Saturday, December 31, 2011

புது வருடம் - சில நினைவுகள்..!ஒரு வருடம் ஓடி போய்விட்டது, வருடங்கள் ஆரம்பிப்பது மட்டுமே நினைவில் இருக்கிறது, பிறகு அந்த வருடம் முடியும் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் தோன்றுகிறது, அட இவ்வளவு சீக்கிரமா ஒரு வருஷம் ஆகிப்போச்சா?

வழக்கம் போலவே இதோ இன்னொரு புதுவருடம், ஒவ்வொரு வருடத்திலும் என்ன சாதிக்க போகிறேனோ? முடிந்து போன வருடத்தில் எதை செய்து முடித்தேனோ? தெரியாது, ஆனால் புதுவருடம் ஆரம்பமாகும் காலங்களில் மனதில் ஒரு புது விதமான மகிழ்ச்சி மட்டும் வருடம்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

அந்த மகிழ்ச்சியானது புதுமனைவியை கொண்டாடும் கணவனின் பார்வையோடுதான் முதல் ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஆரம்பமாகிறது, ஆனால் கடைசியில் தானே புயல் கரை கடந்ததை போல ஓரிரு மாதங்களிலேயே வலுவிலந்தும் விடுகிறது.

ஒவ்வொரு வருடங்களும், புத்தாண்டு சங்கல்பங்களும் காற்றிலும், நீரிலும் மட்டுமே எழுதி வைக்கும்படி எனக்கு வாய்த்திருக்கிறது, சலித்து போய் இப்பொழுது அது போல எதுவும் நினைக்கக்கூடாது என்பதே புத்தாண்டு நினைவாக மாறிவிட்டது.

முந்தைய கடந்து போன வருடத்திற்கு இந்த வருடம் எவ்வளவோ பரவாயில்லை, பழைய வருடத்தின் தாங்கமுடியாத சோகங்களை இந்த வருடம் மறக்கடித்தது, இன்னும் சொல்லப்போனால் கடைசியில் வந்தமைந்த சொந்தம் என் வாழ்க்கையையே அர்த்தப்படுத்தியது என சொல்லலாம்.

ஒவ்வொரு கடந்துபோன நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களும், நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றை விதைத்து விட்டுதான் போயிருக்கின்றன, அது நல்லதோ, கெட்டதோ, அதற்கான பயனை, அறுவடையை அடுத்து வரப்போகும் வருடங்கள்தான் தீர்மானிக்கின்றன.

துன்பத்திலும், கஷ்டத்திலும், ஏக்கத்திலும், தேவைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும், மக்களுக்கும் ஒரே எதிர்பார்ப்பு வரப்போகும் வருடமாவது ஒரு நல்ல வருடமாக அமையாதா என்பதே.

அந்த சராசரி மனிதர்களில் ஒருவனாக எனது எதிர்பாப்பும் அதுவே, எதிர்பார்ப்பும், ஏமாற்றங்களும் தொடர்கதையாகி போய் நடப்பது நடக்கட்டும் என்ற எனது சராசரி மனநிலையை மாற்றிப் போட்டிருக்கிறது கடந்த வருடம், புது வருடத்தில் எனக்கான தேவைகளும், செல்ல வேண்டிய தூரங்களும் நிறையவே இருக்கிறது.


அதற்காக அதிகமாக உழைக்க சொல்கிறது காலம்.

பார்ப்போம், காலம் சொல்லும் பதிலை..!

நல்லதே நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் புதுவருடத்தை தொடங்க இருக்கிறேன்… நான்..!New Year Comments
New year comments greetings, happy new year animated scraps

Best Orkut Picture Scraps at Goodlightscraps

வரப்போகும் 2012 ஆம் வருடத்தில், அனைவரது வாழ்விலும் உள்ள சங்கடங்கள் விலகி, சந்தோசம் பெருகி, நினைத்தது நடந்து, எல்லோருக்கும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் வருடமாக அமையட்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.இந்த பதிவினை படிக்கும் நண்பர்கள், சகோதர, சகோதரிகள், சக வலையுலக நண்பர்கள், மற்றுமுள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

---------------------------------------------------------------------------------------------------------
புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சில நண்பர்கள் நேசம் என்னும் அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர், இணையத்தின் வாயிலாக  அவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய நீங்களும் இணைந்து ஊக்குவியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

நேசம் - புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு 

நன்றி..!

