Sunday, October 31, 2010

கேன்சரை பற்றி நான்கேன்சரை பற்றி எனக்கு மருத்துவ ரீதியாக ஒன்றும் தெரியாது, ஆனால் உணர்வு பூர்வமாக அனுபவித்து உள்ளேன். அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மார்பக புற்றுநோய் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது, சிகப்பு ரோஜா மட்டுமே, ஒவ்வொரு வருடமும் கோவை குப்புசாமி நினைவு மருத்துவமனையில், அக்டோபர் மாதம் பரிசோதனைக்கு வரும் புற்று நோயாளிகளின் கையில் சிகப்பு ரோஜாவினை கொடுத்து குணமடைய வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள், சென்ற வருடம் என்னுடைய அம்மாவிற்கு கொடுத்த சிகப்பு ரோஜாவினை நான் கையில் வைத்திருந்தேன், கடந்த 3 வருடங்களாக அக்டோபர் மாதம் தவறாமல் ஒரு சிகப்பு ரோஜா எனக்கு கிடைக்கும், எனது அம்மா அந்த ரோஜாவினை எனது கையில் தந்து சிரிப்பார்கள், இந்த வருடம் எனது அம்மாவும் இல்லை, அந்த ரோஜாவும் இல்லை. கடந்த ஜூன் மாதம் எனது தாயார் இறந்து விட்டார்கள். 3 வருடங்களுக்கு முன்பு எனது பெரியம்மா உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருந்தார்கள், அவர்களை பார்ப்பதற்காக, நாங்கள் குடும்பத்தோடு போயிருந்தோம், அப்பொழுது எனது அப்பா அம்மாவிடம், மார்பகத்தில் சிறிய கட்டி போன்று உள்ளது, சில நாட்களாக வலி ஏற்படுகிறது என்றாயே, இங்கே பரிசோதனை செய்து கொள்ளலாமே என்று கேட்டார், எனது அம்மா அது ஒன்றும் இல்லை, சும்மா சிறிய கட்டிதான் என்று கூறினார்கள், நாங்கள் விடாப்பிடியாக அடம்பிடித்து பரிசோதனை செய்ய வைத்தோம், பரிசோதனையின் முடிவில் மார்பக புற்றுநோய் என தெரிய வந்தது, இடிந்து போனோம், அப்பொழுது ஆரம்பித்தது, 3 வருடங்களாக ஆட்டி படைத்து விட்டது, எங்களுடைய தகுதிக்கு மேல் கடன் வாங்கி செலவு செய்தும், கடைசியில் நினைத்தபடியே நடந்து விட்டது. அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிவீச்சு சிகிச்சை என ஒவ்வொரு சிகிச்சை மேற்கொள்ளும் போதெல்லாம், எனது தாயார் என்னை விட்டு போய் கொண்டே இருந்தார், கீமோதெரபி சிகிச்சையினால் முடி கொட்டியது, வாயில் புண் வந்ததால் சாப்பிட முடியாமல் போய் உடல் மெலிந்தது, இத்தனைக்கும் புற்றுநோயின் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அதிகப்படியான கீமோதெரபி சிகிச்சையினால், சக்கரை நோய் வந்தது, பிறகு கால் எழும்பிலும் புற்று நோய் பரவியது, நடக்க முடியாமல் போகும் நிலைக்கு வந்த போது, காலில் அறுவை சிகிச்சை செய்து இரும்பு ராடு பொருத்தப்பட்டது, காலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க மீண்டும் கீமோதெரபி, கூடவே கதிர்வீச்சு சிகிச்சை, மீண்டும் கொஞ்சம் வளர்ந்த முடிகள் கொட்டிப் போயின, கடைசியாக நடக்க முடியாமல் போய் படுத்த படுக்கையானார், மீண்டும் புற்றுநோய் லிவரையும் (LIVER) தாக்கியது, லிவரில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க கொடுக்கப்பட்ட மாத்திரையின் மூலம், உடல்நிலை மிகவும் மோசமானது, கடைசியாக ஒருவாரம் விடாமல் இரத்த வாந்தி எடுத்தார், இரண்டு முறை பல்ஸ் ரேட் குறைந்து இறப்பிற்கு பக்கத்தில் போய் மீண்டு வந்தார், கடைசியாக தாங்க முடியாத கால் வலியினால் மருத்துவமனைக்கு  கொண்டு போனோம், அடுத்த நான்கு நாட்களில் இறந்து போனார். 
குப்புசாமி நினைவு மருத்துவமனையில் கேன்சர் நோயாளிகளுக்கு 5 வருடங்கள் மட்டுமே செல்லக் கூடிய ஒரு ஒ.பி, அட்டையை கொடுப்பார்கள், 5 வருடத்திற்கு பிறகு அதனை மறுபதிவு செய்ய வேண்டும், அதனை வேடிக்கையாக எனது அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள், ஒருவேளை 5 வருடங்களுக்குள் சரியாகி சென்று விடுவார்கள், அல்லது 5 வருடங்களுக்குள் இறந்து விடுவார்கள் என்று கூறுவார், அது சரிதானோ என்று இப்பொழுது நினைக்கிறேன்.புற்று நோயும், அதன் வலிகளும், அதன் சிகிச்சை முறைகள் தாங்க முடியாதவை, புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளும் மிகுந்த விலை உடையவை, சாதாரண நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களால் சிகிச்சையினை மேற்கொள்வதே கஷ்ட்டமாகும், மேலும் அதனை பற்றி விரிவாக கூற இஷ்ட்டமில்லை, அதை மீண்டும் ஒருமுறை நினைவு கூறவே கஷ்ட்டமாக உள்ளது, கேன்சரினை பற்றி எனக்கு தெரிந்த வரையில் விரிவாக எழுத வேண்டும் என நினைத்துதான் எழுத ஆரம்பித்தேன், ஆனால் இப்பொழுது முடியவில்லை, நமது பதிவுலகில் நிறைய நண்பர்கள் விரிவாக எழுதி உள்ளனர், குறிப்பாக, நண்பர் சாய் கோகுல கிருஷ்ணன் இந்த பதிவில் கேன்சரை பற்றி நன்றாக எழுதி உள்ளார்.


