Saturday, September 22, 2012

சுந்தர பாண்டியன் ..!நான் காலேஜ் படிச்சுகிட்டு இருந்த சமயம், எல்.ஆர்.ஜி காலேஜ் பொண்ணுகளை பாக்குறதுக்காகவே 7F பஸ்சுல ஏறி தவறாம ரூட்டு விடுவோம், கொஞ்ச பேருக்கு பிக்கப் ஆகி இருக்கு, நிறைய பேரு ஒன்சைடாவே லவ் பண்ணியும் திருப்திபட்டுக்கிட்டாங்க, இப்பவும் நிறைய பேரு அந்த திருப்தியே போதும்னு டைம் பாஸ் பண்ணுராங்க.

ஆனா உண்மைய சொல்லனும்னா பொண்ணுங்க கிட்ட நேரா போய் நின்னு காதலை சொல்ல அசாத்திய தைரியம் வேணும், ஆறு கொலைய அசால்ட்டா பண்ணுனவனும் சரி, ஆறு லிட்டர் சாராயத்த அசராம குடிக்கறவனா இருந்தாலும் சரி, காதலை சொல்லனும்னா காத தூரம் ஓடிருவானுக, பஸ்சுல நடக்கற காதல் கலாட்டா எல்லாமே சுவாரஸ்சியம்தான், காலா காலமா தமிழ்சினிமா காதல் பார்ட்டுகல்ல பஸ்சுக்கும் ஒரு இடம் உண்டு.

எங்க கூட சைட் அடிச்ச ஒன்னு ரெண்டு பசங்களுக்கு பிக்கப் ஆகி இருந்தாலும் இந்த பொழப்பே வேணாம்னு நினைக்கற அளவுக்காக சம்பவங்களும் நடந்திருக்கு, ஒரு காதலர் தினம் அன்னைக்கு ரோஜாவோட காதலை சொன்னவனை ரோஜா மாலை போட்டு அடக்கம் பண்ணுற அளவுக்கு பஸ் ஸ்டாண்டுலயே போட்டு பொரட்டி எடுத்தாங்க அந்த பொண்ணோட சொந்தக்காரங்க, பையன் மூச்சு பேச்சில்லாம கிடந்ததக்கு அப்புறம்தான் விட்டுட்டு போனாங்க.


இன்னொரு சம்பவமும் காதலர் தினம் அன்னைக்கு நடந்ததுதான், வேறொரு பஸ்சுல கண்டக்டரா இருந்தவரு அந்த பஸ்சுல வர காலேஜ் பொண்ண லவ் பண்ணியிருக்காரு, அந்த பொண்ணுக்கு பிடிக்கலையோ வேற என்ன பிரச்சனையோ அதுக்கப்புறம் அந்த பொண்ணு அந்த பஸ்சுல போகாம நாங்க போற 7F பஸ்சுல வந்துட்டு இருந்தது, கரக்டா காதலர் தினம் அன்னைக்கு அந்த கண்டக்டர் அண்ணன் கிரீட்டிங் கார்டும் பூவுமா பஸ்சுல ஏறி ஐ லவ் யூ சொல்ல அந்த பொண்ணு சப்பு சப்புன்னு கன்னத்துல அறைஞ்சு செருப்ப கழட்டி அடிச்சு கிரீட்டிங் கார்ட கிழிச்சு எறிஞ்சு ஒரே ரகளை பண்ணிருச்சு, ஓடற பஸ்சுல இருந்து குதிச்ச ஆளு சாணிப்பவுடர குடிச்சுட்டாரு, எங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் கண்டக்டர் நல்ல மனுசந்தான், ஆனா என்ன பண்ண?

அதுக்கப்புறம் அவரை அந்த பஸ்சுல பாக்கவே முடியல, விசயம் கேள்விபட்ட அவர் வேலை செஞ்ச தனியார் பஸ் முதலாளியும் வேலைய விட்டு நிறுத்திட்டாங்க, இது மாதிரியான சம்பவங்கள நேர்ல பார்த்தாலே ஒன் சைடு லவ்வே போதும்டான்னு தோணும், இது மாதிரி நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு, அதுல ஒரு கதையை இந்த பிளாக்ல எழுதியும் இருக்கேன், (காதல்ங்கற லேபிளை கிளிக் பண்ணி படிக்கலாம்)

ஓகே இனி சினிமா சுந்தரபாண்டியன்


இது மாதிரியே பஸ்சுல போற பொண்ணை பிக்கப் பண்ண முடியாத நண்பணுக்கு ஹெல்ப் பண்ண போய் தானே பிக்கப் பண்ணும் நாயகனின் கதைதான் சுந்தரபாண்டியன், ஹீரோவுக்கு முன்னாடியே நாலைஞ்சு பேரு டிரை பண்ணி பல்ப்பு வாங்கியிருக்க, அவங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து ஹீரோவுக்கு பல்ப்பு கொடுக்க டிரை பண்ண ஒரே காமெடிதான்.

தென்னமட்டை, தென்னங்குருத்து, பிளம்பிங் ஹேமர், குத்தூசி, இரும்புதடிகளால் அடித்துக் கொல்லும் அதிநவீன சண்டை காட்சிகளும் படத்துல இருக்கு, ஆரம்பத்தில் சுமாராக தெரியும் கதாநாயகி போக போக சூப்பராக தெரியும் அதிசயமும் நடக்குது.

”பச்சகுழந்த போல கொஞ்சி சிரிப்பாண்டி” என்னும் பாடல் வரிக்கு வாயில் சட்டை காலரை கவ்விக் கொண்டு சிரிக்கும் இளைய தளபதித்தனமும் இருக்குது, :குத்துனது நண்பணா இருந்தா செத்தா கூட வெளிய சொல்லக்கூடாது போன்ற வசனங்கள், டான்ஸ் ஆடி புகழ்பெற்றவர், ஸ்டைல் பண்ணி புகழ்பெற்றவர், சண்டை போட்டே புகழ்பெற்ற நடிகர்களை போல வசனம் பேசியே புகழ் பெற்ற நடிகராக சசிக்குமாரை காட்டுகிறது.


பயங்கரமான கதை எடுக்கிறேன், வித்தியாசமான படம் எடுக்கிறோம் என பிலிம் காட்டாமல் சசிக்குமாரின் வழக்கமான காதல், நட்பு, துரோகம், அடிதடி என்ற பார்முலாவிலேயே படம் நகர்ந்தாலும் ரஜினிகாந்திற்கு பிறகு சசிக்குமாருக்காகவே படம் பார்க்கும் கூட்டம் வருவது அதிசயம்தான், வெகு நாட்களுக்கு பிறகு துளிகூட ஆபாசம் கலக்காமல், போரடிக்காமல், ஒரு சாதாரண கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை போல காதலியை மீட்கும் இந்த சுந்தரபாண்டியனும் மக்களை கவர்கிறான் என்பதற்கு படம் பார்க்க வரும் பெண்கள் கூட்டமே சாட்சி.