Wednesday, August 22, 2012

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் கேள்விகுறியான மாணவனின் எதிர்காலம் - உதவி வேண்டி விண்ணப்பம் ..!


அன்புள்ள வலையுலக அன்பர்களுக்கு
சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், படித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

ஹாய் சுரேஷ் அண்ணா,
உங்கள் வலைப்பூவை பார்த்து படித்து உங்களிடம் எனது எண்ணங்கலை பகர்ந்து கொள்ள விரும்புகிறேன் .நான் திருப்பூரில் வசிக்கிறேன் எனது பெயர் கி.லோஹித் குமார் வயது 19 . என் அப்பா கிருஷ்னராஜ் அம்மா தனலக்ஷ்மி. நான் 10 வகுப்பு வரை திருப்பூர் சுப்பையா பள்ளியில்படித்தேன்.கல்வி மேம்பாட்டுக்காக நான் ஈங்கூரில் உள்ள கங்கா பள்ளி விடுதியல் +1 வகுப்பில் 2008 ஆம்ஆண்டு சேர்ந்து படித்துகொண்டு இருந்தேன். +1 முடித்து +2 வில் வகுப்பில் முதல் மாணவனாக படித்தேன். தவிர,நான் மாவட்ட அளவில் கைபந்துவீரன்.அது சமயம் 20 .10 .2009 அன்று எனதுஉடல் நிலை சரி இல்லாமல் இருந்த்தது பள்ளி விடுதி காப்பாளர்களின் கவனக்குறைவினால் நான் தனியாக உணவு உண்டு விட்டு வரும்போது திடிரென்று மயக்கம் வந்து படியில் மேல்பகுதியல் இருந்து கீழ்பகுதியல் விழுந்ததில் எனது வாழ்கையே மாறிவிட்டது.


காரணம்,விடுதிகாப்பாளர்களின் கவனக்குறைவு அலட்சியம் எனக்கு அன்று காலை முதல் உடல்நிலை சரீல்ல அதை உணர்ந்து அவர்கள் செயல்பட்டு இருந்தால் எனக்கு எந்த நிலை ஏற்பட்டு இருக்காது.சுமார் 2 ஆண்டுக்கு மேலாக படுக்கையில் இருக்கிறேன் இன்று நான் மற்றவர் உதவி நாடி உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.எனக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் வரகூடாது ஓவ்வொரு பள்ளிஇயலும்stretcherஅவசியம்வைத்து இருக்கவேண்டும்.இனிமேலும் பள்ளிகளில் எந்த மாணவன் விழுந்தாலும் stretcher மட்டுமே படுக்க வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் நான் படும் துன்பம் இனி எந்த உயர்களும் படகூடாது இதற்கு அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

இதனால் நான் படிப்பை இடையில் விட்டபோதும் 2 ஆண்டுகள் கழித்து +2 தேர்வை உதவியாளரோடு எழுதி 953 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தேன். இன்றுவரை என் பெற்றோர்கள் செய்யும் மருத்துவ செலவுகள் அனைத்தும் அவர்கள் வருமானத்துக்கு உட்பட்டு செய்கிறார்கள் அப்படி முடியாதவகையில்செலவு வரும்போது நண்பர்கள் நன்கொடை மூலம் உதவி செய்கிறார்கள். இதுவே எனது என்றைய நிலைமை. நான் விரைவில் எழுந்து நடமாடவேண்டும நமது வலை முலம் வலைபூமூலம் அனைவரும்ஆண்டவனை பிராத்திக்கவேண்டுகிறேன்.நான் எப்பொழுது எழுந்து நடப்பேன் இதற்க்கு யார் பொறுப்பு ?.....பள்ளி நிர்வாகமா? விடுதி காப்பாளரா? என் பெற்றோரா? உங்களின் மேலான பதிலுக்கு காத்திருக்கிறேன்.
நன்றி
கே.லோஹித் குமார்.


