Thursday, September 30, 2010

எந்திரன் - நானும் எழுதிட்டேன்

எந்திரன் படத்தை பற்றி ஏறக்குறைய அனைத்து பதிவர்களும் எழுதிட்டாங்க, ரஜினி ரசிகனா இருந்துட்டு நான் மட்டும் எழுதலன்னா வரலாறு என்னாகிறது? 


படம் ஆரம்பிச்சப்போ ஸ்டில் எப்படா வரும்னு இருந்துச்சு, ஒவ்வொரு ஸ்டில்லா வரும்போது எதிர்பார்ப்பு ஆரம்பமாயிருச்சு, ஒவ்வொரு ஸ்டில்லும் சூப்பரா இருந்துச்சு. இப்ப நெறய ஸ்டில் வெளிவந்து எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்குது. 
நான் எப்ப ரஜினி ரசிகனா மாறினேன்னு எனக்கே தெரியாது, நான் சின்ன வயசா இருக்கும் போது வீட்டுல எல்லாரும் சினிமா பார்க்க கூப்பிடுவாங்க, நான் சினிமா பார்க்க வரல அதுக்கு பதிலா காச குடுங்கன்னு சொல்லி மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன். ஒருமுறை எங்க பக்கத்து வீட்டு அண்ணன் கண்டிப்பா சினிமாவுக்கு வாடான்னு கூப்பிட்டுட்டு போனார். அது மன்னன் படம், சரியான கூட்டம் டிக்கட் கிடைக்கவே இல்லை, அப்பவும் கூட்டம் கலையல, மத்தியானம் வரைக்கும் ஜனங்க அப்படியே நிக்கறாங்க, நாங்களும் நின்னோம், மத்தியானமும் டிக்கட் கிடைக்கல, மறுபடியும் நின்னு சாயங்காலம் படம் பார்த்தோம், இத்தனைக்கும் எங்க ஊர்ல ரீலீஸ் எல்லாம் பண்ன மாட்டாங்க, படம் ரீலீஸ் ஆகி 3 அல்லது 4 மாசம் கழித்து தான் போடுவாங்க,  இப்படி கஷ்டப்பட்டு படம் பார்த்தேன். படம் செமையா இருந்துச்சு, அதிலிருந்து ரஜினி படம் ஒன்னுவிடாம பார்த்திருக்கேன்.

அதுவும் படம் ஆரம்பிக்கும் போது ஹே,ஹேன்னு பேக்ரவிண்டு மீயூசிக்கோட புள்ளி புள்ளியா SUPER STAR னு போடுவாங்க பாருங்க சும்மா புல்லரிக்கும், எனக்கு தெரிஞ்சு வேற எந்த நடிகருக்கும் இப்படி போட்டதா நினைவில்லை.


ஆனா எந்திரன் படத்து டிரைலர் பார்த்தேங்க, அதுல SUPER STAR னு வேற மாதிரி போட்டாங்க, அது நல்லாவே இல்லைங்க, அதே மாதிரி எந்திரன்கற டைட்டில் டிசைனும் எனக்கு புடிக்கலங்க, எனக்கு சன் பிக்சர்ஸ்ல புடிச்ச ஒரே விஷயம் , அவங்க ஒவ்வொரு டிரைலர்லயும், படத்துல டைட்டில்லயும், எழுத்து போடும்போது டிசைன் டிசைனா போடுவாங்க , அது ரொம்ப நல்லாயிருக்கும். அவங்களோட முதல் படமான காதலில் விழுந்தேன் படத்தோட டைட்டிலில் ரயில் தண்டவாளத்தோட மேலே டிக்கட் பறக்கற மாதிரி போட்டு எழுத்து போடுவாங்க ரொம்ப நல்லாயிருந்தது. அதே மாதிரி எந்திரன் படத்திலயும் மாத்தனும்னு நினைக்கிறேங்க.

எந்திரன் படத்தோட பாட்டும் ஹிட்டாயிடுச்சு, டிரைலரும் நல்லா இருக்கு, தலைவரோட பேட்டி எல்லாம் நல்லாயிருக்கு, படம் கண்டிப்பா ஹிட் ஆயுரும், இது வரைக்கும் அவ்வளவா யாரும் நெகடிவ்வா பேசாததே இதற்கு சாட்சி.

