கேன்சரை பற்றி எனக்கு மருத்துவ ரீதியாக ஒன்றும் தெரியாது, ஆனால் உணர்வு பூர்வமாக அனுபவித்து உள்ளேன். அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மார்பக புற்றுநோய் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது, சிகப்பு ரோஜா மட்டுமே, ஒவ்வொரு வருடமும் கோவை குப்புசாமி நினைவு மருத்துவமனையில், அக்டோபர் மாதம் பரிசோதனைக்கு வரும் புற்று நோயாளிகளின் கையில் சிகப்பு ரோஜாவினை கொடுத்து குணமடைய வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள், சென்ற வருடம் என்னுடைய அம்மாவிற்கு கொடுத்த சிகப்பு ரோஜாவினை நான் கையில் வைத்திருந்தேன், கடந்த 3 வருடங்களாக அக்டோபர் மாதம் தவறாமல் ஒரு சிகப்பு ரோஜா எனக்கு கிடைக்கும், எனது அம்மா அந்த ரோஜாவினை எனது கையில் தந்து சிரிப்பார்கள், இந்த வருடம் எனது அம்மாவும் இல்லை, அந்த ரோஜாவும் இல்லை. கடந்த ஜூன் மாதம் எனது தாயார் இறந்து விட்டார்கள்.
3 வருடங்களுக்கு முன்பு எனது பெரியம்மா உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருந்தார்கள், அவர்களை பார்ப்பதற்காக, நாங்கள் குடும்பத்தோடு போயிருந்தோம், அப்பொழுது எனது அப்பா அம்மாவிடம், மார்பகத்தில் சிறிய கட்டி போன்று உள்ளது, சில நாட்களாக வலி ஏற்படுகிறது என்றாயே, இங்கே பரிசோதனை செய்து கொள்ளலாமே என்று கேட்டார், எனது அம்மா அது ஒன்றும் இல்லை, சும்மா சிறிய கட்டிதான் என்று கூறினார்கள், நாங்கள் விடாப்பிடியாக அடம்பிடித்து பரிசோதனை செய்ய வைத்தோம், பரிசோதனையின் முடிவில் மார்பக புற்றுநோய் என தெரிய வந்தது, இடிந்து போனோம், அப்பொழுது ஆரம்பித்தது, 3 வருடங்களாக ஆட்டி படைத்து விட்டது, எங்களுடைய தகுதிக்கு மேல் கடன் வாங்கி செலவு செய்தும், கடைசியில் நினைத்தபடியே நடந்து விட்டது. அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிவீச்சு சிகிச்சை என ஒவ்வொரு சிகிச்சை மேற்கொள்ளும் போதெல்லாம், எனது தாயார் என்னை விட்டு போய் கொண்டே இருந்தார், கீமோதெரபி சிகிச்சையினால் முடி கொட்டியது, வாயில் புண் வந்ததால் சாப்பிட முடியாமல் போய் உடல் மெலிந்தது, இத்தனைக்கும் புற்றுநோயின் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதிகப்படியான கீமோதெரபி சிகிச்சையினால், சக்கரை நோய் வந்தது, பிறகு கால் எழும்பிலும் புற்று நோய் பரவியது, நடக்க முடியாமல் போகும் நிலைக்கு வந்த போது, காலில் அறுவை சிகிச்சை செய்து இரும்பு ராடு பொருத்தப்பட்டது, காலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க மீண்டும் கீமோதெரபி, கூடவே கதிர்வீச்சு சிகிச்சை, மீண்டும் கொஞ்சம் வளர்ந்த முடிகள் கொட்டிப் போயின, கடைசியாக நடக்க முடியாமல் போய் படுத்த படுக்கையானார், மீண்டும் புற்றுநோய் லிவரையும் (LIVER) தாக்கியது, லிவரில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க கொடுக்கப்பட்ட மாத்திரையின் மூலம், உடல்நிலை மிகவும் மோசமானது, கடைசியாக ஒருவாரம் விடாமல் இரத்த வாந்தி எடுத்தார், இரண்டு முறை பல்ஸ் ரேட் குறைந்து இறப்பிற்கு பக்கத்தில் போய் மீண்டு வந்தார், கடைசியாக தாங்க முடியாத கால் வலியினால் மருத்துவமனைக்கு கொண்டு போனோம், அடுத்த நான்கு நாட்களில் இறந்து போனார்.
