Tuesday, August 23, 2011

அரசு மருத்துவமனைகள் மின்மயானங்கள் ஆகும் நிலைமை..!

சமீபத்தில் ஒரு நாள் அரசு மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது, வழக்கம் போலவே நல்ல கூட்டம், நோயாளிகள், உறவினர்கள், அவர்களை பார்க்க வந்த தெரிந்தவர்கள், நண்பர்கள் என பலதரப்பட்டவர்களால் மருத்துவமனையே ஜே ஜே என்றிருந்தது,

மருத்துவமனையில் சுத்தம் சுகாதாரம் என்றால் கிலோ என்னவிலை?, உழவர் சந்தையில் கிடைக்குமா? என்ற அளவில் வழக்கம் போலவே இருந்தது, மக்களும் மருத்துவமனையை சொந்த வீடு போலவே பாவித்து ஆங்காங்கே வெத்தலை பாக்கு போட்டு துப்பியும், சிறுநீர் கழித்தும், குப்பைகளை போட்டும் நாறடித்தும், நாற வைத்தும் கொண்டிருந்தார்கள்,

இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என்பது போல மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவமனை கழிவுகள், இரத்தம் தேய்ந்த பஞ்சுகள் போன்றவற்றை திறந்த வெளியில் கொட்டி வைத்திருந்தார்கள், மொத்தத்தில் எல்லா அரசாங்க மருத்துவமனையை போலவே இந்த மருத்துவமனையும் ஆறு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாத அளவு டிட்டோவாக இருந்தது

ஆனால் இதுவல்ல விசயம், அங்கு குறிபிடத்தகுந்த அளவில் தொங்கிக் கொண்டிருந்த லூஸ் வயர்கள்(LOOSE WIRE), அவை ஒன்றோடொன்று உரசி காற்றில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன, பரவலாக ஆங்காங்கே இது போன்ற வயர்கள் தொங்கிக் கொண்டிருந்தன, லூஸ் வயர்கள் முழுமையான அளவில் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லைதான், ஆனால் அவையே எலாஸ்டிக் பிரிந்து மின் கம்பிகள் வெளியே வரும் நிலையில் இருந்தால்?

அதனை யாரேனும் தொட்டால் ஷாக்கடிப்பது மட்டுமல்ல, அவை ஒன்றோடொன்று உரசி தீப்பற்றிக் கொண்டால் என்னாவது? தீ எரிவதற்கு தேவையான முக்கியமான மூலப்பொருள் ஆக்சிஜன், அந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் நிரப்பி வைத்திருக்கும் அறையில் இது போன்ற தீ வீபத்து ஏற்பட்டால் என்னாகும்? வெடித்து சிதறாதா?

சற்றே சிந்தித்து பாருங்கள், கும்பகோணம் பள்ளி தீ விபத்து, கல்யாண மண்டபம் தீ விபத்து போன்றவற்றை, சிறிய அளவிலான இடத்திலேயே எவ்வளவு பெரிய ஆபத்து நேரிட்டு இருக்கிறது, எத்தனை பேர் கருகி செத்திருக்கிறார்கள், அப்படியென்றால் ஆயிரக்கணக்கானோர் கை உடைந்து, கால் உடைந்து, தீவிர சிகிச்சை பிரிவிலும், நடக்க முடியாமலும், உள்நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் வந்து போகும் ஒரு அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால்? நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது அல்லவா? நினைத்து பார்க்கவே முடியவில்லை அல்லவா?