Thursday, December 29, 2011

பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை - முன்னோட்டம்பவர்ஸ்டாரை பற்றி அறிமுகம் தேவையில்லை, தற்பெருமை பேசுவதே தன்னம்பிக்கை என்றிருக்கும் தமிழ்நாட்டு ஒஸ்தி நடிகர்களுக்கு மத்தியில், தமிழ்நாடே தன்னை பற்றி பேசும் போதும் தன்னடக்கத்துடன் நடந்து கொள்பவர் நமது பவர்ஸ்டார் டாக்டர் சீனீவாசன் அவர்கள், தமிழ்நாட்டில் பவர்ஸ்டாரை பற்றி தெரியாதவர்கள் பவுடர் பால் குடிக்க கூட லாயக்கில்லாதவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தி இருப்பவர் நமது பவர் ஸ்டார்.

கூச்சம் போனால்தான் நடிகனாக முடியும், நமது சத்துணவு மக்கள் கட்சி ச்சீ ச்சீ சாரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் திரு.நாட்டாமை சரத்குமார் அவர்களுக்கு கூச்சம் போவதற்காக நமது தலைவர் கவுண்டமணி அவர்கள் கட்டபொம்மன் படத்தில் எத்தனை பாடுபட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள், அப்படியாப்பட்ட கூச்சமே கூச்சப்படும் அளவிற்கு நடித்துக் காட்டிய திறமைசாலி நமது பவர்ஸ்டார்

நடிக்க வந்த சிறிது காலத்திலேயே திரு. சாம் ஆண்டர்சன் அவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தவர் பவர்ஸ்டார், பவர் ஸ்டாரின் புகழ் தென்னிந்திய சினிமா உலகத்தையும் தாண்டி அகில உலகில் பரவி இருக்கிறது என்பதற்கு சமீபத்தில் நடந்த உலக திரைப்பட விழாவில் அவருக்கு கிடைத்த வரவேற்பே சாட்சியாகும்

பவர்ஸ்டாரின் புகழை பொறுக்க முடியாமல், அவர் எதாவது விழாவிற்கு வந்தாலோ நடிகர்கள் சிதறி ஓடுகிறார்கள், கூட நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்காமலும் எஸ்ஸாகிறார்கள், அதற்கு ஒருபடி மேலே போய் விக்ரம் போன்றவர்கள் தங்கள் படத்தில் லத்தீஸ்வரன் என்ற பெயரில் கிண்டலடிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம், அவர்கள் இதனை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், மீண்டும் அப்படி எதாவது நடந்தால் விக்ரமின் வீட்டு முன்பு பவர்ஸ்டாரின் படம் காட்டும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறோம்.  

அப்படியாப்பட்ட நமது பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை படம் ரீலீசாக போகிறது என்பது அவரது ரசிகர்களாகிய நமக்கு பெருமைதரக்கூடிய விசயம், அனேகமாக அண்ணன் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்து ஷங்குவுக்கும், லிங்குவுக்கும் டஃப் காம்படீசனை தருவார் என எதிர்பார்க்கிறோம், இப்பொழுது முன்னோட்டமாக டிரைலர் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது, கண்டுகளியுங்கள் மக்களே.நல்லவங்க படம் ஓடும், ஆனா கொஞ்ச நாள் ஆகும், அதுவரைக்கும் நாமதான் ஓட்டனும் என்ற சந்தானம் அவர்களின் புகழ்பெற்ற பொன்மொழிக்கு ஏற்ப லத்திகா படம் இருநூற்றி ஐம்பது நாளை கடந்து வெற்றிகரமாக ஓட்டப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் ஆனந்த தொல்லை அப்படியல்ல, இந்த படம் உங்களுக்கு ஒரு அதிரடி தொல்லையாக இருக்கும் எனபதை மட்டும் இங்கு பணிவோடு தெரிவித்து கொள்ள கடமைபட்டு இருக்கிறோம்.

