அப்ப எங்க ஊருல ஸ்கூல் எல்லாம் கிடையாது, ஊருக்கு வெளியே ஒரு மாரியம்மன் கோவிலும், பிள்ளையார் கோவிலும் பக்கம் பக்கமா இருக்கும், கோவிலுக்கு பின்னாடி சைடுல ஒரு கிணரும், தொட்டியும் இருக்கும், கிணத்த தாண்டுனா ஓரே சவுக்கு தோப்பா இருக்கும், தொட்டிக்கு இந்தப்புறம் சோளக்காடும், அத தாண்டினா சுடுகாடும் இருந்தது,
பிள்ளைக படிக்கறதுக்கு ஸ்கூல் வேணும்னு மாரியாத்தா கோவிலையும், பிள்ளையார் கோவிலையும் ஸ்கூலா பயன்படுத்திகிட்டு இருந்தாங்க, மாரியாத்தா கோவில்ல ஒண்ணாவதும், பிள்ளையார் கோவில்ல இரண்டாம் வகுப்பும் நடந்துகிட்டு இருந்தது, மூனாம் வகுப்புன்னா பெரிய பசங்க ஆச்சே, அவங்ககளுக்கு மட்டும் கிளாஸ் சவுக்கு தோப்புல நடந்துகிட்டு இருந்தது, இப்ப எல்கேஜி, யூகேஜி, மாதிரி அப்ப அங்கன்வாடி வச்சுருந்தாங்க, சின்ன சின்ன குழந்தைகள எல்லாரும் அங்கன்வாடியில படிச்சிட்டு இருப்பாங்க, அங்கன்வாடில இருக்குற குழந்தைக எல்லாம் 3 வயசுல இருந்து 5 வயசுக்குள்ள இருக்குறதால அவங்களுக்கு மட்டும் ஒரு கட்டிடம் கட்டி வச்சிருந்தாங்க,

அப்ப எனக்கு ஒரு மூணரை வயசு இருக்கும், அப்ப நானும் அந்த அங்கன்வாடி ஸ்கூல்ல தான் படிச்சிட்டு இருந்தேன், படிக்கரதுன்னா இப்ப இருக்குற எல்கேஜி, யூகேஜி மாதிரி படிப்பெல்லாம் கிடையாதுங்க, காலையில அம்மா வீட்டுல எழுப்பி ஸ்கூலுக்கு போடான்னு சொல்லுவாங்க, மாட்டேன் நா போ மாட்டேன்னு அழுகணும், அவங்களும் நாலு சாத்து சாத்தி ரோட்டுல தரதரன்னு இழுத்துட்டு போவாங்க, ஸ்கூலு வரைக்கும் அழுதுகிட்டே போகனும், ஸ்கூலுகிட்ட போனதும், ஒரு தேன் மிட்டாயே, ரப்பர் மிட்டாயோ வாங்கி தருவாங்க, அப்புறம் அழுகைய நிப்பாட்டிக்கணும், அப்புறம் ஸ்கூல்ல விட்டுட்டு அம்மா கிளம்பிடுவாங்க
அப்புறம் ஸ்கூலுக்கு உள்ளே போனதும், நம்மள மாதிரியே நிறைய சில்வண்டு பசங்க, பொண்ணுக மூக்குல சளி வழிய அழுதுகிட்டு இருக்குங்க, அதுங்கள கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தா டைம் பாஸாகிடும், அப்புறம் யாராவது இளிச்சவாய குழந்தைகளா பார்த்து கிள்ளி வைக்கணும், இல்லைன்னா அடிக்கணும், அதுக கீகீகீன்னு அழுகும், அத கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தமுனா டைம் பாஸ் ஆகும், அதுக்குள்ள டீச்சர் வந்து நமக்கும் ரெண்டு அடி கொடுப்பாங்க, அப்புறம் நாமளும் கொஞ்ச நேரம் அழுகணும், அப்புறம் டீச்சருக்கு போரடிச்சா அ ஆ இ ஈ, இல்லைன்னா 1 2 3 4 ஏதாவது சொல்லி அறுப்பாங்க, நாமளும் திருப்பி சொல்லணும், அப்புறம் டீச்சருக்கு போரடிச்சிரும், அவங்களும் போயிருவாங்க

