் முடியாது நீங்க ஓட்டு போட்டே ஆகணும், இல்லைன்னா நடக்குறதே வேற

(செந்தில் ஆவேசமாகிறார்)


கவுண்டர் : இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீ கொந்தளிக்கற, உட்காரு, கோவப்படாத, இப்ப என்ன நான் ஓட்டு போடனும், அவ்வளவுதான, ஓட்டு போடறேன் விடு, சரி இந்த ஓட்டு வாங்கி என்ன பண்ண போற?

செந்தில் ; என்னன்னே இப்படி சொல்லிட்டீங்க, நிறைய ஓட்டு வாங்குனாதான் நம்மோட பதிவு இண்ட்லி, தமிழ்மணம்னு திரட்டியில முண்ணனியில வரும், நமக்கு நிறைய ஹிட்ஸ் கிடைக்கும்.

கவுண்டர் : ஹிட்ஸ்ஸா, எது திருப்பாச்சியில நம்ம டாக்டர் தம்பி ஒருத்தன கொல்றதுக்கு யூஸ் பண்ணுவாறே அதா?

செந்தில் : அதில்லைன்ணே, இது வேற, இது பதிவுலக ஹிட்ஸ்

கவுண்டர் : என்ன எழவோ இருந்துட்டு போகட்டும், நானும் ஓட்டு போட்டு தொலைக்கிறேன், இந்த பதிவ படிச்சு எத்தனை பேருக்கு வாந்தி பேதியாக போகுதோ, அதுசரி இந்த ஹிட்ஸ்ஸ வாங்கி என்ன பண்ணப் போற?

செந்தில் : ஒண்ணுமில்லன்னே, சும்மா ஒரு வெளம்பரம்..

கவுண்டர் : வெளம்பரமா? நீ எழுதற ஒண்ணு ரெண்டு மொக்கைக்கு எதுக்கடா இந்த விளம்பரம், அந்த சினிமாக்காரங்கதான் ஆ வூன்னா தனக்குதானே போஸ்டர் ஒட்டி செவுத்த நாறடிக்கறாங்க ஒன்னுமே கிடைக்கலீன்னா பொறந்த நாள் கொண்டாடுரானுங்க, அதுவும் 33 வயசுக்கு மேல போறாங்களான்னா போக மாட்டேங்குறாங்க, 33 லயே நிக்குறானுங்க, நாட்டுல இவனுங்க மட்டும்தான் பொறந்தானுங்களா? நாம எல்லாம் தேவையில்லாம பொறந்துட்டமா?

செந்தில் : இங்க பாருங்க என்ன பத்தி தப்பா பேசுங்க, என்னோட பதிவ பத்தி மட்டும் தப்பா பேசுனீங்க, கடிச்சு வெச்சிடுவேன்

கவுண்டர் : அய்யோ வேண்டாம்டா சாமி, நீ செஞ்சாலும் செய்வ, எங்கடா ஒட்டு போடனும் சொல்லுடா

செந்தில் : பிளாக்குக்கு கீழ பாருங்கன்னே, லைனா இருக்குதுல்ல அதுலதான் ஓட்டு போடனும்

கவுண்டர் : அடங்கொன்னியா, என்னடா இது பழனி படிக்கட்டு மாதிரி இவ்வளவு நீளமா இருக்குது..

செந்தில் : அதாண்ணே, அதுதான் ஓட்டுபட்டை, இண்ட்லி, தமிழ்மணம், உலவு, தமிழ்10 இப்படி எல்லாமே இருக்குது, எல்லாத்துலயும் ஓட்டு போடுங்கன்னே

கவுண்டர் : எல்லாத்துலயுமா, இதுல எல்லாத்துலயும் ஓட்டு போடனும்னா ஒரு மாசம் ஆகும் போலிருக்கே, என்னால அத்தனை எல்லாம் போட முடியாது, இந்தா ஒன்னுல போட்டுட்டேன்

செந்தில் : அதெல்லாம் முடியாது, எல்லாத்துலயும் போடுங்க  

கவுண்டர் : முடியாதுங்கறேன்

செந்தில் : ஓட்டு போடுங்க

கவுண்டர் : முடியாதுடா நாயே

செந்தில் : மரியாதையா ஓட்டு போடுங்க, இல்லேன்னா நடக்கறதே வேற

கவுண்டர் : அடி நாயே, போனா போகுதுன்னு பார்த்தா ஓவரா லவுட்ட கொடுக்கறயா (எட்டி உதைக்கிறார்)

