Saturday, November 26, 2011

வாழ்வின் நிதர்சனங்கள்..!நண்பர்களோ, உறவினர்களோ சிறு வயதில் அறிமுகமாகும் போதும், கிடைக்கும் போதும் ரொம்பவே மனதிற்கு நெருக்கமாகி போகிறார்கள், கூடி விளையாட, பகிர்ந்து உண்ண, சண்டை போட, போட்ட சண்டையை மறந்து விட்டு மீண்டும் பேசி மகிழ என்று சிறு வயது நட்புகளும், உறவுகளும்தான் எவ்வளவு நெருக்கமான உறவுகளாக ஒவ்வொருவருக்கும் அமைகிறது.

குழந்தை பருவத்தில் இருந்து வளர வளர கிடைக்கும் நட்புகளும், உறவுகளும் மாறிக் கொண்டே வருகின்றன, ஆனால் குழந்தை பருவத்து சண்டை மட்டும் மாறாமல் தொடர்ந்து கொண்டே வருகிறது, முன்னர் பல்லால் கடித்தவர்கள், இப்பொழுது கையால் அடித்துக் கொள்கிறார்கள், ஆனால் குழந்தைகளின் சண்டை குழந்தைதனமானது என்பது தெரியாமல் இப்பொழுது எத்தனை பெற்றோர்கள் சண்டை போடுகிறார்கள்?

சமீபத்தில் எங்கள் காம்பவுண்டில் இருந்த ஒரு குடும்பம் காலி பண்ணிக் கொண்டு போனார்கள், அதற்கு அவர்கள் சொன்ன காரணம் அவர்களது குழந்தை அடுத்த குழந்தையோடு சண்டை போடும் போது மற்றவர்கள் தடுக்கிறார்கள் என்பதுதான் காரணமாம்.

எப்பொழுதுமே அந்த அம்மா ஒரு உக்கிர பார்வையோடுதான் திரிந்து கொண்டு இருப்பார், அவர்களது வீடும் 13ம் நம்பர் வீடு போலவே தெரியும், குழந்தைகளின் சண்டையில் அந்தம்மாவின் பையன் அடிவாங்கி வந்துவிட்டால் போச்சு, பையனை வெள்ளாவி வைக்காமலே வெளுத்து விடுவார், இப்படித்தான் இருக்கிறது சில மனிதர்களின் மனம், நெருக்கமான உறவுகளோ, நண்பர்களோ இல்லாமல் ஊர் விட்டு ஊர் வந்து வாழும் பல குடும்பங்களில் இந்த நிலைதான் நீடிக்கிறது.

தன்னுடைய கஷ்ட நஷ்டங்கள், சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள இயலாமல் அனைத்தையுமே மனதில் எத்தனை காலம்தான் பூட்டி வைத்து கொண்டு ஒருவர் வாழ முடியும், நீருக்குள் அமிழ்த்தி வைக்கும் பந்தினை போல வெளியே வந்துவிடாதா?

குழந்தை பருவம், மாணவ பருவம், கல்லூரி பருவம், வேலை தேடும் காலங்கள் என ஒவ்வொரு கால கட்டங்களிலும், நட்புகளும், உறவுகளும் மாறி மாறி வந்து போய் கொண்டு இருக்கிறார்கள், அவற்றில் சிலர் மனதிற்கு நெருக்கமானவர்களாகவும் அமைகிறார்கள், ஆனால் அவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியாதவாறு, படிப்பு, வேலை, குடும்பம், குட்டிகள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்களால் பிரிவுகளாக அமைந்து விடுகின்றன.

கடைசியாக நிகழ்காலத்தில் இருக்கும் நட்புகளோ, உறவுகளோதான் மனதிற்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களை பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்களுடன்தான் நம்முடைய சுக, துக்கங்கள், சந்தோசங்கள், ஏமாற்றங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது, எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளவும், அப்படியே வாழ்ந்து பழகவும் வேண்டியுள்ளது.

வாழும் காலத்தில் எதனையுமே சேர்த்து வைக்க முடியாமல், கஷ்ட ஜீவனம் நடத்தும் மனிதர்களுக்கு, மனதிற்கு நெருக்கமான ஒரு நட்பினையோ, உறவினையோ கூட சம்பாதிக்க முடியாமல், அல்லது அப்படி அமையாமல் போவது எவ்வளவு பெரிய துரதிஷ்டம்?

