Saturday, September 24, 2011

உழைப்பாளிகளும் பிச்சைகாரர்களும் கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் ...


சில நாட்களுக்கு முன் நண்பர்களுடன் டீ சாப்பிட ஒரு பேக்கரிக்கு சென்றிருந்தோம், உள் நுழைவதற்கு முன்பே பிச்சைகாரர்கள் அய்யா அம்மா என்று தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள், இந்தியா முழுக்கவே பிச்சைகாரர்கள் தொல்லை இருந்தாலும், திருப்பூரில் அது ரொம்பவே ஜாஸ்தி, ஒவ்வொரு கடைக்கு முன்பும் குறைந்தது இரண்டு பேராவது இருப்பார்கள், டீ சாப்பிட வருபவர்கள் இவர்களுக்கும் காசு கொடுத்து விட்டுதான் செல்ல வேண்டும், அந்தளவு தொந்தரவு ஜாஸ்தியாக இருக்கும்.

இவர்களில் புரபசனல் பிச்சைகாரர்களை விட இன்ஸ்டண்ட் பிச்சைகாரர்களின் தொல்லை ரொம்பவே அதிகம், விட்டால் காலில் விழுந்து விடுவார்கள், காசு கொடுக்கும் வரை காலை விடமாட்டார்கள், இன்ஸ்டண்ட் காபி போல அது என்ன இன்ஸ்டண்ட் பிச்சைகாரர்கள் என்கிறீர்களா? அது ஒன்றும் இல்லை, தேவைப்படும் போது மட்டும் பிச்சை எடுத்து தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பிச்சைகாரர்கள்தான் இன்ஸ்டண்ட் பிச்சைகாரர்கள்.

ரொம்ப நாள் முன்பு ஒரு நாற்பது வயது நெருங்கிய நடுத்தர வயது பெண்மணி, கண்ணு ஒரு இரண்டு ரூபாய் இருந்தா குடேன், ஊருக்கு போறதுக்கு இரண்டு ரூபாய் பத்தல என்று சொன்னதால், இரண்டு ரூபாய் கொடுத்து விட்டு சென்று விட்டேன், மதியம் ஒரு வேலை நிமித்தமாக வண்டியில் சென்றுகொண்டிருந்த போது பார்த்த போது ஒரு டாஸ்மாக் வாயிலில் குவாட்டரை பாட்டிலை ராவாக கவுத்து கொண்டிருந்தது அந்த நடுத்தரம், என்னை பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு வேறு சிரித்தது, நான் அப்படியே ஷாக்காகிவிட்டேன்.

பிறகு அடிக்கடி அந்த பெண்மணியை பார்ப்பேன், என்னிடமே வேறு காரணம் சொல்லி காசு கேட்கும், யக்காவ் உங்கள எனக்கு நல்லாவே தெரியும் என்பேன், சிரித்துக் கொண்டு போய்விடும். 


பிறகு ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் வெயிட்டிங்கில் உள்ள பஸ்ஸில் உட்கார்ந்திருந்த போது, கடும் வெயிலில் இரண்டு காலும் இல்லாத ஒருவர், வெறும் வேஷ்டி மட்டும் உடுத்திக் கொண்டு சிறிய சக்கரம் பொருத்திய வண்டியை கையாலே கஷ்ட்டப்பட்டு இழுத்துக் கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார், பார்க்கவே பரிதாபமாக இருக்க, ஒரு பத்து ரூபாய் கொடுத்து விட்டு வந்தேன்.

பிறிதொரு நாளில் அதே ஆளை தமிழ்நாடு ஏசி தியேட்டரில் ஹாயாக கால்மேல் கால் போட்டு அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கையில், தியேட்டர் ஸ்கீரினை கிழித்து அந்தாளை தொங்க விட வேண்டும் போல ஆத்திரம் வந்தது.

இப்படி வாய் பேசாத ஊமை என அச்சிடப்பட்ட காகிதம் கொடுத்து பிச்சை எடுத்தவர், பாம்பு படம் போட்ட தட்டை வைத்துக் கொண்டு கோயிலுக்கு போறேன்பா என்றவர், புள்ளைக்கு கண்ணாலம்பா காசு கொடு என்றவர், ரொம்ப பசிக்குதுங்க என்றவர், குழந்தையை கையில் வைத்துக் கொண்டு காசு கேட்டவர், வெளியூருங்க பர்ச பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்க என்று சொன்னவர் இப்படி பல பல பிச்சைகாரர்களுக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாலோ என்னவோ பிறகு யார் பிச்சை கேட்டாலும் சந்தேகத்தோடு பாக்கவும், சில்லறை காசு இருந்தாலும் கொடுக்க மனம் இல்லாமலும் போயிற்று.

