Friday, October 14, 2011

வலையுலகிற்கு ஒரு வேண்டுகோள் - அன்பினை வெளிப்படுத்துவோம் !!!


அன்புள்ளம் கொண்ட நல்ல உள்ளங்களே -

நாம் அனைவரும் இறைவனின் அன்புக் குழந்தைகள், நமக்கெல்லாம் தாய், தந்தை, உறவினர்கள், நண்பர்கள் என நம்முடைய நலனை கருத்தில் கொள்ளும் ஒரு ஆதரவு குழுவானது உண்டு, ஆனால் சில எதிர்பாராத சூழ்நிலைகளாலும், சந்தர்ப்பங்களாலும் எந்தவித உதவியும், ஆதரவும் கிடைக்காமல் அனாதைகளாக, உடல் ஊனமுற்றவர்களாக, முதியோர்களாக, நோயாளிகளாக, மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக பலர் நம்நாடு முழுவதும் பரவிக் காணப்படுகிறார்கள்.

ஒரு வேளை உண்ண உணவு கிடைக்காமலும், உடுத்த உடை கிடைக்காமலும் மருத்துவ உதவி கிடைக்காமலும் அவதிப்படுவோர் ஏராளம் பேர்கள் இங்கு உண்டு, அவர்களை பொறுத்த வரையில் அவர்கள் சந்தோசமாக இருக்கும் ஒருநாள், வயிறார உண்ணும் ஒரு நாள் உண்டெனில், அந்நாளே அவர்களுக்கு தீபாவளி பண்டிகையாக இருக்கும்.

நாம் அனைவரும் வரும் தீபாவளி பண்டிகையினை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள இருக்கும் இத்தருணத்தில், த்தகையவர்களையும் கருத்தில் கொண்டு நாம் வாங்கும் போனஸ் தொகையிலோ சம்பளத் தொகையிலோ நம்மால் இயன்றதைக் கொடுப்பதன் மூலம், உதவி செய்வதன் மூலம் அவர்களையும் பண்டிகை கால சந்தோசத்தில் பங்கு பெறச் செய்யலாமே?

உங்களின் ஒவ்வொருவரின் சிறு உதவியாலும், ஒருவரின் ஒருவேளை பசியினை தீர்க்க முடியும்.

இது போன்றவர்களுக்கான ஆதரவற்றவர்களுக்கான இல்லங்கள், கருணை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவை அனைத்து ஊர்களிலும் உள்ளன.

நம்மில் பலர் கிடைக்கப்போகும் போனஸ் தொகையில் தங்களது நெடுநாளைய கனவுகள், லட்சியங்களை அடைய திட்டங்களை தீட்டி இருக்கலாம், அவ்வாறானவர்கள், உங்களது நண்பர்களுடனோ அல்லது உங்களுடன் அலுவலகத்தில் பணிபுரியும் சக தோழர்களுடனோ இணைந்து செயல்படலாம், இதனால் கிடைக்கும் உதவித் தொகையும் அதிகமாக இருக்கும்.

கடவுள் கருணையே வடிவானவர் என்கிறார்கள், உங்களின் கருணையை வெளிப்படுத்துவதன் மூலம் நீங்களும் கடவுளாகலாம்.

சிந்தியுங்கள் செயல்படுங்கள், நன்றி !!!


அனைவருக்கும் என்னுடைய இனிய அட்வான்ஸ் தீபத்திருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

- இது ஒரு மீள் பதிவு


Tuesday, October 4, 2011

கமர்சியல் பக்கங்கள் - 04/10/2011


இந்த வருசம் காந்தி ஜெயந்தி ஞாயிற்று கிழமை வந்தாலும் வந்தது, டாஸ்மாக் வேற லீவு விட்டுட்டாங்க, பாவம் குடிமகன்கள் எல்லாம் நொந்து போயிட்டாங்க, வேற வழி இல்லாம டிவி முன்னாடி உட்கார்ந்தா பத்து சேனலுக்கு மேல தெரிய மாட்டேங்குது, அதுல நாலு ஜெயா டிவி சேனல்களா மட்டுமே தெரியுது, நொந்து போச்சு போங்க

எல்லா சேனல்களும் வழக்கம் போலவே காந்தி ஜெயந்திக்கு சிறப்பு நிகழ்ச்சின்ற பேருல சினிமா நடிகர்களை கூட்டி வந்து லந்து பண்ணிட்டு இருந்தாங்க, இவங்களுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம் இருக்க போவுது? சரி விடுங்க அவங்களும் சினிமால நடிச்சு நிறைய காந்தி நோட்ட வாங்கிட்டு இருக்குறவங்க, இவங்களும் சிறப்பு நிகழ்ச்சிகளா போட்டு காந்தி நோட்ட கல்லா கட்டிட்டு இருந்தாங்க

