Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Thursday, January 27, 2011

ஊர தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் ...

நான் பிறந்து வளர்ந்தது இப்ப இருக்குறது எல்லாமே பல்லடம்னு சொல்ற ஊருதான், அதாங்க அமைதிபடை படத்துல சத்தியராஜ் தேர்தல்ல போட்டி போடுவாறே அதே தொகுதிதாங்க, அப்படி சொன்னாதான நிறைய பேருக்கு தெரியுது, பல்லடம் அப்படின்னா ஒரே ஊரு கிடையாதுங்க, பாளையம்கற பேரு முடியர மாதிரி ஒரு இருபது, முப்பது ஊரு சேர்ந்ததுதான் பல்லடம், ஒரு காலத்துல திருப்பூரே எங்க ஊர் கூடதான் சேர்ந்து இருந்ததுனா பார்த்துக்கோங்களேன், ரொம்ப வருசங்களுக்கு முன்னாடி எல்லாம் எங்க ஊருல பாதியளவு விவசாய பூமியா இருந்தது, ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவங்க முழுக்க விவசாயம் பண்ணிகிட்டு இருந்தாங்க, அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவங்க விவசாய வேலை பார்க்க பயன்பட்டுகிட்டு இருந்தாங்க, அப்ப எல்லாம் பொங்கல் சீசன் டைம்ல எங்க ஊரு முழுக்க சோளம், கம்பு, மக்காச்சோளம், தக்காளி, வெங்காயம் இப்படி பல தரத்துலயும் வெளஞ்சுகிட்டு இருந்த காலமது, விவசாய வேலைக்கும் சல்லிசா ஆளுங்க கிடைப்பாங்க, அத விட்டா நெசவு தொழிலும் அதிகமா நடக்கும்,  40 வயசுக்கு மேல இருக்குற ஆளுங்கெல்லாம் விவசாயமும் அத சார்ந்து இருக்குற தொழிலும் பண்ணுவாங்க, அதுக்கு கீழ இருக்குறவங்க எல்லாம் நெசவு, தறி, கோழிப்பண்ணைன்னு பொழப்ப ஓட்டிகிட்டு இருப்பாங்க, இப்ப காலம் மாறி சுல்சர் தறி அளவுக்கு வந்துருச்சி,

 இப்படி நல்லாதான் போயிட்டு இருந்த காலத்துல பருவ மழை பொய்க்க ஆரம்பிச்சது, பொதுவா சீசன்ல மழை பெய்ஞ்சாதான் டிராக்டர் விட்டு உழவு ஓட்டவே ஆரம்பிப்பாங்க, அப்புறம் எஞ்சி தேவைப்படுற தண்ணிக்கு கிணத்து தண்ணிய யூஸ் பண்ணிக்கலாம், இப்படி மழை பொய்ச்சதால, இருக்குற கிணத்து தண்ணிய வச்சு கொஞ்ச நாளைக்கு விவசாயத்த ஓட்டிக்கிட்டு இருந்தாங்க, அப்புறம் தண்ணி பஞ்சம் கடுமையாகவும் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய பூமி வறண்டு போக ஆரம்பிச்சது, அப்ப அதையே நம்பிகிட்டு வாழ்ந்துட்டு இருந்த ஜனங்க பொழைக்க என்ன வழி?
அந்த சமயத்துலதான் எங்க ஊருல இருந்து 15 கிலோமீட்டர் தொலைவுல இருந்த திருப்பூர் வழிகாட்டுச்சு, அப்ப திருப்பூர் வேகமா வளர்ந்துகிட்டு இருந்த காலமது, வயசானவங்கள தவிர்த்து மீதி இருக்குறவங்க கொஞ்ச பேரு திருப்பூருக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க, ஒரு நாள் முழுக்க வயக்காட்டுல உடம்பு வலிக்க வேளை செஞ்சா என்ன கூலி கிடைக்குமோ அதே கூலி திருப்பூர் பனியன் கம்பெனில 8 மணி நேரம் உட்கார்ந்து பனியன் பீசுகளை அடுக்கி கட்டி வச்சா கிடைச்சது, அதிக நேரம் வேலை செஞ்சா இன்னும் அதிகமா சம்பாதிக்கலாம், அதனால எங்க ஊருல இருந்து நிறைய பேரு திருப்பூர்க்கு வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க, அப்ப நிறைய கிராமங்களில சரியான பஸ் வசதி கிடையாது, டைம்முக்கு வர பஸ்ஸும் சில நாட்களில வராது, சில கிராமங்களுக்கு பஸ் வசதியே கிடையாது, அதனால பஸ் வசதி இருக்குற கொஞ்சம் கிராம மக்கள் மட்டுமே வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க, மிச்ச கிராமத்துல வாழ்ந்துகிட்டு இருந்த மக்கள் லாரிகள்ள மூட்டை தூக்கற வேலைக்கும், இன்ன பிற வேலைக்கும் போய் குடும்பம் நடத்தி சிரமப்பட்டுகிட்டு இருந்தாங்க.

