சமீபத்தில் அதிமுக அரசு நூறு நாட்களை கடந்த போது செய்திகளில் படித்தது, சமச்சீர் கல்வி தோல்வியுடன் நூறு நாட்களை கடந்தது அதிமுக அரசு என்று, சரி சமச்சீர் கல்வி என்றால் என்ன? ஏன் அதை கொண்டு வந்தார்கள்? எதற்காக அதை நிறுத்தி வைத்தார்கள்? இப்பொழுது ஏன் மீண்டும் அமல்படுத்துகிறார்கள் என்று யோசித்த போது
சமச்சீர் கல்வி வேண்டும், அனைவருக்கும் சமமான, பொதுவான, ஒரு பாடத்திட்டம் வேண்டும் என பல்வேறுபட்டவர்களால் நீண்ட காலமாக போராடி நீதிமன்றத்திலே வழக்கெல்லாம் தொடுத்து ஒருவழியாக முந்தைய திமுக அரசும் ஏற்றுக் கொண்டு ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஒருமாதிரியாக சமச்சீர் பாடத்திட்டத்தை கொண்டு வந்து அமல்படுத்தும் போது ஆட்சிமாற்றம் நிகழ்ந்து ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்து சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்தார்
சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை, அதை மீண்டும் தரப்படுத்தி அடுத்த ஆண்டு அமல்படுத்துவோம் என அறிவித்தார், சரி தரம் இல்லை தரம் இல்லை என்றால் என்ன வகையில் தரம் இல்லை என்று பார்த்தால் முந்தைய அரசாங்கத்தின் துதிபாடும் வகையில் கருணாநிதி அவர்களின் புகழ்பாடும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்,
சமச்சீர் கல்வியை பொறுத்தவரை பாடத்திட்டத்தில் கடந்த ஆட்சியாளர்களின் புகழ்பாடும் வரிகள் இருந்தால் அதனை நீக்கிவிடலாம், இப்பொழுதும் அதைத்தான் செய்கிறார்கள், அப்படி செய்துவிட்டு தாராளமாக அமல்படுத்தி இருக்கலாம்,
இல்லை சரியான கற்பித்தல் வசதிகள் இல்லை, அந்த பாடத்திட்டத்தை கற்பிக்கும் அளவுக்கு ஆசிரியர்களின் தரம் இல்லை என்றால் அது அரசாங்கத்தின் தவறுதானே தவிர கல்வியின் தரம் அல்ல, தள்ளிப்போடும் ஒருவருடத்தில் மட்டும் ஆசிரியர்களின் தரம் உயர்ந்துவிட போவதில்லை, வீணான இந்த இரண்டு மாத காலங்களில் வீணான நேரத்தில் ஆசியர்களுக்கு இடையே குழு அமைத்து சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பற்றிய ஒரு புரிந்துணர்தலையாவது ஏற்படுத்தி இருக்கலாம்
அல்லாது மெட்ரிகுலேசன் பாடத்திட்டம்தான் சிறந்தது, அதை படிப்பவர்கள்தான் சிறந்தவர்கள் என்றால் தாராளமாக அதையே சமச்சீர் கல்வியாக அமல்படுத்தி இருக்கலாம், காசு பணம் வசதிகள் இல்லாத ஏழைகள் தாங்கள்தான் படிக்கவில்லை, தங்களது குழந்தைகளாவது ஆங்கில மீடியத்தில் படித்து பெரியாளாகட்டும் என்று தகுதிக்கு மீறி கடன் வாங்கி படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஒன்றுக்குமே வழியில்லாமல் ஸ்டேட்போர்டில் அரசாங்க பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் அதே கல்வியை கொடுப்பதுதானே சரியானதாக இருக்கும்
[இதில் இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விசயம், தமிழ் மொழியையே ஒதுக்கி, மம்மி, டாடி, என கூறும் ஒரு ஆங்கில சமுதாயத்தை உருவாக்கி, தாய்மொழியையே திணறடித்த பெருமையும் இந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளையே சாரும், இன்னும் தெளிவான சொல்லப் போனால் தமிழ்மொழியிலேயே எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம்]
நிறைய மெட்ரிகுலேசன் பள்ளிகளில் வெறும் இளங்கலை படித்தவர்கள்தான் பனிரெண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கிறார்கள், +2 வரை படித்தவர்கள் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கெல்லாம் ஆல்பாஸ் ஆவதில்லையா? இல்லை அவர்கள் மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தையே நடத்துவதில்லையா?