கவருமெண்டே டாஸ்மாக் வருமானம் போனாலும் பரவால்லன்னு ஒருநாள் லீவு விடுது, ஆனா டிவிக்காரங்க மட்டும் அன்னைக்குன்னு எக்ஸ்ட்ரா நிகழ்சிகளா ஒளிபரப்பி துட்டு பாக்குறாங்க, அன்னைக்காவது ஒரு மணி நேரமாவது காந்திய பத்தி எதாச்சு ஒளிபரப்புனாங்களா? புதிய தலைமுறை சேனல் மட்டும் காந்தி பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்ன ஒளிபரப்புனாங்க

சரி முதலமைச்சர் என்ன சொல்லி இருக்காங்கங்கறத பார்க்கறதுக்காக ஜெயா டிவிய திருப்புனா, நாங்க கதராடை உற்பத்திய பெருக்கிட்டு இருக்கோம், கதராடைக்கு 10% டிஸ்கவுண்டு கொடுக்குறோம், அதனால எல்லோரும் கதராடை உடுத்துங்க, கதராடை உடுத்துவோம், காந்திவழி நடப்போம்னு சொல்லிட்டு இருந்தாங்க, காந்தி கதராடை உடுத்த மட்டும்தான் சொல்லி தந்தாரா? அஹிம்சை அப்படி இப்படின்னு என்னன்னவோ படிச்சமே, சரி முதலமைச்சரே சொல்லிட்டாரு கதராடை வாங்கிட்டா போச்சு.


சரி வேற சேனல மாத்துவோம்னு மாத்துனா கேப்டன் டிவில தலைவரோட பிரச்சாரத்த நேரடி ஒளிபரப்பு பண்ணிட்டு இருந்தாங்க, அடடா ஞாயிற்று கிழமை காந்தி ஜெயந்தி அன்னைக்கு எல்லா தலைவர்களும் காந்தி சிலைக்கு மரியாதை பண்ணிட்டு இருக்காங்க, எதிர்கட்சி தலைவர் அங்க கூட போகாம என்ன பொறுப்புணர்ச்சியா பிரச்சாரம் பண்ணிட்டு இருக்காரு, புல்லரிச்சு போச்சுங்க, அப்ப என் பிரண்டுதான் சொன்னான், மச்சி இன்னைக்கு கடை லீவுடா அதான் கேப்டன் பிரச்சாரத்துக்கு கிளம்பிட்டாருன்னு

சரி என்னதான் கேப்டன் சொல்லுறாருன்னு கேட்டா இத்தனை நாளா பேசுன அதே டயலாக்கத்தான் பேசிட்டு இருந்தாரு, ஆனா ஒன்னுமே புரியல, ஆனா அடிக்கடி டென்சனாகிட்டு இருந்தாரு, இடையில யாரோ கூட்டத்துல இருந்து கேப்டன ஏதோ கேள்வி கேட்டு புட்டாங்க, வந்துச்சு பாருங்க தலைவருக்கு கோபம், டேய் யாருடா நீயி, எங்கிருந்து வரே…. அப்படின்னு கேட்டுகிட்டு இருந்தாரு, அதுக்குள்ள ஏழைகள் தோழா வா வா, எங்கள் கேப்டன் வா வா, புரட்சி தலைவரே வா வான்னு பாட்ட போட்டு கேமராவ கூட்டத்த பார்த்து திருப்பிட்டாங்க
நேரடி ஒளிபரப்பு பண்ணுனவங்கதான் பாவம் கேப்டன் எப்ப கோபபடுவார்னு பார்த்து பார்த்து பாட்டு போட்டு திசை திருப்ப வேண்டிய நிலைமையில இருந்தாங்க, அந்த அரைமணி நேர நேரடி ஒளிபரப்பு முடியறதுக்குள்ள கால்மணி நேரம் அந்த பாட்டயே போட்டுகிட்டு இருந்தாங்க, ஓகே எவனோ மவராசன் ஆக போறான்னுட்டு டிவிய ஆஃப் பண்ணிட்டேன்


தமிழ்நாட்டுல மதுவிற்பனை குறைஞ்சு போச்சாம், அது ஏன்னு ஆராய கமிட்டி போட்டு இருக்காங்க, நல்ல சரக்கே கொடுக்குறது இல்ல, பாட்டிலுக்கு பத்து ரூபா விலையேத்தி விக்கிறானுங்க, இஷ்டத்துக்கு கமிசன் அடிக்கிறானுங்க, நவீன பார்வசதின்னு போர்ட போட்டு மூத்திர சந்துக்குள்ள குடிக்க வைக்குறானுங்க, இந்த லட்சணத்துல சரியா வேலை வெட்டியும் இல்லை எவன் குடிப்பான்? இப்படியாச்சும் குடிக்கறது குறைஞ்சிருக்கே அதோடயாவது விட்டுடுங்க, நீங்க கமிசன் அடிக்கறதுக்கும், இலவசம் கொடுக்கறதுக்கும் நாட்டை குட்டி சுவராக்கிராதீங்க