ஒரு சில பேர்தான் இந்த படத்த பத்தி எதிர்மறையா பேசறதையே பொழப்பா வச்சிருக்காங்க, பாட்டு சரியில்லை, படம் சரியில்லை, ரஜினி சரியில்லை, டிரைலர் சரியில்லைன்னு விமர்சனம் எழுதுரதையே வேலையா பண்ணிட்டு இருக்காங்க, நான் கேட்குறேன் உங்களுக்கு புடிக்காதத பத்தி ஏன் இவ்வளவு கஷ்ட்டப்பட்டு பார்த்து விமர்சனம் பண்ணறீங்க? சினிமாவே ஒரு பிஸினஸ்தானே, இங்க ஒரு ரூபாய் போட்டா இரண்டு ரூபாய் எடுக்கத்தான இத பண்ணிட்டு இருக்காங்க, அப்புறம் இவ்வள்வு செலவு பண்ணி இது தேவையான்னு ஒரு விமர்சனம் வேற, அவங்க தொழில அவங்க பார்க்குறாங்க, நம்ம தொழில நாம பார்க்கலாம் பாஸ், இவ்வள்வும் எழுதிட்டு படம் பார்க்கத்தானே போறீங்க? இந்த ஒரு படம்தான் உலகத்துலேயே வருதா? வேற நடிகர்கள் யாரோட படமும் ரீலீசாகறது இல்லையா? இதே மாதிரி எல்லா நடிகர்களோட படத்திலயும் அது சரி இல்லை, இது சரி இல்லைனு எழுதுவீங்களான்னு பார்த்தா, எழுதறது இல்லை, இது நடக்கறது எல்லாமே ரஜினி படத்துக்கு மட்டும்தான், உங்களுக்கே யாரு பேமஸ், யார பத்தி எழுதுனா படம் நல்லா ஒடும்னுதான எழுதுறீங்க, கடைசியா ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன். படம் பாருங்க, படம் நல்லா இல்லைன்னா விமர்சனம் பண்ணுங்க, காசு குடுத்து படம் பார்த்திருக்கீங்க, அது உங்க உரிமை, அதுக்கு முன்னாடியே சாமி கண்ண குத்திடுச்சுன்னு கம்ப்ளைண்ட் பண்ணாதீங்க!. 

ஆ, ஊன்னா கூட்டம், கூட்டமா கிளம்பிர்ராங்க..,  எப்படியும் ஒரு வாரத்துக்கு படம் பார்க்க முடியாது, இன்னும் ஒரு ரெண்டு வாரத்துக்கு பிளாக் புல்லா எந்திரன் விமர்சனம் - உன் பார்வை, என் பார்வை, மேல்நோக்கு பார்வை, கீழ்நோக்கு பார்வை, உள் பார்வை, வெளி பார்வைன்னு ரொம்ப பிசியா இருக்கும், எனவே சூப்பர் மேட்டரா எழுதி வெச்சுருக்கோம், ஹிட்ஸ் கண்டிப்பா நிச்சயம்னு எழுதி வச்சிருக்கற பதிவர்களே, உங்க பதிவ ஒரு இரண்டு வாரத்துக்கு தள்ளி வச்சிருங்க, இல்லைன்னா இன்னைகே போட்டிருங்க.


சன் டிவில இன்னைக்கு காலையில போட்ட டிரைலர்ல தலைவர் இந்த கெட்டப்புல ரோபோன்னு நக்கலா சொல்லி சிரிச்சாரு, ரொம்ப நல்லா இருந்தது, எனக்கும் நாளைக்கே பார்க்கணும்னுதான் ஆசை, ஹி,ஹி, உங்ககிட்ட ஒரு எக்ஸ்ட்ரா டிக்கட் இருந்தா தாங்களேன், ஒரு வாரம் கழிச்சு திருப்பி குடுத்திறேன்.

சிலிக்கான் சிங்கமே - வருக, வருக.

Wednesday, September 29, 2010

நல்ல உள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்


"இந்த  குழந்தைக்கு வயது ஒன்பது. இவள் பெயர் ப்ரியா  இவளுக்கு பிறந்ததிலிருந்து சரியாக காது கேட்டதில்லை. இவளுடய மாமா என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர். அவர் பெயர் கணேசன்.  ப்ரியா ஒரு மாற்று திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறாள். இவளுக்கு Cochlear Implantation Surgery  செய்தால் நிச்சயம் கேட்கும் திறன் வந்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான எலலா மருத்துவ சான்றிதழ்களையும், மருத்துவர்கள் பரிந்துரைகளையும் பார்த்தேன். இக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் பின்பு எப்போதுமே செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் ஒன்பது லட்சம். இவர்கள் முதல்வர் செல்லுக்கும் உதவி கோரியிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு உதவலாமே என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நம் பதிவுலகம் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறது. மேலும் இக்குழந்தையின் மருத்துவ சான்றிதழ்கள், மருத்துவர்களின் பரிந்துரை வேண்டுவோர்கள் என்னை தொலைபேசி எண்ணிலோ.. அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். உங்கள் உதவியால் ஒலி பெறப் போகும் ஒரு சிறுமிக்காக.. "