நமது நாட்டில் புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் பொதுவாக கூறும் சாக்காக, அவன் நிறைய புகை பிடிக்கிறான், மது அருந்துகிறான், அவனுக்கு என்ன கேன்சரா வந்தது? எனக்கு எல்லாம் கேன்சர் வராது என்று கூறிக் கொண்டு திரிகிரார்கள், கேன்சர் ரஜினியை போல, எப்பொழுது வரும், எப்படி வரும், யாருக்கு வரும் என யாருக்கும் தெரியாது, ஆனால், வரக்கூடாத நேரத்தில் வந்துவிடும், எனவே கூடுமானவரையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள். 30 வயதினை தாண்டிய உடனே வருடத்திற்க்கு ஒருமுறையாவது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள், 30 வயதிற்கு முன்னரே மெடிக்கிளைம் பாலிசி ஒன்றை போட்டு வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு பின்னர் போட நினைத்தாலும், ஏற்கனெவே உள்ள நோய்களையும், அடுத்து வரக்கூடிய சான்ஸ் உள்ள நோய்களுக்கும் பாலிசி செல்லாது என்று கூறி விடுவார்கள். 

 


      கடைசியாக, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணையுங்கள், குழந்தையை போல அன்பு செலுத்துங்கள், அவர்களுக்கு நீங்கள் துணையாக இருக்கின்றீர்கள் என நம்பிக்கை ஊட்டுங்கள், நம்பிக்கை தானே வாழ்க்கை, நம்பிக்கை தானே எல்லாம், 

கேன்சரால் உயிரினை மட்டும்தான் எடுக்க முடியும், மனிதனின் நம்பிக்கையை, மன வலிமையை,  எண்ணங்களை, ஒன்றும் செய்ய் முடியாது, தைரியத்தோடும், நம்பிக்கையோடும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளை எதிர்கொள்வோம். ஆதரவாய் இருப்போம்.

நமது பதிவுலகில் அனுராதா அம்மா அவர்கள் கேன்சரால் பாதிக்கப்பட்டு, அதனை தைரியமாக எதிர்கொண்டு, அவருடைய அனுபவங்களை, பல பேர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கேன்சருடன் ஒரு யுத்தம் என்ற தலைப்பில் எழுதி வந்தார், தற்பொழுது அவர் உயிருடன் இல்லை, அவருடைய சைட்டின் லிங்க்கை நான் பிளாக் ஆரம்பித்த நாளில் இருந்தே, என்னுடைய பிளாக்கின் வலப்புறத்தில் வைத்துள்ளேன், இருப்பினும் இம்மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக இருப்பதால், அதனை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கேன்சருடன் ஒரு யுத்தம் இந்த தளத்தினை மீண்டும் ஒருமுறை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், மேலும் உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் இந்த தளத்தினை அறிமுகப்படுத்துமாறும் கெட்டுக் கொள்கிறேன், இதன் மூலம் ஒருவராவது விழிப்புணர்வு அடைந்தால், அது விண்ணில் குடி கொண்டிருக்கும் அனுராதா அம்மாவிற்கு மிகுந்த சந்தோசத்தினை கொடுக்கும். நன்றி.

Saturday, October 30, 2010

ஸ்டேட் பாங்கின் GEOSANSAR - KIOSK வங்கிச் சேவை
பாரத ஸ்டேட் வங்கியானது, தனது வங்கி சேவையில் புதிதாக ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளது. இதுவரை வங்கியில் அக்கவுண்ட் தொடங்க வேண்டுமானால், முகவரி சான்று, அடையாள அட்டை போன்றவை தேவையாக உள்ளது, ஆனால் இந்த புதிய முறையின் மூலம், இது போன்ற எந்த சான்றும் தேவை இல்லை, வெறும் கைரேகை மட்டுமே போதுமானது. கை மற்றும் கைரேகை உள்ள எந்த மனிதனும் ஜியோசன்சார் மூலம் வங்கி சேவையை பெறலாம்.
இந்த முறையில் வங்கி கணக்கினை தொடங்க எந்த பணமும் கட்ட தேவையில்லை, குறைந்த பட்ச பணம் எதுவும் வைக்கத்தேவை இல்லை, இதற்காக நாடு முழுவதும் ஜியோசன்சார் கிளைகளை ஸ்டேட் பாங்க் திறந்துள்ளது, பெரிய பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள பணம் பட்டுவாடா செய்ய இத்திட்டம் பெரிதும் உதவும் என ந்ம்பப்படுகிறது, வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முகவரி சான்று, அடையாள அட்டை போன்றவை சொந்த ஊர்களில் இருப்பதால் அவர்கள் வங்கி கணக்கிணை எளிதாக தொடங்க முடிவதில்லை, அவர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்.ஜியோசன்சார் மூலம் வங்கி கணக்கிணை தொடங்குபவர்களுக்கு ATM கார்டு கிடையாது, அதற்கு பதிலாக ஒரு அடையாள அட்டை வழங்கப் படுகிறது, உங்களின் கைரேகை பதிவினை வைத்தால் மட்டுமே, உங்களின் அக்கவுண்ட் செயல்படும். இந்த அக்கவுண்ட் மூலம், 30 ரூபாய் முதல் எத்த்கைய AMOUNT ஐயும் சேமிக்க முடியும், தமழகத்திலேயே முதன்முறையாக திருப்பூரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, திருப்பூரில் 6 கிளைகள் திறக்கப்பட்டுள்ளன, சென்னையில் 2 கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.உங்களின் இருப்பு தொகையினை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.


உங்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஸ்டேட் பாங்கின் எந்த கிளைக்கும் பணத்திணை டிரான்ஸ்பர் செய்ய முடியும், இதன் மூலம் சேமிக்கப்படும் பணத்திற்கு, மற்ற கணக்குகளை போன்றே வட்டியும் கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் உள்ள குறை என்னவென்று பார்த்தால், மற்ற வங்கி கணக்குகளை போன்று பாஸ் புக், செக்புக், செக் லீப் போன்றவை வழங்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஞாயிறு அன்றும் செயல்படுகிறது, விரைவில் நாடு முழுவதும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட போகின்றது என எண்ணுகின்றேன்.