செந்தில் பறந்து போய் விழுகிறார்

செந்தில் : அய்யோ அண்ணே தூக்கி விடுங்கன்னே

கவுண்டர் : நாலு வீட்டுல பொறுக்கி திங்கற நாயிக்கு லொல்ல பாரு

செந்தில் : அய்யோ அண்ணே

கவுண்டர் : எகத்தாளத்த பாரு

செந்தில் : அண்ணே எந்திரிக்க முடியலன்னே

கவுண்டர் : லோலாய்தனத்த பாரு

செந்தில் : அண்ணே முடியலன்னே தூக்கி விடுங்கன்னே

கவுண்டர் : போ நாயே அப்படியே உருண்டு போ நாயே, உங்கப்பன் எங்கயாவது நண்டு வறுத்து தின்னுட்டு இருப்பான் அவன்கிட்ட போய் தூக்கி விட சொல்லு, இனிமே என் கண்னுல நீ பட்ட, பர்ஸ்ட் டெட் பாடி நீதாண்டி..!


Monday, April 18, 2011

கலைஞரின் - பொன்னர் சங்கர்லேட்டஸ்டா கலைஞரின் கதை வசனத்தில் வந்திருக்குற படம், ஏற்கனவே வந்த பெண்சிங்கம், இளைஞன் படத்த பத்தியெல்லாம் கேள்விபட்டு டரியலாகிப்போன எனக்கு பொன்னர் சிங்கம் பார்க்கலாம்னு தோணுனதுக்கு மொத காரணம் அண்ணன்மார் கதைதான், அது ஏன்னு கடைசியில சொல்றேன்

பெரியமலை கவுண்டர் விஜயகுமாரோட பொண்ணு தாமரை நாச்சியார் குஷ்பு சின்ன வயசுல இருந்தே மாமன் மகனான நெல்லியன் கோடான் ஜெயராமை விரும்பராரு, ஆனா நம்ம நாட்டாமை குஷ்புவ மந்தியப்பன் பிரகாஷ்ராஜுக்கு கல்யாணம் பண்ணி வைக்க டிரை பண்றாரு, கல்யானத்துக்கு முந்துன நாள் குஷ்பு மாமன் மகனோட கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா செத்து போயிருவேன்னு சொல்றாங்க

அதனால வேற வழி இல்லாம பிரகாஷ்ராஜ கழட்டிவிட்டுட்டு ஜெயராமுக்கே கல்யாணம் பண்ணி வைக்கறாரு விஜயகுமார், இதனால மானம் போச்சேன்னு கடுப்பான குஷ்புவோட அண்ணன் சின்னமலை கவுண்டர் பொன்வண்ணன் குஷ்புவயும் ஜெயராமையும் வீட்ட விட்டு தொறத்தி விட்டுடுறாரு

போறதுக்கு முன்னாடி, நாங்க பணக்காரங்களாகி எனக்கு பொறக்கற இரண்டு சிங்க(?) குட்டிகளுக்கும்  உன்னோட பொண்ண கட்டி வைக்கிறேன்னு குஷ்பு ஒரு சவால் விடறாரு, குஷ்புவுக்கு குழந்தை பொறந்துச்சா? ஏமாந்து போன மந்தியப்பன் என்ன பண்ணாரு, குஷ்புவோடசத்தியம் நிறைவேறிச்சாங்கறதுதான் இந்த பொன்னர் சங்கர் கதை

பிரஷாந்த் டபுள் ஆக்ட் குடுத்திருக்காரு, எருமைமாடு மாதிரி செம பாடியா இருக்குர அவருக்கு பூ மாதிரி இருக்குற இரண்டு பொண்ணுங்கள கதாநாயகியா போட்டது சரியில்ல, சண்டை காட்சிகள்ள நல்லா ரிஸ்க் எடுத்து பண்ணிருக்காரு பிரசாந்த், வாள் சண்டை, குதிரை ஏற்றம், பல்டி அடிக்கறதுன்னு கலக்குறாரு, கலைஞரோட வசனம்னு சொன்னாங்க, ரெண்டு பிரசாந்தும் சேர்ந்து மொத்தமாவே இருபது டயலாக் பேசி இருந்தாலே அதிகம், அட போருக்கு போறதுக்கு முன்னாடி பொண்டாட்டிய பார்க்க போறாங்க, போயிட்டு வரேன்னு கூட சொல்ல மாட்டேங்குறாங்க,