தம்மால் இயன்ற உதவிகளை - பொருளுதவியாகவோ இல்லை வேறேதுமான மருத்துவ உதவிகளாகவோ - செய்யும் மனம் படைத்தோர் நண்பர் கேபிள்சங்கரைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

கேபிளின் மின்னஞ்சல் முகவரி ...
sankara4@gmail.com

அவரிடம் பேச: 9840332666

வங்கி கணக்கு விபரம் :

A/C NAME : SANWAS INFOTECH
A/C NO : 0077 0501 0890
ICICI BANK, ASHOK NAGAR BRANCH


பதிவுலக வாசக அன்பர்களே மேற்கண்ட படத்தில் காணும் சிறுமியை பற்றி நண்பர்கள் கேபிள் சங்கர், மற்றும் விந்தை மனிதனும் உதவி கோரி பதிவிட்டுள்ளனர்.கேபிள் சங்கர்விந்தை மனிதன்.


எனவே தங்களால் இயன்ற உதவினை செய்யுமாறும், மற்றும் தங்களுக்கு தெரிந்த நண்பர்களிடமும் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன், மேலும் வேறு ஏதெனும் டிரஸ்ட் அல்லது உதவும் அமைப்பை பற்றிய விபரங்கள் ஏதெனும் தங்களுக்கு தெரியுமானால் தயவு செய்து கேபிள் சங்கரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன், என்னால் இயன்ற அளிவில் நானும் முயற்சிக்கிறேன்.

பதிவுலகில் பிரபலமாக உள்ள பதிவர்கள் தங்களது தளத்திலும் இந்த சிறு தளிரினை பற்றி வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Service to humanity is Service to God. நன்றி.

(விந்தைமனிதன் உங்களுடைய பதிவிலிருந்து காப்பி, பேஸ்ட் செய்துள்ளேன். மன்னிக்கவும்.) 




Monday, September 27, 2010

சாந்தி - சோஷியல் சர்வீஸ்

கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள், எஞ்ஜினியரிங் கம்பெனிகள் போன்றவற்றை நடத்தி வரும் பல பெரும் பணக்காரர்கள் உள்ளனர், கோவையின் பாதி பகுதி இவர்களுடையதே, குறைந்த பட்சம் 5 முதல் 10 கிலோ மீட்டர் தூரம்வரை இவர்களின் மேற்படி நிறுவனங்கள் அமைந்திருக்கும், உதாரணமாக சின்னியம்பாளையம், பீளமேடு முதல் காந்திபுரம் பேருந்து நிலையம் வரை P.S.G நிறுவனத்திற்கு சொந்தமானது, பீளமேட்டின் ரோட்டின் இரு புறங்களிலும் அவர்களின் கல்வி நிறுவனம் உள்ளது, இந்த பக்கம உள்ள மாணவர்கள் மறுபுரம் உள்ள கல்வி நிறுவனத்திற்கு செல்ல அவினாசி ரோட்டின் ந்டுவே பாலமே கட்டி உள்ளனர், இதற்கு அரசு எவ்வாறு அனுமதி அளித்தது என்பது அவர்களூக்கு மட்டுமே தெரியும், இது மெயின் ரோட்டில் நமக்கு காணக் கிடைப்பது மட்டுமே, மேலும் கோவையின் புற நகர் பகுதிகளில் எவ்வளவு சொத்து கிடக்குமோ, அது ஆண்டவனுக்கே வெளிச்சம், இவ்வாறு மாபெரும் பணக்காரர்களாக இருந்தாலும், மற்றவர்களுக்கு உதவும் தன்மை கொண்ட, மனம் கொண்ட நல்ல உள்ளங்களை கொண்டுள்ளவர்கள் மிகவும் குறைவான பேர்களே உள்ளனர், இத்தனை சொத்துக்களை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், அவர்களிடம் உள்ள அதிகப்படியான பணத்தை கொண்டு சிறிது மற்றவர்களுக்கும் உதவலாமே? என்பதுதான் என் கேள்வி? சரி அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் தங்கள் இஷ்டப்படி செலவழிப்பார்கள், அதை குறை கூற உனக்கு என்ன உரிமை உள்ளது? எனக் கேட்கிறீர்களா? அது சரிதான் அதை பற்றி குறை கூற எனக்கு ஒரு உரிமையும் இல்லை, ஆனால் இவர்களுக்கு மத்தியில் சில மாறுபட்ட மனிதர்கள் உள்ளனர், அவர்களை பற்றி எழுதுவது மட்டுமே என் நோக்கம். வேறு யாரையேனும் இப்பதிவு பாதித்தால் மன்னிக்கவும்,        இந்த சாந்தி - சோஷியல் சர்வீஸ் அமைப்பினை பற்றி முன்பே பலர் அறிந்திருக்கலாம். அறிந்திருக்காதவர்களுக்காகவே இந்த பதிவு.