( டிஸ்கி: ஆபிஸ்ல ஆணி புடுங்குறது கொஞ்சம் அதிகமா இருந்ததால பதிவு போட முடியல, இப்ப ஆணி எல்லாம் புடுங்கி முடிச்சாச்சு, என்ன பதிவு போடறதுன்னு தெரியல, அதனால இந்த சீரியஸ் பதிவு, ஆனாலும் உங்களுக்கு சிரிக்கறதுக்காக இந்த விளம்பரத்தை பாருங்க, இதுவும் ஆபிஸ் பத்தினதுதான், அதுலயும் ஆபிஸ்ஸரு ஒரு காரணம் சொல்லுவாரு பாருங்க, அட, அட, அட.)Saturday, October 23, 2010

அன்பினை வெளிப்படுத்துவோம்


     
அன்புள்ளம் கொண்டவர்களே, நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள், இந்த பூமியானது இறைவனின் வீடு, இங்குள்ள நம் அனைவருக்கும், தாய், தந்தை, உறவினர்கள், நண்பர்கள் என நம்மையும், நம் நலனையும் கருத்தில் கருத்தில் கொள்ளும் ஒரு ஆதரவு குழுவானது உள்ளது, ஆனால் சில எதிர்பாராத சூழ்நிலைகளினால், எந்தவித ஆதரவோ, கரிசனமோ, ஒரு வேளை உணவோ கூட கிடைக்காமல், அனதைகளாகவும், உடல் ஊனமுற்றவர்களாகவும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களாகவும், எண்ணற்ற பேர்கள் நம் நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விரவி காணப்படுகிறார்கள், ஒரு வேளை உண்ண உணவு கிடைக்காமலும், உடுத்த சரியான உடை கிடைக்காமலும், அவதிப்படுவோர்கள் ஏராளம் பேர்கள் இங்கு உண்டு, அவர்களை பொறுத்த வரையில் அவர்கள் வயிறார உண்ணும் ஒரு தினம் உண்டெனில், அந்நாளே அவர்களுக்கு தீபாவளி பண்டிகையாகும்.


  

நாம் அனைவரும் வருகின்ற தீபாவளி பண்டிகையினை மகிழ்ச்சியோடு எதிர் கொள்ள இருக்கிறோம், இத்தருணத்தில் அவர்களையும் கருத்தில் கொண்டு நாம் வாங்கும் போனஸ் தொகையில் ஒரு சிறு தொகையினை உதவி செய்வதன் மூலம் அவர்களையும் பண்டிகை கால சந்தோசத்தில் பங்கு பெறச் செய்யலாமே, நம்மில் எண்ணற்றவர்கள் போனஸ் தொகையினை கருத்தில் கொண்டு தங்களின் நீண்ட கால கனவினை நிறைவேற்றும் எண்ணம் கொண்டிருக்கலாம், எனவே தனிப்பட்ட முறையில் கொடுக்க முடியவில்லை என்றாலும், நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சக தோழர்களுடன் இணைந்து செயல்பட்டால், நிச்சயம் உங்களாலும் ஒரு தொகையினை புரட்ட முடியும்.  உங்கள் ஒவ்வொருவரின் உதவியாலும், ஒருவரின் ஒருவேளை பசியினை தீர்க்க முடியும், இது போன்ற காப்பகங்கள் அனைத்து ஊர்களிலும் உள்ளன. சிந்தியுங்கள், செயல்படுங்கள், மனநிறைவோடு தீபாவளி பண்டிகையிணை கொண்டாடுங்கள் - அனைவருக்கும் என்னுடைய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள். நன்றி. 

[நம் பதிவுலகில் இருப்பவர்கள் அனைவரும் இணைந்து இம்முயற்சியினை மேற்கொண்டால், கேபிள் சங்கர் எழுதிய இந்த சிறுமியின் மருத்துவ செலவுக்கு ஒரளவாவது உதவ முடியும், இதற்கு நான் தயாராக இருக்கிறேன், மேலும் இதுபோன்ற முயற்சியினை மேற்கொள்ள தயாராக உள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், அல்லது pldmsuri@gmail.com என்ற முகவரிக்கு மெயிலவும், நாம் இணைந்து நம்மால் முடிந்ததை செய்யலாம், நான் சென்ற வருடம் என் நிறுவனத்தின் நண்பர்களிடம் வசூலித்த் தொகையினை உடல் ஊனமுற்றவர்கள் பள்ளிக்கு வழங்கி இருந்தேன், அப்போது குறைவாக 5000 மட்டுமே வசூலானது. இதுபோன்ற குறைந்த தொகையினை கொண்டு மருத்துவ உதவி செய்வது சாத்தியமாகாது. எனவேதான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்]  

Friday, October 22, 2010

வாடா படம் - Get Ready Folks

எனக்கு சுந்தர். சி படம்னா ரொம்ப பிடிக்கும், ஏன்னா அவரு படம் எல்லாமே பயங்கர மொக்கையா இருக்கும், எல்லா மொக்க படத்துக்கும் ரொம்ப சீரியஸ்ஸா நடிச்சிருப்பாரு, இந்த படத்த பத்தி சொல்லனும்னா இந்த படம்தான் அவரு நடிச்சதுலயே மிகச் சிறந்த மொக்க படம்னு சொல்லலாம், ஒரு விதத்துல இளைய தளபதியும் சுந்தர் சியும் ஒண்ணுங்க, படத்துக்கு படம் ஹீரோயின மட்டும்தான் மாத்துறாங்க, கதைய மாத்துறதே இல்லை, நம்ம பதிவுலகத்துல சுந்தர். சிய சூப்பர் பாக்கு தல அப்படின்னு கூப்பிடறாங்க, எனக்கு என்னவோ அது பான்பராக் தல மாதிரிதான் தெரியுது, 

படத்தோட கதைய பத்தி சொல்லிடறேன், பயப்படாதீங்க, சின்னதுதான், ஒரு 2 வரி இருக்கும், நம்ம சுந்தர்.சி, தஞ்சாவூர்ல கலெக்டரா இருக்காரு, பில் கலெக்டர் இல்லைங்க, மாவட்ட கலெக்டர்தான், அப்புறம் தஞ்சாவூருக்கு வர்ற கவெர்னர் சுட்டு கொல்லப்படுறாரு, பழி சுந்தர்.சி மேல விழுது, அதுல இருந்து தலைவர் எப்படி தப்பிக்குறாருங்கறது தான் கதை. 


சுந்தர்.சிய பத்தி சொல்லிட்டதால, அடுத்த இடத்துல இருக்குர கதாநாயகி செரில் பிரிண்டேவ பார்ப்போம், சும்மா சொல்லக் கூடாது, வாங்கின காசுக்கு மேலேயே காட்டியிருக்காங்க, சத்தியமா நான் நடிப்ப சொல்லலிங்க, நான் பார்த்ததுலயே கதாநாயகி கூட டபுள் மீனிங் பேசறது இந்த படத்துலதான் அதிகம், குடும்பம், கொழந்த, குட்டியோட போய் படம் பார்த்தீங்க, கண்டிப்பா டைவர்ஸ்தான், டைவர்ஸ்ஸ உங்க கொழந்தைகளே அப்ளை பண்ணிரும், படத்துக்கு ஏ சர்டிபிகேட்தான் குடுத்திருக்காங்க.