நான் பழைய நிறுவனத்தின் பணிபுரியும் வரை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட டவுன் பஸ் ஒன்றில் பயனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தேன், அப்படி பயணம் செய்து கொண்டிருக்கும் போது, தலை முழுக்க நரைத்த அறுபது வயதை கடந்த பாட்டி ஒருவர் ரெகுலராக பிச்சை எடுப்பார், அவரது கண்களில் நிரந்தரமாக ஒரு சோகம் குடி கொண்டிருக்கும், சில சமயம் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும், நானும் வாரத்தில் ஐந்து நாட்களாவது அவரை பார்ப்பேன், காசும் கொடுத்துக் கொண்டுருந்தேன்.


மேற்சொன்ன இரண்டு சம்பவங்களை அடிக்கடி பார்த்தால் என்னவோ, அவருக்கும் காசு கொடுக்க மனம் வரவில்லை, அவரும் நான் பழக்கப்பட்டவன் என்பதால் தினமும் என்னிடம் கேட்பதும், அவரது முகத்தை பார்த்தாலே இரக்கப்பட்டு விடுவேனோ என எண்ணி நானும் அவரை தவிர்ப்பதும் தொடர்கதையாகி போனது, இவ்வாறு ஒருநாள் அவர் பிச்சை கேட்கையில் காது கேட்காதவாறு திரும்பிக் கொண்டேன்.

சிறிது நேரத்திற்கு பின் அவர் எங்கு சென்றிருப்பார் என பார்க்க நினைத்து திரும்பினால், ஒரு முப்பது வயதுக்கு உட்பட்ட குடிகாரன் ஒருவன் அந்த மூதாட்டியை அடித்து உதைத்து அவர் பிச்சை எடுத்த காசை பிடுங்கிக் கொண்டு போய்விட்டான், அந்த குடிகாரன் அந்த மூதாட்டியின் மகனாம், இது தினமும் நடக்கும் ஒன்று என்றும், கேட்டால் என் அம்மாவ நான் அடிப்பேன் கேட்க நீங்க யாருடான்னு சண்டைக்கு போவானாம், குடிகாரன்கூட என்ன பிரச்சனைன்னு யாரும் கேட்காமலே ஒதுங்கிக்கிறாங்கன்னு ஒருவர் சொல்லி கொண்டிருந்தார்.

அவன் அடித்த அடியில் கீழே விழுந்த அந்த அம்மா எழ முடியாமல் கதறி அழுது கொண்டிருந்தார், பார்த்த எனக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது, சே இத்தனை நாள் காசு கொடுத்துக் கொண்டிருந்தமே, இந்த வயதில் இவர் ஏமாற்றவா போகிறார், போய் அவருக்கு உதவி செய்ய வேண்டும், கையில் இருக்கும் பணத்தை கொடுக்கலாம் என நினைத்த போது பேருந்து புறப்பட்டு விட்டது, வேலைக்கும் நேரமாகி விட்டதால், கீழே இறங்கவும் மனம் வரவில்லை, அன்று அவருக்கு பணம் கொடுக்காதது நாள் முழுவதும் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

சரி நாளைக்கு கண்டிப்பாக பணம் கொடுக்க வேண்டும், இனி மீண்டும் தினமும் காசு கொடுக்கலாம் என நினைத்திருந்தேன், ஆனால் அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என மீண்டும் அவரை சந்திக்கவே இல்லை, காலப்போக்கில் நானும் அவரை மறந்து விட்டேன், ஏறக்குறை ஆறுமாத கால இடைவெளி இருக்கும் அந்த குடிமகனை பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன், பிளாட் ஆகி வாந்தியெடுத்து நாறிக் கிடந்தான், அருகில் இருந்த கடைக்காரர் ஒருவர் அவனை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார், அவனின் அம்மா அந்த வயதான மூதாட்டி இறந்து போய் விட்டார் என கூறிக் கொண்டிருந்ததை கேட்ட போது, மீண்டும் அந்த குற்ற உணர்ச்சி எனக்கு வந்து விட்டது, இதோ இப்பொழுது இதை எழுதும் தருணத்திலும் அதனை உணர்கிறேன்.