இப்படி போய்கிட்டு இருந்த காலத்துலதான் அரசாங்கம் மினிபஸ் அப்படின்னு ஒரு திட்டத்த ஆரம்பிச்சாங்க, சும்மா சொல்ல கூடாது அந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு, ஒவ்வொரு கிராமத்தோட இண்டு இடுக்குலயும், சந்து பொந்துகள்ளயும் புகுந்து புறப்பட்டுச்சு மினிபஸ், ஒவ்வொருத்தங்க வீட்டு வாசல்லயே கொண்டு போய் இறக்கி விட்டுச்சு மினிபஸ், இதுக்காகவே காத்துகிட்டு இருந்த மாதிரி 10 வயசு பசங்க மொதக்கொண்டு வேலை செய்ய திருப்பூருக்கு படை எடுக்க ஆரம்பிச்சாங்க, இங்க ஒரு பழக்கம் இருக்குங்க, ஸ்கூல் பசங்களுக்கு பள்ளிக்கூடம் லீவு விட்டா போதும் நேரா பனியன் கம்பெனில கொண்டு போய் விட்டுருவாங்க, ஸ்கூல் லீவு முடியற வரை வேலை செஞ்சா கொஞ்சம் பணம் கிடைக்கும், அது புஸ்தகம் வாங்க உதவும்னு, ஆனா பயபுள்ளகள பார்த்தீங்கன்னா லீவு முடிஞ்சு பாதி பேரு ஸ்கூலுக்கு போக மாட்டானுக, அப்படியே போனாலும் வாத்தியார் சொல்லி கொடுக்கற பாடம் புரியலைன்னா கவலையே படாம வேலைக்கு போக ஆரம்பிச்சிருவானுங்க,

சரி மேட்டருக்கு வரேன், இந்த மினிபஸ் வந்தப்புறம் இன்னும் கொஞ்சம் பேரு அதிகமா வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க, இப்படி எத்தனை பேரு வந்தாலும் திருப்பூர் எப்படி தாங்குதுன்னு கேட்குறீங்களா? அங்கதான் இருக்குது சூட்சமம், நம்ம பசங்க முதல்ல அடுக்கி கட்டத்தான் போவாங்க, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வேலை பழகி டெய்லராகிடுவாங்க, மத்த வேலைக்கு போனவங்க, கட்டிங் மாஸ்டர், அயனிங் மாஸ்டர், பேட்டர்ன் மாஸ்டர்னு ஆகிருவாங்க, மாஸ்டர் ஆனா அப்புறம் ஸ்கூல் பசங்க மாதிரி கைமடிக்கறது, அடுக்கிகட்டறதுன்னு செய்ய முடியுமா, கொம்பு முளைக்கறதுன்னு கேள்வி பட்டு இருக்கீங்கலா? இங்க வந்தா நேர்லயே பார்க்கலாம், திருப்பூர்ல டெய்லர் உத்தியோகம்னா கலெக்டர் உத்தியோகம் மாதிரி, அந்த அளவு அலம்பல் பண்ணுவாங்க, அது எல்லாத்தையும் முதலாளிக ஏன் பொறுத்துக்குறாங்கன்னா, அவங்க தைச்சு கொடுத்தாதான் டைம்முக்கு  பனியன் துணியெல்லாம் பொட்டி போட்டு அனுப்ப முடியும், அதனால அவங்களுக்கு வேற வழி இல்லை, அதனால ஹெல்பர் வேலைக்கு புதுசா எத்தனை பேரு வந்தாலும் சேர்த்துகிட்டுதான் ஆகனும்,