பவர்ஸ்டாரின் பெயர் சூப்பர் ஸ்டாரின் பெயரை போலவே ஒவ்வொரு எழுத்தாக மாறி மாறி வருவதை பாருங்கள் மக்களே, இதிலிருந்தே தெரியவில்லையா தமிழ்நாட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் யாரென்பதை? ஐம்பது படத்திற்கு மேல் நடித்தும் கெட்டப் மாற்ற யோசிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் தான் ஹீரோவாக இருந்தும் தனது இரண்டாவது படத்திலேயே கொடூர வில்லனாக நடிக்கும் தைரியம் யாருக்கு வரும்?

இந்த படத்தில் இருக்கும் பவர்ஸ்டாரின் ஹேர்ஸ்டைல் வேறு எந்த நடிகர்களாலும் செய்ய முடியாத ஒன்று, அதற்கான உடல்மொழியும், தலைமொழியும் பவர்ஸ்டாருக்கு மட்டுமே உண்டு, கமல்,விக்ரம், சூர்யா போன்ற மாறுவேட போட்டி நடிகர்களாலேயே செய்யமுடியாத சாதனை இது, அவ்வளவு ஏன்? பிளாக் அண்ட் வொயிட் பியூட்டி சலூன்காரர்களால் கூட செய்ய முடியாது, (ஏனென்றால் அது விக்)

இறுதியாக ஆனந்த தொல்லை படத்தின் முதல்நாள், முதல் ஷோ டிக்கெட் கிடைக்காதவர்கள் யாரும் தீக்குளிக்கவோ தற்கொலை செய்யவோ முடிவு செய்யாதீர்கள், அதையெல்லாம் படம் பார்த்த பிறகு செய்து கொள்ளுங்கள், மேலும் படம் பார்த்தவர்கள் ஆத்திரத்தில் தியேட்டரின் மீதும் பேருந்துகளின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தி பவர்ஸ்டாரின் பெயரை கெடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம், இன்று பவர்ஸ்டாரை பார்த்து சிரிப்பவர்கள் நாளை சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும், அப்படிபட்ட நிலையை ஏற்படுத்தி கேப்டனை மிரள செய்வோம் என உறுதிமொழி ஏற்போம், இது ஏதோ ஒரு பதிவு தேத்துவதற்காக எழுதப்பட்டதல்ல, அதையும் தாண்டியது, ஏனென்றால் டிரைலரை பார்த்தீர்களானால் பறந்து உதைப்பதில் கேப்டனுக்கு சற்றும் குறைந்தவர் இல்லை எங்கள் பவர்ஸ்டார் என்பது உங்களுக்கு நிரூபனமாகும், எதையோ எழுத நினைத்து இன்னும் எதை எதையோ எழுதிக் கொண்டிருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என நினைத்து கொல்கிறேன்.
இவன்
பவர்ஸ்டார் ரசிகர் படை
வட தமிழ்நாடு கிளை
தமிழ்நாடு  


Thursday, December 15, 2011

வொய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி போலீஸ்கார்மாலை நான்கு மணி ஆகிவிட்டது, இன்னும் கொஞ்ச நேரத்துல பேங்க மூடிடுவான், சீக்கிரம் போகனும், என சிந்தித்து கொண்டே அந்த வளைவினில் வண்டியை திரும்பியவன் பதறி அடித்துக் கொண்டு வண்டியை நிறுத்தினேன்

தொலைவில் டிராபிக் போலீஸ்கள் வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருந்தார்கள்

ஆஹா ஆரம்பிச்சிட்டாங்களே நம்மகிட்ட லைசன்ஸ் வேற இல்லையே, என்ன பண்ண?