மின்னஞ்சலை படித்து முடித்ததும் மனதுக்குள் ஏதோவொரு கனம் ஏறிக்கொண்டது, பெரும்பாலான விபத்துக்களில் உயிரிழப்பு, உடல் அவயங்கள் இழப்பு நேரிடுவது என்பது சரியான நேரங்களில் கொண்டு செல்ல தவறுவது, அல்லது சரியான முறையினில் கொண்டு செல்ல தவறுவது போன்ற காரணங்களாலே நடக்கிறது, லோஹித்தை பொறுத்தவரை கழுத்தெலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது, அதனையறியாமல் அல்லது சரியான முறையில் கையாள தெரியாமல் பள்ளி நிர்வாகம் கொண்டு சென்றதே அந்த தம்பியின் இப்பொழுதைய நிலைக்கு காரணம், இந்நிலை மேற்கொண்டு எந்த மாணவருக்கும் நடக்காமல் பார்த்துக் கொள்வது பள்ளிகள், மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு, ஒவ்வொரு உயிரிழப்பு நேரிடும் போதும், ஆறுதல் சொல்வதும், நிவாரணம் அழிப்பதும், பேருக்கு ஒரு நடவடிக்கை எடுப்பதும் சரியாக இருக்காது.

வரும்முன் காப்பதே சிறந்தது என்னும் பழமொழிக்கெற்ப ஒவ்வொரு பள்ளியும், தன்னுடைய பள்ளிகளில் அவசரகால வெளியேற்றும் வழிகள், தீ தடுக்கும் கருவிகள், அதனை செயல்படுத்தும் வழிமுறைகள், அடிபட்டால் கொடுக்க வேண்டிய முதலுதவி பயிற்சிகள் பெற்றவர்கள், ஸ்டெரெச்சர்கள், மருத்துவ செவிலியர்கள், அதிகம் பேர் படிக்கும் பள்ளிகளில் குறைந்த பட்சம் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸ், நீச்சல் பயிற்சி அளிக்கும் குளங்களில் தகுந்த கண்காணிப்பாளர்கள், சரியான முறையில் பராமரிக்கப்படும் பேருந்துகள், தகுந்த அனுபவமுள்ள டிரைவர்கள் என சகலமும் செய்து தர வேண்டும், அப்படிப்பட்ட பள்ளிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும், இதனை தொடர்ச்சியாக அரசாங்கமும், தன்னார்வலர்களும் கண்காணிக்க வேண்டும், அப்படிப்பட்ட நிலைமை வந்தாலொழிய இது போன்ற விபத்துகளும், இன்னொரு லோஹித்குமாரும் உருவாகாமல் தடுக்கும். இது நடக்குமா? அரசாங்கம் விழிக்குமா

 லோஹித்குமாரின் தற்போதைய நிலை :-       


வணக்கம்  உமது பதில் மடலை பார்த்து மகிழ்ந்தோம்.நான் லோஹித் அம்மா கி.தனலட்சுமி,லோஹித் கீழே விழுந்து  கழுத்து எலும்பு c5 ஐல்  fracture  ஏற்பட்டு அதனை ஆபரேஷன் செய்து சரி செய்து விட்டோம் நரம்புகளில் பாதிப்பு ஏற்ப்பட்டதால் இன்னும் நடக்க, உட்காரக்கூடமுடியாது.தவிர அவனுக்கு மார்பில் இருந்து பாதம்வரை எந்த உணர்வும்  இல்லை.  அவன் தன்னுடைய தேவைகள் எதுவும் செய்ய முடியாது.ஒரு வாய் தண்ணீர் கூட நாம்தான் கொடுக்க வேண்டும்.உணர்வு இல்லாமல் இருப்பதால் அவனால் திரும்பிகூட படுக்க முடியாது.2 மணி நேரத்துக்கு ஒருமுறை பக்கம் மாற்றி படுக்கவைக்க வேண்டும்.இரவு பகல் எல்லா நேரமும் எப்படி மாற்றி படுக்கவைக்க வேண்டும்.உணர்வு இல்லாமல் இருப்பதால் உடம்பில் படுக்கைபுண் வராமல் இருக்க இப்படி செய்வது  அவசியம். physio therapy  treatment  மூலம் குணமாகும் என்று  2 வருடங்கள்  hospital இல் வைத்து பார்த்தோம் பலன் ஏதும் இல்லாமல் வீட்டுக்கு வந்துவிட்டோம்.தற்போது ஆயுர்வேதம் சிகிச்சை  செய்தவருகிறோம்