சரி விசயத்திற்கு வருகிறேன், நாங்கள் டீ சாப்பிட்டு கொண்டு இருக்கையில்  மனநலம் குன்றியவர் போல் ஒருவர் சரியாக நடக்கவும் முடியாமல், கை, கால்கள் ஒருபக்கம் லேசாக இழுத்தது போல நடந்து வந்தார், வந்தவர் மற்ற பிச்சைகாரர்கள் போல பிச்சை எடுக்க போகிறார் என நினைத்துக் கொண்டிருக்கையில், கையில் கொண்டு வந்திருந்த துணி மூட்டையை அவிழ்த்து அதிலிருந்து ஊது பத்திகளை எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

அப்பொழுதுதான் அவருக்கு பேச்சும் சரியாக வரவில்லை என்று தெரிந்தது, வெகு நேரம் கூப்பாடு போட்டும் யாரும் வாங்கவில்லை, அதை பார்த்த ஒருவர் ஒரு பத்து ரூபாய் தாளை வெச்சுக்கோ என நீட்டினார், அதனை அவர் வாங்க மறுத்து விட்டார், ஊதுபத்தி வாங்கிக்கொள்ளுமாறு கேட்டார், பிறகு அவரும் ஒன்று வாங்கிக் கொண்டார், அதனை பார்த்து இன்னும் இரண்டு பேர்கள் வாங்கினார்கள், நானும் ஒன்று வாங்கிக் கொண்டேன்.

காரில் வந்த பணக்காரர் ஒருவர், 100 ரூபாய் தாளை அவருக்கு பிச்சையாக கொடுத்தார், அவர் மீண்டும் வாங்க மறுத்து ஊது பத்தி வாங்க சொன்னார், அந்த பணக்காரர் எனக்கு ஊதுபத்தி வேண்டாம், சும்மா வைத்துக் கொள் என்று சொன்னார், அதனை கேட்டு கோபப்பட்ட அவர் நான் பிச்சை எடுக்க வரவில்லை, உழைத்து சம்பாதிக்கவே விரும்புகிறேன் என திக்கி திணறி சொன்னதை கேட்டு வாயடைத்து போனவர் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

போனவர் அவர் மட்டுமல்ல அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மற்ற பிச்சைகாரர்களும்தான், கை கால் சரிவர முடியாமல், பேச முடியாமல், நடக்க முடியாமல் இருப்பவரே உழைத்து சம்பாதிக்க நினைக்கும் போது எல்லாம் சரியாக இருந்தும் சோம்பேறித்தனமாக பிச்சை எடுக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியே அவர்களை அங்கிருந்து அகல செய்தது.

விற்றது குறைவே ஆகிணும் தான் உழைத்து சம்பாதித்ததில் பெருமையோடு அடுத்த இடத்தை நோக்கி தட்டு தடுமாறி நகர தொடங்கினார் அந்த ஊதுபத்தி விற்பவர்.

வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும் என்பதை போல, உழைப்பின் நிழல் ஊரெங்கும் பரவித்தான் காணப்படுகிறது, ஆனால் அந்த நிழலில் ஒதுங்க மனமில்லாமல் வெயிலிலேயே கிடக்கும் சோம்பேறிகளை என்ன சொல்வது?!!!

22 comments:

 1. பிரமாதமான இடுகை... பல இடங்களில் என் எண்ணங்களை பிரதிபலித்தது... இதையெல்லாம் எழுதினால் பிரச்சனை வருமோ என்று நான் பயந்த ஒருசில விஷயங்களைப் பற்றி தைரியமாக எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. ஒரு தைரியமான பதிவு..

  பலரின் என்ன ஓட்டங்கள் தங்கள் பதிவில்..

  பாராட்டுகள்..

  ReplyDelete
 3. மாப்ள அருமையான பகிர்வுய்யா....பிச்சை எடுப்பவனாய் பார்த்து திருந்தா விட்டால் பிச்சையை ஒழிக்க முடியாது!

  ReplyDelete
 4. செமத்தனமான பதிவு!!!!! சரியான சாட்டையடியும் கூட.....!

  ReplyDelete
 5. உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்...

  ReplyDelete
 6. பிறிதொரு நாளில் அதே ஆளை தமிழ்நாடு ஏசி தியேட்டரில் ஹாயாக கால்மேல் கால் போட்டு அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கையில், தியேட்டர் ஸ்கீரினை கிழித்து அந்தாளை தொங்க விட வேண்டும் போல ஆத்திரம் வந்தது./// வாஸ்தவம் தான் ..