சாயங்காலம் ஆனா போதும் சூரியன் மேற்க மறையறதுக்குள்ள இவங்க கிழக்க உதிச்சிடறானுங்க, கொஞ்சம் நேரம் ஆகட்டும் அதுவரைக்கும் இந்த டீக்கடையிலேயே நிப்போம்

நினைத்ததை செயலாற்ற டீக்கடை பக்கம் ஒதுங்கினேன்

அண்ணே ஒரு டீ சூடா ஆத்தாம

டீ மாஸ்டர் தலையை உயர்த்தி பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டார்

பார்ரா புதுசா வயசுக்கு வந்த பொண்ணாட்டாம், என்னா ஒரு லுக்கு வேண்டிகிடக்கு டீய போடுறா சுண்ணாம்பு - மனசுக்குள் ஓடியது

இன்னைக்கு என்னத்துக்கு புடிக்கறானுங்க, நம்மாளுங்க ரொம்ப நல்லவங்களாச்சே ஒருநேரத்துக்கு ஒரு காரணத்துக்குதான் புடிப்பாங்க

ஏண்ணே மாம்ஸ்சுக ரொம்ப நேரமா நிக்குறாங்களா?

ஆமா வந்து அரைமணி நேரம் ஆச்சு

இன்னிக்கு எதுக்கு புடிக்கறாங்க, லைசன்ஸ் இருக்கான்னா?

அதுக்கெதுக்கு புடிக்க போறாங்க, இப்பல்லாம் லைசன்ஸ் இல்லாத பக்கிகள விட குடிச்சிட்டு வண்டி ஓட்டுற பக்கிகதான் அதிகம், அதுக்குதான் புடிப்பாங்க போல

சந்தடி சாக்குல நம்மளயும் பக்கிகன்னு சொல்லிபுட்டான்யா, நமக்கு இது தேவைதான், இன்னேரத்துக்கு எதுக்கு சரக்கு அடிக்க புடிக்க போறாங்க, நம்ம பசங்க குடிச்சா கூட சாயங்காலம் ஆறுமணிக்கு மேல பக்தி பரவசமாத்தான ஆரம்பிப்பாங்க

மாம்ஸ்சுகிட்ட சிக்கிகிட்ட ஆறேழு பேரு அங்க நிக்குறாங்கல்ல, பேசாம அவங்ககிட்டயே போய் கேட்டுடுவோம்

நினைப்பை செயலாக்க அவர்களை நோக்கி நடந்தேன்

ஒரு டிராபிக் போலீகார் வளைத்து வளைத்து டூ வீலர் வண்டிகளை பிடித்துக் கொண்டிருந்தார், சிக்காமல் போன நண்பர்களின் ஏழேழு தலைமுறைகளையும் வாழ்த்திக் கொண்டிருந்தார்

நானும் அவர்களை நெருங்கி கொண்டிருந்தேன்

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தவர்களை போல ஆறு பேர் மூஞ்சியை தொங்க போட்டுக் கொண்டு நின்றிருந்தனர்

அவர்களில் ஒருவரை நெருங்கி கேட்டேன்


ஏண்ணே இன்னிக்கு எதுக்கு பிடிக்கறாங்க, லைசன்ஸ் இருக்கான்னா? மனதுக்குள் எங்கிட்ட அதுதான்ன இல்ல, அதத்தான் முதல்ல கேட்க முடியும்

அட நீங்க வேற பாஸ், லைசன்சுக்கு புடிச்சா கூட பரவாயில்லயே, புதுசா கவருமெண்டு ஒரு ஆர்டர் போட்டிருக்காம், வண்டியோட நம்பர் பிளேட்டுல நம்பர் மட்டும்தான் எழுதணுமாம், அதுவும் குறிப்பிட்ட அளவுல எழுதனுமாம், அத மீறி சாமி பேரு, அந்த பேரு, இந்த பேரு எழுதுனா தப்பாம், அதுக்குதான் புடிக்கறானுங்க, சும்மாவே இவனுங்க புடிச்சு பொங்க வைச்சுருவாங்க, போதாக்குறைக்கு கவருமெண்டு வேற புதுசு புதுசா ரூல்ஸ போட்டு எடுத்து குடுக்குது விளங்குமா?