விவேக்க பத்தி சொல்றதுக்கு நிறைய இருக்கு, வெண்ணிற ஆடை மூர்த்தி எல்லாம் இனிமேல் விவேக்கிட்ட பிச்சைதான் எடுக்கணும், உதாரணமா ஒரு சீன் சொல்றேன், கதாநாயகிய கரெக்ட் பண்ண, விவேக்குக்கு நண்பர்கள் குழு ஒரு ஐடியா குடுக்குறாங்க, அது என்னன்னா விவேக் டிரஸ்செல்லாம் கழட்டிட்டு ஒரு துண்டை மட்டும் கட்டிக்கனுமாம், கதாநாயகி வரும் போது எதிர்ல போய் டிரஸ்ஸ அவுத்திரணுமாம், அதே மாதிரி விவேக் போய் கதாநாயகி எதிர்ல நிக்கிறார், அப்புறம் என்ன ஆச்சின்னு தெரிஞ்சுக்கணும்னா படத்த போய் பாருங்க, (பின்குறிப்பு : நான் மட்டும் கஷ்ட்டப்பட்டேன்ல)

இசை D.இமான், பேசாம இசை எமன்னு இவருக்கு பட்டமே குடுத்திரலாம், சும்மா அடிக்கிற அடியில தாரை தப்பட்டைகள் எல்லாம் கிழிஞ்சு தொங்குதுங்க, படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும், காதுல புகையும் வருது, கூடவே குய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு ஒரு சவுண்டும் கேட்குதுங்க, அதுவும் பைட் சீன்ல எல்லாம் ணங்,ணங்குன்னு ஒரு மியூசிக் கொடுக்குறாரு, பாருங்க, யாரோ நெஞ்சுல ஏறி உட்காந்து கும்மு, கும்முன்னு கும்முறமாதிரி இருக்கு, சுந்தர்.சிக்கு பேக்ரவுண்ட் மியூசிக், அக்கினி குஞ்சு ஒன்னு கண்டேன்னு பாரதியார் பாட்ட போட்டிருக்காங்க, டைட்டில் கார்டுல பாடல்கள்னு போட்டு மகாகவி சுப்பிரமணி பாரதியாருன்னு வேற போடுராங்க, கொடுமைடா சாமி, நல்லவேளை அவரு செத்து போயிட்டாரு.
என்னடி ராக்கம்மான்னு ரீமிக்ஸ் பாட்டு வேற ஒண்ணு இருக்கு, அதுல நம்ம குஷ்பு வும் வந்து ஒரு குத்தாட்டம் போட்டுட்டு போறாங்க.

புருஷனும், பொண்டாட்டியும் பண்ர அழிச்சாட்டியம் தாங்க முடியலிங்க, அந்த அம்மா, கருத்து சொல்றேன், கழகத்துக்கு போறேன் அப்படின்னு போற எடத்தில எல்லாம் ஏழரைய கூட்டிக்கிட்டு இருக்குது, புருஷங்கார்ரு, படத்துல நடிக்கிறேன், பாட்டு பாடறேன்னு காமெடி பண்ணிட்டு இருக்காரு, சுந்தர்.சி சார ஒண்ணே ஒண்ணுமட்டும் கேட்டுக்குறேங்க, பேசாம நீங்க கழகத்துல சேர்ந்திருங்க, ஜே.கே. ரித்திஸ் சாருக்கு அப்புறம் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வரக்கூடிய தகுதி உங்களுக்கு மட்டும்தான் இருக்குதுங்க, கரும சண்டாளம்டா சாமி, 


இந்த படத்துக்கு வாடா அப்படின்னு ஏன் டைட்டில் வச்சிருக்காங்க தெரியுமா, கிளைமேக்ஸ் பைட்டுல வில்லன பார்த்து சுந்தர்.சி, வாடா, வாடான்னு 3 தடவை கூப்பிடுவாரு, அப்படி கூப்பிட்டதுக்கு வில்லன் டென்ஷன் ஆகி சுந்தர்.சிய அடி, அடின்னு அடிச்சிருவாரு, இப்ப வாடான்னு சொல்லுடா அப்படின்னு வில்லன் சொன்னதும், நம்ம ஹீரோ கண்ண மூடி பழசை எல்லாம் ஞாபகத்துக்குக்கு கொண்டு வந்து வில்லனை அடிச்சு போடுவாருங்க, இதுதான் வாடா டைட்டிலோட கதைங்க.


எத்தனையோ படம் பார்த்தவங்க எல்லாம் நல்லாயிருக்காங்க, இந்த ஒரு படத்த பார்த்துட்டு நான் படற அவஸ்தை அய்யெய்யெய்யோஓஓஓ

Monday, October 18, 2010

அன்புள்ள பதிவுலக வாசக அன்பர்களுக்கு...

எல்லாரும் தமிழ் படம் பார்த்திருப்பீங்க, அதுல ஒரு டயலாக் வரும், அந்த சின்ன பையன் அவங்க பாட்டிகிட்ட போய், பாட்டி, நான் பொறந்து 10 வருஷம் ஆகுது, ஆனா எனக்கு இன்னும் 10 வயசுதான் ஆகுது, நான் எப்போ பெரிசாயி தப்ப தட்டி கேட்கறதுன்னு சொல்லுவான், அதுமாதிரிதாங்க, நான் பதிவுலகத்துக்கு வந்து இரண்டு மாசம் ஆகுது, இன்னும் 10 பாலோயர் கூட வாங்க முடியல, சத்தியமா எனக்கு என்ன எழுதறதுன்னு தெரியாமத்தான் எழுதிகிட்டு இருக்கேன், நான் சும்மானாச்சுக்கும் எழுதுன இந்த பதிவு இண்ட்லில 26 ஓட்டு வாங்கி முண்ணனில வந்துச்சு, ஆனா உருப்படியா எழுதலாம்னு நினைச்சு எழுதுன பதிவு எதுவுமே, 5 ஓட்டு கூட தாண்டல, நான் எப்ப பதிவு எழுதி போஸ்ட் பண்ணினாலும் ஒரு ஓட்டுதான் விழுது, அது கூட என் சொந்த ஓட்டுதான்.