                   

முன்பைவிட சிறிது தேவலாம்.மாதம் ரூபாய் 3500 செலவாகிறது. உங்கள் அன்பின் மூலம் அன்பர்கள் யாரேனும் உதவினால் நாங்கள் நன்றிகடன்பட்டவராக  இருப்போம்.அவனை சரியான முறையல் hospital  கொண்டு சென்று இருந்தால் இவளோ பாதிப்பு ஏற்பட்டு இருக்காது நாங்கள் திருப்பூர் பாண்டியன் நகர் அருகில் இருக்கும் இந்திரா நகரில் வசிக்கறோம். நீங்கள் லோஹித் பார்க்க விரும்பினால் வரலாம்.லோஹித் கைபேசி 9003504843 எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்.

இதனை தொடர்ந்து நானும், வீடு சுரேஷ்குமார் அவர்களும் லோஹித்தை அவர்கள் வீட்டிற்கு சென்று சந்தித்தோம், இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் படுத்த படுக்கையாக இருந்தாலும் பட்டப்படிப்பினை தொலைதூர கல்வியின் மூலமாக படித்து வருகிறார், வீட்டில் இருந்தபடியே எதாவது வேலை செய்ய வேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருக்கிறார்.

லோஹித்தின் ஒவ்வொரு அசைவிற்கும் யாராவது ஒருவரின் உதவி தேவை என்பதால் அவரது தந்தை கிருஷ்ணராஜ் அவர்களும், தாயார் தனலட்சுமி அவர்களும் அருகிலிருந்தே பார்த்துக் கொள்கிறார்கள், தொலைவில் வேலைக்கு சென்றால்கூட சிரமம் என்பதால் கிருஷ்ணராஜ் அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே குறைந்த ஊதியம் என்றாலும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது,

பல லட்ச ரூபாய்கள் தாண்டிய மருத்துவ செலவு, எப்பொழுது மகன் குணமாவான் என்பது தெரியாத நிலை, வீட்டுசெலவிற்கே வருமானம் சரியாக இருக்கும் நிலையில் மாதம் 3500 ரூபாய் அளவிற்கு ஆகும் மருந்து செலவு என திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், உதவும் நல்ல உள்ளங்களின் கருணையால் மட்டுமே தற்பொழுது மருத்துவ செலவினை சமாளித்து வருகிறார்கள்.

எனவே இப்பதிவினை படிக்கும் வலையுலக அன்பர்கள் திரு. லோஹித்குமார் அவர்கள் உடல்நிலை சரியாகவும், எழுந்து நடக்கவும் பிரார்த்தனை செய்யுமாறும், உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு உதவலாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்,

மேலதில முழு விபரங்களுக்கு இதனை கிளிக்கி படித்து பார்க்கவும்


முகவரி

Mr. K. LOHITH KUMAR
S/O S. KRISHNA RAJ
12, SV COLONY LANE VEEDHI
P.N. ROAD
TIRUPUR - 641602
PH. NO :- 98434 88028, 99942 55262, 90035 04843

BANK DETAILS

STATE BANK OF INDIA
BAZZAR BRANCH
TIRUPUR
S/B ACCOUNT NO : 30893697770
IFSC : SBIN0008677

லோஹித்குமாரை பார்க்க விரும்புகிறவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நேரில் சென்று காணலாம், லோஹித்தை தொடர்பு கொள்ள மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், உங்களுக்கு தெரிந்த உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல் இருந்தால் தயவுசெய்து பகிரவும், வீட்டில் இருந்தபடியே செய்யும் தொழில் பற்றிய தகவல் இருந்தாலும் பகிரவும், நன்றி.