இந்த லட்சணத்துல ஸ்பாட் பைன் இரநூறு ரூபாயாம், கட்டிங் அடிக்கவே காசு பத்தலைன்னுதான் எவன் சிக்குவான்னு கிளம்பி வந்தேன், இவனுங்களக்கு இரநூறூ ஓவாயாம், ஆசைய பாரு, ஆனது ஆகட்டும்னுதான் பாஸ் நின்னுட்டு இருக்கேன் புலம்பி தள்ளினார் அவர்

அட ஆமாம்ல நமக்கும் மறந்து போச்சே, நம்ம வண்டிலயும்தான எழுதி வச்சிருக்கோம், முதல்ல நம்பர் பிளேட்ட மாத்தி புதுசா எழுதணும்

அங்கே டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்துக் கொண்டிருந்தார்

டேய் இங்க வா, உன் வண்டில என்ன எழுதிருக்க?

ச்சீ போடா

என்னது போடாவா? போலீஸ்காரன பார்த்தா டா போட்டு பேசுறியா? உன்ன அடிக்கற அடில செத்தடா இன்னிக்கு

சார் சார் உங்கள சொல்லல சார், ச்சீ போடான்னுதான் சார் நம்பர் பிளேட்டுல எழுதி வச்சிருக்கேன்

இப்படியெல்லாமாடா எழுதறீங்க, சரி அடுத்த ஆளு வா, உன் வண்டில என்ன எழுதிருக்க?

சார் டோண்ட் டேஸ்ட் மீ

டோண்ட் டேஸ்ட் மீயா? டேஸ்ட் பண்ண உன் வண்டி என்ன சர்பத் விக்குற வண்டியா?

ஏண்டா முன்னாடி டயர்ல இருந்து பின்னாடி டயர் வரைக்கும் வண்டில எத்தனை எடம் இருக்கு? அங்க எழுதி தொலைய வேண்டியதுதான? ஏண்டா நம்பர் பிளேட்டுலயே எழுதி தொலையறீங்க, இரநூறு எடு

நெக்ஸ்ட், உன்னோடது என்ன?

வொய் திஸ் கொலவெறி சார்

கொலவெறியா யாருக்குடா கொலவெறி? இன்னும் கொஞ்சநேரம் உங்ககிட்ட பேசிட்டு இருந்தா கண்டிப்பா கொலவெறி ஆயிடுவேண்டா, 

ஏண்டா இப்படி பண்ணுறீங்க? ஒரு வண்டிக்கு நம்பர் பிளேட் எவ்வளவு முக்கியம், அதுல போய் உங்க வீட்டு ரேசரன் கார்டுல இருக்கற பேரு முதற்கொண்டு பத்து பதினைஞ்சு சாமி பேரு வரைக்கும் எழுதி வைக்கிறீங்களேடா? ஒரு ஆத்திர அவசரத்துக்கு வண்டி நம்பர் எப்படி நோட் பண்றது?

அடுத்து உன் வண்டி, என்ன எழுதிருக்க?

காதல் மட்டும்தான் பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை

போலீஸ்காரர் முறைத்து பார்க்க எல்லோரும் சிரிக்கிறார்கள்

இத எழுதுனதுக்கு அப்புறம் நம்பர் எழுத இடம் இருக்காடா நம்பர் பிளேட்டுல, ஏண்டா இப்படி பண்ணுறீங்க, கவருமெண்டே பேப்பர்ல விளம்பரம் குடுத்தாங்களேடா நம்பர் பிளேட்டுல எதையும் எழுதாதீங்கன்னு, ஒருமாசம் டைம் குடுத்தும் இப்படியே சுத்திகிட்டு இருக்கீங்களே உங்களுக்கெல்லாம் எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும்?