இந்த ஒரு மாசத்துலயே நான் பயங்கரமா எழுதி பெரிய பதிவரா ஆக முடியாதுன்னு எனக்கு தெரியும், ஆனா ஒரு லட்சியத்தோட தான் நான் எழுதிகிட்டு இருக்கேன், அது என்னன்னா 2012 ல டிசம்பர் மாசம் உலகம் அழிய போதுதுன்னு சொல்றாங்க, அதுக்குள்ள ஒரு 2000 விசிட்டும், ஒரு 10 பாலோயரும் என் பிளாக்குக்கு வரணுன்னு ஆசப்படுறேன், அவனவன் 2011 ல் சிஎம் ஆகணுனும்னு கனவு கண்டுகிட்டு இருக்குறாங்க, நான் இதுக்கு ஆசப்படுறது தப்பா நீங்களே சொல்லுங்க, இந்த பதிவுலகத்தில நிறைய பேரு 5 லட்சம் ஹிட்ஸ்சு, 10 லட்சம் ஹிட்ஸ்சு வாங்கிட்டோம்னு சொல்றாங்க, சத்தியமா ஹிட்ஸ்சுன்னா என்னன்னு எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியாது, எனக்கு தெரிஞ்ச ஒரே ஹிட்ஸ் திருப்பாச்சி படத்துல இளைய தளபதி வில்லனை கொல்ல யூஸ் பண்ணுவாரே, அந்த ஹிட்ஸ் மட்டும்தான், அது கூட ஆள கொல்ல யூஸ் பண்ணுரதுன்னுதான் முதல்ல நினைச்சேன், 

இதனால நான் உங்க எல்லாருகிட்டயும் பணிவுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால், என்னோட பதிவுக்கு ஓட்டு போடுங்கன்னு உங்கள கேட்க மாட்டேன், ஏன்னா நீங்க ஓட்டு போட மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும், பின்னூட்டம் போடுங்கன்னும் கேட்க மாட்டேன், சத்தியமா இது நடக்காத விஷயம்னு எனக்கு நல்லாவே தெரியும், ஆனா இப்படியே போனா என்னோட லட்சியத்த நான் எப்படி நிறைவேத்தறது? அதனால உங்க எல்லாருகிட்டயும் கெஞ்சி ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கிறேன்,  நீங்க என்னோட பிளாக்க ஓப்பன் பண்ண நேர்ந்தால், படிச்சிட்டு, குளோஸ் பண்ணி, குளோஸ் பண்ணி மீண்டும் திறக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,  
இப்படி நீங்க பண்ணீங்கன்னா என்னோட விசிட் பக்கம் 2000 வர்றதுக்கு சான்ஸ் இருக்கு, அதே மாதிரி, எல்லாரும் சும்மா கிடைக்குற மெயில் ஐடி தானேன்னு ஒரு நாலஞ்சு வச்சிருந்தீங்கன்னா, அதுல நீங்க பயன்படுத்தாம இருக்குற ஏதோ ஒரு மெயில் ஐடியவாவது யூஸ் பண்ணி என்னோட பாலோயர் லிஸ்ட்டுல சேருமாறு கேட்டுக் கொள்கிறேன். எப்படியாவது என்னோட லட்சியத்தை நிறைவேத்திட்டீங்கன்னா, என்னோட தானை தலைவர், அகில உலக சூப்பர்ஸ்டார், திரு. சீனிவாசன் அவர்களோட லத்திகா படத்தின் பிரிவியூ ஷோ டிக்கெட்ட உங்களுக்கு வழங்குவேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். லத்திகா படத்தை காண இங்கு கிளிக்கவும்.

(பின்குறிப்பு: சத்தியமா இது ஒரு சீரியஸ் பதிவு, சிரிப்பு பதிவு என்று நினைத்து கொண்டு என்னுடைய வேண்டுகோளை புறக்கணித்து விட வேண்டாம் என உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி)

Friday, October 15, 2010

புதிய தளபதி, வைஸ் கேப்டன், ஆல் இந்தியா சூப்பர்ஸ்டார், வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி

நண்பர்களே உங்களுக்காக வந்துவிட்டார், புதிய தளபதி, வைஸ் கேப்டன், ஆல் இந்தியா சூப்பர்ஸ்டார், வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி, உலக நாயகன் திரு, சீனிவாசன் அவர்கள்,  நமது முன்னாள் தீப்புயல்களான, J.K. ரித்திஸ், சாம் ஆண்டர்சனை விட பன்மடங்கு வேகத்தில் மக்களை மகிழ்விக்க தயாராகிவிட்டார், இவருடைய புதிய படமான லத்திகா படம் ரீலீசுக்கு தயாராகி விட்டதாம், இப்படத்தில் உலக சினிமாவுக்கே இலக்கணம் படைக்கும் வகையில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உள்ளாராம், இப்படத்தின் ஸ்டில்களை பார்த்த ஆஸ்கார் அவார்டு குழு, இப்படத்தின் ரீலீசுக்கு பிறகு இவருக்கு என்ன அவார்ட் குடுப்பது என தெரியாமல் மானம் கெட வேண்டியிருக்கும் என்பதால், ஆஸ்கார் அவார்டு கமிட்டியையே கலைக்க முடிவு செய்திருப்பதாக, அமெரிக்கா உளவு துறை கூறியுள்ளது, மேலும் இப்படத்தினை வினியோகம் செய்ய சன் நெட்வொர்க் குழு தனது சொத்து பத்து அனைத்தையும் விற்று கடும் முயற்சியினை எடுத்திருப்பதாக தெரிய வருகிறது, ஆனாலும் சீனிவாசன் அவர்கள் தாமே வெளியிட முடிவு செய்திருப்பதால், சன் நெட்வொர்க்கினை மூட வேண்டி வருமோ என கலாநிதிமாறன் கதிகலங்கி போய் நிற்பதாக தமிழக உளவு துறை தகவல் தெரிவிக்கிறது, மேலும் லத்திகா படத்தின் வசூல் நிலவரங்களை வெளியிடுவதற்கு கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ், டோலிவுட் பாக்ஸ் ஆபிஸ், US பாக்ஸ் ஆபிஸ் இவையெல்லாம் பத்தாது என்பதால், புதிதாக பாக்ஸ் ஆபிஸ் ஒன்றை உருவாக்குவதற்கு காமன்வெல்த் கமிட்டி மீண்டும் டெல்லியில் இன்று கூடுகிறது.

ஓப்பனிங் சீன்
  
 

                                                               ஓப்பனிங் சாங்

  
                                                                ஹீரோயிசம்


                                                             பன்ச் டயலாக்


                                                            குளோசப் ஷாட்


                                                                 குத்து பாடல்


கவர்ச்சி


அதிரடி சண்டை காட்சி


ரொமான்ஸ்


செண்டிமெண்ட்பேமிலியோட பார்க்க வேண்டிய படம், 
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
--
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

கடைசியா நம்ம ஆடியன்ஸ் நிலைமை


  

Wednesday, October 13, 2010

உங்களோட சிபில் கிரெடிட் ரிப்போர்ட் வாங்குவது எப்படி ?
CIBIL CREDIT REPORT - பத்தி ஏற்கனவே உங்களுக்கு தெரிஞ்சு இருக்கலாம், தெரியாதவங்களுக்காக இந்த பதிவு.