சமீபத்தில் நண்பர் ஒருவரின் மச்சானின் அப்பா இறந்து விட்டார், கொஞ்சம் தொலைவில் உள்ள நகரம் அது, வண்டி பிடித்து சென்ற நண்பர்கள், இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம், சரக்கு எதுவும் இல்லையா என மனசாட்சி இல்லாமல் கேட்டு வாங்கி குடித்தபின் தான் வந்தார்கள், தந்தை இறந்த துக்கத்தை மற(றைத்)ந்து விட்டு சரக்குபசாரம் செய்து அனுப்பினார் அவர், துக்க வீட்டிலேயே இப்படியென்றால் கல்யாண வீட்டில் கேட்கவா வேண்டும்?

கல்யாணமா? காது? குத்தா? சீரா? – நான் உம்புள்ளைக்கு இவ்வளவு செஞ்சிருக்கேன், நீயும் இவ்வளவு செய்யு, அந்தக்கா வூட்டுக்கு நான் அய்நூறு ரூபா மொய் வச்சேன், அவ என்னடான்னா எனக்கு அம்பதுதான் வச்சிருக்கா? விடு வெச்சுக்கிறேன், இனிமே அவ வீட்டு படிகூட மிதிக்க மாட்டேன்

இங்கு எல்லாமே தன்னலமாக போய் விட்டது, ஒரு நல்லதுக்கும், கெட்டதுக்கும் கூட நமக்கு என்ன லாபம் என சிந்தித்து பார்த்து பங்கெடுக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டோம் என்பதை வருத்தத்துடன் ஒத்துக் கொள்ள கூடிய நிலைமையில்தான் உள்ளோம்

ஒவ்வொருவரும், ஒவ்வொரு கால கட்டங்களிலும் நட்புகளையும், உறவுகளையும் பற்றிய சுய ஆய்வை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தத்துவம் மட்டுமே இன்று வரை மாறாமல் உள்ளது.

காலம் எனும் வகுப்பு ஆசிரியர், அனுபவம் எனும் பாடத்தினை எல்லோருக்கும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறான், அப்பாடத்தில் எளிதாக பாசாகிவிடுகிறவர்கள் ஈசியாக வாழ்வை புரிந்து கொண்டு முன்னேறிவிடுகிறார்கள், கொஞ்சம் சிரமப்பட்டு பாசாகிறவர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் சிரமபடுகிறார்கள்.

ஆனால் தொடர்ந்து யாராலும் பாசாகமல் பெயிலாக முடியாது, அப்படி பெயிலானால் மொத்தத்திற்கும் பெயிலாக வேண்டியதுதான்.

சரி அத விடுங்க, இப்ப நீங்க சொல்லுங்க, நீங்க பாசா? பெயிலா?

   

Wednesday, November 16, 2011

அடிமாடா போலாமா?

என்ன என்ன மனுசன்னு நினைச்சீங்களா? இல்லை மாடுன்னு நினைச்சீங்களா?

மாடு மாதிரி கஷ்டப்பட்டு வேலை செய்யுறேன்…..

இதுமாதிரியான உதாரணங்களே போதும் மாடுகள் மனிதர்களை விட எவ்வளவு உடல் உழைப்பினை கொடுக்கின்றன என்பதற்கு, பிறந்ததில் இருந்து இறக்கும் வரை உள்ள ஒவ்வொரு கால கட்டங்களிலும் மனிதர்களுக்கு எதேனும் ஒரு வகையில் அது பாலாகவோ, மோராகவோ, தயிராகவோ, சாண எரிவாகவோ, விவசாய வேலைக்கோ, மாட்டு வண்டி ஓட்டுவதற்கோ, இல்லை உழுவதற்கோ என்று எத்தனையோ வேலைகளை பசுமாடுகளும் எருதுகளும்தான் செய்து வருகின்றன

இந்த ஜீவன்கள் மனிதர்களை நம்பி இருக்கின்றனவா இல்லை மனிதர்கள் இந்த ஜீவன்களை நம்பி இருக்கிறார்களா?

என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே உணர்ந்து கொள்ள முடியும், சாதாரணமாக எட்டு மணி நேரம் வேலை செய்யும் மனிதனுக்கு உணவு உண்ணும் நேரம், தேநீர் இடைவேளை நேரங்கள் அனைத்தும் போக சரியான அளவு ஊதியம் கொடுக்காவிட்டால் என்ன பிரச்சனை செய்வார்கள்?

ஆனால் நேரம் காலம் பார்க்காமல் ஆண்டு முழுவதும் தான் வாழும் காலம் முடிய வெறும் புல்லுக்கட்டும் புண்ணாக்கும் மட்டுமே உணவாக கொண்டு தன்னையே கொடுத்து உழைத்து கொண்டிருக்கும் மாடுகளை அதன் வயதான காலத்தில் கூட வைத்து பராமரிக்காமல் அடிமாடாக அனுப்புவதில் என்ன நியாயம் இருக்க போகிறது?