ஆடு, மாடு, வீடு, மிக்சி, கிரைண்டரு, பேனு, டிவி, அடுப்பு, சைக்கிளு, செருப்பு, உடுப்புன்னு எல்லாமே இலவசமா கொடுக்குறீங்க, இலவசமா கொடுக்க வேண்டிய கல்விய மட்டும் கொடுக்க மாட்டேங்குறீங்க, எ.கொ.சா இது?


பாமக காரங்க மதுவ எதிர்த்து போராட்டம் பண்ணினா மட்டும் போதுமா? போராட்டம் பண்ண கூட்டிட்டு வந்தவங்களுக்கு குடிக்க தண்ணியாவது வாங்கித்தரணும், அதுவும் இல்லைன்னா அவங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கான்னாவது தெரிஞ்சுக்கணும், இல்லைன்னா இப்படித்தான் நடக்கும், முதல்ல மருத்துவர் அய்யா கட்சிக்காரங்ககிட்ட இருந்து மது ஒழிப்பு பிரச்சாரத்த ஆரம்பிச்சா நல்லது.


நம்ம தானைத்தலைவர் பவர் ஸ்டாரோட லத்திகா காவியம் காந்தி ஜெயந்தி அன்னையோட 200 ஆவது நாளை தாண்டி வெற்றிகரமா ஓடிட்டு இருக்குது, கூடிய சீக்கிரமே 500 ஆவது நாள் 1000 மாவது நாளை தாண்டி சரித்திரம் படைக்கும்னு நம்பலாம்.

மக்களோட எதிர்பார்ப்ப வீணாக்க கூடாதுன்னு சீக்கிரமே ஆனந்த தொல்லை படத்த வெளியிட போறாரு தலைவர், ரொம்ப பிரம்மாண்டமான படமாச்சே அதான் படத்தோட ஸ்டில்ல கூட சஸ்பென்சா வச்சிருக்காங்க, இப்பத்தான் ஸ்டில்லெல்லாம் ஒவ்வொன்னா வெளிவந்துட்டு இருக்கு, உங்களுக்காக கீழ ஒரு ஸ்பெஷல் ஸ்டில்லு


பவர்ஸ்டார் கத்தியில குத்துன வலிதாங்க முடியாம ஸ்ரீமன் கத்துறாரா இல்லை பவர்ஸ்டார பக்கத்துல பார்த்த அதிர்ச்சியில கத்துறாரான்னுதான் தெரியல


  
மனதில் தைரியம் உள்ளவர்கள் மட்டும் இந்த வீடியோவை கிளிக்கி பார்க்கவும், பிறந்த குழந்தைக்கு இதயம் வெளிப்புறமாக அமைந்து விட்டது, அந்த குழந்தையின் பெற்றோர்கள் படும் பாட்டினை எழுத்தில் சொல்லிவிட முடியாது, அக்குழந்தை விரைவிலேயே பூரண குணமடையட்டும்.

ஹி ஹி இது சும்மா, உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!!!


Saturday, October 1, 2011

வெடி - யப்பா சாமி !!!



கொஞ்ச நாளா சன் பிக்சர்ஸ் எந்த படத்தையும் ரீலீஸ் பண்ணாம இருந்த தைரியமோ என்னவோ தமிழ் சினிமால நல்ல நல்ல படங்களா வந்துட்டு இருந்தது, விடுவமா நாங்க? இதோ வந்துட்டம்ல வந்துட்டம்லன்னு இறங்கி வெடி வச்சு இருக்காங்க சன் பிக்சர்ஸ்காரங்க.

ஒருவகையில விஷால் பாராட்டுக்குரியவர்தான், எல்லாரும் அடுத்தவங்க காசுல சூனியம் வச்சா இவரு மட்டும் சொந்த அண்ணன் காசுலயே சூனியம் வச்சுக்கறாரு, பாவம் பாஸ் அண்ணனும், அண்ணியும் விட்டுடுங்க.

படத்தோட கதையெல்லாம் ஒன்னும் இல்ல, ஏற்கனவே விஷால் நடிச்ச திமிரு, மலைக்கோட்டை வகையறா கதைதான், இதுக்கு போய் ஏன் ஒரு தெலுங்கு படத்தோட ரைட்ஸ் எல்லாம் வாங்கி ரீமேக் பண்ணனும்னு ஒன்னும் புரியல.