அதுக்குள்ள மத்தியானம் ஆயிரும், லஞ்ச் டைம்ல யானைக்கு உண்டகட்டி கொடுக்கற மாதிரி ஒரு பெரிய உருண்டயான சத்து மாவு கொடுப்பாங்க, அத எங்க ஆரம்பிச்சு எப்படி சாப்பிடுறதுன்னு ஒரு முடிவு பண்ணி கண்ணால, மூக்கால, வாயால, மூஞ்சியால எல்லாம் சாப்பிட்டு முடிக்க ஒரு மணி நேரம் ஆயிரும், அப்புறம் டீச்சர் ஆளுக்கொரு குட்டியூண்டு பாய் கொடுப்பாங்க, அத விரிச்சு படுத்தா சவுக்கு தோப்பு காத்து ஜன்னல் வழியா தாலாட்டும், அப்படியே தூக்கம் பட்டைய கிளப்பும், 3 மணி ஆனதும் டீச்சரு எல்லாரையும் எழுப்பி விட்டுடுவாங்க,
அப்புறம் எழுந்திருச்சு கூட இருக்கற பசங்க பொண்ணுக கூட ஞாயம் பேசியோ, இல்லை மறுபடியும் கிள்ளி வச்சு சண்டையோ போட்டமுன்னா மறுபடியும் டைம் பாஸாகிரும், அப்புறம் அம்மா வந்து வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்க, போகும் போது மறுபடியும் அஞ்சு காசு மிட்டாயோ, இல்லை ஜம்பரு மிட்டாய், எழந்த வடை ஏதாவது வாங்கி தருவாங்க, அப்படியே ஜாலியா வீட்டுக்கு போயிரலாம், அப்ப எங்க ஊருல எழவு நடந்தா பொணத்து மேல சில்லரை காசு வீசுவாங்க, நான் அத எல்லாம் பொறுக்கி எடுத்து கடையில கொடுத்து மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன்,

இப்படியே ஜாலியா போயிட்டு இருந்த என்னோட வாழ்க்கையில ஒருநாள் அது நடந்தது, அன்னைக்கு காலையில நாங்க பிசியா சண்டை போட்டுட்டு இருந்த நேரத்துல டீச்சர் வந்தாங்க, எல்லாரும் எழுந்திருச்சி லைனா நில்லுங்க, மாரியாத்தா கோவிலுக்கு லைனா நடந்து போங்கன்னு சொன்னாங்க, எங்களுக்கு எதுவும் புரியலைன்னாலும், எழுந்து லைனா கோயிலுக்கு போக ஆரம்பிச்சோம், கோயிலுக்கு வெளிலயே ஓண்ணாவது, ரெண்டாவது, மூணாவது படிக்கற பசங்களும் லைனா நின்னுகிட்டு இருந்தாங்க, ஒவ்வொருத்தரா கோயிலுக்கு உள்ள போகறதும், வெளில வரும்போது ஆன்னு கத்திகிட்டே அழுதுகிட்டு வரதுமா இருந்துச்சு, எனக்கும் ஒரே பயமா இருந்தது,
இப்படியே மூணு வகுப்பு பசங்களும் உள்ள போய் வந்துட்டாங்க, அடுத்து எங்க வகுப்பு டர்ன், என்னோட நெருங்கிய நண்பர்கள் ஒவ்வொருத்தரா உள்ள போக ஆரம்பிச்சாங்க, உள்ள போய் இவனுங்க கத்துன கத்துல உள்ள இருக்கற மாரியாத்தாவே பயந்திருப்பாங்க, அப்படி கத்துறானுக, எனக்கு என்ன நடக்குதுன்னே தெரியல, பயந்துகிட்டே காத்திருந்தேன், அடுத்தது என்னோட டர்ன், உள்ள போனேன், ஒரு டாக்டரு உட்கார்திருந்தாரு, அப்பத்தான் எனக்கு புரிஞ்சது, நமக்கு ஊசி போட போறாங்கன்னு, அதனாலதான் எல்லாரும் கத்தியிருக்கானுங்க

