Monday, September 20, 2010

ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் - நீங்கள் எதிர்பார்ப்பதை விட மேலே




ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் - நீங்கள் எதிர்பார்ப்பதை விட மேலே, இந்த விளம்பரத்தை அடிக்கடி நீங்கள் டிவியில் பார்த்திருக்கக் கூடும், நல்ல வித்தியாசமான விளம்பரங்களோடு தற்போதைய முண்ணனி நடிகைகள் நடிக்க புதிதான விளம்பரங்களோடும் ஒளிபரப்பாகும், இதற்கு முன்னால் நடிகை தமண்ணாவும், தற்போது நடிகை பாவனா நடித்து புதிதாக விளம்பரம் ஓடிக் கொண்டு இருக்கிறது. 



இதை எதற்காக சொல்கிறேன் என்றால், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ளது, மற்ற ஊர்களிலோ அல்லது தமிழ்நாட்டை தாண்டியோ வசிப்பர்கள் எளிதில் புரிந்து கொள்ள் வேண்டும் என்பதற்காகவே மேற்கண்ட விளம்பரம்.





ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் மிக குறுகிய காலத்தில் கோவை மக்களிடம் செல்வாக்கு பெற்று தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக, கோவையின் இதயப்பகுதியான காந்திபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் முதலாளி அவர்களின் மனிதாபிமானம், மற்றும் உதவும்தன்மை. இந்த கடையில் சரவணா ஸ்டோர்ஸ் போன்றோ அல்லது அங்காடி தெரு படத்தில் காட்டியது போன்ற எந்தவிதமான தொழிலாளர் கொடுமைகளோ அல்லது விதிமீறல்களோ இல்லை.

இந்த காலத்தில் சிறு உதவியினை செய்வதாக இருந்தால் கூட நமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் மனநிலைதான் பெரும்பான்மையோர்க்கு உள்ளது. ஆனால் இந்த கடையின் உரிமையாளர் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்கிறார்.

என்னுடைய தாயார் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு 3 வருட காலமாக உயிருக்கு போராடி 3 மாதங்களுக்கு முன்னால் இறந்து விட்டார், நானும் என் தகுதிக்கு மீறி கடன் வாங்கியும, எவ்வளவோ செலவு செய்தும் காப்பாற்ற் முடியவில்லை, நான் சொல்ல வந்தது இதுவல்ல எனினும் இப்படி மருத்துவ செலவுக்கு நான் அல்லாடிக் கொண்டிருக்கும் போது ஒருமுறை கீமோதெரபி சிகிச்சைக்காக எனக்கு பணம் போதாமல் போனது, ஒரு முறை சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் கேன்சர் மேலும் பரவும்,பரவிவிட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க முன்பைவிட அதிகமாக பணம் தேவைப்படும், கேன்சரால் பாதிக்கப்பட்டவருக்கு என்ன வலி ஏற்படுமோ அதை விட கொடுமையானது அவர்களின் உறவுகள் படும் வேதனை. இது கேன்சர் நோய் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு தெரியும், அப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையில் என்னிடம் பணம் இல்லாத நிலையை பற்றி மருத்துவரிடம் தெரிவித்து, என்ன செய்வது? மாற்றுவழி ஏதேனும் உள்ளதா? எப்படியாவது மருத்துவம் செய்யுங்கள் என்று கேட்டேன், அப்பொழுதுதான் அவர்கள் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் சென்று பார்க்குமாறு கூறினார், நான் எத்தனை கஷ்டத்தில் இருந்தாலும் முன்பின் தெரியாதவரிடம் சென்று கடனோ அல்லது உதவியோ கேட்டதில்லை, மிகுந்த சங்கடத்தோடும், வேறு வழி இல்லாமலும் தயக்கத்தோடு சென்றேன், அவர்கள் கேட்கும்போது எப்படி நமது நிலையை கூறலாம், உதவி என்று கேட்க போகும்போது உள்ளே அனுமதிப்பார்களா என்று தெரியவில்லையே? நம்மை பார்த்தால் நாம் கூறுவதை நம்புவார்களா என பலவித சிந்தனையோடு ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் சென்றேன்.

ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் சென்றேன், உள்ளே சென்றதும், வாசலில் உள்ள சூப்பர்வைசரிடம் முதலாளி அவர்களை பார்க்க வேண்டும் என்று கூறினேன், என்ன விஷயம் என்று கேட்டார், நான் என் தாயாரின் மருத்துவ உதவிக்காக வந்துள்ளேன் என்று கூறினேன், அவர் மறுபேச்சு பேசாமல் முதலாளி அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு முன்பே ஆறு பேர் அமர்ந்து இருந்தனர். ஒவ்வொருவரும் உள்ளே செல்வதும் வெளியே செக்கோடு திரும்பி வருவதுமாக இருந்தனர். என்முறை வந்ததும் நானும் உள்ளே சென்றேன்.என்ன கேட்பார் என்று மனதில் நினைத்த்வாறே என் தாயாரின் மெடிக்கல் ரிப்போர்ட்டை நீட்டினேன், அவர் வாங்கி பார்த்தார் மறுபேச்சு பேசாமல் 5000 ரூபாய்க்கு காசோலை ஒன்றை எழுதி என் கையில் தந்தார். என்னிடம் ஒன்றும் கேட்கவில்லை, நான் நன்றி கூறிக் கொண்டு திரும்பினேன். வெளியே உள்ள சூப்பர்வைசரிடம் முதலாளி அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லையே எப்படி நம்பி இதுபோல பணத்தை கொடுக்கிறார் என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்? அதற்கு அவர் தினமும் 50 பேரிலிருந்து 100 பேர் வரை வருவதாகவும், யார் வந்து கேட்டாலும் மறுக்காமல் அவர் உதவி செய்வதாகவும் கூறினார். முன்பு ஒருவருக்கு 3000 ரூபாய் கொடுத்ததாகவும் தற்பொழுது 5000 ரூபாய் கொடுப்பதாகவும் கூறினார்.எப்படி பார்த்தாலும் தினமும் மூன்று லட்சத்துக்கு குறையாமல் உதவி செய்கிறார். அன்று அவர் செய்த உதவியினால்தான் என்னால் என் தாயாருக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது. அதற்கு பின் எனக்கு தெரிந்தவர்கள் யாரேனும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் போது ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் பற்றி கூறி இருக்கிறேன். அவர்களும் உதவி பெற்று இருக்கிறார்கள்.

இதனை நான் ஏன் தெரிவிக்கிறேன் என்றால், எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் அவர் உதவி செய்து கொண்டு இருக்கிறார், இதனை நான் பதிவு செய்வதன் மூலம் மீண்டும் ஒருமுறை அவருக்கு நான் என் சார்பாகவும் , மறைந்த என் தாயார் சார்பாகவும் இதயப்பூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். 

உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது உதவி தேவைப்பட்டால், தயங்காமல் தகுந்த மருத்துவ ரிப்போர்ட்டுடன் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸை அணுகலாம். கோவையுள் உள்ளவர்களில் பெரும்பான்மையோருக்கு இதை பற்றி தெரியாமல் இருக்கலாம், கோவை தவிர்த்த மற்ற வெளியூர்களில் உள்ளவர்களும் நேரடியாக அணுகலாம். ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் கோவை காந்திபுரம் மைய பேருந்து நிலையத்தின் அருகிலேயே உள்ளது.

இது போன்ற நல்ல காரியங்களை செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டுமானால், அவர்களின் கடைகளில் நாம் பொருட்கள் வாங்க வேண்டும், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸை பொறுத்த வரையில் அவர்களின் விளம்பரத்தினை போலவே எதிர்பார்ப்பதை விட மேலேயே அவர்களின் துணிகளின் தரமும் விலையும் உள்ளது.அவர்களின் பணியாளர்களும் இன்முகத்துடன் உபசரிப்பார்கள், ஒரு நிறுவனத்தை பற்றி அதன் பணியாளர்களின் முகத்தினை பார்த்தாலே அறிந்து கொள்ள முடியும், இதனை கோவையில் உள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள்.
இது போன்ற நல்ல உள்ள்ம் படைத்தவர்கள் உங்கள் ஊரிலும் இருப்பார்கள், அவர்களை பற்றி நாம் எழுதுவதன்மூலம் , அவர்களுக்கும் மேலும் இது போன்ற செயல்கள் செய்வதற்கு ஊக்குவிப்பாய் இருக்கும், மேலும் உங்கள் ஊர்களில் உள்ள கஷ்ட்டப்படுபர்கள் இவர்களை பற்றி தெரிந்து கொண்டு பயன் பெற வாய்ப்பாய் இருக்கும்.

ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் - நீங்கள் எதிர்பார்ப்பதை விட மேலே வர கடவுளை வேண்டிக் கொள்கிறேன் - நன்றி.

3 comments:

  1. இவருடைய மனித நேயத்தைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது

    ReplyDelete
  2. உண்மைதான் சார், உங்கள் பகுதியிலும் இவரை போல யாராவது இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி

    ReplyDelete
  3. I also see him in shop.. His name Shiva Kumar I guess.. very nice person

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!