நாங்க எங்க சார் பேப்பர் விளம்பரம் எல்லாம் பார்த்தோம், எலைட் பார் தொறக்கற செய்தியெல்லாம் பெருசா கொடுக்குறீங்க, இந்த மாதிரி நீயூசெல்லாம் சின்னதா ஒரு மூலைலதான போடுறாங்க, அப்புறம் எங்களுக்கு எப்படி சார் தெரியும்? இந்த ஒருவாட்டி மன்னிச்சுக்குங்க சார், நாங்க நம்பர் பிளேட்ட மாத்திடுறோம், இனிமே இப்படி நடக்காது சார்

சரி போனா போகுது இந்த ஒருவாட்டி விடுறேன், மறுபடியும் இதே மாதிரி நம்பர் பிளேடோட பார்த்தேன், அப்புறம் நடக்கறதே வேற, எல்லோரும் போங்க போங்க

கதையின் நீதி
அரசாங்கம் நம்பர் பிளேட்டுகளில் நம்பரை தவிர வேறு எதையும் எழுதக்கூடாது என்று உத்தரவிட்டு இருக்கிறது, குறிப்பிட்ட அளவுகளில் சரியான முறையில் நம்பர் எழுதபட்டு இருக்க வேண்டும், இன்னும் நம்பர் பிளேட்டுகளை மாற்றாதவர்கள் மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- இரவுவானம் 
  

Wednesday, December 14, 2011

ஒஸ்திலே ஒஸ்தி !!!ஏல நம்ம அண்ணாச்சி தரணியோட குருவி படம் பார்த்தே குத்து வாங்குன அனுபவம் இருக்க ஒஸ்தி படம் பார்த்து ஒத வாங்க ஆசபடலாமால்லே, படம் பாக்க போவயில்ல நம்ம மளிக கடை அண்ணாச்சி சொன்னாவ, வேணாம்லே போவாதான்னு, அட நல்லது சொன்னா யாரு கேக்கா? நாம மட்டும் கேட்கறதுக்கு படத்துக்கும் போயாச்சு

சின்னபிள்ளக்கு இஸ்கூலு யூனிபார்மு மாட்டிவிட்ட கணக்கா நம்ம சிம்பு அண்ணாச்சிக்கும் போலீசு யூனிபார்மு மாட்டி விட்டுருக்கா, அண்ணாச்சியும் சும்மா இல்லன்னே, படம் முழுக்கா ஓடுதா, தாவுதா, பறக்கா, ஆடுதா, கடைசி வரைக்கும் மனுச பயபுள்ளங்களாட்டும் ஒழுங்கா நடக்கவே இல்லல்லா, அதுவும் சிம்பு அண்ணாச்சி யங் சூப்பர் ஸ்டாராமுல்லா? இது எப்பா? சொல்லவே இல்லா

நம்ம தரணி அண்ணாச்சிக்கு அதெலெட்டுனா ரொம்ப பிடிக்கா என்னன்னு தெரியல, குருவில நம்ம விஜய் அண்ணாச்சிய பறக்க விட்டா, இப்ப நம்ம சிம்பு அண்ணாச்சியும் அப்படிக்கா ஏருல பறந்து இரண்டு கையாலயும் டுப்பாக்கி வச்சு டுமீல் டுமீல்னு சுட்டுட்டு அப்படிக்கா ஒரு சம்மர் சாட் அடிச்சு தரையில வந்து நிக்கா, படம் பார்த்த ஒரு அண்ணாச்சி பயந்து பாத்ரூமுக்கு ஓடுதான்னா பார்த்துக்கவே

இங்கனயெல்லாம் படம் எடுத்தா விளங்குமான்னே, நாளாமின்னைக்கு பயபுள்ளைக பேதில தியேட்டருலயே போயிட்டா ஒரு சோடா தண்ணி விக்குமான்னே? என்னமோ போங்கன்னே கொஞ்சம் யோசிக்காம்லா