நம்ம ஆளுங்க நிறைய பேரு வண்டி லோன், வீட்டு லோன், பர்சனல் லோனுன்னு வாங்கி இருப்போம். எல்லாரும் கரக்டா டியூ கட்டிட்டு வருவாங்க, ஆனா சில பேரு ஒழுங்கா கட்டமாட்டாங்க, டியூ டேட்ல பணம் இருக்காது, பேங்க்காரங்க செக் போட்டா பவுன்ஸ் ஆகும், இ.சி.எஸ் ஆ இருந்தா பேங்க்ல பேலன்ஸ் இருக்காது, இப்படியே பண்ணிட்டு இருப்பாங்க, ஆனா இப்படி பண்ணிட்டு இருக்கறவங்க அடுத்த தடவை ஏதாவது லோனு,கீனு வாங்கனும்னு நினைச்சாங்க கண்டிப்பா கிடைக்காது. இப்படிபட்டவங்களை கண்டுபுடிக்கறதுக்குன்னே கவர்மெண்ட் சிபில் (CIBIL) அப்படின்னு ஒன்னு வச்சிருக்குங்க,
அவங்க என்ன பண்ணராங்கன்னா, ஒருத்தரோட வரவு செலவுக்கு தகுந்த மாதிரி மார்க்கு போடராங்க, ஒருத்தர் சரியா வரவு செலவு பாங்குல பண்ணிட்டு இருந்தார்னா அவருக்கு நிறைய மார்க்கு கிடைக்கும், மேல சொன்ன மாதிரி சரியா பணம் கட்டாம ஏமாத்திட்டு இருந்தோம்னா மார்க்க கம்மி பண்ணிடுவாங்க, நம்ம பேங்க காரங்க ஒருத்தரு லோன் வேணுன்னு அப்ளிகேசன் கொடுத்தாருன்னா இந்த சிபிலை பார்த்துதான் லோன் குடுக்கராங்க. இதுல என்ன பிரச்சனைனா சில பேரு லோன் ஒழுங்கா கட்டி முடிச்சிருப்பாங்க, ஏன் இன்ஸ்டால்மெண்டுக்கு முன்னாடியே கட்டி முடிச்சு கூட இருப்பாங்க, அப்படி இருந்தும் அவங்க அடுத்த லோனுக்கு அப்ளை பண்ணினாங்கன்னா, லோன் கிடைக்காது, ஏன்னா சிபில்ல நம்ம ஸ்டேட்டஸ் அப்டேட் ஆகி இருக்காது, ஆத்திர அவசரத்துக்கு லோன் கிடைக்காம அல்லல் பட வேண்டியதுதான். இதுல நாம சிபிலை பத்தியும் குறை சொல்ல முடியாது, நம்ம நாட்டுல கோடிக்கணக்கான பேரு லோன் வாங்கி, திருப்பி கட்டிட்டு இருப்பாங்க, இதுல நம்ம ஸ்டேட்டஸ் எப்ப அப்டேட் ஆகுறது? ஆனாலும் நாம நம்மளோட சிபில் கிரேடிட் ரிப்போர்ட்ட ஈசியா வாங்க முடியும். அது எப்படின்னா,

சிபில் வெப்சைட் ல CIR Reqest Form னு ஒன்னு இருக்குதுங்க, அத பிரிண்ட் அவுட் எடுத்து அதுல உங்கள பத்தின விவரம் எல்லாம் எழுதணும்க, அப்புறம் உங்க ID PROOF ( PAN CARD / PASS PORT / VOTER ID ) ஒண்ணும், ADDRESS PROOF (BANK STATEMENT / EB BILL / TELEPHONE BILL )  ஜெராக்ஸ் எடுத்து அதுல உங்க கையெழுத்த போட்டுடுங்க, கூடவே ஒரு 142 ரூபாய்க்கு டிடி Credit Information Bureau (India) Limited, payable at Mumbai கற பேர்ல எடுங்க, இது மூணயும் ஒன்னா பின் அடிச்சு, தபால்ல இல்ல ஸ்பீடு போஸ்ட்ல அனுப்பனும்னா 

Credit Information Bureau (India) Limited, 
P.O. Box 17, Millennium Business Park, Navi Mumbai- 400 710.
இந்த முகவரிக்கு அனுப்புங்க, 


இல்ல கூரியர்லயோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட்லயோ அனுப்புனம்னா

Consumer Relations, 
Credit Information Bureau (India) Limited, 
Hoechst House, 6th Floor, 193, Backbay Reclamation, Nariman Point, Mumbai 400 021.  
இந்த முகவரிக்கு அனுப்புங்க,

CIR FORM PDF (இந்த PDF பைல பயன்படுத்திக்கோங்க)

இந்த CIR Request Form  அ ஆன்லைன்ல கூட பில்லப் பண்ணலாம், டிடிக்கு பதிலா நெட் பேங்கிங் வசதி மூலமாவும் பணம் செலுத்தலாம், ஆனா அதுக்கப்புறம் அத பிரிண்ட் அவுட் எடுத்து மேல சொன்ன மாதிரி போஸ்ட் பண்ணித்தான் ஆகணும். என்னால முடிஞ்ச அளவுக்கு தமிழ்ல சொல்லிட்டேன், இதுக்கு மேல வேற ஏதாவது தகவல் வேணும்னா மேல குடுத்திருக்கர லிங்க்ல போய் தெரிஞ்சுக்கோங்க.

வண்டிக்கு எப்படி NOC வாங்கி வச்சுக்கறமோ, அதே மாதிரி லோன் வாங்கினவங்க இந்த ரிப்போர்ட்டயும் வாங்கி வச்சிக்கறது ரொம்ப நல்லது, நம்மள பத்தின கிரேடிட் ரிப்போர்ட் கையில இருந்தா எந்த பேங்கலயும் நம்ம அவசர தேவைக்கு தைரியமா போய் நிக்கலாம், அவங்கலும் அதை இதை சொல்லி நம்ம அப்ளிகேஷனை ரிஜெக்ட் பண்ண முடியாது பாருங்க.

வாங்கின லோனுக்கு மேலேயே வட்டி கட்டிட்டு இருக்குறோம், ஒரு 142 ரூபாய் செலவு செஞ்சி இத வாங்க முடியாதா என்ன? கொஞ்சம் யோசிச்சு பாருங்க. 

ஒரு வித்தியாசமான டிரைலர்

ஆண்மை தவறேல் - ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு வித்தியாசமான டிரைலர் ஒண்ணு பார்த்தேன். டிரைலர் ரொம்ப நல்லா இருக்கு, நீங்களும் பாருங்க, புதுமுகம் நடிச்சு இருக்காரு, சரோஜா படத்துக்கு அப்புறம் சம்பத்துக்கு நல்ல ரோல் கிடைச்சு இருக்குன்னு நினைக்கிறேன். டிரைலர் நல்லா இருந்தா படம் நல்லா இருக்குறது இல்லை, படம் நல்லா இருந்தா டிரைலர் நல்லா இருக்குறது இல்ல, இந்த படம் எப்படின்னு பார்ப்போம்.