படத்தோட மியூசிக் இசைஞானி, சரித்திர கதைக்கு பின்னி எடுப்பாருன்னு நினைச்சேன், ஆனா அது டைட்டில்ல பொன்னர் சங்கருக்கு மேல கலைஞர்னு போடும் போது திடும்முன்னு மியூசிக் கொடுக்கறதோட நின்னு போச்சு, இவங்க படத்துக்கு இது போதும்னு நினைச்சுட்டாரு போல, சந்தேகம் இருக்குறவங்க டிவில டிரைலர் போடும் போது பார்த்துக்கோங்க, ஆனா ரெண்டு பாட்டு பரவாயில்லை, கேட்க கேட்க ஹிட்டாயிடும்


தலையூர் காளியா நெப்போலியன், இயல்பாவே அவருக்கு ராசா வேசம் நல்லாவே பொருந்தும், கேரக்டருக்கு தகுந்த மாதிரி நல்லாவே பண்ணி இருக்காரு, நாசருக்கு மகாபாரதம் கிருஷ்ண பரமாத்மா மாதிரி வேடம், பாதி கதைய அவருதான் மத்தவங்க கிட்ட அதென்ன ஆச்சு, இதென்ன ஆச்சுன்னு வாய கிளறி சொல்ல வைக்குறாரு, அவரு மூலமாதான் கதையே புரியுது,

ராஜ்கிரண் ராக்கி அண்ணனா வராரு, இரண்டு பிரசாந்துக்கும் ஆசான் அவருதான், ஆனா இன்னும் நெஞ்ச நிமித்தி, கண்ண சிவக்க வச்சு, மீசைய துடிக்க வச்சு சோலையம்மா செத்து போச்சேங்கற மாதிரி பீல் பண்றத்தான் தாங்க முடியல, இன்னும் எத்தனை படத்துக்கு இதே ஆக்ட கொடுக்க போறாரோ, நல்ல வேளை தக்காளி என் சபதத்த நிறைவேத்தாம பர்ஸ்ட் நைட்டுக்கு போனீங்க, தக்காளி கொன்னுபுடுவேன்னு டயலாக் பேசாம விட்ட வரைக்கும் சந்தோசம், ஆனா அதுக்கு பதிலா சங்கரை ஷங்கர் ஷங்கர்னு கூப்புட்டு கொல்லறாரு

படத்தோட செட்டெல்லாம் சூப்பரு, கிராபிக்ஸ் காட்சிகெல்லாம் பிரமாதமா இருக்கு, பழக்க தோசத்துல மானாட மயிலாட செட்டா இருக்குமோன்னு சந்தேகபட்டுட்டேன், அப்படியெல்லாம் இல்லை போலருக்கு, ஒரே பாட்டுக்கு பானு ஆடறாங்க, சினேகாவும் இருக்காங்க, ஒரிஜினல் கதைல சினேகா கேரெக்டர்தான் வெயிட்டு, படத்துல ஓரமா நின்னு பல்லை காட்டறதோட சரின்னு விட்டுட்டாங்க, இன்னும் நிறைய நடிகர்கள் நடிச்சிருக்காங்க, சமீப காலத்துல வந்ததுலயே நிறைய துணை நடிகர்கள் நடிச்சிருக்கறது இந்த படத்துலயாத்தான் இருக்கும்

படம் இடைவேளை வரை போறதே தெரியலை, அவ்வளவு விருவிருப்பா இருந்தது, ஒரு மணி நேரத்துலேயே இண்டர்வெல் விட்டுட்டாங்கறது வேற விசயம், அப்புறம் கொஞ்சம் ஸ்லோதான், இடைவேளைக்கு அப்புறம் படத்த மட்டுமில்ல உட்கார்ந்து இருக்குற ரசிகர்களையும் தூக்கி நிறுத்தறது கதாநாயகிகள்தான், இரண்டு பேரும் வெள்ளை பளிங்குகல்லுல செதுக்குன சிலை மாதிரி இருக்காங்க, ஏற்கனவே எல்லாரும் ஜொள்ளுவிட்டுட்டதால நான் இத்தோட நிறுத்திக்கிறேன்


மொத்த்துல கலைஞரோட கதை திரைக்கதை வசனத்துல காண்டாகாம ’’பார்க்குற’’ மாதிரி இருக்கு பொன்னர் சங்கர்

இனி என்னோட கதை, சின்ன வயசுல இருந்தே எங்க ஊருல வருசா வருசம் அண்ணன்மார்கதை மாரியம்மன் கோவில் பக்கத்துல தெருக்கூத்து மாதிரி நடத்துவாங்க, இரண்டு பேர் ராஜா வேசம் போட்டுட்டு அண்ணன் தம்பியாகவும் ஒருத்தர் பெண் வேசம் போட்டுட்டு பச்சை அம்மனாவும் அதாவது அருக்காணியாவும் நடிப்பாங்க, ஜல் ஜல்லுன்னு சலங்கை கட்டிகிட்டு அவங்க பாடிகிட்டும் ஆடிகிட்டும் கதை சொல்லும் போது சின்ன பையனா இருந்த வரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு, காலம் மாறிப்போச்சோ இல்லை நான் மாறிட்டனோ கடந்த ஆறேழு வருசமா அண்ணன்மார் கதை பார்க்க போனதே இல்லை,