தலைவலி, காய்ச்சல், உடல்வலி, அந்த நோய், இந்த நோய் என்று எந்த பசுமாடோ இல்லை எருதுகளோ வேலை செய்யாமல் படுத்துக் கிடப்பதுண்டா? தன் வாழ்நாள் முழுக்க அதன் கன்று குடிக்க வேண்டிய பாலை கூட முழுதாக குடிக்க விடாமல் தடுத்து எடுத்து விற்பனை செய்து வருவாயை பெருக்கி கொள்ளும் மனிதன் அதன் கடைசி காலத்திலாவது அதனை நிம்மதியாக இறக்க விட வேண்டுமா இல்லையா?

அவ்வாறில்லாமல் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதனுடைய கழுத்தில் பிரைஸ் டேகினை (PRICE TAG) தொங்க விட்டு பார்ப்பது சரியாக இருக்குமா?

பெற்ற தாய் தந்தையாகட்டும், இல்லை பசுமாடுகளாகட்டும், எந்த உயிரினமாக இருந்தாலும் தான் வாழும் காலம் முடிந்து, உழைக்கும் காலம் முடிந்து கடைசி காலத்தில் அவர்களை நிம்மதியாக உயிர் பிரிய விடுவதே சரியானதாக இருக்கும், பராமரிக்க முடியாவிட்டால் அவைகள் விட்டால் போதும், எங்காவது போய் மேய்ந்து தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.

ஒரு தாய் தன்னுடைய குழந்தையை பார்க்கும் கருணை பார்வைக்கு ஒப்பானது ஒரு பசுமாட்டின் பார்வை, தாய் கூட சில சமயம் குழந்தையை கோபப்படுவாள், ஆனால் எந்த பசுமாடாவது கோபபார்வை பார்த்து கண்டதுண்டா?


கன்றுகுட்டியாய் பிறந்ததில் இருந்து வளரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்களுக்கு பயனளித்து, உடல் தளர்ந்து, பலம் குன்றி, வயிறு ஒட்டிப்போய், எழும்பு தெரிய, கண்களில் வழியும் கண்ணீரோடு சாவதற்காக அடிமாடாக லாரியில் போகும் போது அவைகள் மனதில் என்ன நினைக்கும் என்று என்றாவது எண்ணி இருக்கிறோமா?

சிந்திக்க தெரிய இருக்க வேண்டிய ஆறாவது அறிவு இல்லாததால் அவை விலங்கினங்களாக உள்ளன, அவற்றுக்கும் சிந்திக்க தெரிந்து, என்ன தப்பு செய்தோம்? பிறந்ததில் இருந்து இவர்களுக்காக உழைத்ததை தவிர? கேவலம் காசுக்காகவா நம்மை கொல்வதற்காக அனுப்புகிறார்கள் என்று நினைத்தால் எந்த ஜென்மத்துக்கும் நம்முடைய சந்ததிகள் விருத்தியாகுமா?

காட்டில் வாழும் கொடிய விலங்குகளாக இல்லாமல், வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்கினங்களாக இருப்பதாலே ஆடு, மாடு, கோழி போன்றவை வீட்டு விலங்குகளாக சொல்லப்படுகின்றன, இந்த வீட்டு விலங்குகளை வளர்ப்பதற்கு ஜீவ காருண்யம் என்று வேறு சொல்கிறார்கள், இப்படி இந்த ஜீவன்களை கொல்ல சொல்லி எந்த காருண்யம் சொல்கிறது?

அதுவாவது பரவாயில்லை, சரியோ தப்போ இறைச்சி வெட்டுபவர்களும், கசாப்பு கடை வைத்திருப்பவர்களுக்கு கூட இது தங்களுடைய தொழில் என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது, ஆனால் ஒரு குடியானவன் வீட்டில் இருந்து அடிமாடாக அனுப்புவதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதுவே இதனை எழுதவும் காரணமாக அமைந்துவிட்டது.

கடைசியாக, பெற்ற தாய் தந்தையை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவதும், உழைத்து களைத்த பசுமாடுகளை பணத்துக்காக அடிமாடாக அனுப்புவதும் ஒன்றே, இனிமேல் வீட்டு விலங்குகள் என்று பசுமாடுகளை சொல்லாதீர்கள், உண்மையில் வீட்டு விலங்குகள் அவையல்ல..! ……………………………….???????