Saturday, October 9, 2010

எந்திரன் - ஒரு ரஜினி ரசிகனா இருந்துட்டு...


நீங்க சன் டிவி பார்ப்பவரா? எந்திரன் டிரைலர் ஒரு பத்து தடவை பார்த்திருப்பீங்களா? நீங்க பிளாக் படிப்பவரா? இதுவரைக்கும் ஒரு 10 விமர்சனம் படிச்சிருப்பீங்களா? அதுக்கும் மேல நீங்க ரஜினி ரசிகரா? ஷங்கர் படம்னா எதாவது வித்தியாசமா இருக்கும்னு நினைக்கிறவரா? ஆமான்னா உங்களுக்கு சீக்கிரமே எந்திரன் படம் பார்க்கணும்னு தோணுமே? அப்படித்தான் எனக்கும் தோணுச்சு, 

நேத்தைக்கு படம் பார்த்த பிறகு என்ன சொல்றதுன்னே தெரியல, கண்டிப்பா மேல நான் சொன்ன மாதிரி ஆளா நீங்க இருந்தீங்கண்ணா கண்டிப்பா திருப்தியா இருக்காது, ஷங்கருக்கு ரஜினி மேல என்ன கோபமோ தெரியல, ஒரு புதுமுகம் ரேஞ்சுக்கு பயன்படுத்தி இருக்காரு, கண்டிப்பா ரஜினி படத்த பார்த்து பழகுனவங்களுக்கு இது பிடிக்காது,  ஆனாலும் மனுசன் சின்னப்புள்ள தனமா நடிச்சிருக்காரு, ஷங்கருக்கு இது கனவு படமாம், நம்பவே முடியல, சத்தியமா அவரு நினைச்சு இருந்தது இந்த அளவா இருக்க முடியாது, ஏதோ கலாநிதி மாறன்கிட்ட சொன்ன பட்ஜெட் தாண்டி போக கூடாதுன்னு நினைச்சு எடுத்த மாதிரி இருக்கு, அது ரோபோ தீயில போய் காப்பாத்தற காட்சியிலேயே நல்லா தெரியுது. ஷங்கர் படத்துல குறைஞ்ச பட்சம் பாட்டு சீனாவது நல்லா கலர்புல்லா இருக்கும், நம்ம படத்துல புல்லா செட்டா போட்டு தள்ளிட்டாரு, அதாவது நல்லா போட்ருந்தா பரவாயில்லை, பாய்ஸ் படத்துல வர்ற செட்டாவது நல்லா இருக்கும், கலாநிதி கலைக்கு என்ன நிதி குடுத்தாருன்னே தெரியலயே, அரிமா அரிமா பாட்டு செட்டெல்லாம், ஏதோ சங்கீத மகா யுத்தம் செட் மாதிரியே இருக்கு. 


எந்திரன் கதையெல்லாம் உங்களுக்கு நல்லாவே தெரியும், படம் கொஞ்ச ஸ்லோவா இருக்குங்கறத ஒத்துக்கணும், ஆனாலும் தமிழ்ல இந்த மாதிரி படம் வந்ததில்லை, கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்தான், தலைவர் ரொம்ப கஷ்ட்டப்பட்டு நடிச்சிருக்காரு, ஷங்கர் நினச்ச மாதிரியே படம் வரனும்னு நினைச்சு நடிச்சிருக்காரு,  ஆனாலும் ரஜினி ரசிகர்களையும் கொஞ்சம் மனசில நினைச்சு இருக்கலாம். வில்லன் ரோபோ ரஜினிதான் காப்பாத்துது, ஐஸ்வர்யா ராயையும் குறை சொல்ல முடியாது, நல்லாவே நடிச்சிருக்காங்க, கவர்ச்சியும் காட்டி இருக்காங்க, வயசானாலும் நல்லாதான் இருக்குறாங்க, அவங்கல பார்க்கும் போது, அபிசேக் பச்சன நினைச்சாத்தான் கவலையா இருக்கு.


நான் எதிர்பார்த்தத விட ஒன்னு கண்டிப்பா இருந்துச்சு, அது மியூசிக், சத்தியா நல்லா இருக்குங்க, இதவிட யாராலயும் நல்லா மியூசிக் போட்டிருக்க முடியாதுங்க, ரஹ்மான் மியூசிக்க பொறுத்த வரைக்கும் படத்துல ஹிட் ஆன பாட்டோட மியூசிக்கையே படத்துக்கும் பயன்படுத்துவாறு, முன்பே வா, அன்பே வா பாட்டோட மியூசிக்க படம் புல்லா பயன்படுத்தி இருப்பாரு, அதே மாதிரி இதுல அரிமா, அரிமா பாட்ட பயன்படுத்தி இருக்காரு. மத்தபடி டெக்னிக்கல் விஷயங்கள் எதுவும் என்க்கு தெரியாது, அத பத்தி எல்லாம் மற்ற பதிவர்கள் நிறைய எழுதி இருக்காங்க, இது எல்லாமே எனக்கு தோனினது மட்டும்தான். 

சத்தியமா ஷங்கர் நினைச்ச மாதிரி வந்திருக்காதுன்னுதான் நினைக்கிறேன், அவருக்கும் ஏமாற்றமாத்தான் இருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் ஏமாற்றமாத்தான் இருக்கும். இது எல்லாமே ரஜினி ரசிகர்களுக்கும், ஷங்கர் ரசிகர்களுக்கும் மட்டுமே, மற்றபடி வேற எல்லாருக்கும் இந்த படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும், பாட்டு, காமெடி, சண்டை எல்லாமே நல்ல எண்டர்டெயின்மெண்ட் தான். 

எந்திரன் கண்டிப்பா பார்க்கலாம் - உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் - ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கும்.