                                                   Service to humanity is service to god   - our motto 

கோவையில் சாந்தி என்ஜினியரிங் கம்பெனி 1969 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, பின்னர் கியர் தயாரிப்பில் இறங்கி தற்பொழுது ஆறு யூனிட்களை கொண்ட மிகப் பெரிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இவர்களின் சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பு 1996 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சோஷியல் சர்வீஸ் அமைப்பின் மூலம் வறுமையில் உள்ள நன்றாக படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப் அளிப்பது, மிகவும் பின் தங்கிய கிராமப்பகுதிகளில் ரோடு வசதியினை ஏற்படுத்துவது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.

இதைவிட முக்கியமாக இவர்களின் பார்மசி பிரிவில் அனைத்து மருந்துகளுக்கும் 18% டிஸ்கவுண்ட் அளிக்கிறார்கள், வேறு எந்த மெடிக்கலிலும்  இந்த அளவு டிஸ்கவுண்ட் கிடைக்காது, 1000 ரூபாய்க்கு மருந்து வாங்கினால் 180 ரூபாய் மீதம் ஆகும், மாதம் பத்தாயிரம், இருபதாயிரத்துக்கு மருந்து வாங்குபவர்கள் நம்மிள் சிலர் இருக்கலாம், அவர்கள் இந்த மெடிக்கலில் வாங்கினால் ஒரு குறிப்பிட்ட தொகை நிச்சயமாக மிச்சம் ஆகும், உங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் மருத்துவ செலவு அதிகமாக இருந்தால் சிறிதளவாவது குடும்பச் சுமை கொஞ்சம் குறையும், நம்மிள் சிலரோ அல்லது நமது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிளோ இதய நோய், கேன்சர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது வயதானவர்களோ இருக்கலாம், அவர்களிடம் இதனை பற்றி எடுத்துக் கூறினால் நிச்சயம் பயன் அடைவார்கள். இவர்களிடம் எல்லா மருந்துகளும் உள்ளன, பெரிய பார்மசிதான், ஒருவேளை ஸ்டாக் இல்லை என்றால் கூட, உங்களின் போன் நம்பர், முகவரி எல்லாம் வாங்கி கொண்டு ஒரு டோக்கன் தந்துவிடுவார்கள், மருந்து வந்தவுடன் போன் செய்து தகவல் சொல்லுவார்கள், மேலும் இவர்கள் இரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்ரே போன்றவற்றையும் மிக குறைந்த விலையில் செய்து தருகிறார்கள்.( இவர்களின் இந்த பணியின் காரணமாக உள்ளூர் பார்மசிகாரர்கள் பிரச்சனை செய்தது வேறு கதை )

சாந்தி சோஷியல் சர்வீஸ், கோவை சிங்கநல்லூர் திருச்சி சாலையில் உள்ளது, சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து நடக்கும் தொலைவிலேயே உள்ளது. வெளியூர்காரர்களும் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிங்கநல்லூர் வந்து இறங்கினால் எளிதில் அடையாளம் காணலாம்.

மேலும் விபரங்களுக்கு. http://shanthisocialservices.org/  பார்க்கவும்.

இவர்கள் தற்பொழுது, குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக உணவகம் அமைக்கும் பணியினை செய்து வருகிறார்கள், இவர்களின் அலுவலகத்தில், மனிதர்களுக்கு செய்யும் தொண்டு கடவுளுக்கு செய்வதற்கு சமமாகும் என்று எழுதி வைத்து உள்ளார்கள். உண்மைதான்.

வாழ்க சாந்தி சோஷியல் சர்வீஸ் - வளர்க உங்களின் தொண்டு. நன்றி.