இப்படிப்பட்ட தனியார் பள்ளிகளை ஒப்பிடும் போது அரசாங்க பள்ளிகளின் ஆசிரியர்களின் தரமும், அவர்களின் கல்வித்தரமும் அதிகமாகவே உள்ளது, அது இல்லாமல் வகுப்பறை வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி வசதி, விளையாட்டு மைதானம் இல்லாமை போன்ற வசதிகள்தான் பிரச்சனை என்றால் அதற்கு முற்று முழுதாக அரசாங்கமே காரணம் அல்லாமல் சமச்சீர் கல்வி அல்ல, இத்தனை வருடங்களாக அதற்காக ஒரு நடவடிக்கையும் எடுக்காதவர்கள் இந்த ஒரு வருடத்தில் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடுவார்களா என்ன?
ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த தரமான ஆசிரியபயிற்சி பள்ளிகளும், அங்கே தரமான பாடத்திட்டங்களும் தேவை, கூடவே நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டிய நிலையும் உள்ளது, இதை எதுவுமே செய்யாமல், 100 மாணவர்கள், 200 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருந்தால் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு வராது, வெறுப்பே வரும்
எந்த பாடத்திட்டமானாலும் படிப்பது எதுவுமே வாழ்க்கையில் நடக்கபோவது இல்லை, இங்கு தியரி வேறு, பிராக்டிகல் வேறு, படிப்பு என்பது அவர்கள் கற்றுக் கொள்வதற்கான, தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பே தவிர, அதுவே வாழ்க்கை அல்ல,
எல்லா பாடங்களிலும் முதல்மதிப்பெண் வாங்கி பள்ளியில் சிறந்தவர்களாக விளங்கி வாழ்க்கையில் தோற்றவர்களும் உண்டு, ஒன்றுமே படிக்காமல் இருந்து வாழ்க்கையில் உயர்ந்தவர்களும் உண்டு, எல்லாமே அவரவர்கள் கற்றுக் கொள்ளும் அனுபவபாடமும், வாழ்க்கைபாடமும்தான் தீர்மானிக்கிறது, அதுவே அவர்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது
ஆனால் இந்த அனுபவத்தை முதன்முதலாக கற்றுக் கொடுப்பவர்கள், கொடுக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்தான், ஆனால் கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரிய பெருமக்களுள் சிலர், ஏதோ இயந்திரம் போல கடமையே என பாடத்தை நடத்தி விட்டு டெஸ்ட் வைத்துவிட்டு, பரீட்சையும் முடிந்தது, நம் கடமையும் முடிந்தது என விட்டுவிடுவதே இத்தகைய பிரச்சனைக்கு காரணம் என எண்ணுகிறேன்
தனியார் பள்ளிகளில் இத்தகைய பிரச்சனைகள் பெரும்பாலும் இல்லை எனலாம், ஏனெனில் ஒருவகுப்பில் மாணவர்கள் பெயிலானால் அதற்கு அந்த வகுப்பு ஆசிரியர்களே பொறுப்பு என்ற எழுதப்படாத விதிதான் அதற்கு காரணம், மாணவன் பெயிலானால் சம்பளம் கொடுக்கமாட்டார்களோ, வேலை போய்விடுமோ என்ற பயம்தான் காரணம்
ஆனால் அரசு பள்ளியில் நடப்பதென்ன? அரசாங்க உத்தியோகம், வேலையை விட்டு தூக்க முடியாது, யாரும் கேள்வி கேட்க முடியாது, நல்ல சம்பளம், மீறி எதாவது பிரச்சனை என்றால் சங்கம் இருக்கிறது, இதனால்தானே தனியார் பள்ளி ஆசிரியர்களும் அரசாங்க பணியினை நோக்கி ஓடுகிறார்கள்
இத்தகைய அலட்சியப் போக்கை தடுத்தாலே அரசாங்க பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு சமமாக, ஏன் அவர்களை விட மேலாகவே வீறு நடை போடும், அரசாங்க பள்ளி மாணவன் பெயிலானாலும் ஆசிரியரே பொறுப்பு என்ற நிலை வர வேண்டும், சமச்சீர் கல்வியை தடுக்க கோர்ட், கேஸ் என்று இரண்டு மாதங்களாக பாடுபட்ட அரசு இது போன்ற அலட்சிய போக்கையும் தடுக்கவும் பாடுபட வேண்டும், தக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும்,
மாதா பிதா குரு என்ற மூன்றாம் நிலையில் உயர்த்தி வைத்திருக்கும் ஆசிரிய சமூகம் தன் பொறுப்புணர்ந்து நடக்கட்டும், நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை, பொறுப்பற்று நடக்கும் சிலர் மட்டுமே, ஒன்றாம் வகுப்பில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு ஆசிரியர்களையும் பொறுத்தே மாணவனின் வளர்ச்சியும், கற்றுக் கொள்ளும் திறனும் அமைகிறது, அனைத்து ஆசிரியர்களும் சரியாக செயல்படும் போது ஒரு பொறுப்புமிக்க சமுதாயம் இயல்பாகவே உருவாகும்