  ReplyDelete
 7. நண்பா... சிறந்த பகிர்வு, சில பிச்சைகாரர்களால் பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

  ReplyDelete
 8. வாக்கு முக்கியமல்ல, உங்களின் வார்த்தையே முக்கியம்..!


  விமர்சனம் எழுத வந்து இதைப் பார்த்து இதையே இங்கே பதிவு செய்கின்றேன்.

  அற்புதம்.

  ReplyDelete
 9. சமீபத்தில் படித்த சிறந்த பதிவுகளில் ஒன்று இது! பாராட்டுக்கள்...!

  ReplyDelete
 10. செம போஸ்ட் சுரேஷ். இதுபோல நான் சந்தித்த அனுபவங்களை எழுதத்தூண்டி உள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 11. பெரும்பாலானவர்களின் எண்ணம் இதுதான். நாம் அவர்களுக்கு உதவி செய்கிறோமா அல்லது ஊக்குவிக்கிறோமா என்றே குழம்பி விடுகிறோம். அருமையான பதிவு.

  ReplyDelete
 12. கொஞ்சமல்ல நிறையவே குற்ற உணர்வு எல்லாருக்கும்...

  நல்லதொரு பதிவு...

  ReplyDelete
 13. இப்படிப்பட்ட தொந்தரவுகள் தொடருகிறது நல்ல இடுகை பாரட்டுகள்

  ReplyDelete
 14. ஒரு கில்மா தலைப்பை பார்த்து ஓடோடி வந்தேன்... இங்கே வந்தா பதிவைக் காணோம்... என்னய்யா ஆச்சு...

  ReplyDelete
 15. அருமையானதொரு பதிவு
  ஊனமுற்றவர்களாக நடித்து சிலர் பிச்சையெடுப்பதால் எல்லோர் மீதும் சந்தேகம் பிறக்கிறது. இதனால் உண்மையிலே முடியாதவர்கள் கூட ஒதுக்கப்படுகிறார்கள். ஊனமென்றால் கூட உழைத்து சம்பாதிக்க நினைப்பவர்கள் உயர்ந்தவர்கள்

  ReplyDelete
 16. கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள், தாமதத்திற்கு மன்னிக்கவும்...


  @ பிரபாகரன்

  இந்த பதிவுதான் நான் கடைசியாக வெளியிட்டது, ஊருக்கு சென்றுவிட்டு இன்றுதான் வந்தேன், இனிமேல்தான் எதாவது யோசிக்க வேண்டும், நீங்கள் குறிப்பிட்டது வேறு எதாவது பதிவருடையதாய் இருக்கும்.

  ReplyDelete
 17. கலர் டி.வி இலவசம், ரேஷனில் அரிசி இலவசம், பஸ் பாஸ் இலவசம், லேப் டாப் இலவசம், வேட்டி, சேலை இலவசம், அப்புறம் பொண்ணுங்க கல்யாணத்துக்கு நகை இலவசம், யாரும் கவர்மெண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கலைன்னு மட்டும் சொல்லாதீங்க.. இலவசத்தை வாங்கி யூஸ் பண்ணுங்க.. இல்லாட்டி பிச்சை எடுங்க.. நோ ப்ராப்ளம்..

  இன்கம் டேக்ஸ் வராது.. (அது பரவாயில்லை. டாஸ்மாக்கில் போதுமான வருமானம் வருகிறது)

  ReplyDelete
 18. கலர் டி.வி இலவசம், ரேஷனில் அரிசி இலவசம், பஸ் பாஸ் இலவசம், லேப் டாப் இலவசம், வேட்டி, சேலை இலவசம், அப்புறம் பொண்ணுங்க கல்யாணத்துக்கு நகை இலவசம், யாரும் கவர்மெண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கலைன்னு மட்டும் சொல்லாதீங்க.. இலவசத்தை வாங்கி யூஸ் பண்ணுங்க.. இல்லாட்டி பிச்சை எடுங்க.. நோ ப்ராப்ளம்..

  இன்கம் டேக்ஸ் வராது.. (அது பரவாயில்லை. டாஸ்மாக்கில் போதுமான வருமானம் வருகிறது)

  ReplyDelete
 19. அட இன்னா பாஸ் நீங்க?
  நம்ம சைட்டுக்கு வாங்க!
  கருத்து சொல்லுங்க!!
  நல்லா பழகுவோம்!!!

  ReplyDelete
 20. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html

  ReplyDelete
 21. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!