ஒவ்வொரு வருசமும் ஜனவரி மாசம் ஆனா போதும், எங்க ஊரு கோட்டா ஆரம்பமாகிரும், இந்த வருசமும் ஜனவரில நடத்துனாங்க, டெய்லியும் நைட்டு ஏழெட்டு மணிக்கு ஆரம்பிச்சு பதினொன்னு பண்ணெண்டு மணி வரைக்கும் போகும், இப்படியே 18 நாள் கதை சொல்லுவாங்க, அப்புறம் அடுத்த ஊருக்கு போயிருவாங்க, ஒருநாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து மணி நேரம் கதை சொன்னாலே 18 நாள் ஆகற அண்ணன்மார் கதைய இரண்டரை மணி நேர கதையா எப்படி படம் எடுத்துருக்காங்கன்னு பார்க்குறதுக்காக இந்த படத்துக்கு போனேன்

ஒரிஜினல் கதைல மூணு தலைக்கட்டா கதை சொல்லுவாங்க, பெரியமலை கவுண்டரோட முன்னோர்கள் கதை, தலையூர் காளியோட கதை, அருக்காணி பச்சை அம்மனா எப்படி மாறுனாங்க அப்படிங்கற கதை, பொன்னர் சங்கர் கதை, அதே மாதிரி அண்ணன்மார்கள் இரண்டு பேரும் போருல இறந்து போயிருவாங்க அந்த கதை இப்படி நிறைய விசயங்கள் இருக்குதே எப்படி சினிமாவா எடுத்தாங்கன்னுதான் பார்க்க போனேன், ஆனா ஒரிஜினல் கதைய சினிமாவுக்கு தகுந்த மாதிரி கண்டபடி மாத்தி இருக்காங்க, இரண்டரை மணி நேரத்துல விறுவிறுப்பா கொடுக்கனும்னா என்ன பண்ணனுன்னு யோசிச்சு அதற்கு தகுந்த மாதிரி கதையவே மாத்தி இருக்காரு டைரக்டர் தியாகராஜன்,

எது எப்படியோ கலைஞர் கதை எழுதறதுக்கு வர காச முதலமைச்சர் நிவாரண நிதியிலயோ இல்ல வேற எதாவது பயன்பாட்டுகோ கொடுத்து ஹெல்ப் பண்ணுவாரு, அதே மாதிரி இந்த பட்த்துக்கு வந்த காசயும் ஊர் ஊரா அண்ணன்மார்கதைய தெருக்கூத்தா நட்த்துறவங்களுக்கு கொடுத்தாருன்னா பிரயோஜனமா இருக்கும்,

ஏன்னா அவங்களுக்கு இந்த தெருக்கூத்து நடத்துறதுக்கு யாரும் காசு தரதில்ல, வாய் வலிக்க கத்திகிட்டு அஞ்சு மணி நேரம் ஆடுவாங்க, அப்ப  ஊர் பெரிய மனுசங்க அஞ்சோ பத்தோ இருபதோ கொடுப்பாங்க, அதுவும் எதுக்கு? அவங்க பேர சொல்லி இந்த பெரிய மனுசன் இவ்வளவு கொடுத்தாருன்னு சொல்லி அதுக்கொரு ஆட்டம் போடுவாங்க, எல்லாம் ஒரு விளம்பரத்துக்குதான், இப்படி 18 நாள் ஆடுனாங்கன்னா அதிகபட்சம் என்ன வசூலாக போகுது? சில நாட்கள்ல ஒருத்தனும் ஒன்னும் கொடுக்க மாட்டான்,

இப்படி காலம் காலமா காலத்தால அழியாத காவியங்கள தெருக்கூத்தாவும், பொம்மலாட்டமாவும், தோல்பாவை கூத்தாகவும், வில்லுபாட்டாகவும், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மரக்குதிரை ஆட்டம், இப்படி பலவகையில நாட்டுபுற கலைகள் மூலமா நம்ம தமிழ்நாட்டோட கலாசாரத்தை இன்னும் கட்டி காத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு போறவங்களுக்கு நலவாரியம் அமைக்காட்டாலும் குறைந்த பட்சம் ஒரு டிரஸ்டாவது அமைச்சு கொடுத்து நல்லது செய்யனும்னு கேட்டுகறேங்க..!