இப்படி கொஞ்சம் கொஞ்சமா விவசாய வேலை பார்த்தவங்க எல்லாம் திருப்பூர் பக்கம் ஒதுங்கிட்டதால, பாரம்பரியமா விவசாயம் பார்த்தவங்க பசங்களும் திருப்பூர் பக்கமா ஒதுங்க வேண்டியது ஆகிபோச்சு, மிச்சம் மீதி இருக்குறவங்க மாட்ட வச்சு பால கறந்து பொழைக்க வேண்டியதாச்சு, இப்படியே போனா காசுக்கு என்ன வழி? அந்த டைம்ல வந்தது பாருங்க ஒரு புது புரட்சி ரியல் எஸ்டேட் பிசினஸ் அப்படின்னு, வந்த வேகத்துல செம பிக்கப், மாததவணை திட்டத்தால நிறைய பேரு நிலம் வாங்க ஆரம்பிச்சாங்க, காசுக்குதான் திருப்பூர் இருக்கே, வாரம் ஆனா சம்பளம், விவசாய நிலங்கள வச்சிருந்தவங்க காசுக்காக கொஞ்சம் கொஞ்சமா தன்னோட நிலங்களை ரியல் எஸ்டேட்டுக்கு விக்க ஆரம்பிச்சாங்க, இதனால எங்க ஊரு விவசாய நிலம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சுருங்கி இப்ப 80% நிலம் காணாம போச்சு, மீதி இருபது சதவிகித நிலத்துலதான் கொஞ்சமே கொஞ்சம் விவசாயம் நடக்குது, ஆனா அதுல வேலை செய்யவும் ஆள் கிடைக்குறது இல்லை, இப்ப திருப்பூர்ல இருக்குற பெரிய பெரிய நிறுவனங்கள் கம்பெனிக்கு பஸ்சு, டிராக்ஸ், ஜீப்பு, ஆம்னி ஏன் ஏசி பஸ்ஸு கூட வாங்கி விட்டுருக்காங்க, அந்த வண்டிக எல்லாம் நாய் புடிக்கற வண்டி மாதிரி காலையில எல்லார் வீட்டு முன்னாடியும் நின்னு ஆள் புடிச்சிட்டு போயிட்டு இருக்காங்க, முன்ன ஏக்கரா கணக்கா விவசாயம் பார்த்தவங்க இப்ப செண்டு கணக்கா விவசாயம் பாக்குறாங்க.