பொறவு இந்த ஹீரோயினி புள்ளய எங்கிருந்து அண்ணாச்சி புடிச்சீக, பிரமாதம்யா பிரமாதம், புள்ள செக்க செவேல்னு திருநெல்வேலி அல்வாத்துண்டாட்டம் இருக்குல்லா, வாயில போட்டா கரைஞ்சிருமான்னு ஒரு பயபுள்ள கோக்குமாக்கா கேட்குது, அது சரி புள்ளய பாத்ரூமு போகும்போது பாதில கூட்டிட்டு வந்தியளா? படம் முழுக்க அஷ்டகோணலா மூஞ்சிய சுழிச்சிட்டு நடக்க விட்டுருக்கீக, ஆனா ஒன்னுன்னே புள்ளைக்கு பிண்ணனி குரலு கொடுத்தவக வாய்சு சூப்பருன்னே, புள்ளயும் நல்லா இருக்குமான்னு தெரிஞ்சவக யாராவது கேட்டு சொல்லுங்கப்பு

நம்ம சிம்பு அண்ணாச்சி படத்துல பாட்ட பத்தி சொல்லவே வேணாம், வெளங்கிரும், ஒரே ஒரு பாட்டுன்னே நம்ம எல்.ஆர். ஈசுவரி அக்கா பாட்ட பாடி இருக்காக, சும்மா வெங்கல குரலு, பாட்டு சும்மா கணீர்னு கேக்கு, ஆனா ஊடால சிம்பு அண்ணாச்சியோட அப்பாரு வந்து கத்தி கெடுக்காரு, ஏம்லே இந்த கொலவெறி?

நம்ம தரணி அண்ணாச்சி படம் முழுக்கா சிம்பு அண்ணாச்சிய பஞ்ச் அடிக்க விட்டுருக்கா, ஒன்னும் சொல்லிக்காப்புல இல்லல்லா, ஒரு பஞ்சு டயலாக்குன்னா முறுக்க நறுக்கா கடிச்ச மாட்டா இருக்க வேணா? பார் எக்சாம்புளு - ஏலே பாக்சர் டானியலு செத்தமூதி நீ ஏற்கனாவே சேட்டு கடயில திருட்டு கணக்கு எழுதி உத வாங்குனாப்புலதான் இருக்காப்டி, பின்ன என்னாத்துக்குவே உனக்கு எமெலே சீட்டு, திருட்டு மூதி அப்படிக்கா இருக்க வேணாமா?

அதவிட்டுட்டு நம்ம சிம்பு அண்ணாச்சி, நான் கண்ணாடி, பீங்கானு, காஞ்சு போன கருவாடுன்னு என்னாலே பஞ்ச் அடிக்கான்? ஆனா ஒன்னுல்லே படம் முழுக்க தக்காளி சுட்டே புடிவோன், சுட்டே புடுவேன்னு சொல்லுதாம், 
பயபுள்ள நியாயஸ்தன்லா சொன்னத செஞ்சு புட்டாம்லே…


Friday, December 2, 2011

போராளி - வெற்றியின் பாதையில்...சசிக்குமார். சமுத்திரக்கனி கூட்டணி என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறார்களா? என பார்த்தால் மேக்சிமம் நிறைவேற்றியுள்ளார்கள் என்றுதான் சொல்லலாம்.

கேரளாவிலுள்ள மனநலகாப்பகத்திலிருந்து ஒரு கொட்டும் மழை இரவில் தப்பித்து வருகிறார்கள் சசிகுமாரும், நரேஷும், கையில் சுத்தமாக காசு இல்லாமல் சென்னைக்கு வரும் இவர்கள் ஒரு பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்து பார்ட் டைம்மாக வேலை செய்து, ஃலைபிலும், லவ்விலும் ஒருவழியாக செட்டிலாலும் போது, வேனில் வரும் ஒரு அடியாள் கும்பல் இவர்களை துரத்துகிறது.

யார் அவர்கள்? இவர்களை ஏன் துரத்துகிறார்கள், உண்மையில் இவர்கள் யார்? மனநல காப்பத்தில் சேர்க்கும் அளவுக்கு என்ன நடந்தது? அங்கிருந்து ஏன் தப்பித்தார்கள் என்பதே மீதி கதை.