டிஸ்கி :- சம்பவம் நடந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகியும் இன்னமும் லோஹித்குமார் படித்த ஈங்கூர் பள்ளியில் ஸ்ட்ரெச்சர் வசதி செய்யபடவில்லையாம், தன்னுடைய பள்ளியில் படித்த ஒரு மாணவனின் தற்போதைய நிலையை உணர்ந்தும், பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் பாதுகாப்பிற்காக கவலைப்படாத இது போன்ற பள்ளிகள் இருக்கும் வரை எந்த நம்பிக்கையில் பள்ளிக்கு சென்ற மகன் அல்லது மகள் பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என வீட்டில் உட்கார்ந்திருக்க முடியும்?


Thursday, August 16, 2012

கமர்சியல் பக்கங்கள் - 16/08/2012நாட்டின் 66 ஆவது சுதந்திரதினம் நாடுமுழுக்க நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது, ஒவ்வொரு சுதந்திரதினத்தன்றும் நாட்டுப்பற்று பெருக ஒவ்வொருவரும் தேசியக்கொடியை சட்டை பையில் குத்திக் கொள்வதும், வண்டிகளில் ஒட்டி வைப்பதும், பள்ளிகளில் தோரணமாக தொங்கவிடுவதும் வழக்கமான செயல்தான், ஆனால் அடுத்த நாள், அடுத்தடுத்த நாட்களில் பார்த்தால் அவ்வாறு பயன்படுத்தப்பட்ட தேசியக்கொடிகள் வீதியெங்கும் இறைந்துகிடப்பதும், சாலைகளில் பறப்பதும், சாக்கடைகளில் விழுந்துகிடப்பதும் வருடம்தோறும் காணக்கிடைப்பது வருத்தப்பட வேண்டிய நிகழ்வாகும்.

நாட்டின் தேசியக்கொடி எவ்வளவு புனிதமானது, பயன்படுத்திவிட்டு வீசியெறிய இது என்ன தண்ணீர் பாக்கெட்டா? சுதந்திரதினம் முடிந்தவுடன் வீட்டில் பாதுகாப்பாக வைக்கமுடிந்தால் மட்டுமே தேசியக்கொடியை வாங்க வேண்டும், இல்லையென்றால் இந்தியன் என்ற உணர்வு மனதில் இருந்தாலே போதுமானது, அதைவிடுத்து தேசப்பற்றை காட்டுகிறேன் என தேசியக்கொடியை வாங்கிவிட்டு காற்றில் வீசியெறிவது அநாகரீகமான செயல்.

டிவி நிகழ்ச்சிகள் :-

வழக்கம்போலவே டிவிநிகழ்ச்சிகள் முழுவதும் திரைநட்சத்திரங்களே ஆக்கிரமித்து தேசப்பற்றினை காட்டிக் கொண்டிருந்தார்கள், சுதந்திரத்திற்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? அதுவும் ஒரு நிகழ்ச்சியில் டிவி நட்சத்திரங்களிடம் சுதந்திரம் பற்றிய கேள்வி கேட்டு கொண்டிருந்தார் இமான் அண்ணாச்சி, N.S.C போஸ் என்ற பெயரில் அந்த N.S.C எதை குறிக்கிறது என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் அவர் யார் என்றே தெரியாது என கூறிவிட ஒருவர் மட்டும் நேஷனல் சுபாஸ் சந்திர போஸ் என சொன்னது காலக்கொடுமை 

இதற்கிடையில் புதிய தலைமுறை டிவியை சென்னையில் தெரியவிடாமல் சன்குழுமம் எஸ்.சி.வி தடுப்பதாக புலம்பிக் கொண்டிருந்தார்கள், என்னதான் தடுத்தாலும் புதிய தலைமுறை நிகழ்ச்சிகளுக்கு தனியே ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது, இருட்டடிப்பு செய்தாலும் மக்கள் மீண்டும் சன்நியூசுக்கு திரும்புவதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது போலருக்கே !!!