Monday, September 20, 2010

ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் - நீங்கள் எதிர்பார்ப்பதை விட மேலே




ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் - நீங்கள் எதிர்பார்ப்பதை விட மேலே, இந்த விளம்பரத்தை அடிக்கடி நீங்கள் டிவியில் பார்த்திருக்கக் கூடும், நல்ல வித்தியாசமான விளம்பரங்களோடு தற்போதைய முண்ணனி நடிகைகள் நடிக்க புதிதான விளம்பரங்களோடும் ஒளிபரப்பாகும், இதற்கு முன்னால் நடிகை தமண்ணாவும், தற்போது நடிகை பாவனா நடித்து புதிதாக விளம்பரம் ஓடிக் கொண்டு இருக்கிறது. 



இதை எதற்காக சொல்கிறேன் என்றால், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ளது, மற்ற ஊர்களிலோ அல்லது தமிழ்நாட்டை தாண்டியோ வசிப்பர்கள் எளிதில் புரிந்து கொள்ள் வேண்டும் என்பதற்காகவே மேற்கண்ட விளம்பரம்.





ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் மிக குறுகிய காலத்தில் கோவை மக்களிடம் செல்வாக்கு பெற்று தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக, கோவையின் இதயப்பகுதியான காந்திபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் முதலாளி அவர்களின் மனிதாபிமானம், மற்றும் உதவும்தன்மை. இந்த கடையில் சரவணா ஸ்டோர்ஸ் போன்றோ அல்லது அங்காடி தெரு படத்தில் காட்டியது போன்ற எந்தவிதமான தொழிலாளர் கொடுமைகளோ அல்லது விதிமீறல்களோ இல்லை.

இந்த காலத்தில் சிறு உதவியினை செய்வதாக இருந்தால் கூட நமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் மனநிலைதான் பெரும்பான்மையோர்க்கு உள்ளது. ஆனால் இந்த கடையின் உரிமையாளர் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்கிறார்.

என்னுடைய தாயார் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு 3 வருட காலமாக உயிருக்கு போராடி 3 மாதங்களுக்கு முன்னால் இறந்து விட்டார், நானும் என் தகுதிக்கு மீறி கடன் வாங்கியும, எவ்வளவோ செலவு செய்தும் காப்பாற்ற் முடியவில்லை, நான் சொல்ல வந்தது இதுவல்ல எனினும் இப்படி மருத்துவ செலவுக்கு நான் அல்லாடிக் கொண்டிருக்கும் போது ஒருமுறை கீமோதெரபி சிகிச்சைக்காக எனக்கு பணம் போதாமல் போனது, ஒரு முறை சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் கேன்சர் மேலும் பரவும்,பரவிவிட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க முன்பைவிட அதிகமாக பணம் தேவைப்படும், கேன்சரால் பாதிக்கப்பட்டவருக்கு என்ன வலி ஏற்படுமோ அதை விட கொடுமையானது அவர்களின் உறவுகள் படும் வேதனை. இது கேன்சர் நோய் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு தெரியும், அப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையில் என்னிடம் பணம் இல்லாத நிலையை பற்றி மருத்துவரிடம் தெரிவித்து, என்ன செய்வது? மாற்றுவழி ஏதேனும் உள்ளதா? எப்படியாவது மருத்துவம் செய்யுங்கள் என்று கேட்டேன், அப்பொழுதுதான் அவர்கள் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் சென்று பார்க்குமாறு கூறினார், நான் எத்தனை கஷ்டத்தில் இருந்தாலும் முன்பின் தெரியாதவரிடம் சென்று கடனோ அல்லது உதவியோ கேட்டதில்லை, மிகுந்த சங்கடத்தோடும், வேறு வழி இல்லாமலும் தயக்கத்தோடு சென்றேன், அவர்கள் கேட்கும்போது எப்படி நமது நிலையை கூறலாம், உதவி என்று கேட்க போகும்போது உள்ளே அனுமதிப்பார்களா என்று தெரியவில்லையே? நம்மை பார்த்தால் நாம் கூறுவதை நம்புவார்களா என பலவித சிந்தனையோடு ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் சென்றேன்.

ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் சென்றேன், உள்ளே சென்றதும், வாசலில் உள்ள சூப்பர்வைசரிடம் முதலாளி அவர்களை பார்க்க வேண்டும் என்று கூறினேன், என்ன விஷயம் என்று கேட்டார், நான் என் தாயாரின் மருத்துவ உதவிக்காக வந்துள்ளேன் என்று கூறினேன், அவர் மறுபேச்சு பேசாமல் முதலாளி அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு முன்பே ஆறு பேர் அமர்ந்து இருந்தனர். ஒவ்வொருவரும் உள்ளே செல்வதும் வெளியே செக்கோடு திரும்பி வருவதுமாக இருந்தனர். என்முறை வந்ததும் நானும் உள்ளே சென்றேன்.என்ன கேட்பார் என்று மனதில் நினைத்த்வாறே என் தாயாரின் மெடிக்கல் ரிப்போர்ட்டை நீட்டினேன், அவர் வாங்கி பார்த்தார் மறுபேச்சு பேசாமல் 5000 ரூபாய்க்கு காசோலை ஒன்றை எழுதி என் கையில் தந்தார். என்னிடம் ஒன்றும் கேட்கவில்லை, நான் நன்றி கூறிக் கொண்டு திரும்பினேன். வெளியே உள்ள சூப்பர்வைசரிடம் முதலாளி அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லையே எப்படி நம்பி இதுபோல பணத்தை கொடுக்கிறார் என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்? அதற்கு அவர் தினமும் 50 பேரிலிருந்து 100 பேர் வரை வருவதாகவும், யார் வந்து கேட்டாலும் மறுக்காமல் அவர் உதவி செய்வதாகவும் கூறினார். முன்பு ஒருவருக்கு 3000 ரூபாய் கொடுத்ததாகவும் தற்பொழுது 5000 ரூபாய் கொடுப்பதாகவும் கூறினார்.எப்படி பார்த்தாலும் தினமும் மூன்று லட்சத்துக்கு குறையாமல் உதவி செய்கிறார். அன்று அவர் செய்த உதவியினால்தான் என்னால் என் தாயாருக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது. அதற்கு பின் எனக்கு தெரிந்தவர்கள் யாரேனும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் போது ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் பற்றி கூறி இருக்கிறேன். அவர்களும் உதவி பெற்று இருக்கிறார்கள்.

இதனை நான் ஏன் தெரிவிக்கிறேன் என்றால், எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் அவர் உதவி செய்து கொண்டு இருக்கிறார், இதனை நான் பதிவு செய்வதன் மூலம் மீண்டும் ஒருமுறை அவருக்கு நான் என் சார்பாகவும் , மறைந்த என் தாயார் சார்பாகவும் இதயப்பூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். 

உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது உதவி தேவைப்பட்டால், தயங்காமல் தகுந்த மருத்துவ ரிப்போர்ட்டுடன் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸை அணுகலாம். கோவையுள் உள்ளவர்களில் பெரும்பான்மையோருக்கு இதை பற்றி தெரியாமல் இருக்கலாம், கோவை தவிர்த்த மற்ற வெளியூர்களில் உள்ளவர்களும் நேரடியாக அணுகலாம். ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் கோவை காந்திபுரம் மைய பேருந்து நிலையத்தின் அருகிலேயே உள்ளது.

இது போன்ற நல்ல காரியங்களை செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டுமானால், அவர்களின் கடைகளில் நாம் பொருட்கள் வாங்க வேண்டும், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸை பொறுத்த வரையில் அவர்களின் விளம்பரத்தினை போலவே எதிர்பார்ப்பதை விட மேலேயே அவர்களின் துணிகளின் தரமும் விலையும் உள்ளது.அவர்களின் பணியாளர்களும் இன்முகத்துடன் உபசரிப்பார்கள், ஒரு நிறுவனத்தை பற்றி அதன் பணியாளர்களின் முகத்தினை பார்த்தாலே அறிந்து கொள்ள முடியும், இதனை கோவையில் உள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள்.
இது போன்ற நல்ல உள்ள்ம் படைத்தவர்கள் உங்கள் ஊரிலும் இருப்பார்கள், அவர்களை பற்றி நாம் எழுதுவதன்மூலம் , அவர்களுக்கும் மேலும் இது போன்ற செயல்கள் செய்வதற்கு ஊக்குவிப்பாய் இருக்கும், மேலும் உங்கள் ஊர்களில் உள்ள கஷ்ட்டப்படுபர்கள் இவர்களை பற்றி தெரிந்து கொண்டு பயன் பெற வாய்ப்பாய் இருக்கும்.

ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் - நீங்கள் எதிர்பார்ப்பதை விட மேலே வர கடவுளை வேண்டிக் கொள்கிறேன் - நன்றி.

Saturday, September 18, 2010

புரட்சி தளபதி - டாக்டர் விஜய்


Statutory Warning : இந்த பதிவு முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.