கடைசியாக ஒரு வாய்ப்புக்காகவோ, வேலைக்காகவோ ஒரு அரசாங்க பள்ளியின் மாணவனும், மெட்ரிகுலேசன் பள்ளி மாணவனும் முன்னின்றால், அங்கு அவர்கள் இருவரின் தனித்திறமை, கற்றுக் கொள்ளும் ஆர்வம், முடிவெடுக்கும் திறன், சமயோஜித புத்தி, தகுதியை மட்டுமே கணக்கில் கொள்ளும் நிலை வர வேண்டும், மாறாக இவன் மெட்ரிகுலேசனில் படித்தவன் அதனால் சிறந்தவன், இவன் ஸ்டேட் போர்டில் படித்தவன் அதனால் திறமையற்றவன் என்ற முடிவுக்கு வர வேண்டிய நிலை வர வேண்டாம்
நாங்கள் எதிர்பார்த்தது குதிரை, கிடைத்தது கழுதை, இந்த சமச்சீர் கல்வி அரைவேக்காட்டு பாடத்திட்டம், இந்த சமச்சீர் கல்வியை படித்தால் கிளர்க் வேலைக்குதான் போக முடியும் என்பது போன்ற விதண்டாவாதங்கள் கூறிப் பயனில்லை, ஏனென்றால் எதையும் செய்ய ஆரம்பிக்காலமே ஒரு முடிவுக்கு வர வேண்டாமே, நூறு சதம் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டுதான் ஆரம்பிப்போம் என்றால் இன்னும் 10 வருடங்கள் ஆனாலும் இதே நிலைமைதான் நீடிக்கும், ஏனென்றால் இங்கு செயல்படும் அரசாங்கமும், அரசு இயந்திரமும் அந்த நிலையில்தான் உள்ளது
அப்துல் கலாமே அரசு பள்ளியில் பழைய பாடத்திட்டத்தில் படித்துதான் ஜனாதிபதி அளவுக்கு உயர்ந்துள்ளார், இன்னும் நிறைய அறிவாளிகளும், மேதைகளும் தெருவிளக்கிலும், மண்ணென்ணெய் விளக்கிலும் எந்த வசதிகளும் இல்லாமல்தான் படித்து வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர்
இரண்டு மாதங்களாக வழக்கு நடத்த நேரமிருந்த அரசுக்கு, ஏனோ தனியார் பள்ளிகளின் கல்விகட்டண கொள்ளையை பற்றி மட்டும் பேசவோ, தடுக்கவோ நேரமில்லாமல் போனது ஆச்சரியம்தான், இன்றும் கூட சில தனியார் பள்ளிகளில் மெட்ரிகுலேசன் பாடத்தைதான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்,
சமச்சீர் கல்வி விசயத்தில் அரசுக்கு தோல்வி ஏற்பட்டு விட்டதே என கருத வேண்டிய அவசியம் கூட இல்லை, அரசானது இரும்பு கரம் கொண்டு இந்த தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்தி பெற்றோர்கள் அதிகமாக கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத் தந்தாலே போதுமானது, சமச்சீர் வழக்கு பிரச்சனையை மறந்து மக்கள் அடியோடு மறந்து சமூக நீதி காத்த வீராங்கனை என கொண்டாடி விடுவார்கள்
இது முழுக்க முழுக்க ஒன்றாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை அரசுப்பள்ளியிலேயே, தமிழிலேயே படித்து வளர்ந்த ஒரு மாணவனின் பார்வையே, இது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம், ஒரு வருட இடைவெளி என்பது சிலருக்கு சரியாகவும் தோன்றலாம், ஆனால் அந்த ஒரு வருடம் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துக்கு அதுவே ஆப்பாகவும் அமைந்துவிடும் என்பது என்னைப்போன்ற ஒரு வருடகாலத்தில் வாய்ப்புகளை இழந்த அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களுக்கு புரியும் என்றே எண்ணுகிறேன், எனவே தவறாக இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள், சரியாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்
எந்த ஒரு மாற்றமும் உடனடியாக நிகழ்ந்து விடுவதில்லை, எனவே நடைபெறும் மாற்றத்தையும் யாரும் தடுக்கவும் வேண்டாம், முயலவும் வேண்டாம், ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாதது, நாளை இந்த ஆட்சியே கூட மாறிப் போகலாம்..! யார் கண்டது..!
- இரவுவானம்