சி.எம் செல் :-

மக்களின் குறைகளை தீர்க்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது, கோரிக்கைகளை பதிய புதிய பயனாளர் பகுதியில் முழு முகவரியையும் பதிய வேண்டும், பிறகு உள்நுழைவு, கடவுசொல்லை பயன்படுத்தி மக்களின் குறைகளை பதியலாம்.
ஒரிஜினல் நடுநிலைவாதி


எதிர்பார்க்கும் மொக்கை படம்

திடீர்னு ஒருநாள் பார்த்தா திருப்பூர் முழுக்க அண்ணனோட போட்டோதான் சும்மா பிளக்சுல டுப்பாக்கியோட பளபளன்னு மின்னுராரு, ஒருஎடம் பாக்கியில்ல, ஏறகுறைய 15 கிலோமீட்டர் ரவுண்ட் அப் பண்ணி ஒட்டியிருந்தாங்க அண்ணனின் விழுதுகள், யாருய்யா நியி? இத்தன நா எங்கிருந்த? திடீர் திடீர்னு எங்கிருந்துய்யா வரீங்க?ன்னு நெம்ப குழப்பமா இருந்துச்சு, அப்புறம்தான் தெரிஞ்சது அண்ணன் சின்னம்மாவோட அக்கா பையன் பாஸ் என்கிற பாஸ்கரன்தானாம், நடிச்சு மொதபடம் வெளிவரல்ல, அதுக்குள்ள ரசிகர் மன்றம், பிளக்ஸ்ல விளம்பரம்னு, ம்ம்ம் கலக்குங்க பாசு, படத்து பேரே தலைவனாம்.


தாய் மண்ணே வணக்கம்நான் இப்பொழுது சுதந்திர பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், சுதந்திரம் இல்லாத அடிமைபூமியில் வாழ்ந்து எதிர்கால நாட்டின் மக்களுக்காக சுதந்திரத்திற்காக போராடிய என் நாட்டின் அனைத்து முன்னோர்களையும், போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் இக்கணத்தில் நினைத்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளேன்.

இந்தியநாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நாட்டின் 66 ஆவது சுதந்தர தின நல்வாழ்த்துக்கள், ஜெய்ஹிந்த்..!


Tuesday, August 7, 2012

செல்வி அக்காகாலையில் ரோட்டினை கடக்கும்பொழுது திடீரென்றுதான் செல்வி அக்காவை பார்க்க நேர்ந்தது, போட்டிருந்த கண்ணாடியை தாண்டி அந்த முட்டை கண்களும், புருவங்களும் கூட ஆச்சரியத்தையும், விசாரிப்பையும் ஒருசேர காட்டின.

அப்பொழுதும் பேசவில்லை, இப்பொழுதும் பேசவில்லை.

என்ன நினைத்திருப்பாள்? சின்னதம்பி பிரபு போலவே இருப்பேன் என நினைத்திருப்பாளோ? இப்பொழுது ஒல்லியாகிவிட்டதால் ஆச்சரியம் காட்டியிருப்பாளோ? இல்லை வெகுகாலம் கழித்து பார்ப்பதால் ஏற்பட்ட ஆச்சரியம் கலந்த பார்வையோ?

செல்வி அக்கா

சிறுவயதில் நாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்தவள், எங்கள் வீட்டிற்கு நான் ஒரே மகன் என்பதால் அம்மாவை தவிர அக்காள், தங்கை என எந்தவிதமான பெண் பாசமும் கிட்டியதில்லை. 

அக்காவை கிடைத்திருப்பவர்கள் பாக்கியசாலிகள், அவர்களுக்கு இரண்டு தாய்கள், அழுதால் பாசமாக அரவணைக்க, கோபம் வந்தால் சண்டை போட, யாருமே இல்லாவிட்டாலும் உலகில் நமக்கு ஒருவர் இருக்கிறார் என உணர்ந்த, என எல்லாவுமாகவே அக்காக்கள் இருப்பார்கள் என எனக்கு உணர்த்தியதே செல்வி அக்காதான்.