டாக்டரும் பல்லை காட்டு நாக்க காட்டு மூக்க காட்டுனு சொல்லிட்டே ஊசி எடுக்க போனாரு, சார் சார் வேணாம் சார் விட்டுறுங்க சார், எனக்கு ஊசின்னாலே பயம் சார், வலிக்கும் சார், விட்டுறுங்க சார்ன்னு கத்துனேன், கதறுனேன், கெஞ்சுனேன், பயபுள்ள எதுக்கும் மசியல, இதுக்குன்னே ரெண்டு பேர வச்சிருந்தாங்க, அவங்க என்ன அசயாம புடிச்சிகிட்டாங்க, நான் கதற கதற டாக்டர் “சதக்”ன்னு குத்திட்டாரு, அய்யோ, அம்மான்னு கத்திட்டேன், வலியில உயிரே போயிருச்சு, ஒரு அரைமணி நேரம் கேப்பு விடாம அழுதுகிட்டு இருந்தேன், அதுக்குள்ள மத்தியானம் ஆனதால, டாக்டரு சாப்பிட போயிட்டாரு, மீதி இருக்குற பசங்கள டீச்சரும் கிளாசுக்கு போக சொல்லிட்டாங்க, டாக்டரு சாப்பிட்டு வந்து ஊசி போடுவாருன்னு சொன்னாங்க,
அப்புறம் மறுபடியும் டீச்சர் வந்து மிச்சம் மீதி ஊசி போடாம இருந்தவங்கள கூட்டிட்டு போய் அவங்களுக்கும் ஏத்திட்டு வந்தாங்க, அன்னைக்கு புல்லா எங்க கிளாஸ் ரூம் பசங்க எல்லோரும் எழவு வீடு மாதிரி அழுதுகிட்டே இருந்தாங்க, நானும் தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்தேன், அப்ப என்னோட நண்பண் ஒருத்தன் பேரு மோகன் அவன் மட்டும் அழுகாம சிரிச்சுகிட்டு இருந்தான், ஏண்டா உனக்கு வலிக்கலையான்னு கேட்டேன், அவன் நான் ஊசி போட்டு இருந்தாதான வலிக்கறதுக்கு, நாந்தான் ஊசியே போடலியேன்னு சொன்னான், எப்படிடான்னு கேட்டேன், ஒன்னும் இல்லடா ஊசி போட்டதுக்கு அப்புறம் பஞ்சு கொடுக்கறாங்கல்ல, அது கீழ கிடந்தது, அத எடுத்து கைல வச்சிகிட்டு அழுத மாதிரி நடிச்சேன் விட்டுட்டாங்க அப்படின்னான், எனக்கு ஒரே ஆச்சரியாமா போச்சு, என்ன பண்ரது நம்ம விதி அப்படின்னு சோகமா இருந்தேன்,

சாயங்காலம் அம்மா கூட்டிட்டு போனாங்க, அம்மா நான் இனிமே ஸ்கூலுக்கு போக மாட்டேன், ஊசி போட்றாங்கன்னு சொன்னேன், அம்மா இனிமே போட மாட்டாங்க பயப்படாதன்னு சொன்னாங்க, நான் கேட்கலை, 3 நாளா ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம்புடிச்சேன், அப்புறம் அம்மா செமயா மாத்து மாத்துன்னு மாத்தி ஸ்கூல்ல கொண்டு போய் விட்டாங்க, அப்புறம் ஊசி எல்லாம் போடல, மறுபடியும் ஒரு வருசம் ஹேப்பியா இருந்தேன்,
அடுத்த வருசம், மறுபடியும் ஒருநாள், வெள்ளை கோட்டோட டாக்டருங்க, இன்னும் இரண்டு மூணு பேரு எல்லாம் வந்தாங்க, அத நாங்க கிணத்து பக்கம் ஒன்னுக்கு போகும் போதே பார்த்துட்டேன், ஆஹா வந்துட்டாங்கையா, வந்துட்டாங்க, ஊசி போட வந்துட்டாங்கன்னு நம்ம பசங்ககிட்ட போய் சொன்னோம், அப்பவே எல்லாரும் பயந்து நடுங்க ஆரம்பிச்சிட்டாங்க, மறுபடியும் அதே மாதிரி டீச்சர் வந்து எல்லாரும் லைனா நில்லுங்க, கோயிலுக்கு கிளம்புங்கன்னாங்க, அப்பவே எல்லாரும் ஆளாளுக்கு, எனக்கு முந்தாநேத்துதான் ஊசி போட்டாங்க, காலையிலதான் ஊசி போட்டாங்க, விட்டுடுங்கன்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க, டீச்சரும் இன்னைக்கு ஊசி எல்லாம் போட மாட்டாங்க வெறும் செக்கப்தான்னு கூட்டிட்டு போணாங்க,