இப்ப வேலைக்கு ஆள் கிடைக்குதா? கூலி எவ்வளவு கேட்குறாங்கன்னு எனக்கு தெரிஞ்ச ஒரு தோட்டத்து நண்பருகிட்ட கேட்டேன், அதுக்கு அவரு சலிச்சிகிட்டே சொன்ன பதில், இப்ப யாருங்க வேலைக்கு வராங்க, வரவங்க எல்லாருமே 50 வயசு தாண்டுனவங்கதான், காலையில 7 மணிக்கு வேலைக்கு வராங்க, வேலை ஆரம்பிக்கறதுக்குள்ள 7.30 மணிக்கு டீ வாங்கி தரணும், டீ குடிச்சிகிட்டே 8 மணி வரைக்கும் ஓட்டிடுராங்க, அப்புறம் 8 மணிக்கு வேலை ஆரம்பிச்சா 9 மணி வரைக்கும் வேலை செய்வாங்க, 9 மணிக்கு காலை டிபன் அது 9.45 லிருந்து 10 மணி வரைக்கும் இழுப்பாங்க, அப்புறம் பத்து மணிக்கு வேலை ஆரம்பிச்சா 10.30 க்கு மறுபடியும் டீ டைம், டீ வாங்கி தரணும், டீ குடிச்சு முடிக்க 11 மணி ஆகும், 11 மணிக்கு மறுபடியும் வேலை ஆரம்பிச்சா 12.30 மணிக்கு சாப்பாட்டு நேரம், சாப்பிட்டுட்டு படுத்தாங்கன்னா மறுபடியும் 3 மணிக்குதான் வருவாங்க, அப்புறம் 3.30 க்கு டீடைம், அது முடிய 4 மணி ஆகிடும், மறுபடியும் 4 மணிக்கு வேலை ஆரம்பிச்சா 5 மணிக்கு கிளம்பிடுவாங்க, உடனே கூலி 350 ல இருந்து 400 வரைக்கும் கொடுக்கனும், விக்கிற விலைவாசியில டிராக்டர் வெச்சு உழுது, தண்ணி பாய்ச்சி, களை எடுத்து, உரம் போட்டு இவ்வளவு கூலி கொடுத்து விவசாயம் பாக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிடுது தம்பி, இப்ப சோளம் போட்டு இருக்கேன், இதோட நிறுத்திக்கலாம்னு இருக்கேன், அடுத்த வருசம் இத கூட செய்யுறதா ஐடியா இல்லைன்னு சொன்னாரு.

இப்படி கொஞ்சம் நஞ்சமா விவசாயம் பார்த்துகிட்டு இருக்குற 50 வயசு தாண்டுனவங்களுக்கும் இப்ப வந்திருக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், வேலையே செய்ய வேண்டியதில்லை, சும்மா போய் கையெழுத்து போட்டா போதும், பணம் கொடுக்கறவரு கமிசன் 30 ரூபா போக 70 ருபா கைக்கு வந்திடும், கலைஞர் வேற 1 ரூபா அரிசி கொடுக்கறாரு, கூடவே கலர் டிவியும், அப்புறம் என்ன அரிசிய வாங்கி போட்டு சாப்பிட்டுட்டு களைப்பு தீர டாஸ்மாக்குல ஒரு கட்டிங் வாங்கி போட்டுட்டு இலவச டிவியில மானாட மயிலாட பார்த்தா போதாதா, விவசாயமாவது வெங்காயமாவது, ஏற்கனவே டிவி இருக்குறவங்க இலவச டிவிய வாங்கி 500 க்கும் ஆயிரத்துக்கும் வித்து சரக்கடிச்சிட்டு இருக்காங்க, ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்னு வேற சி.எம் சொல்லி இருக்காரு, அடுத்து இலவசமா வரப்போவது பம்பு செட்டு, டிவிக்கே 500 கிடைச்சா பம்பு செட்டுக்கு ஆயிரமாவது கிடைக்காதா என்ன? என்னெமோ போடா மாதவா....

இதை எல்லாம் பார்குறப்போ யாரோ எழுதின கவிதைதான் ஞாபகத்துக்கு வருது..

நெல்லு போட்டேன்
சோளம் போட்டேன்
அரிசி போட்டேன்
ஒன்னுமே
லாபம் தரலை
’’பிளாட்டு’’ போட்டேன்
அமோக லாபம்...!

[நண்பர்களே ஓட்டினை விட பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களையே நான் அதிகம் எதிர்பார்க்கிறேன், அதனால் ஒட்டளிக்க செலவிடும் நேரத்தில் பின்னூட்டம் இட்டு என்னுடைய நிறை குறைகளை சுட்டி காட்டுமாறு கேட்டு கொள்கிறேன், நன்றி...]
அன்புடன்
இரவு வானம்