சிறுவயதில் நான் குண்டாக இருப்பேன், என் பால்யவயது நண்பர்கள் குண்டா என அழைக்கும்போதெல்லாம் அவர்களின் கிண்டலில் இருந்து தப்பிக்க பெரும்பாடுபடுவேன், சண்டையிடுவேன், கடைசியில் தோற்று போவேன், வேறுவழியில்லமல் இயலாமையின் உச்சத்தில் அழுகைதவிர மாற்று ஏதுமில்லாமல் போகும், அவ்வாராண ஒருதருணத்தில்தான் செல்வி அக்காவின் கருணை எனக்கு கிடைத்தது.

போங்கடா எல்லாரும், இனிமேல் யாராச்சும் அவனை கிண்டல் பண்ணா அடிப்பேன் என எனக்கு முதன்முதலாக பக்கபலமாக ஆறுதலாக வந்தாள், அப்போதிலிருந்தே அக்காவை எனக்கு பிடித்து போனது, பிடித்தது என்று சொல்வதைவிட அக்கா பைத்தியம் பிடித்தது என்றே சொல்லலாம்.


என் பால்ய நண்பர்கள் விளையாட கூப்பிட்டால்கூட செல்லாமல் அக்காவுடன் சேர்ந்து பன்னாங்கள் விளையாடுவது, நொண்டிவிளையாடுவது, எட்டுகுச்சி விளையாடுவது என அக்காவுடனே பொழுதை கழிக்க ஆரம்பித்தேன், அதிலும் எட்டுகுச்சி விளையாட்டில் நானே ஜெயிப்பதால் என் தலையில் குட்டி செல்லமாக அலுத்துக் கொள்வாள்.

செல்வி அக்காவின் அப்பா வாங்கிதரும் பொரி உருண்டை, இலந்தைவடை, அஞ்சு பைசா மிட்டாய்கள் என அனைத்து திண்பண்டங்களிலும் எனக்கு பங்குதருவாள், அதிலும் அக்கா பள்ளி முடிந்து வருகையில் வாங்கி வரும் கம்மர் கட்டை பாவடையின் நுனியில் வைத்து கடித்து பாதி தருவாள், அந்த கம்மர்கட்டின் சுவை எச்சிலுடன் இப்பொழுதும் நினைவிருக்கிறது.

அக்காவின் பாவாடையை பிடித்து ரயில் வண்டி விளையாடுவது, இலந்தை பழம் பொறுக்க போவது, வெள்ளிக்கிழமை அவர்கள் வீட்டில் ஒளியும் ஒலியும் பார்ப்பது, ஞாயிற்றுகிழமை சக்திமான், ஜூனூன், திரைப்படம் என அக்காவே வாழ்க்கையாக சுழன்ற நாட்களுக்கு வசதியான ஒருநாளில் ஆப்பும் வந்து சேர்ந்தது.

திடீரென்று ஒருநாள் அக்கா வயதுக்கு வந்தாள், அன்று முதல் அக்காவை அடிக்கடி பார்க்க முடியவில்லை, பேசமுடியவில்லை, ஏனோ அக்காவின் அண்ணனுக்கும் எனக்கும் ஆரம்பம் முதலே ஒத்துபோகவில்லை, ஏனென்று கேட்டதற்கு நீ வேறு ஜாதி என்றான் ஒருநாள், ஆனால் அக்காவின் பாசத்தில் ஒருநாளும் நான் வேறுபாடு கண்டதில்லை, வீட்டு பக்கம் வராதே என்றான் அண்ணன்.


ஒளியும் ஒலியும் பார்க்க சென்றால் கதவை மூடி வைக்க ஆரம்பித்துவிட்டார்கள், திறந்திருந்த ஒருநாளில் உள்ளே சென்றபோது அக்காவின் அப்பாவின் சுடுசொல்கள் முகத்தில் வெண்ணீரை ஊற்றியது போல் வலிக்க ஆரம்பித்தது, நாளைடைவில் எனக்கும் அக்காவிற்கும் இடையில் சிலந்தி வலை பின்ன ஆரம்பித்திருந்தது.