தக்காளி போணப்புறம் தான் தெரிஞ்சது, டீச்சரு நம்ப வச்சு கழுத்தறுத்துட்டாங்கன்னு, மறுபடியும் அய்யோ அம்மான்னு அபலை குரல் கேட்க ஆரம்பிச்சிருச்சு, நான் என்ன பண்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன், டக்குன்னு மோகனோட பழைய ஐடியா ஞாபகம் வந்தது, ஆஹா எவனாவது பஞ்ச கீழ போடுவானான்னு பார்த்துகிட்டே இருந்தேன், தெய்வாதீனமா ஒருத்தன் பஞ்ச கீழ போட்டுட்டு அழுதுகிட்டு இருந்தான், நானும் பாஞ்சு பஞ்ச புடிச்சு, கைல வச்சிகிட்டு எப்படா மத்தியானம் ஆகும்னு காத்துகிட்டு இருந்தேன், மத்தியானம் ஆனதும் மீதி பேரெல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் வாங்கன்னு சொல்லி அனுப்புனாங்க, நானும் சந்தோசமா கிளாசுக்கு திரும்பி வந்துட்டேன்,
மத்தியானமும் டீச்சர் வந்து புள்ள புடிக்கறவங்க மாதிரி புடிச்சிட்டு போய் ஊசி போட்டாங்க, நான் வெற்றிகரமா தப்பிச்சிட்டேன், கைல பஞ்ச வச்சிகிட்டு வராத கன்ணீர வரவழைச்சி அழுதுகிட்டு இருந்தேன், மோகனும் என் பக்கத்துல உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தான், சரி விடுடா டீச்சர்தான் போயிட்டாங்கள்ள, எதுக்கு அழுதுகிட்டு இருக்கற? அழுகைய நிறுத்துடான்னு சொன்னேன், அவன் முன்ன விட வேகமா அழறான், இல்லடா எனக்கு உண்மையிலேயே ஊசி போட்டுட்டாங்கடான்னு, எனக்கு ஆச்சரியா இருந்தாலும் சந்தோசமா இருந்தது, ஹே மாட்டிகிட்டயா நான் உன்னோட டெக்னிக்க யூஸ் பண்ணி தப்பிச்சிட்டேன், எனக்கு ஊசியே போடலியே, தப்பிச்சிட்டனேன்னு சொல்லி சிரிச்சிகிட்டு இருந்தேன்,

அவனுக்கு பயங்கர கோவம், அப்ப பார்த்து டீச்சரு வரவும், டீச்சர் இவன் ஊசியே போடல, பஞ்ச வச்சு ஏமாத்துறான்னு போட்டு கொடுத்துட்டான், எனக்கு அதிர்ச்சியாகிருச்சு, இல்லைங்க டீச்சர், இவன் பொய் சொல்றான், நான் ஊசி போட்டுட்டேன், கை எல்லாம் வீங்கி போச்சுன்னு சொன்னேன், டீச்சர் நம்பவே இல்லை, டேய் மரியாதையா வந்துரு, வந்து ஊசி போட்டுக்கோன்னு சொன்னாங்க, நான் கேட்கவே இல்லை, ஸ்கூலுக்கு உள்ள ஓட்டம் பிடிக்க ஆரம்பிச்சேன், டேய் அவன புடிங்கடான்னு பசங்கள ஏவி விட்டுட்டாங்க, அவனுக இதுதான் சான்சுன்னு என்னை தொறத்த ஆரம்பிச்சானுங்க, நானும் எப்படி எப்படி எல்லாமோ தப்பிக்க முயற்சி பண்னென், அப்பவும் முடியல,கடைசியில நாலஞ்சு பசங்க சேர்ந்து என்னை புடிச்சிட்டாங்க,
