Showing posts with label ஏடிஎம் மிசின். Show all posts
Showing posts with label ஏடிஎம் மிசின். Show all posts

Wednesday, December 12, 2012

ATM மிஷினும், வாட்ச்மேன்கள் தொல்லையும் ..!



கம்பெனியில் இருந்து போன், கேஷியர் நண்பன்தான் பேசுனான், டேய் அக்கவுண்ட்ல சேலரி கிரடிட் ஆயிருச்சுடான்னு, சேலரி கிரடிட் ஆயிருச்சா? நமக்கு ஏது சேலரி? அதான் எல்லாம் பிடித்தமும் செஞ்சிருப்பானே? இன்னமும் என்ன பாக்கி இருக்கப் போவுது? சர்தான் பாப்பமே.

பக்கத்துல கொஞ்ச தூரம் தள்ளி ஒரு ஏடிஎம் இருந்தது, சரின்னு பக்கத்துல போனேன், வாட்ச்மேன் என்கூட படிச்ச தோஸ்த் மாதிரி சிரிச்சான், நானும் சிரிச்சுட்டு உள்ள போய் கார்டை சொருகினேன், பாலன்ஸ் 93 ரூபான்னு வந்துச்சு, 93 ரூபாயா? இதான் சேலரியா? பாலன்ஸ் செக் பண்ணி பாத்தா 63 ரூபாதான் சேலரின்னு போட்டு இருக்கு, பழைய பாக்கியும் சேர்ந்து 93 ரூபா, கருமம் புடிச்சவன் ஒரு ஏழு ரூபா ஜாஸ்தியா போட்டு இருந்தா ஒரு குவாட்டருக்காவது ஆகிருக்கும், சே வட போச்சேன்னு வெளில வந்தேன்.

ஏடிஎம் வாட்ச்மேன் முன்னவிட அதிகமா சிரிச்சான், சரின்னு நானும் சிரிச்சிட்டே நடந்தேன்,

சார், சார்

சாரா? யாரு நம்மளயா? அந்த வாட்ச்மேந்தான்

சொல்லுங்க

ஒன்னுமில்ல, டீ செலவுக்கு எதாச்சும் குடுத்தீங்கன்னா? டிப்சு சார்னு தலய சொறிஞ்சான்

டிப்ஸா? ஏடிஎம்ல பணம் எடுக்க வந்ததுக்கா? என்னமோ நீயே ஏடிஎம் மிஷினா மாறி வாய் வழியா பணம் கொடுத்த மாதிரி சர்வீஸ் பண்ண டிப்ஸ் கேட்குறியா?

வேண்ணா ஒன்னு பண்ணலாம், என்கிட்ட நாலு ரூபா இருக்கு, உன்கிட்ட நாலு ரூபா இருந்தா சொல்லு எதிர் டீக்கடைல ஒரு டீ வாங்கி ஒன்பைடூ சாப்பிடாலாம்னேன்.

அவன் என்ன பார்த்த பார்வையில ஓராயிரம் மில்லி எச்சில் துப்பும் பாவனை இருந்ததால் மேற்கொண்டு நிற்காமல் ஓடி வந்துவிட்டேன், நல்லவேளை வொயிட் சர்ட் தப்பிச்சது.


ஒரு அகால வேளையில் பிரண்டு ஒருத்தருக்கு போன் பண்ண பேலன்ஸ் இல்லாம ரொம்ப அர்ஜெண்டா ஏடிஎம்ல பணம் எடுக்க போனா வாட்ச்மேன் கதவை சாத்திட்டு புல் ஏசி போட்டுட்டு கொறட்டை விட்டு தூங்கிட்டு இருக்காரு, யோவ் எந்திரியா? அர்ஜெண்ட்யா? எந்திரியான்னு கத்தவிட்டான், கடைசில ப்ளீஸ் அஞ்சலி, எந்திரிமா அஞ்சலின்னு மணிரத்னம் படம் மாதிரி கெஞ்சாம விட்டதுதான் பாக்கி.