சாதாரணமாக ஒரு சிறிய நிறுவனம் தொடங்கி அதற்கு தீயணைப்பு நிலையத்திலிருந்து NOC (நோ அப்ஜெக்சன் சர்பிடிபிகேட் - NO OBJECTION CERTIFICATE) வாங்க வேண்டும் என்றாலே தேவையான அளவு தீயணைப்பான்கள்(FIRE EXTINGUISHERS), குறைந்தபட்சம் இரண்டு மைல் தொலைவாவது கேட்க கூடிய அளவில் சைரன்கள்(SYRAN), MCP (MANUAL CALL POINT), ஒரு அறைக்கு இரண்டு வாயில்கள், ஒவ்வொரு பகுதியிலும் ஒரு அவசர கால வழி(EMERGENCY EXIT), மணல் நிரம்பிய பக்கெட், அவசரகால வரைபடம்(EMERGENCY EVACUATION PLAN), ஒவ்வொரு வழியினையும் தெளிவாக காட்டும் வகையில் இருட்டில் ஒளிரும் வண்ணம் எழுதப்பட்ட எக்சிட்(EXIT), எமர்ஜென்சி எக்சிட் போர்டுகள்(EMERGENCY EXIT BOARDS), எமர்ஜென்சி லைட்டுகள்(EMERGENCY LIGHTS) போன்றவற்றை கேட்கிறார்கள், ஒரு மாடிக்கு அதிகமாக இருந்தாலே ஹோஸ் ரீல் டிரம் பைப்புகளையும்(HOSE REEL DRUM) சேர்த்து கேட்கிறார்கள், இத்தனையும் செய்து லஞ்சமும் சேர்த்து கொடுத்தால், அதனை வாங்கிவிட்டு அது நொட்டை இது சொள்ளை என்று ஆயிரம் குறை கூறுவார்கள் தீயனைப்பு நிலையத்தார்,

இது அவர்களை குறை சொலவதற்காக கூறவில்லை, சாதாரண நிறுவனத்திற்கே இந்த அளவு விசயம் தேவைப்படுகிறது என்றால் ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் மருத்துவமனைக்கு எந்த அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படும், இதனைப்பற்றி எனக்கு தெரிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஒருவரிடம் கேட்டேன்

அதற்கு அவர் சொன்ன பதில், நாங்கள் வருடத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து அறிக்கை கொடுப்போம், ஆனால் அவர்கள் எதையும் செய்வதில்லை, தலைமை டாக்டரிடம் கேட்டால், மருத்துவமனைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு, மருத்துவமனை கட்டிடங்களுக்கு எல்லாம் பொதுப்பணித்துறைதான் பொறுப்பு என்று சொல்கிறார், 

பொதுப்பணித்துறைக்கு ரோட்டில் குழி தோண்டி போடவே நேரம் இல்லை அப்புறம் எங்கே இவர்கள் அனுப்பும் தீயணைப்பு நிலைய அறிக்கையினை கொண்டு நடவடிக்கை எடுக்க நேரம் இருக்க போகிறது? அது பத்தோடு பதினொன்றாக பஜ்ஜி துடைக்கும் காகிதமாக குப்பைத் தொட்டிக்கு போய் இருக்கும்.

ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தீயணைப்பு துறையினரும் கேட்பதில்லை, அவர்களை பொறுத்தவரையில் தங்களது வேலை ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பது அவ்வளவே, அப்படி என்றால் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் யார் பொறுப்பு? காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும், அரசாங்க ஊழியர்கள் மாற மாட்டார்கள் போல  
எந்த ஆட்சி வந்தாலும், ஆட்சியாளர்கள் மாறினாலும், திட்டங்கள் தீட்டும் போது அவர்கள் தவறாமல் குறிப்பிடும் வார்த்தை தொலை நோக்கு பார்வையோடு கூடிய திட்டம் என்பது, அப்படிபட்ட திட்டம் ஒன்றை பார்ப்போம், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் கலைஞர் காப்பீடு திட்டம், ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் என்ற அளவில் பொது காப்பீடு திட்டம் ஒன்றை உருவாக்கி 500 கோடி, 1000 கோடி என்று தனியார் காப்பீடு நிறுவனத்திற்கு பிரீமியம் செலுத்தினார்கள், அதில் அவர்கள் அடித்த கமிசன் தொகை எவ்வளவு என்று தெரியவில்லை

அதையே இப்போதைய அரசு விரிவாக்கி நான்கு லட்ச ரூபாய்க்கு காப்பீடு செய்வதாக அறிவித்துள்ளது, ஒரு லட்ச ரூபாய்க்கே ஆயிரம் கோடி அளவிற்கு பிரீமியம் கட்டியவர்கள் நான்கு லட்ச ரூபாய்க்கு எத்தனை கோடி பிரிமியம் கட்ட போகிறார்களோ, எத்தனை கோடி கமிசன் அடிக்க போகிறார்களோ தெரியாது, இதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் தொலை நோக்கு பார்வையாக இருக்கிறது