தூத்துக்குடில பெரிய தாதா சாயாஜி சிண்டே, பயங்கர அராஜகம் பண்ணிகிட்டு இருக்காரு, அங்க போலீஸா வர நம்ம விஷாலு சாயாஜி சிண்டேவ உப்புக்கண்டம் போட்டுடறாரு, சின்ன வயசுல இருந்து தேடிகிட்டு இருக்கற தங்ச்சி கொல்கத்தால இருக்கறத கேள்விபட்டு போலீஸ் வேலைக்கு ஆறுமாசம் (?) லீவு போட்டுட்டு தங்கச்சிய தேடிகிட்டு கொல்கத்தா போறாரு.

இதே டீடெயில கேள்விபட்ட தாதாவோட மொட்டபசங்களும் பையனும் விஷாலோட தங்கச்சிய கொலபண்ணறதுக்காக அவங்களும் கொல்கத்தா வராங்க, கடைசியா யாரு யார கொல பண்ணுனாங்கங்கறத நம்மளை கொலயா கொன்னு சொல்லி முடிக்கறாங்க.

இதுக்கு இடையில சமீரா ரெட்டியோட சைடுல லவ் வேற, வழக்கமா தமிழ் மசாலா சினிமால ஹீரோயின் என்ன பண்ணனுமோ அதை தவறாம சமீரா ரெட்டியும் பண்ணுறாங்க, அதாங்க நாலு பாட்டுக்கு கவர்ச்சியா டான்சும், கிக்கிலி பிக்கிலின்னு சிரிச்சுகிட்டு ரெண்டும் மொக்கை ஜோக்சும், மொத்தத்துல சமீரா ரெட்டிய வேஸ்ட் ரொட்டியாக்கிட்டாங்க.


விவேக் காமெடி படத்துல வர அவரோட கேரக்டர் மாதிரியே காத்து போயி ரொம்ப நாள் ஆச்சு, அது புரியாம இன்னும் காமெடி பண்ணிட்டு இருக்காரு, வடிவேலு இல்லாத குறை நல்லாவே தெரியுது, கொஞ்ச நேரமே வந்தாலும் ஊர்வசியும், ஸ்ரீமனும் கொஞ்சம் சிரிக்க வைக்குறாங்க.

மியூசிக் தேவி ஸ்ரீ பிரசாத், வழக்கமா ஸ்டேஜூல ஒரு ரவுண்டு தொப்பி போட்டு டான்ஸ் ஆடி கொல்லுவாறே, அதையே இங்க ஓப்பனிங் பாட்டுக்கும் ஆடி டார்ச்சர் பண்ணுறாரு, இரண்டு பாட்டு தேவலாம் போல, அப்புறம் பிரபுதேவா இன்னுமா இவர டைரக்டர்னு நம்பிகிட்டு இருக்க்காங்க? டான்ஸ் மாஸ்டர் இயக்குனரா இருக்கற படம்னா குறைஞ்சபட்சம் பாட்டு சீனாவது நல்லா இருக்கனும், ஆனா இங்க!!??

ஒப்பனிங் சீனுல பீர் குடிச்சுகிட்டு இருக்கற வில்லன் வாயில ஒரே அடில பீர் பாட்டில தொண்டை குழி வரைக்கும் விஷால் இறக்குனத பார்த்து படம் பயங்கரமா இருக்கும்னு நினைச்சேன், கடைசில படம் பார்த்த என் நிலைமைதான் பயங்கரமா ஆகிப்போச்சு, எனக்கு மட்டுமில்ல படம் பார்த்த எல்லோருக்கும்தான், கலா மாஸ்டர் டயலாக்குல சொன்னா கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்கப்பா.


மொத்தத்துல இந்த வெடி வெடிக்காம இருக்கறதுதான் தமிழ் சினிமாவுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் நல்லது.

டிஸ்கி : நல்ல படத்துலயெல்லாம் கமெண்ட் அடிச்சு படம் பார்க்கிறவங்கள டிஸ்டர்ப் பண்ணுற ரசிக பெருமக்கள், இந்த மாதிரியான மொக்கை படத்த மட்டும் ஏன் அமைதியா உட்கார்ந்து ரசிச்சு பார்க்குறாங்கன்னு புரியல.

டிஸ்கி : வெடிங்கற பேருலயே பக்கத்து ஸ்டேட்டுலயும் ரீலீஸ் பண்ணி இருக்காங்களான்னு தெரியல, ஏன்னா வெடிங்கறது கேரளாவுல ஒரு பயங்கரமான கெட்ட வார்த்தை.