Friday, October 1, 2010

இத பத்தி என்ன சொல்றதுன்னே தெரியல

நேற்றைக்கு இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டேன், திருப்பூரின் நெருக்கடியான டிராபிக், தற்பொழுது ரோட்டை அகலப்படுத்தியதாலும், ரோட்டின் நடுவே செண்டர் மீடியன் வைத்திருந்ததாலும் சிறிதளவு குறைந்துள்ளது. சரி சீக்கிரம் வீட்டிற்கு போகலாம் என நினைத்திருந்த என் நினைப்பில் சரியாக மண் அள்ளிப் போட்டது பல்லடம் ரோட்டில் காண்ப்பட்ட டிராபிக், வெகு நேரம் காத்திருந்தும் டிராபிக் சரியாகவில்லை, சரி என்ன ஆயிற்றோ நமக்கு ஒன்றும் இது புதுசு இல்லையே என்று காத்திருந்தேன்.  முக்கால் மணி நேரத்திற்கு மேல் மெதுவாக ஊர்ந்து சென்று பார்த்தால். ”சை” என்றாகி விட்டது. பின்ன என்னங்க, ஒரு பஸ் டிரைவர், டூ விலரில் போகும் ஒருவரை சைடில் ஒதுக்கி விட்டாராம். ( சைடில் ஒதுக்குவது என்றால், டூ வீலரில் போதும் ஒருவரை இடிப்பதை போல பஸ்ஸை ஓட்டி அவரை தார் ரோட்டில் இருந்து கீழே இறங்குமாறு நிலை குலைய வைப்பது ) பொறுத்து பொறுத்து பார்த்த அந்த டூவீலர் ஓட்டுனர், பஸ்ஸை மறித்து தகறாறு செய்து கொண்டு இருந்தார். செந்தமிழ் வார்த்தையால அர்ச்சனை வேறு, டிரைவரும் பதிலுக்கு அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார். எங்க ஊர்ல டிராபிக் போலீஸ் எல்லாம் மாசக் கடைசில கேஸ் புடிக்கவோ இல்லைன்னா மாமூல் வாங்கறதுக்கு மட்டும்தான் வருவாங்க, இதுக்கு எல்லாம் வர மாட்டாங்க, டிராவிக் போலீசும் கம்மிதான், சரி வழக்கம் போல நாமலும் வேடிக்கை பார்த்துட்டு கிடைச்ச கேப்புல புகுந்து வந்துட்டேங்க.

இதுல என்ன விஷயம்னு கேட்குறீங்களா, இது விஷயம் இல்லைங்க, ஒரு மாசத்துக்கு முன்னாடி இது மாதிரியே ஒன்னு நடந்ததுங்க.

இதே மாதிரி நான் காலையில வேலைக்கு கிளம்பி வந்துட்டு இருந்தேன். திருப்பூருக்கு கொஞ்சம் முன்னாடி T.K.T MILL னு ஒரு ஸ்டாப் இருக்கு, அங்க ஒரு பஸ் கண்ணாடி உடைஞ்சு நின்னுகிட்டு இருந்தது, பஸ் டிரைவர் கைல பெரிய காயம், கை நல்லா வீங்கி இருந்தது, நாலஞ்சு பொம்பளங்க கையிலயும், மூஞ்சிலயும் காயம், பஸ்ல வந்தவங்க எல்லாம் கூட்டமா நின்னுகிட்டு வேற பஸ்சுக்காக் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க, எங்க எந்த பிரச்சனைன்னாலும் வேடிக்கை பார்க்குறதுதான் அகில உலக வழக்கமாச்சே, சரி நாமலும் போய் பார்ப்போம்னு போய் என்னங்க நடந்ததுன்னு கேட்டேங்க.என்ன நடந்துருக்குதுன்னா, அந்த பஸ் டிரைவர் உடுமலையில் இருந்து திருப்பூருக்கு பஸ் ஒட்டிட்டு வந்திருக்காரு, அவருக்கு மனசில என்ன பிரச்சனையோ உடுமலையில இருந்து எந்த வண்டிக்கும் வ்ழி விடாம, போற, வ்ர்ற டூ வீலர் காரங்களை எல்லாம் ஒதுக்கி விட்டுட்டே வந்திருக்கார்ரு, அதுல ஒரு டூ வீலர் காரரு, பொறுக்க முடியாமல் நடு ரோட்டில் பஸ்ஸ நிறுத்தி தகறாறு பண்ணி இருக்காரு, நம்ம டிரைவரும் சளைக்காம சண்டை போட்டு இருக்காரு, உன்னால என்ன ஒன்னும் பண்ண முடியாது, நான் கவர்மெண்ட் டிரைவரு, முடிஞ்சா எதாவது பண்ணி பாருன்னு சவால் விட்டு இருக்காரு. 
அந்த டூ வீலர்காரரும், பண்ணிகாட்ரண்டான்னு, வேகமா கிளப்பி திருப்பூர் வந்து, அவரோட பிரண்ட் ஒருத்தரையும் கூட்டிக்கிட்டு, தலைல ஆளுக்கொரு ஹெல்மட்ட மாட்டிட்டு, கைல ஒரு பெரிய கல்லை எடுத்துக்கிட்டு பஸ்சுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்துருக்காங்க, சரியா நம்ம டிரைவரு அந்த பஸ் ஸ்டாப்புல பஸ்ஸ நிறுத்தும் போது கல்லை தூக்கி கண்ணாடி மேல போட்டுட்டு டூவீலர் காரங்க ரெண்டு பேரும் எஸ்கேப்பாகிட்டாங்க.அதனாலதான் பஸ் டிரைவருக்கும் பயணிகளுக்கும் அடி பட்டு காயத்தோட நிக்கிறாங்க. 

இதுல யார நாம தப்பு சொல்றது, தப்பு இரண்டு பேர் மேலயும் இருக்குன்னாலும், அந்த பசங்கள தப்பு செய்ய தூண்டி விட காரணமா இருந்தது யாரு? அந்த பஸ் டிரைவர்தான? அது என்னங்க கவர்மெண்ட் டிரைவர்னா அவ்வெளவு பெரிய ஆளுங்களா? நான் எல்லா டிரைவரை பத்தியும் சொல்லலிங்க, ஒன்னு ரெண்டு பேர் இப்படித்தான் இருக்குறாங்க, இதுவே பஸ் ஓடிட்டு இருக்கும் போது கல்லை வீசி இருந்தாங்கன்னா என்ன ஆகியிருக்கும், டிரைவரு கண்ட்ரோல் உட்டு எத்தனையோ உயிர்பலி ஆகி இருக்கும்ல?
டாக்டர்களுக்கு அப்புறம், மனுசங்க உயிரை காப்பாத்துற தொழில்ல இருக்குறவங்க டிரைவருங்க தான். உங்கள நம்பித்தான் எத்தனையோ பேரு வீட்டுல அப்பா,அம்மா, பொண்டாட்டி புள்ளங்களை விட்டுட்டு வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருக்குறாங்க.

அதனால எல்லா டிரைவர்களையும் பார்த்து நிதானமா எல்லாருக்கும் வழி விட்டு ஓட்டுங்கன்னு கேட்டுக்குறேங்க, அரசாங்க வேலை வேண்ணா நிரந்தரமா இருக்கலாம், ஆனா எந்த மனித உயிரும் நிரந்தரம் இல்லைங்க.