சினிமால ரவுடிய போலீசு புடிக்கற மாதிரி என்னை புடிச்சிட்டானுங்க, நானும் திமிறி திமிறி பார்த்தேன், தப்பிக்கவே முடியல, ஒரு நிமிசம் போன வருசம் ஊசி போட்டதை நினைச்சு பார்த்தேன், அப்புறம் என்னோட சக்தியெல்லாம் திரட்டி ஒரே தள்ளு, பசங்க எல்லோரும் சினிமால காட்டுற மாதிரி தெரிச்சி போய் விழுந்தாங்க, அங்கன்வாடி ஸ்கூல் கதவு டாக்டர் வந்ததால ஊசி போட திறந்து வச்சிருந்தாங்க, ஓரே ஓட்டம், ஸ்கூல விட்டு வெளிய வந்து வீட்டை பார்த்து ஓட ஆரம்பிச்சேன், டீச்சரும், மூணாவது பசங்கள விட்டு தொறத்தி பிடிக்க சொன்னாங்க, அவங்களுக்கு என்னோட வீடு தெரியாததால நான் எங்க போனேன்னு தெரியாம திரும்பி போயிட்டாங்க,
வீட்டுக்கு போனதும் எங்க அம்மா நல்லா பூஜை போட்டாங்க, செம அடி, எல்லா அடியும் வாங்கி அழுதனே தவிர மறுபடியும் அங்கன்வாடி பக்கம் தலை வச்சு படுக்கல, அப்புறம் ஒரு வருசம் ஸ்கூலுக்கு போகல, அதுக்குள்ள எங்க ஊருல ஸ்கூல் கட்டி முடிச்சிருந்தாங்க அஞ்சாங்கிளாஸ் வரைக்கும், அப்புறம் மாரியாத்தா கோவில்ல, பிள்ளையார் கோவில்ல, சவுக்கு தோப்புல நடந்துகிட்டு இருந்த கிளாஸ் எல்லாத்தையும் புது ஸ்கூலுக்கு மாத்திட்டாங்க, சரியா ஒரு வருசம் கழிச்சு என்னோட அஞ்சே முக்கால் வயசுல நான் ஒண்ணாம் கிளாஸ்ல சேர்ந்தேன்....
இப்ப எதுக்காக இந்த பிளாஸ்பேக்குன்னு கேட்குறீங்களா, காரணம் இருக்குது, என்னோட நானும் என் காதலும்கற தொடர் கதையில ஒரு வயசு வித்தியாசத்த காட்டி அந்த பொண்ணு என்ன தம்பின்னு சொல்லிட்டு போயிருச்சுன்னு சொல்லியிருந்தேன், ஆனா எனக்கும், அந்த பொண்ணுக்கும் ஓரே வயசுதான் அப்படிங்கறத சொல்லத்தான் இந்த பதிவு, ஸோ ஏஜ் வித்தியாசம் கிடையாது, அந்த கதைய படிக்காதவங்க கீழ இருக்குற லிங்க்ல போய் படிச்சு பார்த்துகோங்க,
இதுலயே எல்லா பாகத்தோட லிங்கும் இருக்குது, பதிவுலகத்துக்கு கேப்பு விட்டாதலயும், ஆணி கொஞ்சம் அதிகமா இருக்கறதாலயும் பதிவு எழுதவோ, இல்லை மத்த நண்பர்களோட பதிவை படிக்கவோ நேரம் கிடைக்க மாட்டேங்குது, அதனால என்னோட பழைய கதையவே மறுபடியும் ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன், குற்றம் நடந்தது என்னங்கற மாதிரி, காதல் தோல்வி - அடுத்தது என்ன நடந்தது அப்படின்னு சொல்ல போறேன், வேற வழி இல்லை கொஞ்சம் பொறுத்துகோங்க, வாரத்துக்கு ஒன்னுதான,
இந்த கதையையும் படிச்சிட்டு ரொம்ப நல்லா இருக்கு, கண்டிப்பா எழுதுங்கன்னு சொல்லி ஊக்குவிச்ச அண்ணன் எஸ்.கே மற்றும் பிரியமுடன் வசந்த் அவர்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள், ஹி ஹி திட்டனும்னா தாராளமா எஸ்.கே அண்ணன திட்டிக்கோங்க, :-))))))
அன்புடன்
இரவுவானம்