குப்புசாமி நினைவு மருத்துவமனையில் கேன்சர் நோயாளிகளுக்கு 5 வருடங்கள் மட்டுமே செல்லக் கூடிய ஒரு ஒ.பி, அட்டையை கொடுப்பார்கள், 5 வருடத்திற்கு பிறகு அதனை மறுபதிவு செய்ய வேண்டும், அதனை வேடிக்கையாக எனது அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள், ஒருவேளை 5 வருடங்களுக்குள் சரியாகி சென்று விடுவார்கள், அல்லது 5 வருடங்களுக்குள் இறந்து விடுவார்கள் என்று கூறுவார், அது சரிதானோ என்று இப்பொழுது நினைக்கிறேன்.
புற்று நோயும், அதன் வலிகளும், அதன் சிகிச்சை முறைகள் தாங்க முடியாதவை, புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளும் மிகுந்த விலை உடையவை, சாதாரண நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களால் சிகிச்சையினை மேற்கொள்வதே கஷ்ட்டமாகும், மேலும் அதனை பற்றி விரிவாக கூற இஷ்ட்டமில்லை, அதை மீண்டும் ஒருமுறை நினைவு கூறவே கஷ்ட்டமாக உள்ளது, கேன்சரினை பற்றி எனக்கு தெரிந்த வரையில் விரிவாக எழுத வேண்டும் என நினைத்துதான் எழுத ஆரம்பித்தேன், ஆனால் இப்பொழுது முடியவில்லை, நமது பதிவுலகில் நிறைய நண்பர்கள் விரிவாக எழுதி உள்ளனர், குறிப்பாக, நண்பர் சாய் கோகுல கிருஷ்ணன் இந்த பதிவில் கேன்சரை பற்றி நன்றாக எழுதி உள்ளார்.
நமது நாட்டில் புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் பொதுவாக கூறும் சாக்காக, அவன் நிறைய புகை பிடிக்கிறான், மது அருந்துகிறான், அவனுக்கு என்ன கேன்சரா வந்தது? எனக்கு எல்லாம் கேன்சர் வராது என்று கூறிக் கொண்டு திரிகிரார்கள், கேன்சர் ரஜினியை போல, எப்பொழுது வரும், எப்படி வரும், யாருக்கு வரும் என யாருக்கும் தெரியாது, ஆனால், வரக்கூடாத நேரத்தில் வந்துவிடும், எனவே கூடுமானவரையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள். 30 வயதினை தாண்டிய உடனே வருடத்திற்க்கு ஒருமுறையாவது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள், 30 வயதிற்கு முன்னரே மெடிக்கிளைம் பாலிசி ஒன்றை போட்டு வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு பின்னர் போட நினைத்தாலும், ஏற்கனெவே உள்ள நோய்களையும், அடுத்து வரக்கூடிய சான்ஸ் உள்ள நோய்களுக்கும் பாலிசி செல்லாது என்று கூறி விடுவார்கள்.
கடைசியாக, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணையுங்கள், குழந்தையை போல அன்பு செலுத்துங்கள், அவர்களுக்கு நீங்கள் துணையாக இருக்கின்றீர்கள் என நம்பிக்கை ஊட்டுங்கள், நம்பிக்கை தானே வாழ்க்கை, நம்பிக்கை தானே எல்லாம்,
கேன்சரால் உயிரினை மட்டும்தான் எடுக்க முடியும், மனிதனின் நம்பிக்கையை, மன வலிமையை, எண்ணங்களை, ஒன்றும் செய்ய் முடியாது, தைரியத்தோடும், நம்பிக்கையோடும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளை எதிர்கொள்வோம். ஆதரவாய் இருப்போம்.
நமது பதிவுலகில் அனுராதா அம்மா அவர்கள் கேன்சரால் பாதிக்கப்பட்டு, அதனை தைரியமாக எதிர்கொண்டு, அவருடைய அனுபவங்களை, பல பேர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கேன்சருடன் ஒரு யுத்தம் என்ற தலைப்பில் எழுதி வந்தார், தற்பொழுது அவர் உயிருடன் இல்லை, அவருடைய சைட்டின் லிங்க்கை நான் பிளாக் ஆரம்பித்த நாளில் இருந்தே, என்னுடைய பிளாக்கின் வலப்புறத்தில் வைத்துள்ளேன், இருப்பினும் இம்மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக இருப்பதால், அதனை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கேன்சருடன் ஒரு யுத்தம் இந்த தளத்தினை மீண்டும் ஒருமுறை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், மேலும் உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் இந்த தளத்தினை அறிமுகப்படுத்துமாறும் கெட்டுக் கொள்கிறேன், இதன் மூலம் ஒருவராவது விழிப்புணர்வு அடைந்தால், அது விண்ணில் குடி கொண்டிருக்கும் அனுராதா அம்மாவிற்கு மிகுந்த சந்தோசத்தினை கொடுக்கும். நன்றி.