நானும் பிளாக் ஆரம்பிச்சு ஒருவாரம் ஆகுது, நாமழும் பிரபல பதிவரா ஆகனும்ன்னு முடிவு பண்ணி என்ன எழுதலாம்னு 3 வேளை நல்லா சாப்பிட்டுட்டு படுத்துகிட்டே யோசனை பண்ணி பார்த்தேன். ஒன்னும் வேலைக்கு ஆகலை, இப்பத்தாங்க தெரியுது பிரபல பதிவர்களோட நிலமை, சரி நம்ப பிரண்டுகிட்ட போய் கேட்போம்னு கேட்டேன், என்னடா பண்ணறதுன்னு?, அவன் கேட்டான், சரி உன்னோட பிளாக் பேர் என்னன்னு? நானும் இரவுவானம்னு சொன்னேன், அவன் பேசாம உன் பிளாக் பேரையே பிரபல பதிவர்னு மாத்திருனு சொன்னான்! இதுக்கு நாம சரிப்பட்டு வரமாட்டம், நாமளே சொந்தமா யோசனை பண்ணிக்குவேம்னு வந்துட்டேன். 
(பையா கார்த்தி மாதிரி...)
நான் எப்படி எல்லாம் வெட்டியா இருந்தேன், இதுக்கு முன்னாடி நான் யோசனை பண்ணி பார்த்திருக்கயாடா? இப்ப எல்லாமே வேற மாதிரி இருக்கு, சும்மா தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு.

சரி பிரபல பதிவர்கள் எல்லாம் எப்படி பிரபலமானாங்கண்ணு பார்த்து நாமலும் அதே மாதிரி பிரபலம் ஆயிரலாம்னு முடிவு பண்ணி இண்ட்லி, தமிழ்மணம்னு ஒன்னுவிடாம படிச்சு பார்த்தேங்க, அப்பத்தான் தெரிஞ்சது, நம்ம டாக்டர் ஐயாவ பத்தி பதிவு எழுதுனா சும்மா ஹிட்ஸ் அள்ளும்னு.

சரி அதான் நம்ம டாக்டரோட காவலன் படம் தீபாவளிக்கு வருதே, காவலன் ரொம்ப கேவலன்னு ஒரு பதிவு எழுதி நாமழும் தீபாவளியோட பிரபல பதிவர் ஆகிறலாம்னு ரொம்ப சந்தோசமா தூங்க போனேங்க.

                                        
(செக்யூரிட்டி வேலைக்கு இப்படி எல்லாமா யூனிபார்ம் கொடுக்கிறாங்க?)

சரின்னு இன்னைக்கு வந்து நீயூச பார்த்தா, ஒரே அதிர்ச்சியா போயிருச்சுங்க, ஆமாங்க காவலன் படத்த டிசம்பர் மாசம் தள்ளி வச்சுட்டாங்களாம், இந்த அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவே இல்லைங்க.

                                     

சரி என்ன பண்ணரதுங்க, நான் பிரபல பதிவர் ஆகணும்னா இன்னும் 4 மாசம் காத்திருக்கணும்.
பொதுவா ஒரு நடிகரோட படம் வருதுண்ணா, அந்த நடிகரோட ரசிகர்கள்தான் காத்திட்டு இருப்பாங்க, ஆனா இப்படி உலகம் முழுக்க இருக்கற பதிவர்கள் எல்லாம் காத்திட்டு இருக்கற படம்னா அது நம்ம இளைய தளபதி படம்தான்னு உறுதியா சொல்லிக்கலாம், 
இப்படி ஒரு இணைய புரட்சியையே ஏற்படுத்தி இருக்கற நம்ம டாக்டர் ஐயாவ இன்னும் எதுக்கு இளைய தளபதின்னு கூப்பிடனும், புரட்சி தளபதின்னே கூப்பிடலாமே, வெறும் படத்தில மட்டுமே நடிச்சதே பெரிய புரட்சின்னு நினைச்சு புரட்சி தளபதின்னு விஷால் டைட்டில் போடும்போது, எங்கள் அண்ண்ன், பதிவர்களை உயிர் வாழவைக்கும் டாக்டர், இளைய தளபதி அவர்களை இனி புரட்சி தளபதி என்றே அழைக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே அவரின் தந்தை புரட்சி இயக்குனர் என்பதையும், அவரின் மகனான விஜய் அவர்களுக்கே அந்த் பெயர் சரியாக இருக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். 

Thursday, September 16, 2010

சத்தியமா இந்த லாஜிக் புரியலைங்க!

சத்தியமா இந்த லாஜிக் புரியலைங்க, உங்களுக்காவது புரியுதுங்களா?