நாடோடிகள் படத்தில் நட்பின் துரோகத்தை சொன்ன சமுத்திரக்கனி இப்படத்தில் உறவுகளின் துரோகத்தை சொல்ல விழைந்திருக்கிறார்,

படம் இடைவேளை வரை போவதே தெரியவில்லை, அவ்வளவு விறுவிறுப்பு, நன்மைக்கும் தீமை செய், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளள் டைப் ஹீரோ பாத்திரம் சசிக்குமாருக்கு, இயல்பாகவே பொருந்தி போகிற பாத்திரம் என்பதால் அனாயசமாக செய்திருக்கிறார்.


சென்னை நகர காம்பவுண்ட் வாழ்க்கையையும், சாந்திக்கும் காந்திக்கும் நடக்கும் சண்டைகள், பேச்சுலருக்கு வீடு தர மறுப்பது, வேலை வெட்டிக்கு போகாமல் ஊர் சுற்றும் வாலிபர், ஹவுஸ் ஓனர் இவர்களை கொண்டே காமெடி ராஜாங்கமே நடத்தி இருக்கிறார் இயக்குனர்.

ஒட்டு மொத்த படத்திற்கும் வசனங்களே பிரதானம், வசனங்களுக்காகவே இன்னும் ஒருமுறை படம் பார்க்கலாம், கட்டுன பொண்டாட்டியையும், பெத்த பொண்ணையும் சந்தேகப்படுறவந்தான் பேச்சுலர்க்கு பயப்படனும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் போன்ற வசனங்களும், சாதாரணமாக நடக்கும் சம்பவங்களை கொண்டே நகைச்சுவை காட்சிகளை எடுத்ததும் ரசிக்க வைக்கின்றன, ஆனாலும் மேக்சிமம் காட்சிகள் நாடோடிகள் டைப் காட்சிகளாகவே இருக்கின்றன என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

கதாநாயகி சுவாதி கேரக்டருக்கு பெரிதாக ஒன்றும் வேலையில்லை, வழக்கம் போல தமிழ்சினிமா கதாநாயகி வேடம்தான், சுப்ரமணியபுரம் போல இருக்கும் என நினைத்து நடித்திருந்தால் சாரி மேடம், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம், பிளாஸ்பேக்கில் சிறிது நேரமே வருகின்றதென்றாலும் வசுந்தராவுக்கு வெயிட்டான பாத்திரம், ஆனாலும் படத்தின் நீளம் கருதி அவசர அவசரமாக திணிக்கப்பட்டது போல இருப்பதால் அவ்வளவாக ஒட்டவில்லை.

மற்றபடி சூரி, நாடோடிகள் படத்தின் வரும் மன்சூரலிகானை போன்றவர், நரேஷ் காதலிக்கும் பெண், பிச்சைக்காரராக வருபவர்கள் சொன்ன வேலையை சரியாக செய்திருக்கிறார்கள், நரேஷீக்கும் அழுத்தமான கேரக்டர்தான், பைத்தியம் பிடித்தது போல ஆகும் ஒரு காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார், பிண்ணனி இசை, பாடல்கள் ஒன்றும் சொல்வது போல இல்லை.

ஒளிப்பதிவு சேசிங் காட்சிகளில் பிரமாதமாக உள்ளது, இடைவேளை வரை பரபரப்பாக செல்லும் படம், இடைவேளைக்கு பிறகு சற்று தொய்வடைகிறது, இன்னும் கொஞ்சம் எடிட்டிங் செய்திருந்தால் படம் பிரமாதமாக வந்திருக்கும்.

சசிக்குமார் படம் என்றாலே நம்பி போகலாம் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை, ஈசன் படம் நன்றாக இருக்கிறது என்று எழுதிய ஒரே ஆள் நான் தான், ஆனாலும் இந்தபடம் நாடோடிகள் போல அதிரிபுதிரி ஹிட்டாக வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன்,

போராளி - சசிக்குமாருக்கும், சமுத்திரக்கனிக்கும் மீண்டும் ஒரு வெற்றிப்படம்தான், கண்டிப்பாக பார்க்கலாம்.


இது போராளி படத்திற்கான பிரத்யோக வெப்சைட், படம் பற்றிய கருத்துக்களை பகிர்கிறவர்கள் இந்த வெப்சைட்டிலும் பகிர்ந்து கொள்ளலாம்.