இத்தனை ஆயிரம் கோடியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கும் நேரத்தில் அந்த பணத்தை கொண்டு அரசு மருத்துவமனைகளையே தனியாருக்கு நிகராக தரம் உயர்த்தி இருக்கலாம், சில லட்சங்கள் செலவிலேயே தேவையான தீ தடுப்பு போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யலாம், ஆனால் யாருக்கும் அதை பற்றிய எண்ணமும் இல்லை தேவையும் இல்லை,

அவர்களுக்கு தேவைப்படாமல் இருக்கலாம், ஆனால் மக்களுக்கு? அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருப்பது ஏழை எளிய மக்கள்தானே? நாம்தானே? நாம் இதற்கு என்ன செய்ய போகிறோம்?

தமிழ் சினிமாவில் வரும் கிளைமேக்ஸ் போலீஸ் போலவே, தமிழக அரசும் கிளைமேக்ஸில் வந்து அறிக்கை, ஆறுதல், லட்ச ரூபாய் நிவாரணம், விசாரணை கமிட்டி என்று போடாமல் வருமுன் காப்பதே சிறந்தது என்ற பழமொழிக்கு ஏற்ப முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்,

ஒவ்வொரு அரசாங்க மருத்துவமனையையும் குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது பராமரிப்பு பணியினை மேற் கொள்ள வேண்டும், மருத்துவமனை கட்டிடத்தின் தீ சம்பந்தமான பொறுப்பினை தீயணைப்பு துறையின் வசம் ஒப்படைக்க வேண்டும், தகுந்த நிதியினை ஒதுக்கி எல்லா அரசாங்க மருத்துவமனையிலும் தீயணைப்பு கருவிகள், சைரன்கள், தேவையான அவசரகால வழிகள் போன்றவற்றை கண்டிப்பாக ஏற்படுத்த வேண்டும்,

அரசு மருத்துவமனை அல்லாது பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளும் தகுந்த தீயணைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்லை, பெரிய பெரிய மருத்துவமனைகளை தவிர, மொத்தமாகவே தமிழ்நாட்டில் 95% மருத்துவமனைகள் தீயணைப்பு வசதிகள் இல்லாமல்தான் இருக்கிறது, அவர்களையும் கண்காணித்து தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்

அரசின் வருவாயை பெருக்கும் அதே நேரத்தில் தமிழக மக்களின் உயிருக்கும் தேவையான முக்கியத்துவம் எடுத்து நடவடிக்கை எடுப்பார்களா?
என்ற ஆதங்கத்துடன் இரவுவானம்.


27 comments:

 1. லஞ்சம் வாங்கவே அங்குள்ள ஊழியர்களுக்கு நேரம் போதாது... இதுல இந்த மாதிரியான விசயங்களை பார்க்கவும் மாட்டாங்க.... பார்த்தாலும் கண்டுக்கிற மாட்டாங்க.

  ReplyDelete
 2. naai vaala nimikka mudiyaathathu polathaan intha piratchanaiyum.

  makkalin saapak kedu ithu

  ReplyDelete
 3. விழிப்புணர்வு பத்தாது....யார் சமந்தப்பட்டவன்களோ அவங்க வீட்ல நடந்தாத்தான் பதறுவாங்க! பகிர்வுக்கு நன்றி மாப்ளே!

  ReplyDelete
 4. டாக்டர் பட்டம் வாங்கிய நடிகர்கள் மற்றும் தலைவர்களுக்கு இப்பதிவை சிபாரிசு செய்கிறேன். ஆபரேஷன் தொடங்கட்டும்..!!

  ReplyDelete
 5. இத்தனை ஆயிரம் கோடியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கும் நேரத்தில் அந்த பணத்தை கொண்டு அரசு மருத்துவமனைகளையே தனியாருக்கு நிகராக தரம் உயர்த்தி இருக்கலாம், சில லட்சங்கள் செலவிலேயே தேவையான தீ தடுப்பு போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யலாம்,


  ...... கவனித்து செயல்படுத்தப்பட வேண்டிய விஷயம். பெரிதாக இழப்பு வந்தபின் தான் நடவடிக்கை எடுக்கப்படுமோ?