நானும் பஸ்ல போகும்போது எல்லாம் பார்க்குறேங்க, அது டவுன் பஸ் ஆகட்டும் இல்ல மப்சல் வண்டியாகட்டும், கடைசி படிக்கட்டுக்கு முன்னாடி இருக்கற சீட்டு முதியோர் அல்லது உடல் ஊனமுற்றோருக்காகன்னு எழுதி இருக்கும், ஆனா அந்த சீட்டை பார்த்தீங்கன்னா பஸ்ஸோட பின் சக்கரத்துக்கு மேலே இருக்கும், அதனால பஸ்சுக்கு உள்ளே சின்ன படி மாதிரி இருக்கும், அந்த சீட்டு மேல ஏறி உட்காரணும்னா அந்த படி மாதிரி இருக்கரதுக்கு மேல ஏறி போகனும், அதிலயும் சில பஸ்ஸில அதுக்கு முன்னாடி இருக்கர சீட் ரொம்ப நெருக்கமா வேற இருக்கும்,  இதுல என் டவுட் என்னன்னா ஒரு முதியவரே அல்லது உடல் ஊனமுற்றவரோ இந்த சீட்டுல எப்படி உட்காருவாங்க, அவங்க சரியா நடக்க முடியாதவங்களா கூட இருக்கலாமில்ல, அல்லது கால் சரியா வராதவங்களா கூட இருக்கலாம், பொதுவா இந்த சீட்டுல வயசானவங்க யாரும் உட்காருவதில்லை மத்தவங்கதான் உட்காரராங்க, இதுக்கு பதிலா கடைசில இருக்கர கண்டக்டர் சீட்டையே கொடுக்கலாம், மப்சல் வண்டில கண்டக்டர் டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல உட்கார்ரதைத்தான் விரும்பராரு,




இதுக்கு அரசாங்கம்தான் ஏதாவது பண்ணனும், முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள்னு இருந்ததை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கைனு மாத்திட்டாங்க, அப்படியே அவங்க அந்த சீட்டுல எப்படி உட்காருவாங்கன்னும் எழுதி வைச்சுட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகும்.

Wednesday, September 15, 2010

பாஸ்கரன் படம்


இந்த படத்தை நானும் பார்த்துட்டேங்க, எல்லாரும் விமர்சனம் எழுதி முடிச்சாச்சு, அதனால இந்த படத்தோட கதையை பத்தி சொல்ல ஒன்னும் இல்லை, ஆனா எல்லாரும் சொல்ற அள்வுக்கு காமெடி ஒன்னும் பெரிசா தெரியலை, இதைவிட சிவா மனசில சக்தி படத்துல காமெடி ஜாஸ்தியா இருந்த மாதிரி தோணுது, இது எனக்கு தோணுனது மட்டும்தான் உங்களுக்கு புதுசா பார்க்கும்போது கண்டிப்பா பிடிக்கும்.

இந்த படத்துல ஆரியா காமெடில கலக்கிருக்காரு, ஆனாலும் ஜீவா அளவுக்கு இல்லனுதான் சொல்லனும், ஜீவா கொஞ்ச நேரமே வந்தாலும் சூப்பரா பண்ணி இருக்காரு, அதுவும் மாமா மாமா வீட்டுல சொல்லிடாதீங்க மாமான்னு கெஞ்சும் போது அவரோட பாடி லாங்குவேஜ் சூப்பர், சந்தானத்த பத்தி சொல்ல வேண்டியதே இல்லை கிடைக்கற கேப்பில் எல்லாம் கெடா வெட்டறாரு, நயந்தாரா போதும்சாமி தயவுசெஞ்சு பிரபுதேவாவ கல்யாண்ம் பண்ணிட்டு போயிருங்க, உங்களுக்கு கோடி புண்ணியம். உங்களுக்கு டயம் பாஸ் ஆகலன்னா நம்பி போலாம்.




இந்த படத்த எங்க ஊரு தமிழ்நாடு தியேட்டர்ல பார்த்தேன், என்னைக்குமே நம்பர் வரிசையா உக்கார வைக்க மாட்டாங்க, இன்னைக்குன்னு பார்த்து உட்கார வைச்சிட்டாங்க, பல சேர்கள் காலியா இருந்தும் ஒரு குடிமகனோட இந்த படத்தை பார்த்தேன், அந்த எபக்டோ என்னமோ, நன்பேண்டா........


Saturday, September 11, 2010

ஆர்வ கோளாறு

நானும் சும்மா பிளாக் படிச்சிட்டு தான் இருந்தேன், ஆனால் என் மனசிலயும் பெரிய எழுத்தாளர் ஆகனும்னு எதுவும் தோணலை, ஆனாலும் எழுதனும்னு தோனிருச்சு, அதனால் இந்த பதிவு. இனி எனக்கு தோனறதை இந்த பக்கம் எழுத போறேன்.