இப்படித்தான் பல வாட்ச்மேன்க ஏடிஎம்ம சொந்த வீடு மாதிரியே பொலங்கிட்டு இருக்காங்க, ஒருத்தரு புல் மீல்ஸ்ச மிஷின சுத்தி பரப்பி விட்டு உள்ள ஆளு நிக்க கூட இடம் இல்லாம சாப்பிட்டுகிட்டு இருந்தாரு, அன்னைக்கு நான் பணம் எடுக்க ஆடுன ஆட்டத்த உங்களில் யார் அடுத்த பிரபுதேவால ஆடிருந்தா நயந்தாரா எனக்கே கிடைச்சிருப்பாங்க, அப்படி டான்ஸ் ஆடியும் கடைசில டம்ளர தட்டிவிட்டுட்டேன், டென்சனாகி அந்தாளு யோவ் அறிவில்லையான்னு கத்தறான், யாரு எனக்கா? போடாங்க @#$%^& எதாவது சொல்லிட போறேன்னுட்டு வந்துட்டேன்.


நைட் வாட்ச்மேன்க பாதிபேரு பாதி என்ன பாதி முழுசாவே வயசான ஆளுங்களாத்தான் இருக்காங்க, அவங்கள பொறுத்தவரை அந்த சின்ன ரூம் அவங்க சொந்த வீடுமாதிரிதான், திருப்பூர் குமரன் ரோடு ஏடிஎம்ல ஒருத்தரு இருப்பாரு, ஏடிஎம் முன்னாடி வண்டிய நேரா நிறுத்துனா மட்டும்தான் உள்ளயே விடுவாரு, கோணலா நிறுத்துனா அவ்வளவுதான், சண்டை கட்டி போதும் போதும்னு ஆகிரும், கொய்யால அவனவன் பணத்த எடுக்க எவ்வளவு அழிச்சாட்டியத்த தாங்க வேண்டியதா இருக்குன்னு பல தடவை நினைச்சதுண்டு.

வயசான காலத்துல வீட்டுல ரெஸ்ட் எடுக்காம இங்க வந்து உட்கார்ந்து உயிரை எடுக்கறாங்களே, பத்து பேர மொத்தமா பாத்தா செத்திருவாங்க போல இருக்காங்க, இவங்க எல்லாம் ஏடிஎம் மிஷினயும், பணத்தயும் எப்படி பத்திரமா பாத்துக்குவாங்கன்னு பேங்கு நம்புதுன்னு ரொம்ப நாளா மனசுக்குள்ள ஒரு கேள்வி இருந்தது.


வயசான காலத்துல ரெஸ்ட் எடுக்க வேண்டிய வயசுல, நைட்டு நடுங்கற குளிர்ல அப்படி உட்கார்ந்து இருக்கனும்னு அவங்களுக்கு என்ன அவசியம்? உற்று கவனிக்க்கும் பொழுதுதான் தெரிஞ்சது ஒவ்வொருத்தரு முகத்துலயும் ஒவ்வொரு விதமான பீலிங், நேத்து ஒருத்தரு யாருக்கும் தெரியாத மாதிரி கண்ணீர் விட்டுட்டு இருந்தாரு.

எந்த மகன் பாக்க மாட்டேன்னு சொன்னானோ? எந்த மகள் கல்யாணத்துகு வாங்குன கடனை அடைக்க முடியலையோ? மாப்பிள்ளைக்கு அடுத்த சீருக்கு என்ன பண்ணப்போறமோங்கற கவலையோ? வாங்குன சீட்டுக்கு பணம் கட்ட முடியாத அவஸ்தையோ? வட்டிக்கு வாங்கிட்டு கண்டவன் வாய்ல வாங்கற நிலைமையோ? வீட்டு வாடகை கூட குடுக்க முடியாத நிலைமையோ? அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படற நிலைமையோ? இப்படி எதாவது ஒன்னு கண்டிப்பா இருக்கத்தான் போகுது,

மிஷின் நிறைய பணமும், அதை எடுக்க வர ஜனங்களையும், பணம் இல்லாம வெளில உட்கார்ந்து பார்க்ககூடிய வயசான வாட்ச்மேன்களோட மனசுல என்ன நினைப்பு ஓடும்?

ஏழையா பொறந்து ஏழையாவே முதுமை எய்துனா இறுதிகாலம் கூட நிம்மதியா அமையாதான்னு ஏங்கித்தான் சாவனும்னு தலையெழுத்து போல, இனிமே தப்பா நினைக்க மாட்டேங்க, எந்த வாட்ச்மேனாவது தொல்லையே கொடுத்தாலும்..!