  ReplyDelete
 6. முக்கியமான விஷயம்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. அரசு மருத்துவமனை அல்லாது பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளும் தகுந்த தீயணைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்லை,

  உண்மைதான்.

  ReplyDelete
 8. அரசு மருத்துவமனை அல்லாது பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளும் தகுந்த தீயணைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்லை,

  உண்மைதான்.

  ReplyDelete
 9. பொதுப்பணித்துறைக்கு ரோட்டில் குழி தோண்டி போடவே நேரம் இல்லை அப்புறம் எங்கே இவர்கள் அனுப்பும் தீயணைப்பு நிலைய அறிக்கையினை கொண்டு நடவடிக்கை எடுக்க நேரம் இருக்க போகிறது?

  சரியாச் சொன்னீங்க..

  ReplyDelete
 10. இத்தனை ஆயிரம் கோடியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கும் நேரத்தில் அந்த பணத்தை கொண்டு அரசு மருத்துவமனைகளையே தனியாருக்கு நிகராக தரம் உயர்த்தி இருக்கலாம்,

  ReplyDelete
 11. அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை லஞ்சம், ஊழலே நிறைந்திருக்கும் தேசத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்கின்றீர்களா.......

  ReplyDelete
 12. என்றைக்காவது ஒருநாள் இதனால் உயிர்சேதம் ஏற்படும்... உடனே பதறியடித்து அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்துவார்கள்...

  ReplyDelete
 13. வாக்கு என்பதும் முக்கியம். சொல்லும் நல்வாக்கும் முக்கியம். உருப்படியா எழுதியமைக்கு நன்றி. திருப்பூர் அரசு மருத்துவமனையைப் பற்றி ஒரு நாள் எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன். பல முறை பலவாய்ப்புகளில் சென்று பார்த்த போது உருவான தாக்கம். அடுத்து நமது காவல் நிலைய செயல்பாடுகள்.

  ReplyDelete
 14. @ தமிழ்வாசி - Prakash

  உண்மைதான் பிரகாஷ் சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 15. @ thirumathi bs sridhar

  நன்றி மேடம் உங்கள் கருத்துரைக்கு

  ReplyDelete
 16. @ விக்கியுலகம்

  நன்றி மாம்ஸ்

  ReplyDelete
 17. @ ! சிவகுமார் !

  நன்றி சிவா தாராளமாக பரிந்துரை செய்யுங்கள்

  ReplyDelete
 18. @ Chitra

  அப்படித்தான் நடக்கப்போகிறது, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ராக்கா

  ReplyDelete
 19. @ shanmugavel

  நன்றிங்க சன்முகவேல் சார்

  ReplyDelete
 20. @ முனைவர்.இரா.குணசீலன்

  உங்களின் நீண்ட கருத்துரைக்கு மிகவும் நன்றிங்க சார்

  ReplyDelete
 21. @ இராஜராஜேஸ்வரி

  உங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி மேடம்

  ReplyDelete
 22. @ செங்கோவி

  எதிர்பார்ப்பும் இருக்கிறது, ஏமாற்றமும் இருக்கிறது நண்பா

  ReplyDelete
 23. @ Philosophy Prabhakaran

  அதுதான் நடக்கப்போகிறது பிரபாகரன், அதற்குள் ஏதாவது நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்பதே எனது ஆதங்கம், உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா

  ReplyDelete
 24. @ JOTHIG ஜோதிஜி

  உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஜோதிஜி சார், உங்களின் பார்வையில் அரசு மருத்துவமனையை பற்றி படிக்க ஆவலாக உள்ளேன்

  ReplyDelete
 25. ஆமாம். விபத்தொன்று நிகழாத வரை யாருக்கும் எதைப்பற்றியும் அக்கறை இல்லை. நிகழ்ந்தபின் கண்துடைப்புக்காக ஏதாவது செய்வார்கள் அவ்வளவே. கொஞ்ச நாளைக்கப்புறம் மீண்டும் பழைய நிலை தொடரும் .....

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!