எப்பொழுதாவது வெள்ளிக்கிழமை தலைக்கு சீயக்காய் போட்டு குளித்து விட்டு வெளியில் மைகோதி வைத்து தலையில் கோதிக் கொண்டிருக்கும் பொழுது படிக்கிறாயா? சாப்பிட்டாயா? என்று எதாவது பேசுவாள், அவளுக்கும் என்னுடன் பேச ஆசைதான் என்று புரிந்து கொண்டேன், நான் ஆண் என்பதே தடையாக இருக்கிறது என்றும் புரிந்து கொண்டேன், என்னால் வேறு என்ன செய்ய முடியும்? நாளைடைவில் வெள்ளிக்கிழமை வெளியே வருவதைகூட குறைத்துக் கொண்டாள், நானும் என் நண்பர்கள் வட்டாரத்தில் புலங்க ஆரம்பித்து பழகிவிட்டேன்.

ஒருநாள் அக்காவின் அம்மா இறந்துவிட்டார்கள் என தகவல் வந்தது, ஊரில் உள்ள அனைவரும் இறப்புவீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்கள், அக்காவுடன் பேச இதைவிட்டால் வேறு வாய்ப்பு இல்லையென்பதால் நானும் சென்றேன், ஊரில் உள்ள பொண்டு பொடுசுகள், பெரிசுகள் வட்டம் போட்டு அழுதுகொண்டிருந்தார்கள், அக்கா எங்கே? என தேடிக்கண்டுபிடித்தேன், தலையில் அடித்து அழுது கொண்டிருந்தாள், சிறிது நேரத்தில் மயக்கமாகிவிட்டாள்.

நான் என்ன பேச? அந்த சூழ்நிலையில்? சுற்றியும் முற்றியும் பார்த்தேன், அக்காவை போலவே மைகோதியும் தலைகீழாக கிடந்தது, அக்காவின் நியாபகமாக அதனை எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன், அம்மா இறந்த ஒரு வருடகாலத்திற்குள் அக்காவிற்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள், பொளர்ணமி போன்ற அக்காவிற்கு அம்மாவாசை போன்ற மாப்பிள்ளை, திருமணத்திற்கு கூட அழைப்பில்லை, செல்லமுடியாமல் போனது. 

அதன்பிறகு காலப்போக்கில் நாங்களும் வீடு மாறிவந்துவிட்டோம், பள்ளி, பாடங்கள், நண்பர்கள், டியூசன் என வாழ்க்கை சுழன்று கொண்டிருந்தது, அக்காவின் மைகோதியும் அக்காவை போலவே வீடு மாற்றும் பொழுது காணாமல் போய்விட்டது.


இதோ வெகுநாள் கழித்து இல்லை இல்லை வருடங்கள் கழித்து அக்காவை பார்க்கிறேன், குண்டடித்து தோல்சுருங்கி, கண்ணாடி அணிந்து செல்வி அக்காவா இது? ஆச்சரியத்துடன் என்னை பார்க்கிறாள்.

என்ன நினைத்திருப்பாள்? சின்னதம்பி பிரபு போலவே இருப்பேன் என நினைத்திருப்பாளோ? இப்பொழுது ஒல்லியாகிவிட்டதால் ஆச்சரியம் காட்டியிருப்பாளோ? இல்லை வெகுகாலம் கழித்து பார்ப்பதால் ஏற்பட்ட ஆச்சரியம் கலந்த பார்வையோ?

அப்பொழுதும் பேசவில்லை, இப்பொழுதும் பேசவில்லை. 

அக்காவை ஏறக்குறைய இழுத்துக் கொண்டு திட்டிகொண்டு செல்கிறான் அவள் கணவன்.

”சீக்கிரம் நடடி உன்னையெல்லாம் கூட்டிகிட்டு நடக்கனும்னு தலையெழுத்து” 

எல்லா அக்காள்களின் வாழ்க்கையும் இப்படித்தானோ !!?